Monday, March 29, 2010

ஜெயமோகன் பதில்

அன்புள்ள சுப்ரமணியம், அசோக் குமார்,

தங்கள் வாசிப்புக்கு நன்றி

என்னுடைய கதைகள் எனக்கு இணையானவர்களுக்காக அல்லது என்னைவிட மேலானவர்களுக்காக எழுதப்படுபவை.  மிகப்பெரும்பாலும் அவர்களே வாசிக்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் ஒரு அத்தியாயத்தில் குழப்பமும் எரிச்சலும் அடைந்து விலகி எதையாவது சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்களை நான் கடந்த 20 வருடங்களாகக் கண்டு வருகிறேன் என்பதனால் தெளிவாகவே புரிந்துகொள்வேன். 

பெரும்பாலும் இவர்கள் கடினமான நடை என்பார்கள். என்னுடைய நடை மிக எளிமையானது என்பதை வாசகர்கள் உணர முடியும். சிறிய சொற்றொடர்கள், சிறிய பத்திகள் கொண்டவை. புரியவேண்டும், கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்படுபவை. நடை சிக்கலாக தோற்றம் அளிப்பது ஏனென்றால் எதுவுமே சுருக்கமாக, எது சொல்லப்பட வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி எழுதப்பட்டிருக்கும் என்பதுதான். ஆகவே ஒருவரிக்குப் பின் அடுத்தவரி அதே முக்கியத்துவத்துடன் வரும். ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் வாசகர்களே வாசித்துச் செல்ல முடியும், அவர்களுக்கே அது கிடைக்கும். கட்டுரைகளும் அப்படித்தான்.

அத்துடன் பொதுவாக நான் இதழியலில் வழக்கமாக எழுதப்படும் உத்திகள் , வழக்கமான சொற்றொடர்களை எழுதுவதில்லை. சொல்வதற்கான உதாரணமோ உவமையோகூட புதிதாக இருக்க வேண்டுமென்றே நினைப்பேன். ஆகவே ஒவ்வொரு வரிக்காகவும் மீண்டும் வாசித்தாகவேண்டும், சுயமாகக் கற்பனை செய்தாகவேண்டும்.

கடைசியாக, நான் மன ஓட்டத்தின் நுட்பமான தருணங்களைச் சொல்ல விரும்புகிறேன். மனிதமனம் எப்படி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிக்கொள்கிறது, எப்படி ஒன்றை மறைக்க இன்னொன்றை பயன்படுத்துகிறது, எப்படி எதிர்பாராத திருப்பம் அடைகிறது என்று. இது எப்போதுமே எழுத்தாளனுக்குப் பெரிய சவால். மரணம் போன்ற ஒரு பெரும் நெருக்கடியில் மனித மனம் என்ன செய்யும், என்னென்ன வகையில் கனவுகளையும் கற்பனையும் கையாண்டு அதைக் கடந்து வரும் என்பதெல்லாம் சாதாரண மொழியில் சொல்ல முடியாது. ஒன்றைச் சொல்வதற்குள் கூடவே நூறு விஷயங்கள் சேர்ந்து வரும்.

அவற்றை வாசிக்கும் வாசகனும் எங்கோ அவற்றை உணர்ந்திருக்க வேண்டும். எங்கோ அதே போல அகநெருக்கடிகளைச் சந்தித்திருக்க வேண்டும். அதைவிட, அந்த அகநெருக்கடிகளை கூர்ந்து கவனித்தும் இருக்க வேண்டும். அப்படிக் கூர்ந்து கவனித்த ஒருவரால் இந்த வரிகளை தொட்டு தன் அனுபவமாக ஆக்க முடியும்.

என்னுடைய எழுத்துக்கள் அளவில் அதிகம் என்று சொல்பவர்களும் சிலர் உண்டு என நான் அறிவேன். நான் முக்கியமாக நினைக்கும் பேரிலக்கியவாதிகள் அனைவருமே என்னைவிட அதிகமாக, என்னைவிட தீவிரமாக எழுதியவர்கள். ஒன்ற்றுக்கும் மேற்பட்ட தளங்களில் எழுதியவர்கள். காரணம் அவர்களுக்கு ஒரு கேள்வி, ஒரு தேடல் உண்டு. அதை அவர்கள் எல்லா ஞானத்தளங்களிலும் தேடுகிறார்கள். அவர்களில் பலர் எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதியவர்கள். எழுதித்தீராதவர்கள்.

உதாரணமாக தஸ்தயேவ்ஸ்கி எல்லாவற்றையும் பல தடவை எழுதியிருக்கிறார். கதைமாந்தர்களை கதைச் சந்தர்ப்பங்களை மையப்பிரச்சினையை. வேறு வேறு கோணங்களில், அவ்வளவுதான். அவரை அவரது தீவிரத்தைப் பகிர்ந்துகொண்டுதான் வாசிக்க முடியும். அந்த தீவிரமில்லாதவர்கள் கரமஸோவ் சகோதரர்களை முடிக்க முடியாது. அதில்  உள்ள எல்லாமே ஏற்கனவே அவரால் எழுதப்பட்டவை என்றறிந்தும் அதைப்படிக்க இன்னும் தீவிரம் தேவை.

என்னுடைய எழுத்து என்னுடைய தேடலின் தீவிரத்தாலேயே ஒழிய எவர் கூட வருவார் என்ற கணக்குடன் எழுதப்படுவதல்ல. ஆனால் தமிழில் மிக அதிகமான தீவிர வாசகர்களால் ஒரு எழுத்துகூட தவறவிடப்படாமல் வாசிக்கப்படும் எழுத்தாளன் இன்று நானே. இதை  எவரும் தங்கள் சுற்றத்தை கவனித்தாலே அறியலாம்.

அவர்களில் ஒருதரப்பினர் என்னை நிராகரிக்க முயல்வார்கள். சிலர் என்னை வெறுக்கவும் கூடும். அது அவர்களின் அறிதல், அவர்களின் நுண்ணுணர்வு சார்ந்தது. ஆனால் என்னுடன் அவர்கள் இடைவெளியில்லாமல் அந்தரங்கமாக உரையாடிக்கொண்டும் இருப்பார்கள். என்னிடம் சொல்ல நான் எழுதிய அளவுக்கே சொற்களை அவர்களும் வைத்திருப்பார்கள்.

எந்த எழுத்தாளனும் தன் சூழலில் அவ்வாறே பங்களிப்பாற்ற முடியும். தீவிரத்தாலேயே அவன் உரையாடுகிறான். பாரதியும் புதுமைப்பித்தனும் செயல்பட்ட வருடங்களின் அளவை வைத்துப்பார்த்தால் அவர்கள் எழுதிய அளவு மிக அதிகம். அதிலும் பாரதியின் அளவு விகிதத்தை எந்த தமிழ் எழுத்தாளனும் இன்னமும் தொடவில்லை. அந்த தீவிரமில்லாவிட்டால் நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த மனங்களுடன் உரையாட முடியாது.

அத்தகைய வாசகர்களுக்காகவே இவை எழுதப்படுகின்றன. சாதாரண அறிவுத்திறனும் சாதாரண கற்பனைத்திறனும்  கொண்டவர்களுக்காக அல்ல. அவர்கள் தங்களுக்கான வாசிப்புகளைச் செய்யலாம். ஒரு சிறு விஷயத்தை நீர்த்து பல பக்கங்களுக்கு எழுதுதல், நேர்ப்பேச்சில் பேசுவதுபோல செயற்கையான விளையாட்டுத்தன்மையுடன் நீர்க்க எழுதுதல் ஆகியவையே இவர்களுக்கு உரிய எழுத்து. அவர்களுக்கா அவ்வாறு எழுதக்கூடியவர்கள் பலர் உள்ளனர். அத்தகைய வாசகர்கள் சொல்லும் குறைகளை அல்லது கஷ்டங்களை நான் பொருட்படுத்துவதில்லை.

நீங்கள் வாசித்திருக்கிறீர்கள், கூடவே வருகிறீர்கள். அதுவெ போதும்.

நன்றி
ஜெ

(வேறு ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கும் சேர்த்து எழுதிய பதில்.)
-o0o-

No comments: