Friday, March 26, 2010

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

முன்பு வாரபத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகள் போல் 24 அத்தியாயங்களுடன், ஒவ்வொரு பகுதியின் முடிவில் ஒரு சிறு திருப்பத்துடன் அமைந்த இரவு குறுநாவல் ஒவ்வொரு நாளும் இரவு சரியாக 12 மணிக்கு பதிவெற்றம் செய்ததிலிருந்து நீங்கள் இக்கதைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆனால் 'முற்றும்' வருவரை காத்திருந்து முழுவதும் ஒரே மூச்சில்தான் படித்து முடித்தேன். எங்குமே தோய்வில்லாமல் அடர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. நிறைய எழுதுவதை நீட்டி எழுதுவதாக சிலர் சொல்வதுண்டு. இந்த கதையில் எந்த பகுதியுமே தேவையில்லை என சொல்லமுடியாது. அப்படி அதிகம் அல்லது தேவையில்லை என எவரேனும் கூறினால் அது அவரின் அனுபவ குறைவையே குறிக்கும் என நினைக்கிறேன்.

வாசிப்பின் ஊடேயே கதை எங்கோ திருப்பம் கொள்ளப்போகிறது என்ற நினைப்போடே வாசிக்க முடிந்தது. இதுவே இக்கதையின் மிகப்பெரியா வெற்றியாக நினைக்கிறேன். கமலாவின் இறப்பிற்கு பின்னால் சற்று நாடகத்தன்மை கொண்டாலும், வர்ணணைகள், சித்தரிப்புகளை காணும்போது ஆழ்மனதின் மிகப் பக்கத்தில் நின்றே கதை முழுவதும் எழுதியிருக்கிறீர்கள் என தோன்ற வைக்கிறது. வாசகர்களையும் பக்கத்தில் அழைத்துவந்து உவகைகொள்ள வைத்துவிட்டீர்கள். மறக்கவே முடியாதபடி மனம் முழுதும் நிரம்பிவழிய வைத்துவிட்டீர்கள். இதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

நுண்ணிய பகுதிகளை மனஎழுச்சியோடு எழுதிய இடங்களை, பல இடங்களை தவறவிட்டாலும், நாங்களும் கொண்டோமென உங்களுக்கு சொல்வதில் சற்று பெருமையாக உள்ளது, இதோ சில:

அந்தப்படிமங்கள் வழியாக அவர் உத்தேசிப்பதைத்தான் சொல்கிறாரா அல்லது அந்தப்படிமங்கள் அவரை யானைபோலச் சுமந்துகொண்டுசெல்கின்றனவா?

ஒரு முழுக்கச்சேரி முடிந்தபின்னர் உறையிடாமல் வைக்கப்பட்டிருக்கும் தம்புரா போன்று என் அகத்தை உணர்ந்தேன்.

தான் சொல்லும் விஷயங்களில் அபாரமான நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து மனதை விலக்குவது எளிதல்ல.

இந்த ஒருநாள்தான் நான் யாரென்பதை எனக்குக் காட்டும். என்னை பிறிதொருவர் வசியம் செய்ய முடியுமா என்று நானே அறியும் நாள் இது.
ஏஸியின் உறுமலைக் கேட்டேன். அதை கடலோசை என்று எண்ணியது என் மனம்.

இமைகள் சிறிய குருவியொன்றின் சிறகுகள் போலச் சரிந்திருந்தன.
பிரச்சினைகள் இல்லாத சலிப்பில் இருந்து வெல்ல திரும்பவும் தவறுகளுக்குச் செல்வான்.

நீலிமாவை என் உடலின் எல்லா மயிர்க்கால்களாலும் உணர்ந்தபடி அவளைப் பார்க்காமல் தாமஸை நோக்கி பார்வையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

எட்டாம் வகுப்பு மாணவனை நீங்கள் ஏழாம் வகுப்பில் உட்காரச் செய்ய முடியாது. அவன் உடம்பு கூசும்.

பலசமயம் மனிதனுக்கு துன்பம் தேவைபப்டுகிறது. வலி தேவைப்படுகிறது. அவமானம் தேவைப்படுகிறது. தேடிப்போய் அவற்றை அடைபவர்கள் உண்டு

நான் ”ஷட் அப்…” என்று கடுமையாக சொல்ல அவள் ஒரு கணம் யார் இவன் என்பதுபோல என்னை வெறித்துப்பார்த்தபின் அமர்ந்துகொண்டாள்.

பெண்ணை விரும்பக்கூடிய எவரும் அவளைப் பார்த்ததுமே அழகாக இருப்பதாகச் சொல்ல மாட்டார்கள்.

பிளேடின் லேசர்செதுக்கிய கூர்நுனியைப் பார்ப்பதுபோல ஒரு மெல்லிய பதற்றம் அவளைப் பார்க்கும்போது ஏற்பட்டது

ஆனால் என் பழைய உலகுக்கு என்னால் செல்ல முடியாதே. பழைய இடங்களுக்கு மட்டும்தானே செல்ல முடியும்?

இந்த முட்டாளை விட்டு அவள் சோரம்போகாமலிருந்தால்தான் ஆச்சரியம் என்று நினைப்பீர்கள்.

ஆழமான மனநெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் புறத்தோற்றத்தில் ஏதேனும் மாற்றத்தை அடைவதை அப்போது நினைவுகூர்ந்தேன்.

“மனநிலைகளை ஊகிக்க முடியும் •பாதர். மனநிலை மாற்றங்களைத்தான் ஊகிக்க முடியாது”

இது ஒரு சாம்பிளுக்குதான் வேறுசில பகுதிகளை சொல்ல பாரா முழுவதும் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதால் அவற்றை விட்டுவிட்டேன்.

கடைசி அத்தியாயத்தை தாமஸுக்கு சொல்வதாக அமைத்திருப்பது கதைகூறும் உங்கள் திறமையை காட்டுகிறது.

கடைசியாக‌ இப்படி ஒரு கதை எழுதியமைக்கு, வாசகர்களின் சார்பாகவும், என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்.
கே.ஜே.அசோக்குமார்.

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

ஜெயமோகனின் மத்தகம் குறுநாவலை இப்படித்தான் தொடர்ந்து ஒரே மூச்சாய் வாசித்தேன். பெரும்பாலான நல்ல கதைகள் நம்மை இப்படித்துரத்திக்கொண்டே இருக்கின்றன.
பகிர்விற்கு நன்றி.

கே.ஜே.அசோக்குமார் said...

ஆமாம்.

உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி.