Tuesday, September 22, 2015

போலீஸ் வேலை

சின்ன குழந்தைகளுக்கு பெரியவனாக/ளாக எப்போது ஆகப்போகிறேன் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும். நான் எப்போது பெரியவனாக ஆவேன் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது ஒரு முதிராத வார்த்தைதான். நமக்கு தெரியும் வளரும் போது வளர்ந்தே தீருவார்கள் என்று. நீ பெரியவனானதும் என்ன ஆவ போற என்று கேட்கப்படுகிற கேள்விக்கு ஒரு குழுவின் இரண்டு குழந்தையாவது போலீஸ் ஆகப்போறேன் என்பதாக இருக்கும்.

போலீஸ் ஆவது மிகப்பெரிய வேலைதான். சமூகத்தில் அதற்கு முக்கிய அந்தஸ்து ஒன்று இருக்கதான் செய்கிறது. நேர்மையான போலீஸ் என்கிற சித்திரம் எல்லோரையும் உதாரண புருஷர்களாக தங்களை ஆக்கிக்கொள்ளும் ஒரு பெரிய வடிவம்தான். ஆனால் நிஜத்தில் அப்படி போலீஸ் ஆவதும், நேர்மையாக போலீஸ் அதிகாரி என்று பெயர் பெறுவதும், போலீஸாக மற்றவர்களோடு உறவாடுவதும்கூட எளிதான காரியம் அல்ல. எங்கோ நடந்த பல்வேறு சம்பவங்கள் நம்மை போலீஸிலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா என்கிற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் வரைக்கு அதற்கு உதாரணம் காட்டமுடியும்.


ஆனால் சின்ன வயதில் நாம் கொள்ளும் ஆர்வம் ஒரு வயதில் மாறிவிடும். போலீஸை பலவழிகளில் நாம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்களிடம் நாம் எதிர்ப்பார்த்து ஏமாந்தது அதிகமாகவே இருக்கும். நிச்சயம் அதன்பின் போலீஸா ஆக நம் மனம் ஈடுபாடு கொள்ளாது.
நான் முன்பு வேலை செய்த ஒரு இடத்தில் ஒரு பெண் தினமும் அவர் அப்பா போலீஸாக இருக்கும் போலீஸ் ஜீப்பில் வந்து இறங்குவார். அவருடன் பேசும்போது சின்ன பயம் இருந்ததை இன்றும் நினைக்க முடிகிறது. நல்ல உயர‌மாக இருப்பார் அவர். ஏன் நீங்கள் போலீஸ் வேலைக்கு முயற்சிக்க வில்லை என்று கேட்டப்போது, உண்மையையே சொன்னார். எங்க அப்பா போலீஸ்தான், அவரே நான் அங்க போறத விரும்பல, எனக்கு அந்த வேலையப் பத்தி தெரியும் என்றார்.
அவர் சொன்ன வேறு சில சம்பவங்களிலிருந்து நான் புரிந்துக் கொண்டது அந்த வேலை அவ்வளவு எளிதானது அல்ல, என்னேரமும் காக்கி சீருடையின் மனநிலையிலேயே இருக்க வேண்டியிருக்கும், உயர் அதிகாரிக்கு ஒத்துப் போகவேண்டியிருக்கும், அப்படி போகாதபோது அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
கொலை, குற்றம், வழிப்பறி என்று பல்வேறு மனிதர்களை சந்தித்து, பார்க்கும் மனிதர்களெல்லாம் அந்த மனநிலையிலேயே பழக வேண்டியிருக்கும். எல்லோரும் குற்றம் செய்துவிட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்கிற மனநிலையிலேயே அவர்களின் உடல்மொழி, பேச்சு, நடத்தை போன்றவைகளை கவனிக்க வேண்டும். இது பெண் மனநிலைகளுக்கு எதிரானது. எப்போதும் கலகலப்புடன் இருக்கவேண்டும் என நினைக்கும் பெண்கள் தனக்கு கீழாக உள்ள மனிதர்களிடம் மட்டும் கறாராக இருந்து பழக்க பட்டவர்கள். ஆகவேதான் டீச்சராக அவர்களால் திறமையாக வேலை செய்ய முடிகிறது. ஒரே வேலையை திருப்ப திருப்ப செய்யும் டீச்சர் வேலை அவர்களுக்கு மிக எளிதாக இருப்பதுபோல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளையும், அந்த பிரச்சனைகளை வெவ்வெறு கோணங்களில் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தையும் கண்டு அஞ்சுகிறார்கள் பெண்கள்.
நான் எப்போது ஹெல்மெட் அணிந்து, எல்லா டாக்குமெண்ட்களையும் வண்டியில் எடுத்துச் செல்பவன். ஒருமுறை சென்னையில் ஹெல்மெட் கட்டாயம் என்று வந்திருந்தது. (இந்த ஹெல்மெட் விஷயம் எப்போதும் குழப்பமாக‌ சொல்லிக் கொண்டே இருப்பார்கள்). ஹெல்மெட் அணியாமல் செல்ல ஒரு இடத்தில் போலீஸ் என்னைப் பிடித்தார்கள். இறங்கியது அந்த அதிகாரி கண்டபடி என்னை திட்ட ஆரம்பித்தார். நிஜமாக அதிர்ச்சியாக இருந்தது. என் தாயை கேவலமாக பேசும் வார்த்தையோடு தான் பேச்சையே ஆரம்பித்தார். இரண்டு வினாடிகளுக்குப் பின் தெரிந்தது என் கண்களில் தெரிந்த அக்கறையில்லாமல் இருப்பதால் அப்படி பேசுகிறார் என்று. சட்டென நாம் பயப்படவேண்டும் என்பது அவரது உடனடி எதிர்ப்பார்ப்பு. ஆனால் வேறு ஒரு சிறிய பையன் உடனே செல்போன் எடுத்து யாரிடமோ பேசி அவரிடம் கொடுத்தான். வாங்கி கேட்டவர் அவனை போகச் சொல்லிவிட்டார்.
இதில் ஆண் பெண் என்கிற பாகுபாடு இல்லை. எல்லா போலீஸ் அதிகாரிகளும் ஒன்றுதான். அவர்களுக்கு தேவையானது பணம் அல்லது அவர்களைப் பார்த்து நாம் கொள்ளும் பயஉணர்ச்சி. இந்த இரண்டும் இல்லாமல் எந்த தப்பும் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு தண்டனைதான். அன்றைய நாள் முழுவதும் வீண்தான்.
இந்த மனநிலைக்கு வராத போலீஸ் எப்போது அந்த வேலையில் தொடரமுடியாது. ஆகவேதான் அவர்கள் சதாரண மனிதர்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். விதிவிலக்காக சில போலீஸ்காரர்களை தவிர அனைவருமே இதற்கு, இந்த நேர்மையற்ற வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள். சின்ன விஷயமான ஹெல்மெட்டிலிருந்து பெரிய ஊழகள்வரை இந்த மனநிலைதான்.
விஷ்ணுபிரியாவின் தற்கொலை அவரது முதிரா தன்மையை காட்டுவதாக கூறப்படுவதும் இதைக்கொண்டுதான். இந்த முதிராத்தன்மையை நாம் வெல்ல நமக்குள் பல்வேறு சோதனைகளை நடத்திக் கொள்ளவேண்டியிருக்கும். ராணுவத்தின் கற்பழிப்பு எப்படி ராணுவத்தின் அங்கமாக கொள்ளபடுகிறதோ அதுபோல. சாதாரண மனிதர்களின் மீதனான நிந்தனைகள், சித்திரவதைகள் போன்றவைகளை அங்கமாக மனசாட்சியின் வேறு பெயர்களாக கொள்ளப்படுகின்றன.
வெளியே நாம் பார்க்கும் இந்த சின்ன மீறல்கள் உள்ளே பல்வேறு வடிவங்களாக நிலைக் கொண்டு தலைவிரித்தாடுகின்றன. அவைகளை எதிர்கொள்ள முடியாதவர்கள் ஒன்று விலகுவதும், வேலையிலிருந்து தூக்கிவீசப்படுவதும் நடக்கிறது. அங்கு தற்கொலைகள் விதிவிலக்குகள். முதிராதன்மைகள்.

No comments: