Tuesday, July 14, 2015

அஞ்சலி: எம்எஸ்வி

எந்த விருதுகளும் இல்லாமல் மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட எம்எஸ்வி, ஏஆர்ரகுமான், இளையராஜாவைவிட மிக இளம்வயதில் (25) இசையமைக்க வந்துவிட்டார். ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து 80கள் இறுதிவரை தொடர்ந்து நல்ல பாடல்களை கிட்டதட்ட 30 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியுள்ளார். 90களிலும் 2000க்கு பின்னும் சில படங்களில் பாடியும், மெட்டமைத்தும் உள்ளார். அதாவது கிட்டதட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் இசைத்துறையில் இருந்துள்ளார். எந்த சலிப்பும் இல்லாமல் அவர் உழைத்ததாக சொல்வார்கள். அதேபோல் எந்த சலிப்பும் இல்லாமல் அவர் பாடல்களைக் இன்றும் கேட்க முடிகிறது. 77ல் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தின் சம்மோசிவ சம்போ பாடல் அவர் இசையமைத்தவைகளிலும் பாடியவைகளிலும் சிறந்ததாக நினைக்கிறேன்.



ஒரு இலக்கிய சிந்தனை விருது விழாவிற்கு சென்றிருந்தேன். அதில் எம்எஸ்வி வந்திருந்தார். எந்த அலட்டலும் இல்லாமல் மிக எளிமையாக தன் சாதனையின் சாயல் துளியும் தெரியாமல் அந்த கூட்டதில் அமர்ந்திருந்தார். மிக குறைவான மக்கள் வந்திருந்த கூட்டம். அந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த, லெக்சுமனன் அவர்கள் எம்எஸ்வியின் புகழைப் பற்றி பேசிக்கொண்டேயிருந்தார். கட்டியிருந்த வேட்டி தரையில் புரள மேடைக்கு வந்து சில பாடல்களை போட்டு காட்டியும் அதன் பின்னனியில் நடந்த சில சுவையான விஷயங்களையும் கூறிக்கொண்டிருந்தார். பலவற்றை அவரே மறந்திருந்தார். லெச்சுமனன் அதைச் சொல்லுங்கள் இதைச் சொல்லுங்க என்று கூறிக்கொண்டிருந்தார். எம்எஸ்வியின் கவனமெல்லாம் தன் பாடலை எல்லோரும் எப்படி கேட்கிறார்கள் என்றுமட்டுமே இருந்தது.
எம்எஸ்வியை அறியாமல் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது, மன்னத்து சும்பிரமணியனின் மகன் விஸ்வநாதனான அவர் பிறந்தது பாலக்காட்டில் 24 ஜூன் 1928 நாளில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே திரைதுறையில் எடுபுடி வேலைகள் செய்து வந்தவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கேரளாவிலிருந்து வந்தவர் அப்படியே இருந்துவிட்டா. சுப்பையா நாயுடுவின் உதவியாளராக இருந்து பின் இசையமைப்பாளராக மாறியுள்ளார். சுப்பையா நாயுடுவே தயாரிப்பாளரிடம் என் படங்களில் பல பாடல்களுக்கு டுயூன் இவன் தான் போட்டது இவனை விட்டுவிடாதீர்கள் என்று சிபாரிசு செய்திருக்கிறார். 25 வயதில் அதாவது 1953 இசையமைபாளராக ஆகிவிட்டார். பின்னால் இளையராஜா, ரஹ்மான்கூட இத்தனை சின்ன வயதில் ஆனதில்லை. இவைகளேல்லாம் சாதாரண சினிமா செய்திகள் என்று ஒதுக்கிவிடமுடியும் ஆனால் அவரின் இசை சாதனைகளை ஒதுக்கிவிடமுடியாது. அத்தோடு அவரின் பாடல்கள் இன்றும் கேட்க அதே இனிமையோடும் துடிப்போடும் இருப்பதுதான் ஆச்சரியம்.
ஒரு பாடலுக்கு 300 இசைகருவிகளும் ஒரு பாடலுக்கு 3 இசைகருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டை இங்கு அதிகம் கூறப்படுகிறது. சில பாடல்களை அவர் யாரும் அதிகம் பயன்படுத்தாத அரிய மெட்டுகளை பயன்படுத்தியும் உள்ளார் என்பார்கள். இவையெல்லாம் அவரின் மேதமைகளை குறிப்பவைகள். ஆனால் அவரின் அசாத்ய கலைமனம் அல்லது படைப்புமனம்தான் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. தன் வாழ்நாளில் நீண்ட நெடிய நாட்களில் தன் கலைமனதை தக்கவைத்துக் கொண்டவர் அவர் என்பதில் அதிக பொறாமை கொள்ளவைக்கிறது.
என் அபிமான எஸ்ஜானகியின் குரலை தன் பாடல்களில் அதிகம் பயன்படுத்தவில்லை என்கிற குறை எப்போது தோன்றுவது உண்டு. ஆனால் ஜானகிக்கு அளித்த பாடல்கள் அவரின் மிக முக்கிய பாடல்களாக இப்போது இருக்கின்றன. இந்துஸ்தானி இசையை அதிகம் தமிழ் படுத்தியதும், மற்ற வகைகளான கர்னாட்டிக், மெல்லிசை, ஃபோல்க், மேற்கத்திய என்று அனைத்து இசைகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
தன் துறையில் ஒருவர் இவ்வளவு அனுபவித்து தன் படைப்பு செயலை முழுமையும் வெளிப்படுத்தி ஆனால் எதையும் வெளிகாட்டாமல், அவைகளை, அவைகளைப்பற்றிய செய்திகளை சேமிக்க வேண்டும் என்று கவலைப்படாமல் வாழ்ந்து மறைந்தவர் ஒருவர் உண்டென்றால் அது எம்எஸ்வி மட்டும்தான். அவருக்கு எம் அஞ்சலிகள்.

No comments: