Sunday, August 25, 2024

தமிழில் நாவல் வளர்ச்சி

 

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் தமிழ்நாடு அரசிற்கும், அதை சிறப்பாக நடத்தும் திரு. முத்துக்குமார் அவர்களுக்கும், ஒருங்கிணைத்து கொண்டிருக்கும் திரு. மணி. மாறன் அவர்களும் இங்கு வந்திருக்கும் என் நண்பர்களுக்கும், பள்ளி மாணவர்களும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கு சென்று நாள் முழுவதும் புத்தகங்களை வாசித்தும், ஆசிரியர்களின் பாடங்களை கேட்டு வீடு வந்து மீண்டும் வாசித்து பொருள் கொண்டு அதை மனனப் பகுதியாக உங்கள் மூளையில் நிரப்பிக் கொள்ளும் தினசரி வேலையில் இந்த பேச்சு அவ்வாறான ஒரு ஆசிரியரின் பேச்சாக உங்களுக்கு தோன்றலாம்.

உண்மையில் அப்படியில்லை. பள்ளியில் கல்லூரியில் நீங்கள் படிக்கும் பாடபுத்தகத்திலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக வாசிக்கும் ஒரு நூலை போன்றது இந்த பேச்சும் இருக்கும்.

நீங்கள் இதுவரை கேட்ட பேச்சுகளிலிருந்து வேறுபட்டு புதிய சிந்தனையை உண்டாக்கி உங்கள் தினசரி பாடபுத்தகம் தாண்டிய வாசிப்பை அதிகரிக்கும் பேச்சாக இது அமையலாம். உங்களில் சிலர் சிறந்த வாசகராக அல்லது எழுத்தாளராக ஆகும் தகுதிக்கு இந்த பேச்சின் சில சாராம்சங்கள் தூண்டுதலாக‌ அமையலாம் என்று நம்புகிறேன்.

மனிதர்கள் உண்டாக்கின‌ மொழியும் இலக்கியங்களும் எவ்வாறு காலங்களை கடந்து வந்திருக்கின்றன‌ என்பதை நாம் கொஞ்சம் உற்று நோக்கினாலே புரிந்துக் கொண்டுவிடமுடியும்.

ஆதியில் இருந்த மனிதர்கள் தினசரி வாழ்வில் இருக்கும் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், இனக்குழு சண்டை, ஒய்வு, போன்றவற்றிற்கு மேல் அவர்கள் தேடியது கலையும் இலக்கியமும் இசையும் தான். மனிதர்களுக்கு ஒரு முக்கியமான இந்த வாழ்வின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு அவை அளித்தன‌. கலையும் இசையும் தினசரி வாழ்வில் ஒரு இனிமையை அளிக்கும்போது இலக்கியம் மனிதர்களுக்கு வாழ்வில் ஒரு அர்த்தத்தை அளித்தது.

குகைகளில் அவர்கள் ஓவியங்களை வரைந்து வைத்தார்கள். தங்களின் வேட்டையாடுதலை, எங்கே விலங்குகள் உள்ளன என்பதை குறிக்க, தங்கள் சடங்குகளை குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க என்று அனைத்தையும் ஓவியங்களாக வரைந்து வைத்தார்கள்.

மொழியறிவிற்கு முன்னால் சைகை மொழி வளர்ந்தது. அதைக் கொண்டு மற்றவர்களோடு உரையாடினார்கள். பிற்பாடு மொழி வளர தொடங்கியது. தலையசைப்பு, கையசைப்பு மூலம் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள்.

மொழி வளர்ந்தது மேலும் புதிய அனுபவங்களை சேகரிக்க கற்றுக் கொண்டான். சிந்தனை என்பது மொழியில் தான் உருவானது. மொழி முழுமையாக கற்கும்போது சிந்தனையும் முழுமையாக இருக்கும். நேராக தலையசைத்தால் ஆமாம் என்றும் இடையாக தலையசைத்தால் இல்லை என்றும் உலக முழுவதுமான சைகை மொழி. வா என்பதற்கு கையசைப்பும் போ என்பதற்கு நிறுத்த அசைப்பும் பயன்பட்டன. பிறகு ஒலிகுறிப்புகள் வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக மொழி வளரதொடங்கின.

பட்டறிவு, கேட்டறிவு, படிப்பறிவு என்ற மூன்று அறிவுகளில் பட்டறிவும் கேட்டறிவும் அவனை நோக்கி வந்த அனுபங்களால் அதை எடுத்துக் கொண்டான். ஆனால் படிப்பறிவு மூலம்தான் அவனே அதை முயற்சி செய்து புரிந்துக் கொள்ள முடிந்தது. படிப்பறிவு இலக்கியம் என்னும் மிகப்பெரிய அனுபவ சுரங்கத்தை அவனுக்கு பிற்பாடு அளித்தது.

எவ்வளவுநாள் மனிதன் வாழ்ந்தாலும் அந்த வாழ்வு அவனுக்கு மிக குறுகிய அனுபவமே அளித்தது. மிக குறுகிய அனுபவங்களால் நிறைவு கொள்ளமுடியவில்லை. புதிய அனுபவங்களை சேகரிக்கவும் அவற்றை மற்றவர்களுக்கு பகிரவும் ஆசை கொண்டான். அதனால் தான் குகை மனிதாக இருக்கும்போதே குகை சுவர்களில் சித்திரங்களை வரைந்து தன் இருப்பை தெரிவித்துக் கொண்டான். எந்த இடத்தில் உணவும், இருப்பிடம் இருக்கிறது, எந்த இடத்தில் காடுகள் மலைகள் உள்ளன என்று குறித்துவைத்தான். அவர்களது பிறப்பு இறப்பு சடங்குகள், கொண்டாட்ட கேளிகைகளையும் ஓவியமாக வரைந்து வைத்தான்.

மொழி வளர்ந்ததும் சங்ககாலத்தில் இலக்கியங்களில் பா வகைகள் இல்லாமல் நேரடி கவிதைகளாக எழுதி வைத்தார்கள். ஒரு சிறிய சித்திரத்தை அளிக்ககூடிய கவிதைகளாக எழுதி வைத்தார்கள்.

பிறகு பா வகைகள் தோன்றின, வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா போன்ற வகைகள் தோன்றி அவ்வாறு எழுதினார்கள். மனப்பாடம் செய்ய ஏதுவாக அந்த முறைகளை பயன்படுத்தினார்கள். பிறகு ஒழுங்கு செய்யப்பட்ட கவிதைகளாக மனப்பாடம் செய்ய ஏதுவாக பிற்காலத்தில் எழுதிவைத்தார்கள் அல்லது வாய்மொழியாக மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

அரசுகள் பெரிதாகும்போது புதிய ஞானத்தையும் அறிவையும் தேடினார்கள். ஆகவே சின்ன கவிதைகள் போதுமானதாக இல்லை. பெரிய நிலப்பரப்பும், வளர்ச்சியடைந்த ஆட்சிக்காலமும் வரும்போது காவியங்கள் தோன்ற ஆரம்பித்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற நீண்ட காவியங்கள் உருவாயின

எல்லாம் ஒலைச்சுவடிகளில் எழுதபட்டன. அதில் புள்ளி வைக்க முடியாது. ஒற்றைக் கொம்புக்கும் இரட்டை கொம்புக்கும் வேறுபாடு இருக்காது. ரகர றகர போன்ற வேறுபாடுகள் இருக்காது. ஒரே நேர்வரிசையில் எழுதப்பட்டிருக்கும. ஆகவே அதை படித்து புரிந்துக் கொள்வதற்கு ஆசிரியரை நாடவேண்டும்.

அதாவது ஆசிரியர் இருக்கும் இடத்திற்கு சென்று பலகாலம் வாழ்ந்து கல்வி, கலை, இலக்கியம், இசை போன்றவற்றை பயில வேண்டும். இலக்கியங்களை வாசிப்பதற்கு ஒரு முறை இருக்கும். புரிந்துக் கொள்வதற்கு ஒரு முறை இருக்கும். அதற்கு உரைகள் எழுதப்பட்டிருக்கும் அவற்றையும் வாசிக்க வேண்டும். இப்படிதான் கல்வியையும் இலக்கியத்தையும் அப்போது வாசித்தார்கள். எழுதுவதற்கு ஒரு முறை இருந்தது. அதை அரங்கேற்றுவதற்கு ஒரு முறை இருந்தது. அரசர் மன்னரின் அவை பேசப்படவேண்டும்.

அந்த காலத்தை மரபிலக்கிய காலம் அல்லது பழந்தமிழ் காலம் என்று சொல்லிவந்தோம். பின்னாட்களில் வந்த காலம் நவீன இலக்கிய காலம். அச்சு தொழில் வளர்ந்தது, உரைநடை வளர்ச்சி அடைந்ததும் தான் இதற்கு காரணம். அச்சு ஊடகம் 17-18 ஆம் நூற்றாண்டில் பிரபல்யமானதும் புத்தகங்கள் வெளிவரத்தொடங்கின. மிக எளிதாகவும் வேகமாகவும் பிரதியெடுத்து வினியோகிக்க முடிந்தது.

அதில் புனைவுகள் எனப்படும் கற்பனை கலந்தவையும் அபுனைவு எனப்படும் கற்பனை கலவாதவையும் அதில் எழுதிவைக்கப்பட்டன. இங்குள்ள நம் சரஸ்வதி மகாலில் மன்னர் இரண்டாம் சரபோஜி ஒலைச்சுவடிகளையும் அச்சு புத்தகங்களையும் தொகுத்து வைத்தார். அவர் ஆட்சி செய்த காலம் 1777 முதல் 1832 வரை. அப்போதிருந்த முக்கிய நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன.

இப்படி அச்சு ஊடகம் வந்ததும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கல்வியை தாண்டி ஆசிரியரின் தேவை இருக்கவில்லை. நேரடியாக அனைவரும் வாசிக்க முடிந்தது. நம்முடைய இலக்கிய ஆக்கங்களின் வடிவங்கள் மாறத் தொடங்கின. கதைகள் சிறுகதைகளாக பரிண‌மித்தன. காப்பியங்கள் நாவல்களாக மாறின. கட்டுரைகள், நாடகங்கள் என்று பல தோன்றினாலும் புனைவிலக்கியத்தில் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் முக்கிய இடம் இருந்தது.

ஆங்கிலத்தில் சார்ட்ஸ்டோரி என்று சொல்லப்படும் சிறுகதை உண்மையில் கதைதான். முன்பு சொல்லப்பட்ட அதே கதைவடிவம் தான். முல்லா, ஈசாப் போன்ற கதைகள் நேரடியாக நீதிபோதனையாக அமைந்தவைதாம். அச்சு ஊடகத்தினால் வாசிப்பு திறன் அதிகரித்ததனால் கதைகள் போதமையாயின.

நேரடிதன்மையில்லாமல் தன் அனுபவ அறிவால் தன் நிஜவாழ்வின் கதைகளை அறிய முற்பட்டான் வாசகன். நேரடியாக கதையில் தானே பங்கு பெறாத புதிய அனுபவத்தை அளிக்காத கதைகளை அவன் விரும்பவில்லை. புதிய கதைகள் தோன்றின. பழைய கதைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஒரு ரயில் பிரயாணத்தில் அரைமணி முதல் ஒரு மணி நேரத்தில் வாசிக்க கூடிய கதைகளை வாசகன் விரும்ப தொடங்கினான். கொஞ்சம் யோசித்து புரிந்துக் கொள்ளக் கூடிய கடைசியில் ஒரு திருப்பத்துடன் அமைந்த கதைகளை வாசகன் விரும்பினான். அதில் மட்டுமே வாசகன் கதையோடு தன்னை பொறுத்திக் கொள்ள முடியும். வெவ்வெறு களங்கள், காலநிலைகள், புதிய கொள்கைகள் என்று விரிவு கொண்டது சிறுகதை. அதன் வளர்ச்சியை தனியாக பேசவேண்டும்.

மரபிலக்கியத்தில் காவியங்களின் இடத்தைதான் நவீன இலக்கியத்தில் நாவல்கள் எடுத்துக் கொண்டன. காவியங்களில் இருக்கும் விரிவான தன்மை, அதிக பாத்திரங்கள், நீண்ட காலங்கள் எல்லாம் நாவல்களில் பிரதிபலித்தன. நாவல்களின் தன்மைப் பற்றி ஜெயமோகன் சொல்லும்போது "தொகுத்துக் காட்டி ஒட்டுமொத்த பார்வையை அளித்தல்" என்கிறார். அது உண்மைதான் ஒட்டுமொத்த பார்வையை அளிக்காத நாவல்கள் சிறந்த நாவல்களாக அறியப்படுவதில்லை.

&&&&

தமிழில் நவீன படித்த சமூகம் ஒன்று உருவானதுமே, ஆங்கிலத்தில் வருவது போன்ற உலக இலக்கிய பார்வையோடு புதிய நாவல்கள் தோன்றின. முதலில் வெளிவந்த நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் அது வெளிவந்த ஆண்டு 1876. இரண்டாவதாக பி.ஆர். ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் அது வெளிவந்த ஆண்டு 1896. மூன்றாவதாக அ.மாதவையர் எழுதிய பத்மாவதி சரித்திரம் அது வெளிவந்த ஆண்டு 1898. எஸ்.எம். நடேச சாஸ்திரி தீனதயாளு நாவல் நான்காவதாக வெளியானது. தி.ம. பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய காமாக்ஷி ஐந்தாவது நாவலாக வெளியானது.

இந்த ஐந்து நாவல்களும் தமிழ் இலக்கிய உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதா தெரியவில்லை. ஆனால் புதிதாக நாவல் எழுதும் கலை ஒன்று உருவாகி வந்தது.

புதிய சாத்தியங்ககூறுகளைக் கொண்ட ஒரு இலக்கிய உலகம் உருவாகி வந்தது. மற்ற மொழிகளில் நாவல்கள் என்ற வகைமை மேலும் வளர்ச்சியை தொட்டபோது, தமிழில் அது பத்திரிக்கைகளில் தொடர்கதைகளாக வெளிவரத் தொடங்கின. அதாவது நாவல்கள் தொடர்க்கதைகள் என்ற வடிவைப் பெற்றன. கல்கி, நா. பாத்தசாரதி போன்றவர்கள் தொடர்கள் எழுத தொடங்கினார்கள். தொடர்கதைகள் நாவல் வகைமையை சார்ந்ததல்ல. சற்று பின்னரே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை வெளியாகி நாவல்கள் என்ற வடிவை மீண்டும் பெற்றன.

நாவல் என்ற வகைமை உருபெற்றதற்கு காரணமே உரைநடைதான். இந்த உரைநடையின் வளர்ச்சி ஆங்கில மொழியில் முதலில் எழுச்சிப் பெற்று பின் பிற மொழிகளில் பரவியது. நாவல்லா (novela) என்ற இத்தாலி வார்த்தையிலிருந்து வந்தது. பிரஞ்சிலும் ஆங்கிலத்தில் நாவல்டி என்று சொல்லப்படும் வார்த்தைக்கு புதுமை என்று அர்த்தம். புதுமையாக உரைநடையில் அமைந்த நெடிய கதை என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.

முன்னோடியாக கலவையாக பல நாவல்கள் வெளிவந்ததற்கு பின்னால் தொடர்கதைகளாக உருமாறி மீண்டும் நாவல்களாக உருப்பெற்றது தனிகதை. தொடர்கதையாக ஆவதற்கு அன்றைக்கு இருந்த பத்திரிக்கைகளின் பிரபல்யம்தான் காரணம். எல்லா எழுத்தாளர்களும் அதில் எழுதினார்கள்.

நாவல்களில் பல வகைமைகள் தோன்ற ஆரம்பித்தன. துப்பறியும் கதைகள், குற்றக் கதைகள், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், சாகச நாவல்கள், குழந்தையிலக்கிய நாவல்கள், மெல்லுணர்ச்சி நாவல்கள், இலச்சியவாத நாவலகள்.

ஆரம்ப நாவல்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் வெளிவந்த துப்பறியும் நாவல்களை ஒட்டி தமிழில் நாவல்கள் வெளியாயின.

குழந்தையிலக்கிய நாவல்கள்

குழந்தைகள் புராணக்கதைகளையும், பழைய இலக்கியங்களையும் செவிவழியாக கேட்டு வளர்ந்தன. அதன் பின் சுயமாக படிக்கும்போது அவர்களுக்கு பிடித்தமானவையாக மிக எளிய கதைகளும், சிக்கன எழுத்து நடையும் கொண்ட நாவல்கள் கதைகள் உருவாகின. அழ.வள்ளியப்பா, கொ.மா.கோவித்தன், யூமா வாசுகி போன்றவர்கள் தொடர்ச்சியாக எழுதிவருக்கிறார்கள். ராபின்சன் குருசோ, லில்லிபுட் மனிதர்கள் போன்றவை ஆங்கிலத்தில் சிறந்த குழந்தையிலக்கியம்.

துப்பறியும் நாவல்கள்

இளம் வாசகர்களுக்கு நேரடியான குற்றமும் அதை துப்பறியும் கதைகளை கொண்ட நாவல்கள் அதிக பிடித்தவையாக மாறின.

துப்பறியும் நாவல்கள் ஆரணி குப்புசாமி முதலியார் ஆங்கிலத்தில் வந்த நாவல்களை போல தழுவி தமிழில் எழுதினார் அதில் முக்கியமானதாக ரத்தினபுரி ரகசியம், தபால் கொள்ளைக்காரன், மஞ்சள் அறையின் மர்மம் போன்ற நாவல்களை சொல்லலாம். ரத்தினபுரி ரகசியம் 9 பாகங்களாக வெளிவந்தன. 60 நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அல்லது என்று இருக்கும் தலைப்புகளாகவே இருக்கும். ரங்கநாயகி அல்லது துப்பறியும் மூன்று நிபுண‌ர்கள், சந்திராபாய் அல்லது சங்கரதாஸின் வெற்றி.

வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜெ.ஆர். ரெங்கராஜு, வைமு கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் எழுத தொடங்கினார்கள்

குற்ற நாவல்கள்

அதற்கு பின்னால் குற்ற நாவல்கள் வளர்ச்சியடைந்தன‌, சுஜாதா, ராஜேஷ்குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றவர்கள் துப்பறியும் கதைகளை எழுதினார்கள்.

சாகச கதைகள் கொண்ட நாவல்கள்

குழந்தையிலக்கியத்திற்கு பின் விடலைப் பருவத்தில் வாசிக்கும் நாவல்கள் சாகங்கள் நிறைந்ததாக இருக்கும். சாண்டில்யன், ஜெகசிற்பியன், அரு.ராமநாதன், பூவண்ணன் போன்றவர்கள் மிக பெரியளவில் இந்த சாகச நாவல்களை எழுதியிருக்கிறார்கள்.

மெல்லுணர்ச்சி கதைகள்

சாகசத்தை விரும்பும் இளம் வாசகர்களை போன்றே பொதுவாக பெண்களுக்கு பிடிக்கும் மெல்லுணர்ச்சி கதைகள் வெளிவரத் தொடங்கின. ஆண் பெண் உறவுகள், காமத்தை, பண்பாட்டுடன் கூட்டிய எளிய உணர்ச்சிகளை சொல்லும் கதைகள் இவை. கல்கி, பி.எஸ்.ராமையா, உமா சந்திரன், ஆர்வி, மாயாவி, லட்சுமி, எஸ்.ஏ.பி, நா.பார்த்தசாரதி, இந்துமதி, சிவசங்கரி, சாவி, பாலகுமாரன், ஸ்டெல்லாபுருஸ், ரமணிசந்திரன் போன்றவர்களை சொல்லலாம்.

தீவிர இலக்கிய நாவல்கள்

தொடர்கதைகளாக வராமல் நேரடியாக அச்சுக்கு வந்த நாவல்கள், மிகச்சிறந்த நாவல்கள் இந்த வகைமையில்தான் வரும்.

சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, அசோகமித்திரனின் தண்ணீர், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கநாசுவின் பொய்தேவு, சிசு செல்லப்பாவின் வாடிவாசல், திஜாவின் மோகமுள், சின்னப்ப பாரதியின் தாகம், கிராவின் கோபல்ல கிராமம், நீல பத்மநாபனின் தலைமுறைகள், பூமணியின் பிறகு, நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், ஜெயமோகனின் காடு, எஸ்ராவின் நெடுங்குருதி, சாருநிவின் ஸீரோ டிகிரி, யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரம் இப்படி முக்கியமான சில நாவல்களை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

வரலாற்று நாவல்கள்

நிஜவரலாற்றை திரும்ப சொல்லிப்பார்க்கும் நாவல்களில் தமிழில் குறைவாகவே வந்திருக்கின்றன. பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் போன்ற நாவல்களை சொல்லலாம்.

பலவகையான புதிய வடிவ நாவல்கள் தமிழில் வந்துள்ளன.

கடித வடிவ நாவல் [கோகிலாம்பாள் கடிதங்கள், மறைமலை அடிகள்] போன்றவை நாவல் உருவான போதே வந்துவிட்டன. முழுக்க முழுக்க கணவனிடம் மனைவி கதையளப்பதாகவே தொடரும் நாவல்கூட தமிழில் முக்கால் நூற்றாண்டு முன்னரே வந்துவிட்டது. [தலையணை மந்திரோபதேசம். பண்டித நடேச சாஸ்திரி] டைரிக்குறிப்புகள் [நவீனன் டைரி, நகுலன்], பலவகை குறிப்புகள் [ஜெ.ஜெ.சில குறிப்புகள், சுந்தர ராமசாமி, சோபா சக்தி எழுதிய ம், கொரில்லா] கேள்விபதில் வடிவம் [வாக்குமூலம் .நகுலன்] ஒரு மனிதனின் மொத்த வாழ்நாளையே சொல்லும் நாவல் [பொய்த்தேவு. க.ந.சுப்ரமணியம்] ஒரே ஒரு நாளைப்பற்றிச் சொல்லும் நாவல் [ஒருநாள், கநா.சுப்ரமணியம்] ஒரு மனிதரின் நனவோடையாகவே நீளும் நாவல் [அபிதா, லா.ச.ராமாமிர்தம், ஜீவனாம்சம் சிசு செல்லப்பா]

நாவல்களை வகைமைபடுத்துவது என்பது அவற்றை எளிதாக புரிந்துக் கொள்ளவும் மேலும் புதிய நாவல்களை வாசித்து புரிந்துக் கொள்வதற்கும் தான்.

அழகியல் வழி நாவல்கள்

செவ்வியல் எனப்படும் classicism, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அனுகிச்செல்லும் பார்வையை கொண்டது, பண்பாட்டு விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப்படுத்தாமல் நோக்கும் அனுகுமுறை,

கற்பனைவாதம் எனப்படும் romanticism, கற்பனைவாதத்தில் உணர்ச்சிகள் கொந்தளிப்பாகவும், மொழி உத்வேகமாக இருக்கும் நாவல்கள்

யதார்த்தவாதம் எனப்படும் realism, தன் அனுபவங்களுக்கு உட்பட்ட, மன உணர்ச்சிகள் பொதுவாக அறிதல் தளத்தில் மட்டுமே இருப்பது

முற்போக்கு அழகியல் progressive aesthetics, மார்க்ஸிய அடிப்படையில் உருவான அழகியல். முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற பிரித்து பார்த்து பாட்டாளி மக்களின் பக்கம் நின்று எழுதுவது. தாகம், தோல், போன்ற நாவல்கள்

நவீனத்துவம் modernism, நவீன காலகட்டத்து கடைசியில் உருவான அழகியல். கல்வி வளர்ச்சி, போக்குவரத்து, இயந்திர வளர்ச்சி பகுத்தறிவு வளர்ச்சி, மதத்தின் மீதான நம்பிக்கையின்மை ஆகிய அடையாளங்களை கொண்டது. தண்ணீர், புளிய மர‌த்தின் கதை போன்ற நாவல்கள்

பின் நவீனத்துவம் post modernism, நவீனத்துவத்தை தாண்டிய சிந்தனைகள், தத்துவசிந்தனைகளை உருவாக்குவது, புதிய வரலாற்ரையும், வரலாற்றை மறு ஆய்வு செய்வது பின் நவீனத்துவ சிந்தனைகள். கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ரா. சாரு நிவேதிதா போன்றவர்களின் ஆக்கங்கள்.

தமிழில் நவீன நாவல்கள் ஆண்டிற்கு 20 நூல்கள் வரும் இடத்திற்கு வளர்ந்திருக்கிறோம். ஒவ்வொருவரும் நாவல்களை வாசிப்பதும் அது குறித்து விமர்சிப்பதும் அதற்கான கூட்டங்களை ஒருங்கிணைப்பதும் தமிழகத்தில் எல்லா நகரங்களில் தொடர்கிறது.

இன்னும் புதிய வாழ்க்கையை அறிந்துக் கொள்ளவும் பழையவற்றை மறுஆய்வு செய்வது தொடரும்வரை நாவல்களின் வளர்ச்சி குறையாது. நன்றி.

உதவிய நூல்கள்

1.      கி.வா.ஜ. - தமிழ் நாவல், தோற்றமும் வளர்ச்சியும்

2.      க. கைலாசபதி - தமிழ் நாவல் இலக்கியம்

3.      சி மோகன் - நாவல் கலை

4.      ஜெயமோகன் - நாவல் கோட்பாடு

5.      பிகே பாலகிருஷ்ணன் (அழகிய மணவாளன்) - நாவலென்னும் கலை நிகழ்வு.


(29/7/24 அன்று தஞ்சை புத்தகக் கண்காட்சியில் பேசியதன் எழுத்து வடிவம்)

No comments: