Friday, September 25, 2015

டிஎம்எஸ்ஸும் சிம்ம‌குரலும்

தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான‌ பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. குழுவாக பெரும் கும்பலாக அமர்ந்து உறவினர்கள் அதை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் மிகத் தீவிரமாக அந்த பாடல்களில் லயத்து அவர்களுடனேயே பாடிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் சிறுவர்களிடம் பிடித்த பாடல்கள், பாடகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, இங்கேயும் தங்களுக்குள் பிடித்த பாடகர்/பாடகியர் யார் என்கிற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அதற்கான காரணங்களையும் அடுக்கி சிலாக்கித்தார்கள்.
நான் கல்லூரியில் படித்தப்போது யேசுதாஸின், பிபி சினிவாசின் ரசிகனாக இருந்தேன். எஸ்பிபியின் ஆரம்பக் கால பாடல்களுக்கு பெரும் ரசிகனாக இருந்தேன். அதற்கான காரணம் எளிதுதான், அந்த பாடகர்கள் மென்மையாக பாடினார்கள். அதிக ஆண்தன்மை இன்றி இருப்பதால் மீண்டும் நாம் பாட எதுவாக குரலில் ஒரு மென்மை இருப்பதை காணமுடியும்.


யேசுதாஸின் ஆரம்ப சில பாடல்கள் அதிக வளைவுகள் இன்றி எந்த சோக உணர்ச்சியை வெளிப்படுத்துவதில்லை (எகா. தங்கதோனியிலே), பிபி சீனிவாஸ் சொல்லவே வேண்டியதில்லை, சோகப் பாடல்களைக் கூட அமுங்கிய சோகமாக பாடுவார் (எகா. நிலவே என்னிடம்). எஸ்பிபியின் ஆரம்ப பாடல்கள் அதிக உற்சாக மிகுந்தவையாக இருக்கும். அவரே அதிகமாக வரவழைத்துக்கொண்ட உற்சாகம் அதில் இருக்கும் (எகா. இயற்கையென்னும்). ஆனால் டிஎம்எஸ் அப்படியல்ல, முற்றிலும் மாறானவர் உச்சஸ்தானியில், ஓபன் வாய்ஸில் எவ்வளவு உணர்ச்சிகளை சொல்லமுடியுமோ சொல்லிவிடுவார். அது உற்சாகமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் அல்லது வெறுப்பாக இருந்தாலும் அவருக்கும் இது மக்களுக்கு பிடிக்குமா என்பதைப் பற்றிய கவலை இன்றி பாடுவதுப்போல் இருக்கும். என் சிறுவயதில் சுற்றிலும் இளையராஜாதான் இருந்தார். அதையும் தாண்டி டிஎம்எஸ்ஸின் பாடல்களை என்னை நோக்கி வந்ததெல்லாம் அதிகப்படியான பிழிந்தெடுக்கும் சோகப்பாடல்கள்தான் யாராவது ஒரு நப‌ர் பாடுகிறார் என்றால் அது டிஎம்எஸ்ஸின் உணர்சிகரமான பாடலாக இருக்கும் (எகா. யாரை நம்பி நான், சொர்கத்தில் கட்டப்பட்ட‌). ஆகவே அவரை அதிகமாகவே வெறுத்தேன்.
இந்த கூட்டத்தில் உங்களுக்கு பிடித்த பாடகர் என்ற கேள்வி என்னிடம் வரும்போது நான் சொன்ன பாடகர் டிஎம்எஸ். எனக்கும் சற்று ஆச்சரியமாக இருந்தது. கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதை சொன்னதும் நான் ஒரு 60 70 ஆள் சொல்ல வேண்டிய பதிலை சொல்லலாமா என்பதுபோல சிரித்தார்கள். கொஞ்சமாவது புதிய உலகத்தை பாருங்கள் என்பது போல சிரித்து மகிழ்ந்தார்கள். உண்மைதான் புதிய பாடகர்கள் எத்தனையோ பெயர்கள் அவர்களுக்கு நினைவிருந்தது. அதில் சிலபேரை எனக்கு தெரியவும் இல்லை.
இன்று இல்லை என் சிறுவயதிலிருந்தே அதிகம் கேட்டது டிஎம்எஸ்ஸின் பாடல்கள் என்று நினைவுகூற முடிந்தது. ஆரம்பத்தில் எம்ஜியார் பாடல்களை அதிகம் கேட்டிருக்கிறேன். இன்று அதிகம் சிவாஜி பாடல்களை கேட்கிறேன்.
மிகமிக சோகமான பாடல்கள் எனக்கு பிடித்தமானவையாக இருக்கின்றன. எந்த குரலை இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டுமா என நினைத்தேனோ அதுவே எனக்கு பிடித்தமானவையாக இருக்கிறது. இந்த குரலை வேறு ஒருவர் வெல்லமுடியாது என தோன்றவைக்கிறது.
பலபாடல்களை அவர் தன்குரல் வளத்தாலேயே தூக்கி நிறுத்துகிறார். சில பாடல்கள் மெட்டுகள் அவ்வளவு நுட்பமாக இல்லாவிட்டாலும் அவர் அதை தன் போக்கில் கொண்டுவந்து பாடி சிறப்பாகியிருக்கிறார். எம்எஸ்வியின் தாராளபாங்கு அவருக்கு துணை நின்றதால் பல பாடல்களை அப்படி பாட முடிந்திருக்கிறது. அவளா சொன்னாள் இருக்காது என்கிற பாடலை கேட்டால் அது புரியும். இந்த மெட்டை வேறு எந்த பாடகரும் இவ்வளவு தெளிவாக புரிந்து பாடமுடியாது என்பது புரியும். கண்ணன் வந்தான் அங்கு என்ற பாடலில் அவர் காட்டும் வேகமும் குழைவும் கூட பாடும் சீர்காழிக்கு இல்லை என்பதை காணமுடியும். உலகம் உலகம் பாடலில் இருக்கும் உற்சாகம், மாதவி பொன்மயிலாளில் இருக்கும் கம்பீரம், ஆட்டுவிதாலில் இருக்கும் துயரம், இதோ என்த‌ன் தெய்வ‌மில் இருக்கும் கனிவு, பொன்மகள்வந்தாளில் இருக்கும் அராஜகம், காதல் ராஜ்ஜியத்தில் இருக்கும் காதல் அம்மாமா தம்பிஎன்று பாடலில் இருக்கும் சோகம் இயலாமை என்று பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். நம் சமூகத்தின் மிக முக்கிய ஆளுமையாக டிஎம்எஸ்ஸிதான் சொல்லவேண்டியிருக்கும். இந்த அளவிற்கு அடுத்த வந்த பாடகர்கள் பாட முடிந்ததில்லை, எஸ்பிபியின் பாடல்கள் அவர்பாடியதைவிட அதிகம் ஆனால் இந்த மாதிரியான பல்சுவை இல்லை எனலாம்.
டிஎம்எஸ்ஸின் உச்ச சமயத்தில் மற்ற மொழிகளில் பாடிய பாடகர்களையும் அவர்கள் பாடிய பாடல்களையும் எடுத்துப் பார்த்தால் கனிவு, கம்பீரம் மட்டுமே இருக்கிறது. முகமது ரபீக், கண்டசாலா, பிபி சினீவாஸ் போன்றவர்கள் டிஎம்எஸ் போல பாடமுடியாது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். டிஎம்எஸ்கூட தனக்கு நிகராக ஒருவர் வரமுடியாது என்று நினைத்திருந்தார் என நினைக்கிறேன். எஸ்பிபி வந்தபோது அவர் பெரிதாக கவலைப்படவில்லை என தோன்றுகிறது. யேசுதாஸ் வந்தபோது அவர் எம்ஜியாருக்கு பாட ஆரம்பித்தது சற்று கலங்கியவராக் மாறினார். ஏனெனில் சிவாஜி, எம்ஜியாருக்கு தன் குரலைத் தவிர மற்றவர் பாடகர்கள் சரியாக பொருந்தமாட்டார்கள் என்று நினைத்திருந்தார். அவர்கள் இருவர் இருக்கும் வரை தன‌க்கு பிரச்சனை இல்லை என நினைத்திருக்கலாம்.

இன்றும் கூட, எக்காலத்திலும், அவர் பாடல்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டுதான் இருக்கிறது. சோகம், கனிவு, மகிழ்ச்சி, உற்சாகம், வீரம் என்று எந்தவகைப் பாடல் வேண்டும் என்றாலும் டிஎம்எஸ்ஸின் பாடல்கள் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் அவரை பாடல்கள் மூலமாக தினம் நினைவு கூறுவதை தவிர்க்க முடியாது என நினைக்கிறேன்.

No comments: