Saturday, August 31, 2024

அந்த முகில் இந்த முகில் - ஜெயமோகன்

என் நண்பர்களின் நண்பர்கள் சிலர் சினிமா மோகமும் அரசியல் மோகமும் கொண்டவர்கள். அவர்களின் பேச்சுகள் செய்கைகள் எல்லாம் சினிமா அல்லது அரசியலின் ஒரு பகுதியை வெளிப்படுத்தாமல் இருக்காது. நான் அறிந்தவரை அவர்கள் அதில் மிக தீவிரமாக ஈடுபாடு கொண்டவர்களாகவும் அப்படி இருப்பது தன்னை தனித்துவமாக ஆக்குவதாகவும் நினைப்பவர்கள். அவர்கள் விரும்பும் சினிமாக்களின் வசனங்களை அச்சு பிசகாமல் மனப்பாடமாக சொல்பவர்கள், அதை சொல்லும்போது அவர்களே அதுவாக மாறிவிடுபவர்கள் என்று தோன்றும்.

உண்மையில் அது ஒரு பாவனைதான், அவர்களே அதை அறிந்தவர்கள்தாம். சினிமா ஒரு நிழல் அதன் ஒவ்வொரு அங்கமும் வாழ்வை நேரடியாக பிரதிபலிப்பதில்லை என்று. ஆனால் அந்த நாடகத்தன்மை அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தன்னை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கும் எல்லோரும் கவனிக்கும் ஒரு இடத்தில் வைக்கும் செயலை செய்வதனால், இருக்கும் ஒரு சில மணித்துளிகளை மகிழ்வாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் நாளெல்லாம் சினிமைவை பற்றி பேசிக்கொண்டும் எண்ணிக் கொண்டும் இருப்பவர்களால் நிஜவாழ்வின் சில முக்கிய தருணங்களை இழக்கிறார்கள் என்று தோன்றும்.

என் அத்தை ஒருவர் இருந்தார். எப்போதும் வேலை, சம்பாத்தியம், குழந்தைகள் படிப்பு, என்று இருப்பவர். டிவி நேடியோ போன்றவைகளை கேட்டு பழகாதவர். ஒருநாள் வந்திருந்த இடத்தில் டிவியில் இந்த மன்றத்தில் ஓடிவரும் பாடலை பார்த்தவர், பரவசமாகி உச்சிஸ்தாசில் அவருக்கு தெரிந்த மற்ற‌ பாடல்களை பாட தொடங்கிவிட்டார். எல்லோருக்கும் ஆச்சரியம். என்ன மாதிரியான நினைவு, குரல் என்று சிலாகிதத்துடன் இத்துணை நாட்கள் எங்கே இருந்தன அவரது இந்த திறமைகள் என்று வியந்தார்கள்.

அந்த முகில் இந்த முகில் என்ற நாவலும் மெல்லிய தன்னுணர்வை வெளிப்படுத்து நாவல். மறந்த இளமையின் ஒரு செயலை மீட்டெடுக்கும் ஒரு கதை. நாயகன் மோட்டூரி ராமாராவ் அந்த நினைவிலேயே வாழ்ந்தவர் ஒரு சமயம் அதை மீட்டெடுக்க முனைந்த கதை இது.

புதைக்க விரும்பும் ஆனால் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் நினைவுகளை விடாமல் தவிப்பவர்கள் ஒரு சாரார் எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் அதை மறக்க நினைக்கும்போதே அது பெரிய நதியாக உருவாகி வெளிவந்தபடி இருக்கிறது.

ராமாராவ் ஒரு தையல்காரர், சினிமாவில் தையில் வேலையில் இருப்பவர். 1950களில் நடக்கும் சினிமாக்களில் தையல் வேலைகள் ஒரு சினிமாவில் எப்படி தேவைப்படுகிறது என்பதை உணர ஆச்சரியப்படவைக்கிறது. ஷூட்டிங்கில் நடன மங்கைகளில் ஒருவர் மட்டும் அவரை கவர்கிறார். அவரது இளமையும் முதிராத உணர்ச்சிகளும் அவர்பால் ஈர்க்க வைக்கிறது. லேசாக தன் காதலையும் சொல்கிறார். ஹம்பியில் நடக்கும் படபிடிப்பில் அங்கிருக்கும் ஜமீந்தார் அவளை தன் நண்பர்களுடன் வன்புணர்ச்சி செய்ய ஓடி வந்து ராவ் அறையில் ஒளிந்துக் கொள்கிறாள். அவளை காப்பாற்றி அவள் ஊருக்கு விட்டு சென்னைக்கு தப்பித்து விடுகிறார். ஒளிந்திருக்கும் காலங்களில் தன்னை தர அவள் சொல்லியும் அவன் மறுத்துவிடுகிறான். பிறகு தப்பித்து செல்லும் காலங்களில் அவளை அவன் அடைய, திருமணம் செய்ய சாத்தியமிருந்தும் ஏதோ ஒன்று தடுத்துவிடுகிறது. பல ஆண்டுகள் கழித்து அவளை மீண்டும் சந்திக்கும்போது நாம் இணைந்திருக்கலாம் என்று அவன் சொல்லும்போதுகூட அவள் அதை மறுத்துவிடுகிறாள். அவளுக்கு அதுபோல பல தொடர்புகள் இருக்கும், ஆனால் அவனுக்கு அவளுடைய தொடர்பு மட்டும்தான். அதை அறிந்துதான் அவள் வேண்டாம் என்கிறாள்.

சென்னைக்கு வந்து திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கு தகப்பனான பின்னும் அவர்கள் பணிசெய்த சினிமாவை மறக்க முடியவில்லை. அந்த சினிமாவை பல முறை பார்க்கிறான். வெவ்வேறு ஊர்களுக்கு சென்று.

நிறைய உச்ச தருணங்கள் இந்நாவலின் இடையே வருகின்றன. தனியறையில் இருக்கும் போது ஸ்ரீபாலா குளிக்குமிடம், சைக்கிளில் செல்லும்போது ஆ மப்பு, ஈ மப்பு என்று பாடிச்செல்லும் இடம். பேதமை நிறைந்த பெண் தன் பொறுப்பில் வரும்போது ஆணுக்கு உண்டாகும் பொறுப்பு, கடமையுணர்ச்சி, அதில் வெளிப்படும் தன்னம்பிக்கை ஆகியவை நாவலில் அழகாக வெளிப்படுகிறது.

அந்த முகில் இந்த முகில் நாவலில் கதாநாயகனின் நோக்கம் சினிமாவில் வெற்றிப் பெறுவதல்ல, ஆனால் வாழ்வில் இப்படிதான் இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவன். பொதுவாக சமரசம் செய்து கொள்ள தெரியாத‌ ராமாராவ் போன்றவர்களின் வாழ்க்கை இப்படி தான் அமைந்திருக்கும்.

அகஉலகம் என்று ஒன்று எப்போது நமக்கு இருந்துக் கொண்டேயிருக்கிறது. அதில் நடக்கும் எல்லா நினைவுகளும் ஒருவரது மொத்த வாழ்வை தீர்மானிப்பவையாக அமையும். மீளமுடியாத பாலியல் துன்பங்களும் இருக்கும், நுரைத்து ததும்பும் ஆனந்தமும் இருக்கும். ஒன்றைஒன்று சமன்படுத்த நினைக்கும் நமக்கு தெரியும் எது சரி எது தவறு என்று. மிக மேலோட்டமான வாழ்க்கையிலும் அகத்தின் ஆசைகளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. மிகத் தீவிரமான அக உணர்ச்சியை மறக்க முடியாமல் தவிக்கும் ராமாராவ், அத்தீயை அணைக்க தெரியாமல் தவிக்கும் தவிப்பு, நாவல் முழுவதும் உச்ச நிலையிலேயே வைத்திருக்கிறது.

எல்லோராலும் இந்த நாவலை பின் தொடரமுடியும் என்பது சந்தேகம். இளமையில் காதலித்து, தன்னை இழந்த, இலக்கின்றி பயணத்த, ஒருவனால் மட்டும் அறிந்துக் கொள்ள முடியும் இந்த தவிப்பை. எந்தவித அலைகழிப்புகளின்றி தன் இளமையை கழித்த ஒருவருக்கு இந்நாவல் அளிப்பது ஒன்றுமில்லை.

No comments: