Monday, March 29, 2010

ஜெயமோகன் பதில்

அன்புள்ள சுப்ரமணியம், அசோக் குமார்,

தங்கள் வாசிப்புக்கு நன்றி

என்னுடைய கதைகள் எனக்கு இணையானவர்களுக்காக அல்லது என்னைவிட மேலானவர்களுக்காக எழுதப்படுபவை.  மிகப்பெரும்பாலும் அவர்களே வாசிக்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் ஒரு அத்தியாயத்தில் குழப்பமும் எரிச்சலும் அடைந்து விலகி எதையாவது சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்களை நான் கடந்த 20 வருடங்களாகக் கண்டு வருகிறேன் என்பதனால் தெளிவாகவே புரிந்துகொள்வேன். 

பெரும்பாலும் இவர்கள் கடினமான நடை என்பார்கள். என்னுடைய நடை மிக எளிமையானது என்பதை வாசகர்கள் உணர முடியும். சிறிய சொற்றொடர்கள், சிறிய பத்திகள் கொண்டவை. புரியவேண்டும், கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்படுபவை. நடை சிக்கலாக தோற்றம் அளிப்பது ஏனென்றால் எதுவுமே சுருக்கமாக, எது சொல்லப்பட வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி எழுதப்பட்டிருக்கும் என்பதுதான். ஆகவே ஒருவரிக்குப் பின் அடுத்தவரி அதே முக்கியத்துவத்துடன் வரும். ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் வாசகர்களே வாசித்துச் செல்ல முடியும், அவர்களுக்கே அது கிடைக்கும். கட்டுரைகளும் அப்படித்தான்.

அத்துடன் பொதுவாக நான் இதழியலில் வழக்கமாக எழுதப்படும் உத்திகள் , வழக்கமான சொற்றொடர்களை எழுதுவதில்லை. சொல்வதற்கான உதாரணமோ உவமையோகூட புதிதாக இருக்க வேண்டுமென்றே நினைப்பேன். ஆகவே ஒவ்வொரு வரிக்காகவும் மீண்டும் வாசித்தாகவேண்டும், சுயமாகக் கற்பனை செய்தாகவேண்டும்.

கடைசியாக, நான் மன ஓட்டத்தின் நுட்பமான தருணங்களைச் சொல்ல விரும்புகிறேன். மனிதமனம் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிக்கொள்கிறது, எப்படி ஒன்றை மறைக்க இன்னொன்றை பயன்படுத்துகிறது, எப்படி எதிர்பாராத திருப்பம் அடைகிறது என்று. இது எப்போதுமே எழுத்தாளனுக்குப் பெரிய சவால். மரணம் போன்ற ஒரு பெரும் நெருக்கடியில் மனித மனம் என்ன செய்யும், என்னென்ன வகையில் கனவுகளையும் கற்பனையும் கையாண்டு அதைக் கடந்து வரும் என்பதெல்லாம் சாதாரண மொழியில் சொல்ல முடியாது. ஒன்றைச் சொல்வதற்குள் கூடவே நூறு விஷயங்கள் சேர்ந்து வரும்.

அவற்றை வாசிக்கும் வாசகனும் எங்கோ அவற்றை உணர்ந்திருக்க வேண்டும். எங்கோ அதே போல அகநெருக்கடிகளைச் சந்தித்திருக்க வேண்டும். அதைவிட, அந்த அகநெருக்கடிகளை கூர்ந்து கவனித்தும் இருக்க வேண்டும். அப்படிக் கூர்ந்து கவனித்த ஒருவரால் இந்த வரிகளை தொட்டு தன் அனுபவமாக ஆக்க முடியும்.

என்னுடைய எழுத்துக்கள் அளவில் அதிகம் என்று சொல்பவர்களும் சிலர் உண்டு என நான் அறிவேன். நான் முக்கியமாக நினைக்கும் பேரிலக்கியவாதிகள் அனைவருமே என்னைவிட அதிகமாக, என்னைவிட தீவிரமாக எழுதியவர்கள். ஒன்ற்றுக்கும் மேற்பட்ட தளங்களில் எழுதியவர்கள். காரணம் அவர்களுக்கு ஒரு கேள்வி, ஒரு தேடல் உண்டு. அதை அவர்கள் எல்லா ஞானத்தளங்களிலும் தேடுகிறார்கள். அவர்களில் பலர் எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதியவர்கள். எழுதித்தீராதவர்கள்.

உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி எல்லாவற்றையும் பல தடவை எழுதியிருக்கிறார். கதைமாந்தர்களை கதைச் சந்தர்ப்பங்களை மையப்பிரச்சினையை. வேறு வேறு கோணங்களில், அவ்வளவுதான். அவரை அவரது தீவிரத்தைப் பகிர்ந்துகொண்டுதான் வாசிக்க முடியும். அந்த தீவிரமில்லாதவர்கள் கரமஸோவ் சகோதரர்களை முடிக்க முடியாது. அதில்  உள்ள எல்லாமே ஏற்கனவே அவரால் எழுதப்பட்டவை என்றறிந்தும் அதைப்படிக்க இன்னும் தீவிரம் தேவை.

என்னுடைய எழுத்து என்னுடைய தேடலின் தீவிரத்தாலேயே ஒழிய எவர் கூட வருவார் என்ற கணக்குடன் எழுதப்படுவதல்ல. ஆனால் தமிழில் மிக அதிகமான தீவிர வாசகர்களால் ஒரு எழுத்துகூட தவறவிடப்படாமல் வாசிக்கப்படும் எழுத்தாளன் இன்று நானே. இதை  எவரும் தங்கள் சுற்றத்தை கவனித்தாலே அறியலாம்.

அவர்களில் ஒருதரப்பினர் என்னை நிராகரிக்க முயல்வார்கள். சிலர் என்னை வெறுக்கவும் கூடும். அது அவர்களின் அறிதல், அவர்களின் நுண்ணுணர்வு சார்ந்தது. ஆனால் என்னுடன் அவர்கள் இடைவெளியில்லாமல் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டும் இருப்பார்கள். என்னிடம் சொல்ல நான் எழுதிய அளவுக்கே சொற்களை அவர்களும் வைத்திருப்பார்கள்.

எந்த எழுத்தாளனும் தன் சூழலில் அவ்வாறே பங்களிப்பாற்ற முடியும். தீவிரத்தாலேயே அவன் உரையாடுகிறான். பாரதியும் புதுமைப்பித்தனும் செயல்பட்ட வருடங்களின் அளவை வைத்துப்பார்த்தால் அவர்கள் எழுதிய அளவு மிக அதிகம். அதிலும் பாரதியின் அளவு விகிதத்தை எந்த தமிழ் எழுத்தாளனும் இன்னமும் தொடவில்லை. அந்த தீவிரமில்லாவிட்டால் நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த மனங்களுடன் உரையாட முடியாது.

அத்தகைய வாசகர்களுக்காகவே இவை எழுதப்படுகின்றன. சாதாரண அறிவுத்திறனும் சாதாரண கற்பனைத்திறனும்  கொண்டவர்களுக்காக அல்ல. அவர்கள் தங்களுக்கான வாசிப்புகளைச் செய்யலாம். ஒரு சிறு விஷயத்தை நீர்த்து பல பக்கங்களுக்கு எழுதுதல், நேர்ப்பேச்சில் பேசுவதுபோல செயற்கையான விளையாட்டுத்தன்மையுடன் நீர்க்க எழுதுதல் ஆகியவையே இவர்களுக்கு உரிய எழுத்து. அவர்களுக்கா அவ்வாறு எழுதக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அத்தகைய வாசகர்கள் சொல்லும் குறைகளை அல்லது கஷ்டங்களை நான் பொருட்படுத்துவதில்லை.

நீங்கள் வாசித்திருக்கிறீர்கள், கூடவே வருகிறீர்கள். அதுவெ போதும்.

நன்றி
ஜெ

(வேறு ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கும் சேர்த்து எழுதிய பதில்.)
-o0o-

Friday, March 26, 2010

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

முன்பு வாரபத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகள் போல் 24 அத்தியாயங்களுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவில் ஒரு சிறு திருப்பத்துடன் அமைந்த இரவு குறுநாவல் ஒவ்வொரு நாளும் இரவு சரியாக 12 மணிக்கு பதிவெற்றம் செய்ததிலிருந்து நீங்கள் இக்கதைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால் 'முற்றும்' வருவரை காத்திருந்து முழுவதும் ஒரே மூச்சில்தான் படித்து முடித்தேன். எங்குமே தோய்வில்லாமல் அடர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. நிறைய எழுதுவதை நீட்டி எழுதுவதாக சிலர் சொல்வதுண்டு. இந்த கதையில் எந்த பகுதியுமே தேவையில்லை என சொல்லமுடியாது. அப்படி அதிகம் அல்லது தேவையில்லை என எவரேனும் கூறினால் அது அவரின் அனுபவ குறைவையே குறிக்கும் என நினைக்கிறேன்.

வாசிப்பின் ஊடேயே கதை எங்கோ திருப்பம் கொள்ளப்போகிறது என்ற நினைப்போடே வாசிக்க முடிந்தது. இதுவே இக்கதையின் மிகப்பெரியா வெற்றியாக நினைக்கிறேன். கமலாவின் இறப்பிற்கு பின்னால் சற்று நாடகத்தன்மை கொண்டாலும், வர்ணணைகள், சித்தரிப்புகளை காணும்போது ஆழ்மனதின் மிகப் பக்கத்தில் நின்றே கதை முழுவதும் எழுதியிருக்கிறீர்கள் என தோன்ற வைக்கிறது. வாசகர்களையும் பக்கத்தில் அழைத்துவந்து உவகைகொள்ள வைத்துவிட்டீர்கள். மறக்கவே முடியாதபடி மனம் முழுதும் நிரம்பிவழிய வைத்துவிட்டீர்கள். இதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

நுண்ணிய பகுதிகளை மனஎழுச்சியோடு எழுதிய இடங்களை, பல இடங்களை தவறவிட்டாலும், நாங்களும் கொண்டோமென உங்களுக்கு சொல்வதில் சற்று பெருமையாக உள்ளது, இதோ சில:

அந்தப்படிமங்கள் வழியாக அவர் உத்தேசிப்பதைத்தான் சொல்கிறாரா அல்லது அந்தப்படிமங்கள் அவரை யானைபோலச் சுமந்துகொண்டுசெல்கின்றனவா?

ஒரு முழுக்கச்சேரி முடிந்தபின்னர் உறையிடாமல் வைக்கப்பட்டிருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன்.

தான் சொல்லும் விஷயங்களில் அபாரமான நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து மனதை விலக்குவது எளிதல்ல.

இந்த ஒருநாள்தான் நான் யாரென்பதை எனக்குக் காட்டும். என்னை பிறிதொருவர் வசியம் செய்ய முடியுமா என்று நானே அறியும் நாள் இது.
ஏஸியின் உறுமலைக் கேட்டேன். அதை கடலோசை என்று எண்ணியது என் மனம்.

இமைகள் சிறிய குருவியொன்றின் சிறகுகள் போலச் சரிந்திருந்தன.
பிரச்சினைகள் இல்லாத சலிப்பில் இருந்து வெல்ல திரும்பவும் தவறுகளுக்குச் செல்வான்.

நீலிமாவை என் உடலின் எல்லா மயிர்க்கால்களாலும் உணர்ந்தபடி அவளைப் பார்க்காமல் தாமஸை நோக்கி பார்வையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

எட்டாம் வகுப்பு மாணவனை நீங்கள் ஏழாம் வகுப்பில் உட்காரச் செய்ய முடியாது. அவன் உடம்பு கூசும்.

பலசமயம் மனிதனுக்கு துன்பம் தேவைபப்டுகிறது. வலி தேவைப்படுகிறது. அவமானம் தேவைப்படுகிறது. தேடிப்போய் அவற்றை அடைபவர்கள் உண்டு

நான் ”ஷட் அப்…” என்று கடுமையாக சொல்ல அவள் ஒரு கணம் யார் இவன் என்பதுபோல என்னை வெறித்துப்பார்த்தபின் அமர்ந்துகொண்டாள்.

பெண்ணை விரும்பக்கூடிய எவரும் அவளைப் பார்த்ததுமே அழகாக இருப்பதாகச் சொல்ல மாட்டார்கள்.

பிளேடின் லேசர்செதுக்கிய கூர்நுனியைப் பார்ப்பதுபோல ஒரு மெல்லிய பதற்றம் அவளைப் பார்க்கும்போது ஏற்பட்டது

ஆனால் என் பழைய உலகுக்கு என்னால் செல்ல முடியாதே. பழைய இடங்களுக்கு மட்டும்தானே செல்ல முடியும்?

இந்த முட்டாளை விட்டு அவள் சோரம்போகாமலிருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைப்பீர்கள்.

ஆழமான மனநெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் புறத்தோற்றத்தில் ஏதேனும் மாற்றத்தை அடைவதை அப்போது நினைவுகூர்ந்தேன்.

“மனநிலைகளை ஊகிக்க முடியும் •பாதர். மனநிலை மாற்றங்களைத்தான் ஊகிக்க முடியாது”

இது ஒரு சாம்பிளுக்குதான் வேறுசில பகுதிகளை சொல்ல பாரா முழுவதும் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால் அவற்றை விட்டுவிட்டேன்.

கடைசி அத்தியாயத்தை தாமஸுக்கு சொல்வதாக அமைத்திருப்பது கதைகூறும் உங்கள் திறமையை காட்டுகிறது.

கடைசியாக‌ இப்படி ஒரு கதை எழுதியமைக்கு, வாசகர்களின் சார்பாகவும், என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்.
கே.ஜே.அசோக்குமார்.

வாசமில்லா மலர்: சிறுகதை

சூர்யகலாவும் இரண்டு வயது இளையவளான அவள் தங்கை சந்திரகலாவும் இளவயதில் ஒரே வகுப்பில் படித்தாலும் சூர்யகலாவின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்திரகலாவின் திருமணம் நடந்துவிட்டிருந்தது. உறவுக்கார பையன் ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். பையன் அவளைப் போலவே அழகாக அவளுக்கு ஏற்ற ஜோடியாக இருந்தான்.

முடிவற்ற காலை நேர நினைவுகளுடன் தன்னிச்சையாக மணியை பார்த்தாள், மணி ஐந்து பத்து. இப்போது எழுந்தால் சரியாக இருக்குமென்று எழுந்து ஊருக்கு கிளம்ப ஆயத்தமானாள் சூர்யா. முதலில் லாவன்யாவிற்கான பாட்டில், துணிகள் முதலியவைகளை தனியாக ஒரு கூடையில் வைத்து துணியால் மூடிவைத்தாள். கணவனை எழுப்பி தினேசை கிளப்பியபோது மணி 6.3௦. லாவன்யாவை எழுப்பியதும் 'அம்மா நாம ஊருக்கு போறோமா' என்றாள், நேற்று திடீரென இருவர் சேர்ந்து எடுத்த முடிவு நினைவிற்கு வந்தது, 'ஆமாண்டா செல்லம்' என கூறி முத்தமிட்டாள்.

கணவனுக்கு பிடித்த இளம்பச்சைநிற புடவையை அணிந்து கொண்டாள், அதற்கு பொருத்தமான ரவிக்கை அளவு நல்லவேளையாக சரியாக இருந்தது. திருமணத்திற்குமுன் கொத்தவரங்காயாக இருந்த சூர்யா, இருகுழந்தைகளுக்கு பின் இடையகன்று சற்று பூசினாற்போல் ஆகி அழகாகி விட்டாள். நீளமுடி கற்றை அவளுக்கு அழகு. வீட்டை பூட்டும் போது அவளை தொந்தரவு செய்தது. பெரும் நகமொன்று படம் எடுத்தாற்போல் முன்வந்து அவள் முகத்தை மூடி மேலும் வசீகரித்தது. வீட்டை பூட்டேயபடியே வாலை பிடித்து பின்னால் தூக்கிப் போட்டாள். அது முதுகில் நெளிந்து வாலையாட்டியபடி அவள் பின்னாலேயே வந்தது. அவளை கவனித்தபடியே தினேஷின் சட்டையை நேர்செய்தான் கணவன் கணேசன்.

'பையை எடுத்துகங்க' என்றதும், 'சரிங்க அம்மணி' என சிறு பவ்யம் காட்டி எடுத்துக்கொண்டான். 'போதும், போதும்' என்று வெட்கத்துடன், கேட்டை சாத்தியபடி வெளியேவந்தாள். திடீரென குதூகூலம் அதிகரித்துவிடும் அவனுக்கு. காலையில் லாவண்யாவிற்கு பவுடர் இடும்போது, தூக்கிகட்டிய வேட்டியும் சட்டையுமாக வேண்டுமென்றே வந்து முன் நின்றவனை, 'வேட்டிய எறக்கி விடுங்க முதல்ல, சண்டைக்கு போறமாரி' என்றாள். வாள் சுற்றுவது மாதிரி ஒரு பாவனை காட்டிவிட்டு வேட்டியை இறக்கிவிட்டான். 'சின்னபுள்ள மாரி அரைக்கை சட்டை வேண்டாம், முழுக்கை போட்டுக்குங்க' என நல்ல சட்டை எடுத்துக்கொடுத்தாள். வேண்டுமென்றே அவன் வேடிக்கையாக செய்வதும், அதற்கு அவள் ஏதாவது கூறுவது ஓரளவுக்கு அவர்களுக்குள் தெரிந்ததே நடப்பதை உணர்ந்தாலும், அதை உள்ளுர ரசித்தாள்.

லாவன்யாவை தூக்கிக் கொண்டு நடந்தான் கணேசன். அவன் பின்னால் தினேஷை அழைத்துக் கொண்டு பின்தொடர்ந்தாள். பெரிய போஸ்டாபிஸ் நிறுத்தத்தில் பஸ்பிடித்து அமர்ந்ததும், சன்னலோர இருக்கையை பாய்ந்து சென்று அமர்ந்தான் தினேஷ். கண்ணாடியில் விழுந்த கீறல் மாதிரி 'அச்சம் என்பது மடமையடா...' என்று உத்சஸ்தானியில் பாடல் ஒலித்துக் காதை அடைத்துக் கொண்டிருந்தது. தூங்க ஆரம்பித்த லாவன்யாவை நெஞ்சில் போட்டபடியே வந்தான் கணேசன். வாங்கி தன் மாரில் போட்டதும் சொல்லொன்னா ஆனந்தம் அதில் ஏற்பட்டது. கணவனை ஒரு முறை பார்த்துக்கொண்டாள். லாவண்யாவின் சின்ன கால்களை தொட்டபோது உடல் சிலிர்த்து புதிய அனுபவமாக கண்டாள். அந்த ஒவ்வொரு நொடியும் மறக்கமுடியாத கணங்களாக உணர்ந்தாள்.

தினேஷை எழுப்பியபடி வந்தாள். ஊர் வந்ததும் இறங்கும் அவசரத்தில் தூக்கத்திலேயே செருப்பையோ, அவன் விளையாட்டு பொருளையோ வண்டியிலேயே விட்டுவிடுவது அவன் வழக்கம். நீடாமங்கலம் நிறுத்தத்தில் இறங்கி இடப்பக்க தெருவில் நுழைந்து முதல் வலப்பக்க தெருவில் நுழைந்ததும் தூரத்தில் வீட்டு வாசலில் அம்மா நிற்கிறாளா என ஒரு முறை பார்த்துக் கொண்டாள். வழியில் தண்ணீர் தூக்கிவரும் விசாலம் அக்கா அவளை கண்டு விட்டாள், 'அம்மா வீட்டுக்கு வராப்பல தெரியுது', என்று சிரித்தபடி, 'பையன் வளந்துட்டானே' என அவன் தாடையை இழுத்த கையில் முத்தமிட்டாள். அவன் பயந்து அம்மாவின் பக்கம் ஒண்டிக் கொண்டபோது சூர்யாவின் முகம் வெட்க சிரிப்பில் மலர்ந்தது. முன்னே லாவண்யாவை தோளில் போட்டு செல்லும் கணேசன் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு நடையை தொடர்ந்தான்.

வீட்டை அடைத்தும் 'அம்மா..’ என்றழைத்தபடியே உள்ளே சென்றாள். மகளையும் மருமகனையும் இத்தனை காலையில் கண்டத்தில் சந்தோசத்தில் 'வாங்க வாங்க' என்றபடியே தினேஷை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். 'மக திடீர்ன்னு வந்திருக்கா என்ன விசேஷம்னு கேளுங்க அத்த' என்றான் சேரில் அமர்ந்தபடியே கணேசன். ஒன்றும் புரியாமல் மகளையும் மருமகனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. 'சும்மா இருங்க' என்று கோபமாக கூறினாலும், வெட்கத்தையும் சிரிப்பையும் அடக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. 'என்ன மாப்பிள' என்றவளை, 'ஐயோ அம்மா, இப்படி வா', என்று அம்மாவை அடுப்படிக்கு தள்ளிக்கொண்டு போனாள். 'ஒண்ணுமில்ல அவரு எதாவது சொல்றாருன்னா நீயும் இருக்கியே, ரெண்டு நாளைக்கு மன்னார்குடியில அவருக்கு வேல, இங்க என்னையும் கொழந்தைகளையும் விட்டுட்டு போகும்போது கூட்டிக்கிட்டு போவாரு அதான் சொல்றாரு' என்று பேச்சை மாற்றினாள்.

கணவனுக்கு காபி கலந்து கொண்டிருந்தபோது சன்னலின் அந்தப்பக்கம் கொல்லையில் சந்திரா அமர்ந்திருப்பது தெரிந்தது. கருப்பு வண்ண ரவிக்கை தாவணி அணித்திருந்தாள். அவளுக்கு பிடித்த தாவணி. அதுவும் ஒத்தையில் தான் அணிவாள். அம்மா வீட்டிற்கு வரும்போது இதைதான் எப்போதும் உடுத்துவாள். சிறிய துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து குனிந்து தரையை கிளறிக் கொண்டிருந்தாள். லேசான மனக்கலகம் ஏற்பட்டது சூர்யாவிற்கு. பழைய பிரச்சனைகள் ஞாபகத்திற்கு வந்தன. அம்மா பக்கம் திரும்பி 'சந்திரா வந்திருக்கிறாளா' என்றாள். சன்னலிலிருந்து அவளுக்கு தெரியாதபடி நகர்ந்து நின்று தோசையை திருப்பி போடுவதுபோல் கையை காட்டி 'அப்புறம் சொல்றேன்' என்றாள் மெல்லிய குரலில் அம்மா.

அவருக்கு டிபன் தயாரித்துக் கொண்டிருந்தபோது சந்திராவின் கணவன் வந்தான். வாங்க என கணேசன் அழைப்பது கேட்டது. 'எப்படி இருக்கீங்க' என கேட்டதும் 'இதோ இருகோம்ல' என்றான், இதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருகிறான் கணேசன் என அடுப்படியிலிருந்தே புரிந்தது.. அவள் வெளியே வந்தபோது தேவையற்ற உறுமல்களுடனும் உடலசைவுகளுடனும் பேசிக்கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. எடை சற்று கூடிஇருந்தான், நேர்த்தியான உடைகள், ஆனால் அவனுக்கு கொஞ்சமும் பொருத்தமற்றதாக இருந்தது. சிறிய சட்டையில் அவன் வயிறு பிதுங்கியிருந்தது. அணிந்திருந்த ஜீன்ஸ் மிகச் சிறியதாக இருந்தது. தலையில் முன்னும் பின்னும் முடி அதிகபட்சமா இருந்தது. தங்க நிற வாட்ச், மோதிரம் மற்றும் வலது கையில் பெரிய பிரேஸ்லெட் அணிந்திருந்தான். மச்சினியையும், சகலையையும் கண்டத்தில் கொஞ்சம் குழப்பம் அடைத்திருக்க வேண்டும்.

'மாமா எங்க' என்றான் திடீரென்று, அப்பா காலையில் கிளம்பி, ஓய்வு பெற்ற பிற நண்பர்களுடன் டீ கடை பேச்சு, பின் படிப்பகம் என்று மெதுவாகதான் வருவார். அவனுக்கும் இது தெரிந்திருக்கும். 'மாப்பிள்ளையும் பொண்ணும் வந்திருக்கீங்க, சரி அப்புறம் வாரேன்'. என கூறிவிட்டு கிளம்பினான். ஒரு வகையில் தூரத்து உறவுக்காரன். படிக்கும் காலத்தில் சந்திராவை பின்தொடர்ந்து வந்து டாவடித்தவன். அவளுக்கு பரிசு பொருட்களை அடிக்கடி அவன் கொடுப்பதை சூர்யா பார்த்திருக்கிறாள். தீபாவளி, புதுவருடம், பொங்கல், காதலர் தினம், வந்தால் போதும் கவிதை எழுதி கொடுத்துக்கொள்வது, வாழ்த்து அட்டை பரிமாற்றம் என கபேளரப்படும். ஒரு கட்டத்தில் திருமணம் செய்யப் போவதாக கூறிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இரு வீட்டார் பேச்சு நடந்தது. அம்மா பெரியவளுக்கு முதலில் முடியட்டும் என்றாள். சந்திரா முன்பே செய்துக் கொள்ளப்போவதாக மிரட்டிக் கொண்டிருந்தாள். அப்பாதான் சரியென்று அவளுக்கு முதலில் செய்ய சம்மதித்தார். அவள் அப்பாச் செல்லம். அவசர அவசரமாக நடந்தது. அவளுக்கு நடந்து இரண்டாண்டுகளுக்கு பிறகே சூர்யாவிற்கு நடந்தது. அந்த இரண்டாண்டுகளில் அத்தனை பேச்சுகளையும் உறவினர்களிடமும் தெருவாசிகளிடமும் கேட்டுவிட்டாள். அவள் கருப்பு, அழகில்லை, ராசியில்லை என்று எந்தனை பேச்சுக்கள். அவளுக்கு இனிமேல் திருமணமே நடக்கப் போவதில்லை என்ற முடிவிற்கே அனைவரும் வந்தார்கள். கடைசியில் கணேசனின் அம்மா அவளை பார்த்தபோது அவளின் பொறுமையை கண்டு வியந்தே அவரின் மருமகளாக என்றுக்கொண்டார். காலைவுணவை கொடுத்து கணேசனை அனுப்பிவைத்தாள். அவன் தெருமுனை திரும்பும் வரை பார்த்துவிட்டு, பக்கத்து வீடு சென்று குழந்தைகளை அழைத்து வந்து உணவு கொடுத்ததும், மீண்டும் விளையாட சென்றுவிட்டனர். அவள் சிறுவயதில் கோழிப் பிடித்து நாய்களுடன் விளையாண்ட அதே விளையாட்டை இவர்களும் விளையாடுவதை நினைத்துக்கொண்டாள்.

கொல்லைப் பக்கம் சென்றபோது அங்கேயே அமர்ந்து தரையை பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா. அவள் வரும் ஒலிக்கேட்டு திரும்பிப் பார்த்து புன்னகைக்கக் கூடும் என நினைத்துக் கொண்டாள் சூர்யா. அப்படி ஏதும் நடக்காததும் அவளுக்கு அதிசயிக்கவில்லை. அருகே சென்று 'என்ன சந்திரா, எப்படியிருக்க' என்றாள். 'ம்... ' என்றாள் மறுமொழியாக. முகம் திரும்பவில்லை, உடல் அசைவில்லை, கைவிரல் மட்டும் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது. 'வா சாப்பிடலாம்' என்றாள் சூர்யா, ஆனால் பதிலில்லை. அடுப்படியிலிருந்து 'அவ அப்புறம் சாப்பிடுவா நீ வா' என்றாள் அம்மா. ஏதும் கேட்கத் தோன்றவில்லை சாப்பிடும் போது. பெண்களுக்கு சாப்பிடும் நேரந்தான் பேச்சு நேரமும். ஆனாலும் கணவனின் வேலை, குழந்தைகள், அப்பாவின் உடல்நிலை என்று பேச்சு போனதே தவிர, அவளைப்பற்றி பேச்சில்லை. கவனமாக அம்மாவும் தவிர்ப்பது தெரிந்தது. சின்னவளுக்கு எதுப்போட்டாலும் அழகு, அவளுக்கு முதலில் கொடுக்கவில்லை என்றாள் கோபித்துக் கொள்வாள், என்று கூறிய அம்மாவா என நினைத்துக்கொண்டாள்.
மதியம் எதிர்வீடு சென்றபோது சுஜாம்மா கூடத்தில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். மிகவும் மகிழ்ந்து போனார். 'கனகாம்பரம் பறிச்சுக்கிறேன்' என்றதும், 'பறிச்சுக்க உனக்கில்லாததா' என்றார் சிரித்த முகத்தோடு. தோட்டத்திலிருந்து பறித்து திண்ணையில் அமர்ந்து தொடுக்க ஆரம்பித்ததும், அவரும் வேலைகளை முடித்துவிட்டு வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டார். தலைபின்னி பூவைத்துவிட்டால் லாவண்யா சந்தோசம் அடைவாள். இப்போதே அலங்காரம் செய்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் அவளுக்கு வேடிக்கையாக உணர்ந்தாள். ஆனால் சந்திரா இப்பூவை விரும்பியதேயில்லை, 'வாசனையே இல்ல,.. இத யாரு வச்சுக்குவ' என்பாள். அவளுடைய ரசனையே தனி ரகமானது, முல்லைப்பூ மிகவும் பிடிக்கும், கட்டின பூ கூட பிடிக்காது. சின்னதாக கட்டுவதற்கு சிரமமாக இருந்தாலும், உதிரி வாங்கி நெருக்கமாக அவளே கட்டுவாள். அவள் பெரிய மனுஷியான சமயத்தில் அலகரித்து ஸ்டியோ போய் புகைப்படம் பிடித்து வந்தார்கள், படத்தில் அவள் தலையிலிருந்த பூ சற்று தள்ளிருந்தது, 'இந்த பூ ஒட்டுனமாதிரி இருக்குல்லமா' என்று அம்மாவிடம் சூர்யா கூறியிருந்தாள். மறுநாளே மீண்டும் அலங்கரித்து புகைப்படம் எடுக்கவேண்டுமென்று அடம் பிடித்தாள் சந்திரா. பிறகு ஒருநாளில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த சூர்யாவிடம் ஒரு புகைபடத்தை காட்டி, 'இப்ப நல்ல வந்துருக்குல்ல, ஒன்னும் கொற இல்லையே' என்றாள் வன்மம் நிறைந்த கண்களோடு. ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனாள் சூர்யா. நரகல்லை மிதித்தது மாதிரியிருந்தது. தன்னை எதிரியாக பார்க்கும் பார்வையை எங்கிருந்து பெற்றாள் என்கிற குழப்பம் அவளை வாட்டியது. அப்பா கொடுக்கும் செல்லம், அம்மா கொடுக்கும் இடம், அக்காளை தூக்கியெறிகிறது என பெரிய மனுஷிதனமாக அப்போது யோசித்ததை நினைத்துக் கொண்டாள்.

நீண்ட நாள் பிரிந்திருந்த ஆதங்கத்துடன் சுஜம்மாவின் பேச்சு இருந்தது. பள்ளிக்கு போகும் அவசரத்தில் அவரிடம் ஓடிவந்து தலை பின்னியிருக்கிறாள், பாட சந்தேகங்களெல்லாம் அவரிடன் தான் கேட்டிருக்கிறாள் சூர்யா. சுஜாவும் அவளும் ஒரே வயது, அவள் கல்லூரி படிப்பு முடித்து, திருமணமாகி சென்னைக்கு சென்று விட்டாள்.

'எப்படியிருக்க சூர்யா, உன் வீட்டுக்காரர் உன்னை நல்லா வெச்சுருக்காரா', என்றார், இதையேதான் போனமுறையும் கேட்டதாக ஞாபகம்.
என்ன சுஜாம்மா இப்படி கேட்டுடிங்க, எனக்கு ஒன்னுனா பதறி போயிடுவாரு, அவ்ளோ பாசம், எதுக்கும் என்னைய விட்டுக் கொடுக்க மாட்டருன்னா பாத்துகங்க’ என்றாள்.

'அதம்மா வேணும்' என்றவர், திடீரென குரலை குறைத்து கிசுகிசுவென பேச ஆரம்பித்தார்.

எப்போதாவது இப்படி பேசுவது அவளுக்கு வேடிக்கையாக இருக்கும். மற்றவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, ஆனால் மற்றவர்களுக்கு ரகசியம் என்று புரிந்துவிடும்.

சந்திராவுக்கு இங்க ஒன்னும் சரியில, அவளுக்கும் அவ புருசனுக்கும் தினம் சண்டையாம், அவருக்கும் எலக்ட்ரானிக்ஸ் வேல ஒன்னும் முன்ன மாதிரியில்லையாம்', என்றார்.

அவளுக்கு என்ன சொல்வதென்று புரியாமல் சிறிதுநேரம் முழித்தாள். பின் 'அது எல்லா இடத்திலேயும் இருக்கிறதுதானே சுஜாம்மா' என்றாள்.

'நீ இப்படி சொல்ற. சந்திராவுக்கு இது புரியலையே, எதுக்கும் அனுசரிச்சுதானே போகணும், கொளந்த உண்டான சரியாயிடும்தான், அதுவே பெரிய பிரச்சனையை இருக்கே', சுஜம்மாவின் கேள்விகள் நீண்டுகொண்டே சென்றன.
சந்திராவிற்கு பொறுமை கொஞ்சம் குறைவுதான். குதிரைவாலிட்டு வந்தவளை, 'குதிர' என்று கிண்டல் செய்த சக மாணவர்களை இதனால் ஏற்படும் பின்விளைவுகளை யோசிக்காமல் அடித்தவள். வயது ஏறும்போது பக்குவமும் ஏறவேண்டும். எப்படி அவளுக்கு உணர்த்துவது. கூறுபவர்களிடம் சண்டையிட வருவாள். அம்மா சிகப்பு என்று அதிகம் செய்தாள், அப்பா துடுக்கு என்று அதிகம் சுதந்திரம் கொடுத்தார். தன்னைவிட சூர்யா எந்தவகையிலும் மிஞ்சவில்லை என ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள். படிப்பு, உடை, அலங்காரம் என்று அனைத்திலும் அவளை போட்டியாக்கினாள். அதன் முடிவு தானே உயர்ந்தவள் என்றிருக்க வேண்டும். இல்லையேல் பெரும் போர் தான் ஏற்படும். சந்திராவின் கண்களும் உடல்மொழியும் எப்போதும் வெறுப்பையும் கடுமையையும் அவள் மீது உமிழ்ந்து வந்ததை உணர்ந்தபடியே இருந்தாள் சூர்யா.

கட்டியதில் கொஞ்சம் சுஜாம்மாவிடம் கொடுத்துவிட்டு விடைபெற்று, மெட்டி ஒலிக்க ரோட்டை கடந்து இந்தப்பக்கம் வந்தாள். வாசலின் தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தாள் சந்திரா. உதடுகளை விரித்து சுருக்கி சிரித்து பார்த்தபடி வந்தாள் சூர்யா. ஆனால் பயனில்லை. அவளிடமிருந்து எந்த சமிக்கையுமில்லை. அழுத்தமான ஒரு பார்வை உடலசைவற்ற நிலையில் தொடர்வது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. அவளைத்தாண்டி சென்றபின்பும் குத்தும் விழிகள் சூர்யாவின் முதுகுக்கு பின் தொடர்வதை உணர்ந்தாள். அவளையறியாமல் திரும்பி பார்த்துக்கொண்டாள். லேசான இறுக்கமான சூழ்நிலையை உணர்ந்தாள். அவளுடன் இருந்த ஒவ்வொரு நாளும் அவ்விருக்கத்தை அவள் உணந்திருக்கிறாள்.

பக்கத்து வீடு சென்று குழந்தைகளை அழைத்து வந்து மதியஉணவு கொடுத்தாள். மீண்டும் அம்மா உடனேயே உணவு உண்டாள், அப்பா வந்து போனதை கூறினாள் அம்மா. கொஞ்ச நேரம் இருக்க சொல்லியிருக்கலாம், அவரை இனி மாலைதான் பார்க்கமுடியும். மதியம் பாட்டியிடம் கடைகேட்டபடியே தூங்கிப் போனார்கள் லாவண்யாவும் தினேஷும். ஒரு நீலியின் கதையது. அவள் சிறுவயதில் கொல்லை வாசலை திரும்பி திரும்பி பார்த்து பயத்துடன் கேட்ட அதே கதை. அச்சு அசலாக பிசுறு மாறாமல் இப்போதும் அதே ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. நீண்ட நகங்கள், அவற்றின் ஓரத்தில் சதை துணுக்குகள் பாதகங்கள் இல்லாமல், உடலோடு ஒட்டிய உடை, அது தன்னையே கீறி, தன்னையே உண்ணுகிறது, மிக அகோர ஒழுங்கற்ற பற்களில் வழியும் அடர்த்தியான ரத்தம், கோபம் கொண்ட ரத்த கண்கள் பெரிதாகி பெரிதாகி தன்னை அழுத்தும் உணர்வில் ஒரு கட்டத்தில் அது சந்திரா என உணர்ந்து, பதறி கைகால்களை உதறியபடி எழுந்தமர்ந்தாள் சூர்யா. தன்னிலை கொள்ள சிலநிமிடங்கள் ஆகின. வியர்த்து உடல் முழுதும் நனைந்திருந்தது.

பக்கத்தில் குழந்தைகளையும் அம்மாவையும் காணவில்லை. மணி ஐந்தரைக்கு மேலாகிவிட்டிருந்தது. இத்தனை நேரம் தூங்கிவிட்டோமா என நினைத்தபடி எழுந்தாள். அவள் பின்னால் நிலை கண்ணாடி முன் சந்திரா அமர்ந்திருந்தாள். கைகளை பின்பக்கமாக கொண்டு ரவிக்கையை கீழிழுத்து கொண்டிருந்தாள், அதனால் தனங்கள் மேழேழுவதும் விட்டவுடன் பழையநிலை அடைவதுமாக இருந்தது. சந்திராவின் முயற்சிக்கு பெரிய பயனில்லை. அவள் உடுத்தியிருந்தது சூர்யாவின் புடவை, அவளுடைய முதலாம் ஆண்டு திருமண நாளுக்காக கணேசன் அவன் வேலை பார்க்கும் கும்பகோணம் சொசைட்டியில் சொல்லி வாங்கி கொடுத்த ஜாங்லா பட்டு புடவை. விசேஷங்களுக்கு கட்ட வசதியாக அம்மா வீட்டிலேயே வைத்திருக்கிறாள். இதை இவள் ஏன் கட்டியிருக்கிறாள்?

'ஏன் இந்த பொடவையை கட்டியிருக்க' என்றாள் பின்னலை முடியிட்டபடியே.
'சும்மா தான் கட்டியிருக்கேன்'.

'அதான், இப்பயேன் கட்டியிருக்கேன் தான் கேக்குறேன்'.

'ஏங்.., ஓம்பொடவையை கட்ட கூடாதா? ஏதோ ஒம்புருசனையே வெச்சுகிட மாரி பேசுற'.

சுரீர் என்றது, மீண்டும் அதே நரகல் மிதி. தூக்கம் கலைந்ததால் ஏற்பட்டதலைவலி மறைத்து, கண்கள் விர்ரென எரிய ஆரம்பித்தன. காலையிலிருந்து சந்திரா செய்த உதாசினங்கள் அவளை நோக்கி கேட்க வைத்துவிட்டது இக்கேள்வியை.

சரசரவென்று புடவையை அவிழ்த்து பீரோபக்கம் தூக்கி எறிந்தாள் சந்திரா. 'போதுமா..., இப்ப சந்தோஷம்தானே உனக்கு' என்றாள்.

முச்சிரைத்தபடி பெரும் கோபத்துடன் நின்றிருந்தாள். ரவிக்கை பாவாடையுடன் நிற்பது, நிலை கண்ணாடியில் பிரதிபலித்து ரோட்டில் போவோர் காணமுடியும். இது அவள் எதிராளிகளை மடக்கும் உத்தி. என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றாள் சூர்யா. லாவன்யாவை இடுப்பில் வைத்தபடி ஓடி வந்து அம்மா சத்தம் போட்டாள். பலனில்லாமல் போக, விக்கித்து நின்றவளை 'வா இந்தப்பக்கம், அந்த நீலி அறைந்து ரத்தத்தை குடித்தாலும் குடிக்கும்' என கைப்பிடித்து அம்மா அழைத்து சென்றாள்.

இது நடிப்பா நிஜமா என அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் முகம் கழுவி வந்தவுடன், தாவணியை அணிந்தபடியே வந்த சந்திரா, மீண்டும் பெரும் குரலெழுப்பி கடுமையுடன் பேச ஆரம்பித்தாள். அவைகள் பொதுவாக கேள்விகளாகவே இருந்தன. என் நகைகளை அபகரித்தது, என் மாமியார் உனக்கு உதவி செய்தது, என் கணவன் உன் குடும்பத்துக்கு செய்தது, போன்றவற்றை கேள்விகளாகவே கேட்டாள். சண்டையை வளர்க்க விரும்பாமல் விலகி சென்றாலும் சந்திராவின் கேள்விகள் அவளை துரத்தின. அவள் கேள்விகள் தவறு என்றோ, அதற்கு வேறு காரங்கள் உள்ளன என்றோ கூற முற்படும் போது, அவற்றை சாதகமாக பயன்படுத்தி வேறுசில கேள்விகளை கேட்டாள்.

அம்மாவின் அமைதி படுத்தும் முயற்சி எடுபடவில்லை. சந்திரா பேசும் விசயங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டவை போலிருந்தன. அவைகள் சிறுவயதில் எப்போதோ நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சி, அவற்றிக்கும் இப்போது நடப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. அவைகளை மூன்றாம் நபர் ஒருவர் கேட்கும் பட்சத்தில் சந்திராவை ஒரு தியாகியாகவும், சூர்யாவை ஒரு கொடுமைகாரியாகவும் நினைக்ககூடும்.

கூடபடிக்கும் பெண் ஒருத்தி சைக்கிள் வாங்கிவிட்டாலென்று ஒரு நாள் முழுவதும் குளியலறையில் இருந்து, வெளியே வராமல் தனக்கும் சைக்கிள் வேண்டும்மென்று அடம்பிடித்தாள். மதியம் அப்பா வந்தும் சமாதான படுத்தமுடியததால், அன்று மாலையே கடைக்கு சென்று சைக்கிளோடு வந்தாள் சந்திரா. அவள் நினைத்த காரியம் நடக்காதவரை விடமாட்டாள். நல்லவேளை கணவன் பக்கத்தில் இல்லை. இன்று வந்துகூட கணவனின் வற்புறுத்தலால் தான். விலகிஓடும் நபரை நாய் துரத்துவது போல், தன்னை பின் தொடர்ந்து அவ்வப்போது கேள்விகளை கேட்பது மிக எரிச்சலாக உணர்ந்தாள். காலையிலிருந்து தொடர்ந்த சந்தோசம் காணாமல் போனது. கணவன் வந்ததும், நாளைவரை இங்கிருக்காமல், இன்றிரவே இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

மாலை அப்பா வந்த போது, அதுவரை சற்று அமைதியாய் இருந்த சந்திரா மீண்டும் சண்டையிட ஆரம்பித்தாள். தனக்கு நீங்கள் இதையெல்லாம் செய்யவில்லை அதனால் எனக்கு இப்படி நேர்ந்தது, அதனால் இத்தனை கேள்விகள் கேட்கிறாள், எல்லாவற்றிக்கும் காரணம் நீங்கள்தான் என்றாள் அப்பாவிடம். எப்போதும்போல் அப்பா சமாதானம் படுத்த முயற்சித்தார். அப்பாவிடம் எதையும் முறையிட்டு பழக்கமில்லாத சூர்யா வேலைசெய்வதுபோல் அடுப்படியிலேயே பாவனை செய்து கொண்டிருந்தாள்.
குழந்தைகள் அப்பாவின் விளையாடிக் கொண்டிருந்தன. இறுக்கத்தை தவிர்க்க பக்கத்து வீடு சென்று மாமியிடம் பேசிக்கொண்டிருந்தாள். மாமி சங்கடமாக உணர்வது அவர் கண்களில் தெரிந்தது. ஆனால் பேச்சில் மிக சாதரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டார். அவள் அங்கிருந்தபோது அவரிடமிருந்து மாமி வீட்டு நம்பருக்கு போன் வந்தது. வேலை காரணமாக அவர் வரவில்லை, நாளை வருவதாக கூறியதும் சந்தோசமடைத்தாள். மாமியிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்து அம்மாவிடம் விசயத்தை கூறிக்கொண்டிருந்தபோது, சந்திரா குறிக்கிட்டு மதியம் சுஜாம்மாவிடமும், இரவு மாமியிடமும் தன்னை பற்றி அவதூறு கூறுவதாக வாதம் செய்தாள். பதிலளித்த அம்மாவை 'உன் வாயை மூடு' என்றாள். 'அங்க என்ன சத்தம்' என்று கேட்டு அடுப்படி வந்த அப்பாவை நோக்கி கழுத்து நரம்பு புடைக்க 'இவள சும்மா விட்டது ஒங்க தப்பு' என சூர்யாவை காட்டியபடி அப்பாவிடம் பாய்ந்து சென்றாள்.

யாரும் சற்றும் எதிர்பார்க்காதபடி அதே வேகத்தில் சந்திராவின் கன்னத்தில் அறைந்தார் அப்பா. அவர் கோபம் மிக புதிது, சந்திராவின் மீது அவர் கோபப்பட்டதில்லை, அதுவும் கைநீட்டி அடித்து அவள் கண்டதேயில்லை. நடந்தது என்ன என்பதை சந்திராவால் உணர சில நிமிடங்கள் ஆயின. நிலைகுலைத்து போனாள் என்பது வெறும் வார்த்தை, இதுவரை யாரிடமும் அடி வாங்காத சந்திரா, சூர்யாவின் முன்னால் அடி வாங்கியதை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

பயந்துபோன சூர்யா கொல்லைப்பக்கம் போய்விட்டாள். ஊர் மிக அமைதியாக இருந்தது. பக்கத்தில் அவள் உயரமே இருந்த பப்பாளி மரம் ஒன்று இருட்டில் அசைவற்று நின்றிருந்தது. இன்று வந்திருக்கக்கூடாது என தோன்றியது. முருங்கைமர இலைகள் மட்டும் லேசாக அசைத்தன, சில்லென்ற காற்று மென்மையாக உடலைத் தொட்டது. முன்பு இப்படி நடக்கும்போது அவளையறியாமல் அழுதுவிடுவாள், ஆடைகளின் இடைவெளியில் புகுந்து உடலை சிலிர்க்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது காற்று. இப்போது அப்படி ஏதும் நடக்காமல் இருந்ததை கண்டு, அனுபவங்களால் அவள் தைரியம் பெற்றுவிட்டதாக உணர்ந்தாள். எதையும் ரசிக்கமுடியாமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் சந்திரா பெட்டி பைகளுடன் நடந்து செல்வது நிலவொளியில் தெரிந்தது.


(உயிர் எழுத்து மார்ச் '10 இதழில் வெளியான கதை)

- o0o -

Tuesday, March 23, 2010

கவிதைக் கனவின் நீட்சி


இதற்கு முதலில் 'என் முதல் கவிதை' என்று தலைப்பு வைக்கலாமென்றிருந்தேன். 'கவிதைக்கனவு' கட்டுரை நன்றாக வந்துள்ளது என்று பல(?) பேர் கூறிவிட்டதால், அதன் தொடர்ச்சியான இக்கட்டுரையை அதிலிருக்கும் அனுகூலங்களை பயன்படுத்தவேண்டி 'கவிதைக் கனவின் நீட்சி' என்று வைத்துவிட்டேன்.
கல்லூரி நாட்களில் எழுதிய‌ என் முதற்கவிதையின் பிண்னனி ஒரு சிறுபொறிதான். அப்போது சென்னையிலிருந்து பெரம்ப்லூரில் இறங்கி அங்கிருந்து பஸ் பிடித்து அரியலூர் சென்று கொண்டிருந்தேன். அதிகாலை வேளை, இன்னும் விடியவில்லை. தூக்ககலக்கமும் அசதியும் ஒருசேர என்னை தள்ளிக் கொண்டிருந்தன. ஜன்னலோர இருக்க்கையில் அமர்ந்து இருட்டை வேடிக்கை பார்த்தபடியிருந்தாலும் என் உடலும் மனமும் தூக்கத்தை வேண்டியபடியிருந்தன. வண்டியிலிருந்த வெளிச்சமும் வெளியில் செல்லும் வாகனங்களின் வெளிச்சமும் கண்களை குத்தி தூக்கத்தை வரவிடாமல் செய்துகொண்டிருந்தன. இடையே பல நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் ஏறியபடியே இருந்தது. NH45 சாலையை தாண்டி எதிர் சாலையில் சென்றதும் வண்டியின் வேகம் அதிகரித்தது. வலைந்து நெளிந்து கிழக்குநோக்கி சென்றுகொண்டிருந்த பாதையில் நிறுத்தங்கள் குறைந்ததும் சட்டென வண்டியின் எல்லா விளக்குகளையும் அணைத்தார் ஓட்டுனர்.
விடிந்துகொண்டிருந்த நேரம். விளக்குகளை அணைத்த வேகத்தில் இருள் வந்து கவிழ்ந்துகொண்டது. சன்னலுக்கு வெளியேயும் உள்ளேயும் முழுவதும் இருள். மிக மெதுவாக ஒவ்வொன்றாக துலங்க ஆரம்பித்தன. அந்த வேகம் படிப்படியாக அதிகரித்தபோது இத்தனை அழகுணர்ச்சியும் இதுவரை எங்கே போயிருந்தன என்று தோன்றியது.
இருளை கண்கள் பழக பழக விடியலும் வேகம் கொண்டது. அதன் வேகத்தில் வெளியேயிருந்த மரக்கிளைகளின் அடிப்பாகத்தில் பொன்னிற மெழுகு பூசினாற்போலாகியது. வீடுகள், குடிசைகள், வாகனங்கள் பொன்னிறம் கொண்டது போக, இருண்ட மேகங்கள் ஒருபக்கம் கொண்ட பொன்னிற வெளிச்சத்தால் அதன் முழு பரிமானமும் தெரிய ஆரம்பித்தன. எங்கும் பொன்னிறம். விடியல் இத்தனை அழகா?
அந்த வேகத்தில் என் மனதில் தோன்றிய வார்த்தை 'விளக்குகள் எல்லாம் அணையட்டும், நான் விடியலை நோக்குகின்றேன்' என்பதுதான். அதற்கு பின்னால் தொடர்ந்து வார்த்தைகள் வந்துகொண்டிருந்தன. அதே எண்ணத்தோடு வந்து எழுதிபார்த்த இந்த கவிதை ஒரு சுயஎழுச்சி கவிதைதான் என்றாலும் மனதை நிறைவு செய்தது. 


 இதோ அந்த கவிதை:  (நினைவிலிருந்து எழுதியது விடுபடல்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.)

விளக்குகள் எல்லாம் அணையட்டும் நான்
விடியலை நோக்குகின்றேன்
இலக்கணம் எல்லாம் மறையட்டும் நான்
இலக்கியம் படைக்கின்றேன்.

பாதைகள் மறையும் போதினிலே ஒரு
பாத‌க‌ம் இல்லை தோழா - என்
பாத‌ங்கள் காட்டும் பாதையிலே நான்
ப‌யண‌‌ங்க‌ள் தொட‌ர்வேன் என் தோழா            (விள)

சிரமங்கள் ஆயிரம் சேர்ந்திடினும் நான்
சிறகுகள் விரிப்பேன் தோழா அந்த‌
சிறகுகள் ஒடியும் வேலையிலும் நான்
சிகரத்தை தொடுவேன் என் தோழா           (விள)

உடைமைகள் அழியும் வேளையிலும் - என்
கட‌மைகள் மறவேன் தோழா ‍அந்த‌
மடைமைகள் மடியும் வேலையிலே நான்
மறுபடியும் எழுவேன் என் தோழா.           (விள)

தோற்றவன் மீண்டும் எழுகையிலே ஒரு
மாற்றம் மண்ணில் வரும் தோழா அந்த
மாற்றங்கள் காணும் வேளையிலே நம்
மாணுடம் வெல்லும் என் தோழா           (விள)


- o0o -

Friday, March 5, 2010

சாயாவனம் - சா.கந்தசாமி

சா.கந்தசாமி எழுதிய சாயாவனம் என்கிற இந்த நாவல் எளிய சொற்களில், நுண்ணிய தகவுல்களுடன் அமைந்த சிறிய நாவல்.

உயிருக்குயிராய் பழகும் மக்கள், படிப்பும் பணமும் வந்ததும் அவர்களுக்குள் ஏற்படும் சிறுவிரிசலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சலிப்பும் ஆவேசமும் கொள்கிறார்கள், அதை இந்நாவலில் மிக அழகாக சொல்லியிருக்கிறார் சா.கந்தசாமி..

ஒரு சிற்றூரில் கரும்பு ஆலையை நிறுவுவதில் மக்கள் கொள்ளும் உவகை, கட்டிமுடிந்தது அதனால் ஏற்படும் வெற்றிடத்தால் மக்கள் கொள்ளும் சலிப்புடன் முடிகிறது. தமிழகத்தில் அல்லது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூகத்திலும் வெற்றிடங்கள் ஏற்பட்டபடியே இருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் அதன் அடுத்தகட்டத்திற்கு செல்லும்போது மக்களின் மனங்களில் ஒரு இடைவெளி ஏற்பட்டு தீராத பிரிவையே உண்டாக்கி வருகிறது. சாயாவனம் சாய்ந்தபோது இந்தியாவில் உள்ள கிராமங்களின் நிலையே நினைவிற்கு வந்தன.

- o0o -

Tuesday, March 2, 2010

உயிர் எழுத்தில் என் கதை

மார்ச் '10 உயிர் எழுத்து இதழில் என் கதை வெளியாகியுள்ளது. 'வாசமில்லா மலர்' என்பது கதையின் தலைப்பு, இரு சகோதரிகளின் கதை, வித்யாசமான கதைகளன் அமைந்ததில் மகிழ்ச்சிதான், கதையும் நன்றாக வந்திருப்பதாக தோன்றுகிறது, படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

- o0o -