தூக்கத்தில் விழித்திருப்பது போலதான் எழுதுவது. அப்படி சொன்னால் எளிதாக புரியும். எப்படி தூக்கத்தில் விழித்திருப்பது. நம் கனவுகளில் பேசவும், உரையாடவும், மகிழவும், அழவும் திகைக்கவும், நடிக்கவும் முடியும். அதாவது நாம் நம் கனவுகளில் விழித்திருக்கிறோம். விழிந்திருக்கும் கனவில் நாம் தூக்கத்தைப் பற்றி யோசிக்கவும் செய்கிறோம். தூக்கமும் விழிப்பும் ஒன்றுக்கொன்று எதிரானதாக கொள்ளாமல், ஒன்றுக்குள் ஒன்றாக ஆகிவிடுவதாக எண்ணிக் கொள்ளலாம். இப்படியான இரட்டைநிலை நம் ஆழ்மனதின் அலைதல். அந்த அலைதல் சமன்படும் இடத்தில் படைப்பாற்றல் அல்லது எழுத்து உருவாகிறது.
சிந்தனையின் உந்துதலால் கருத்துகளாக மிக இளவயதில் நம் மனதில் மொழியாக படிந்து விடுகின்றன. நம் லட்சியங்கள், ஆர்வங்கள் அதை நோக்கி உந்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். நாமறியாத ஆழ்மனதின் அச்சங்கள், கற்றல்கள், சமூக தொடர்புகள், இன்னும் சில, நம் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் கீறல்களாக சில ஆழமாகவும், சில மென்மையாகவும், விழுந்து கொண்டிருக்கின்றன. சூழல், குடும்பம், சமூகம் எல்லாம் அந்த கீறல்களை வேறுவேறு தளத்தில் நகர்த்தி நம் சிந்தனையை மேலும் வளர்த்துவிடுகின்றன. அப்படியாக ஆழ்மனதின் சுயதேடல்களை பிற்காலத்தில் நாம் மொழியின் வழியாக எழுத்தாக மாற்றிக் கொள்கிறோம்
ஆனால் எழுதுவது அதற்காக அல்ல. இயல்பில் சுயமுனைப்பு குறித்த ஆர்வம் கொண்டவர்கள் அதை வைத்து எழுதுதல் என்ற சுயதேடலை கண்டடைகிறார்கள். மற்றவர்கள் சிந்திப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். எழுதுவது யாரையும் உய்விக்க, வளப்படுத்த என்று நினைத்து எழுத ஆரம்பிக்கும் போது இருக்கும் ஆரம்ப மனநிலை கொஞ்ச காலத்தில் சுயமதிப்பீடாக மாறிவிடுகிறது. எழுதியபின் கிடைக்கும் பயனைவிட எழுதும்போது அடையும் சுயகண்டடைதலுக்காகவே எழுதுவது தொடர்ந்து நிகழ்கிறது. எழுதுவதே ஒரு தியானமாக நம் மனதில் குடிகொள்கிறது. எழுதுதல் ஒரிடத்தில் படைப்பாக மாற ஆரம்பித்ததும் அதற்கான தேவையை அறிந்து வாசிப்பும் படைப்பும் நிகழ்ந்து எழுதுபவனை மகிழ்வித்து மேலும் எழுத வைக்கிறது.
ஏன் எழுதுகிறேன் என்பதற்கு தனிப்பட்ட என் சுயகண்டடைதல் ஒரு காரணமாக சொல்லலாம். எழுதுவது மனதை திறந்து வைப்பதுதான். மனதை ஒருமையில் நிறுத்துவது. தியான நிலையில் பழைய நினைவுகளில் முழ்கிப்போதல், புதிய இடத்தில் தன்னை மறந்துபோதல் போன்றவை நம்மையும் அறியாமல் நிகழ்வது. எழுதும் போதும் அதுவே நிகழ்கிறது.
எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு கணினியின் முன் அமர்ந்து விசைப்பலகையில் கை விழும்போது எழும் வார்த்தைகளில் இருப்பவை எழுதுபவனின் மனம் ஒருமையில் சென்று நிற்கும் இடம் அவன் ஆழ்மனம்தான். ஆழ்மனது திறந்திருக்கும்போது எழுதுவது தூக்கத்தில் விழித்திருப்பதுதான்.
அபுனைவுகளை எழுத முன்பே வரையறுத்துக் கொள்ளவேண்டும், இலக்கு நுகர்வோர்கள் யார் என்பதை முன்பே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புனைவை எழுதும்போது எதுவும் தேவையில்ல. அவன் மட்டுமே போதும். துயருற்றிருக்கும்போது மகிழ்வை எழுதமுடியும், மகிழ்வில் திளைக்கும்போது கண்ணீரை எழுத முடியும். சமூக ஆழ்நதியின் ஓட்டத்தில் கலந்திருந்தால் போதும், மொழியால் தன்வசப்படுத்தப்படாதது எதுவுமில்லை என அவன் அறியும் தருணம் கூடவே இருந்தால் போதும்.
எழுதுவது தீராத பசியாக ஆகிபோவது எழுதுபவனை தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது அவன் படைப்பு. அவன் அடைந்திருக்கும், படைத்திருக்கும் உலகம் நிஜத்தில் இருக்கும் உலகத்தையும் விட பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. அவன் அறிந்த கீழ்மைகளை சொல்ல தயக்கம் இருப்பதில்லை. அவன் அடைந்த மேன்மைகளை சொல்ல அதில் அழகுணர்ச்சி கூடுகிறது. அவன் படைத்தவைகளுக்குள் அவனும் வாழ்கிறான். நீரில் மீன் வாழ்வது போல. அவன் நினைக்கும் அவனியங்கும் உலகு. அதில் அவனும் வேறு யார் இருக்கமுடியும்.
எழுதுவதால் என்ன பயன் என்பதை ஆழ்மனதால் மட்டுமே அறிந்துக் கொள்ளமுடியும். தன் மனதின் ஆழங்களில் ஒளிந்திருக்கும் தன் இச்சைகளையும், எதிர்ப்புகளையும், துக்கங்களையும், நெகிழ்வுகளையும் சொல்ல முடியுமென்றால் வேறு எந்த லெளகீக செயல்களுக்கும் தேவையிருக்காது.
எழுதுவதனால் எழுதுபவன் அடையும் பொதுப்பயன்கள் இவை. என்னளவில், நான் அடைந்த துயரங்கள், கீழ்மைகள், சரிவுகளிலிருந்து நான் பெற்ற அனுபவங்கள் எனக்கு மிக முக்கியமானவை. அதில் தெரியும் என் உலகம் நான் அறியாத என் ஆழ்மனம் மட்டுமே அறிந்த ஒன்று. அவற்றை பல்வேறு சமயங்களில் ஒரு தனிமையில், ஒரு பயணத்தில், ஒரு கனவில் அறியமுடியும். அறியப்படும் சமயங்கள் என்று நான் நினைக்கும் ஒரு இடத்தை அடைய எழுதுகிற என்னால் மட்டுமே சாத்தியப்படுகிறது. எழுதும்போது இருக்கும் சின்ன பதற்றங்கள் எழுத எழுத தீர்ந்து பின் தீராத உவகையை கொண்டுவருகிறது, கண்ணீரை கொண்டுவருகிறது. துக்கத்தையும் மகிழ்வையும் கொண்டு வருகிறது.
மீண்டும் மீண்டும் வாழ்கிறேன். மீண்டும் மீண்டும் அகமகிழ்கிறேன், துயருறுகிறேன், உலகத்தின் உள் மடிப்புகளில் வாழ்ந்து மீழ்கிறேன். மனித துயரங்களைக் கண்டும் சாகிறேன். மீண்டும் உயிர்த்தெழுகிறேன். வசப்படுவதும் மீழ்வதும் நிகழும்போதெல்லாம் நீங்காத ஆன்மாவின் குரலை கேட்கிறேன். உணர்ச்சிகளில் தத்தளிக்கும் அந்த மகிழ்வு என்னை நான் கண்டடைவதனால் உண்டானது. நான் என்னை வேறு கோணத்தில் கண்டதால் உருவானது. வேறுயாரும் அந்த உலகை சென்று சேர்ந்துவிடமுடியாது. அந்த புனைவில் நான் கண்ட உண்மையிருக்கிறது. பொய்மையின் வேஷங்கள் இருக்கின்றன. என்னைவிட்டு விலகாத என் ஆழ்மன நோக்கங்கள் இருக்கின்றன.
எழுதுவதினால் புதியதாக நான் கண்டடையும் என்னையும் என் உலகையும் காணவே எழுதுகிறேன். எழுதி தீராதவற்றை நினைக்கும் மனபாரத்தைவிட எழுதி அடையும் மகிழ்வு பெரியதாகப்படுகிறது. எல்லா நேரங்களிலும் எழுதமுடியுமா என்றால் முடியாது. உடலும் மனமும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்திருந்தால் சாத்தியம். வாசிப்பு, பயணம் மனதையும், நடை, தியானம் உடலையும் உற்சாகப்படுத்துக்கின்றன. உற்சாகமென்பது சரியான வார்த்தையல்ல. இயல்பாக்குகின்றன, சமநிலையை பேணுகின்றன.
நான் எழுதுவதினால் ஒன்றின் வரிசையை புரிந்துக் கொள்ள முடிகிறது அதன் தொடர்ச்சியை நோக்கி செல்ல முடிகிறது. தத்துவத்தை எழுதிப்பார்ப்பவனாக அதன் அடுத்த நகர்வை இயல்பாக தன் மனம் அறியமுடிகிறது. உழுது பன்படும் நிலம்போல எழுதி பண்படுகிறது மனம். புதிய அறிதல்களை நோக்கி இட்டுச் சென்று, மேலும் தீவிரமாக எழுதும் ஆர்வத்தை ஊட்டுகிறது. அதுவே எல்லாம் எழுதியாயிற்று என்ற நிலையை அடையவிடாமல் செய்கிறது. எழுது, அதுவே அதன் ரகசியம், எழுதும்போது நீ அதை அடைவாய் என சுந்தரராமசாமி அதைத்தான் கூறுநினைக்கிறார்.
எழுதுவது பெரிய பாரமல்ல, சிந்தனையை ஒருமுகப்படுத்துவது, நாம் சிந்தித்தது இதுவரை என்ன என்பதை அறிவது. மேலும் மேலும் நம்மை கண்டடையும் பெரிய ஆளுயரக் கண்ணாடி. கண்ணாடி நம்மை பிரதிபலிப்பதில் இருக்கும் இடவல மாற்றத்தைப் போல நாம் கொஞ்சம் மாறியிருப்போம். ஆனால் முழுமையும் நாம்.
எழுதுவது பெரிய கடமையல்ல. எழுத்தின் மூலம் பெறும் பணம், புகழ்கூட உதறித்தள்ளக் கூடிய இடத்தில்தான் இருக்கிறது எழுதும்போது நான் அடையும் உவகை, அது என் ஆன்மாவின் குரலன்றி வேறாக இருக்க முடியாது. நான் யார் என்பதை அறியும் தருணம். புத்தருக்கு தியானம்போல எனக்கு எழுத்து என்று ஜெயமோகன் அதைதான் குறிப்பிடுகிறார். எழுதுவதால அடையும் பயன் வேறு எந்த பயனுக்கு ஈடாக இருக்க முடியாமல் இருப்பது அதனால்தான். அது பிறவிப்பயன் மட்டுமே.
ஏன் எழுதவேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துக் கொண்டேயிருக்கிறது. யாருக்கு எதைச் சொல்ல விரும்புகிறேன் என்கிற ஆவல் என் மனதை அலைகழித்துக் கொண்டிருக்கிறது. எழுதுவது சின்ன தொடக்கம் தான் அதைக் கொண்டு மேலும் என் சிந்தனையை வளர்த்துக் கொள்ள முடிகிறது. எதை எழுத நினைக்கிறேனோ அதை மட்டுமே எழுதுவது என் பணியல்ல. எதிர்பாராதன்மை வெளிப்படும்போது எழுத்து என்கிற பணி முழுமை பெறுகிறது. அதை நோக்கி ஒவ்வொரு சமயமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
நான் சொல்ல வந்ததை எழுதி விட்டேன் என்கிற எண்ணம் முழுமையாக எழுதவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. இன்னும் குறைவு இருக்கிறது இன்னும் சரியாக இடத்தில் என் ஆழ்மனம் வெளிப்படவில்லை என்று நினைக்கும்போது மேலும் எழுத வேண்டும் என்கிற ஆவலை தூண்டிக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது.
எதிர்பாராதன்மைக்காக ஒவ்வொரு சமயமும்
கணினி முன் ஆர்வமாக அமர்கிறேன். புனைவு மேலும் மேலும் கூர்மை கொள்வதை எழுதி தீராத பக்கங்களை
நிரப்ப ஆர்வம் கொள்கிறேன். மீண்டும் என் ஆன்மாவை அடைவேன் என்கிற நம்பிக்கையுடன்.
(கே.பி. நாகராஜன் அவர்கள் தொகுத்து சந்தியா பதிப்பகத்தின் வழியாக வந்த ஏன் எழுதுகிறேன் என்கிற நூலில் வந்த என் கட்டுரை)
No comments:
Post a Comment