Tuesday, April 15, 2025

முன்னுரை - யாக்கை நாவல்


 சொல்ல நிறைய இருப்பதனால்தான் நாவல் எழுத தொடங்கினேன். ஆனால் போதாமையை மேலும் கூட்டிவிட்டது இந்நாவலின் விரிவு. யோசித்து பார்க்கும்போது யாக்கை இதுவரை என் குழையாத மனஅடுக்குகளை மாற்றியமைத்துவிட்டது என்று சொல்லலாம். யாக்கையில் வழியே கண்டடைந்தவைகளை மற்றொரு புனைவில் எழுத வேண்டும்.

வாழ்கையிலிருந்து புனைவுகளாக ஆக்கும் முயற்சிகள் ஆற்றுநீரிலிருந்து மணலை சலித்து அள்ளும் செய்கை போல‌ இருந்தது. யாக்கையை எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்பதை நான் தீர்மானிக்கவில்லை. ஆழ்மனம்தான் தீர்மானித்தது. நான் வெறும் கருவி என்று சொல்லலாம். அப்படியும் சொல்லிவிட முடியாது. சில அணுக்கங்கள் எனக்கு ஏற்பட என் ப்ரக்ஞையும் தன்பங்கிற்கு கொஞ்சம் செய்திருக்கிறது. மீளாத பல புனைவு தருக்கங்களை நான் என் ஆழ்தூக்கத்தில் அறிந்திருக்கலாம். கனவுகளில் கண்டடைந்திருக்கலாம். மறந்தவைகளில் நானும் ஒளிந்திருக்கலாம். எப்படியானாலும் சொல்லவந்தது என்னையும் அறியாமல் சொல்லியிருக்கிறேன். நான் பார்த்த‌ வாழ்க்கைதான் இதில் இருக்கிறது. சில உண்மைகள், சில பொய்கள், சில அச்சு அசலாக நானறியாதவைகள்.

நான் தடுமாறிய‌ இடங்கள் என்றிருந்தால் என்னை எழுதவிடாமல் தடுத்த என் நனவுகள்தாம் காரணம். என் ஆழ்மனம் ஒரு நாய் போல அன்பை பொழிந்து தன் உடல்மொழியால் நனவுகளை வெற்றிக் கொண்டது. நிகழவேண்டியவை நிகழ்ந்து முடிந்து என்னை விட்டு விலகியவை யாக்கையின் கூறுகள். நானடைந்தவை எனக்கானது மட்டுமே என நினைக்க முடியாமல் போனதற்கு இப்பிரபஞ்சத்தின் அழியாத விதிகளின் ஓன்றுதான் காரணம். இவ்விதிகளை பின்பற்றி யாக்கையின் தொடர்ச்சியை எழுதிவிடவேண்டும் என யோசித்திருக்கிறேன். அதற்கும் பிரஞ்சமே உதவமுடியும்.

சுந்தரராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்றோரும் என் புனைவுல தாக்கத்தின் உந்துசக்திக‌ள். இன்று புனைவுலகில் வழிகாட்டி, நேரடியாகவும் மறைமுகமாகவும் இருப்பவர் ஜெயமோகன். இத்தருணத்தில் அவரை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

என் புனைவுலகிற்கு என் அப்பா அவரையும் அறியாமல் வழி செய்திருக்கிறார். அவரை கவனித்து வளர்ந்தவன் நான். தீராத லெளகீக ஆசைகளுடன் வாழ்ந்தார். அவற்றில் ஒன்றைக்கூட அவர் பெறவில்லை. என்னை எந்த வகையிலும் அழுத்தம் கொடுத்து எதையும் செய்யச் சொன்னவரில்லை. அது அவரது இயல்பிற்கு எதிராக இருந்தது. அதுவே நான் புனைவெழுத்தாளன் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என நினைத்துக் கொள்வேன். இத்தருணத்தில் குறிப்பாக இந்நாவலை அவருக்கு சமர்ப்பிப்பது சரியாக இருக்கும். கோடானு கோடி நன்றிகளுடன் அவருக்கு சமர்பிப்பதில் பெருமை கொள்கிறேன்.

பிரதியின் முதல் பகுதிகளை திருத்த செய்து தந்த சொல்வனம் மைத்ரேயன் அவர்களுக்கு என் நன்றி. முழுமையாக வாசித்து திருத்தங்களை சொன்ன எழுத்தாளர் விஜயகுமார் செம்மங்கரைக்கும் அதேபோல் முழுமையாக வாசித்து சொன்ன கவிஞர் கலித்தேவன் என்கிற வீ. கலியபெருமாளுக்கும் நன்றிகள். என் இரண்டாவது நாவலை வெளியிடும் காலச்சுவடிற்கு என் நன்றி. திருத்தங்கள் செய்து கொடுத்த எஸ். செந்தில்குமார், ஆதவ், அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்த சி.அரிசங்கருக்கு ஆகிய மூவருக்கும் நன்றி.

மேலும் என் முயற்சிகளுக்கு உறுதுணையாக நிற்கும் என் குடும்பத்தாருக்கு நன்றிகள். குறிப்பாக அம்மா சுதந்திராதேவி, மனைவி ஸ்ரீதேவி, பிள்ளைகள் ஹரிணி, நந்தன் ஆகியோருக்கு என்றும் அன்பு.

No comments: