Monday, September 28, 2015

ரத்தம் ஒரே நிறம் ‑ சுஜாதா

எல்லோருக்கும் ரத்தம் ஒரே நிறமாகத்தான் இருக்கிறது. அதில் இருக்கும் வித்தியாசம் வேறுபாடுகூட நம் கண்களுக்கு தெரிவதில்லை. போரில் இறப்பவனின் ரத்தமும், விபத்தில் இறப்பவனின் ரத்தமும் ஒன்றாகதான் இருக்கிறது. வீரமரணத்திற்கும் சாதாரண மரண‌த்திற்கு நம் அளவீடுகளைத் தவிர அதிக வேறுபாடு இல்லை. வரலாறு எல்லாவற்றையும் வேறுவேறு கோணத்தில் பார்க்கிறது. தோற்றவன் தன்வரலாறை வீரவரலாறு என்கிறான், வென்றவன் தன்வரலாறை வெற்றி வரலாறு என்கிறான். ஒரே வாழ்க்கையை முன்னும் பின்னுமாக்கி ஆலையில் இட்டு கசக்கி சாறு ஆக்கிவடித்து உண்டு ஜீரணித்துக் கொள்கிறோம்.
ஆண்ட ஆங்கிலேயனுக்கு ஒரு வரலாறு என்றால் அடிமையான நமக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இந்தியனுக்கு இருக்கும் வரலாற்றை ஆங்கிலேயனுக்கு புரியபோவதில்லை. அதன் வலிகள் அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கப்போவதில்லை. ஆனால் நம் தோல்விகள்கூட நம‌க்குள் ஒற்றுமையை கற்று தந்திருக்கிறது என சொல்லலாம். ஒற்றுமைக்கு உயர்சாதி, இடைச்சாதி, கீழ்ச்சாதி என்கிற நிலைகள் மாறவேண்டி இருந்தது. இந்த சாதி பாகுபாடுகள் மாறியபின்னே அல்லது கொஞ்சம் சமநிலை அடைந்த‌பின்னே சுதந்திரபோராட்டமே ஆரம்பமானது. அதுவரை ஆங்கிலேயன் இருக்கட்டும் அவன் கொள்ளைகளில் நமக்கு பங்குகிடைக்கட்டும் என்றே இருந்தார்கள்.முதன் முதலில் 1857ல் சிப்பாய் கலகம் உருவானபோது, இந்த போராட்ட மனநிலை முழுமையாக உருவாகியிருக்கவில்லை என்று சொல்லலாம். மங்கள் பாண்டே போராட்டத்தை ஆரம்பித்த போது மிகச் சாதாரணமாக ஆரம்பித்தது பின் பெரியளவில் வளர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பின்னால் நானா சாகிப் என்னும் சிற்றரசர் செல்ல அதுவே பெரிய சுதந்திரப் போராட்டமாக ஆரபித்துவிட்டதாக சொல்வதுண்டு.
அந்த போராட்டத்தின் ஆரம்பம் துப்பாக்கியில் தடவபடும் எண்ணெய்யில் பசு, பன்றி கொழுப்புகள் இருந்தததால் வந்தது என்று நாம் அறிந்தது. ஆனால் இந்த கலகம் ஆரம்பித்தது வடநாட்டில் கான்பூர் போன்ற நகரங்களில். ஒரு தமிழ்நாட்டுக்காரன் அதில் இருந்த கவர்னரை பழிவாங்குதலுக்காக பின் தொடர்ந்து சென்று கொலை செய்வது போன்ற கற்பனையை இணைத்து இந்த மொத்த சிப்பாய் கலகத்தை சொன்னால் எப்படி இருக்கும் என்பதை சுஜாதா நம்க்கு நடத்திக் காட்டியிருக்கிறார். அவர் எழுதிய நாவல்களில் (குறுநாவல்களில்) மிக முக்கியமான நாவலாக இந்த ரத்தம் ஒரே நிறம் நாவலை சொல்லலாம்.
எப்போதும் அவர் நாவல்களை ஒரு விளையாட்டாக, ஒரு வெகுஜன எழுத்தாகவே செய்து வந்திருந்தாலும் இந்த நாவலை சற்று மெனக்கெட்டு எழுதியிருப்பதாக தோன்றுகிறது. எப்போதும் பெண், கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்களும் சற்று மெனக்கெட்டு மற்ற நாவல்களிலிருந்து வித்தியாசப்பட்டு எழுதியிருப்பார். ஆனால் முற்றிலும் வேறாக எழுதியதாக சொல்லமுடியாது.
முத்துகுமரன் என்பவன் அவர்கள் ஊர் திருவிழாவில் கம்புசுற்றும் வேலையில் இருந்தபோது அங்குவந்த ஒரு ஆங்கில அதிகாரி தானும் முயற்சித்து தோற்றுப்போய் அவனை கொல்ல வருகிறார் ஆனால் தவறுதலாக அவன் தந்தையை கொன்றுவிடுகிறார். அப்போது எல்லோரும் விலக்கிவிட, பின் பழிவாங்கி அவனை தேடி சென்னை செல்கிறான், சில முயற்சிகளில் தோல்வியடைய ஒரு நாடோடி கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டுவிட்டு, பின் மீண்டும் முயற்சிக்கிறான். இந்தமுறை அந்த கூட்டதில் இருக்கும் ஒரு பெண்ணிடன் உதவியுடன். அவள் அவனை காதலிக்கிறாள். ஆங்கில அதிகாரிகள் அப்போது தோன்றிய சிப்பாய் கலகத்தை அடக்க கான்பூர் செல்கிறார்கள். மீண்டும் அவன் காதலியுடன், பைராகி என்கிற சாமியாருடன் கான்பூர் செல்கிறான். அங்கு கலகத்தில் ஒரு இடத்தில் அந்த அதிகாரியை கொன்று தானும் இறக்கிறான்.
அவரின் எல்லா நாவல்களைப் போலவே மிக சுவாரஸ்யமாக சொல்கிறார் சுஜாதா. நடுவே நாட்டுப்புற பாடல்களும், ஆங்கில கவிதைகளும் என்று அழகாக பயணிக்கிறது. 1850-60 காலக்கட்டத்து ஆட்சிமுறை, சட்டதிட்டம், பழக்கவழக்கங்கள் என்று பலவற்றை சில‌ புத்தகங்கள் துணையாகக் கொண்டு விவரிக்கிறார். சிப்பாய் கலகத்தின் போது நகரம் எப்படி இருந்தது, எப்படி மக்கள் வெறிக் கொண்டு செயல்பட்டார்கள் எப்படி ஒருவரை ஒருவர் கொலை செய்தார்கள், எப்படி தோல்வியை தழுவினார்கள் என்று நிதானமாகவே சொல்கிறார்.
முத்துகுமரனை, அவரின் மற்ற நாவல்களில் சொல்வதுபோல, சற்று அசடாக சித்தரிக்கிறார். முத்துவிற்கு அவளின் காதலி பூவுக்கு இடையே தோன்றும் காதலை அழகாக சொன்னாலும் ஒரு தீவிரமான கதையில் இது சற்று எரிச்சலாக இருக்கிறது. பைராகி என்னும் சாமியாரை இன்னும் விவரித்து அந்தகாலத்து வாழ்க்கை முறைகளை விரிவாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அத்தோடு இக்கதைதான் வேறுகோணத்தில் எழுதி ஆரம்பத்தில் ஒரு சாதியினரை இழிவு படுத்துவதாக சொல்லி மிரட்டப்பட்டு பாதியில் நிறுத்தினார். பிறகு சிப்பாய் கலகத்தை இணைத்து எழுதி மிண்டும் தொடராக வெளிவந்தது. ஆனால் சுஜாதா எழுதிய கதைகளில் முதன்மையான கதையும் இதுதான்.
சிப்பாய் கலகத்தில் நடந்தவற்றை விவரிக்கும் ஒரு புத்தகப் பட்டியலை கடைசியில் இணைத்திருக்கிறார். மேல் விவரங்கள் வேண்டுபவர்கள் இந்த பட்டியல் பயன்படும்.

No comments: