நலமா அஷோக். உங்களின் குதிரை மரம் சொல்வனத்தில் வெளியானபோதே படித்து இருந்தேன். இப்பொழுது நூலகத்தில் இருந்து வெங்கட்ராம் அவர்கள் எழுதிய வேள்வித்தீ எடுத்து படித்தேன். அதுவும் பட்டு நூல்காரங்க என்று சொல்லப்படும் சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் கதை. அதனால் மறுபடியும் குதிரை மரம் படித்தேன். பட்டு நெசவின் நுட்பங்கள், நூலிற்கு சாயம் ஏற்றுவது, கட்டைகளில் சுற்றுவது இவைகள் எல்லாம் சரியாய் புரியாமல் இருந்தாலும் இயல்பாய் வாசிக்க முடிந்தது. எல்லா துறைகளிலும் வேலையை வேலையாய் செய்யாமல் கலையாய் எண்ணிக் கொள்பவர்களுக்கு வரும் சிக்கல்கள்.
நாங்க தங்க நகை செய்யும் ஆசாரிக் குடும்பத்தினர். திருச்சியின் பெரிய கம்மாளத்தெரு ஏரியா முழுவதும் எங்க ஆட்கள்தான் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தார்கள். இப்ப அந்த தெரு முழுவதும் வட நாட்டு வியாபாரிகள்தான். இன்ன பொருள்தான் என்றில்லாமல் எல்லாம் மொத்த வியாபாரம். சாரதாஸ், போத்தீஸ், சென்னை சில்க்ஸ் எல்லாத்திலும் நகை வேலை செய்தவர்கள்தான். இன்னும் ஜுவெல்லரிக்கு போனாலும் அங்கேயும் அவர்கள்தான். அந்த வேலையில் கடவுளைப் பார்த்தவங்கதான் அலைக்கழியுறாங்க.
பிரபுராம் அப்படி ஒரு ஆள். வெறும் நூல்களையும் சரிகையையும் வைத்து அழகிய புடவையை உருவாக்குபவன். கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள தெரியாதவன். வறுமையினால் வேற வேலைக்குச் சென்றாலும் தன் விரல்கள் காய்த்துப் போனால் திரும்பி புடவை நெய்ய முடியாதே என்று கவலைப்படுபவன். அவனிடம் இருந்து அந்தத் திறமை போனால் அவன் ஒன்றுமே இல்லை. குடிச்சி அழிந்து போகலாம். அம்மையப்பம் கிறுக்கனாசாரி போல் ஆகலாம். அல்லது வஞ்சிரத்தை குடித்து செத்துப் போகலாம். நகை செய்யும் தொழிலிலும் அப்படி ஒரு விஷம் கையில் உண்டு.
காலம் தனது ஆரக்கால்களில் அப்படி எத்தனையோ கலைஞர்களை மேதைகளை அரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறது. காலம் மாறுவதை உணர்ந்து கொஞ்சம் சுதாரித்தால் மேல் வந்து விடலாம். எம் கோபாலகிருஷ்ணன் இந்த மாதம் எழுதிய ஒத்ததறி முதலியார் போல. ஆனால் கலைஞனுக்கு அந்தக் கால மாற்றம் எதுவும் புரியாது. இந்தக் கலைஞர்கள் ரொம்ப மெல்லிய சுபாவம் வேறு கொண்டிருப்பார்கள். ஒருத்தன் ஏதாவது சொன்னால் உடனே கால் நடுங்கிப் போவார்கள். பிரபுராமுக்கு அவன் திறமை மேல் நம்பிக்கை இருந்தாலும் இது அவனுக்கு கடைசி வாய்ப்பு. இதில் கொஞ்சம் தப்பு ஏதாகிலும் நடந்தால் அவன் இந்தத் தொழிலில் மேல் வரமுடியாது. அந்தப் படபடப்புடன் இருக்கும்போது கொஞ்சம் மற்றவர்கள் நெகட்டிவ் ஆக ஏதாவது சொன்னவுடன் அவன் முற்றிலும் செயல் இழந்து விடுகிறான். இப்படி எத்தனை பிரபு ராம்கள்.
இப்பொழுது உங்கள் கதைகள் எதிலும் சமீபத்தில் வரவில்லையே. எழுதலையா? தொடர்ந்து எழுதுங்கள் அஷோக். வாழ்த்துக்கள்.
டெய்சி
அன்புள்ள டெய்சி அவர்களுக்கு,
வணக்கம், நீங்கள் எழுதியவை உற்சாகம் அளிக்கின்றன. சரளமாகவும் அழகாவும் எழுதியிருக்கிறீர்கள்.
ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்ட வேலையென எதாவது ஒன்றை ஆண்கள் எப்போது வைத்திருப்பார்கள். சிலருக்கு பரம்பரையாக வந்துவிடும். குடும்ப பிண்ணனி இல்லாதவர்கள்கூட ஓவியம், கதை எழுதுதல், சிற்பம், மரம்நடுதல், என்று கலவையாக எதாவது வைத்திருப்பார்கள். அதை இழக்கும்போது தன் இறப்பை போன்றே உணர்க்கிறார்கள். அதைத்தான் எழுத வேண்டும் என நினைத்தேன். நீங்கள் சொன்ன நகைஆசாரி குடும்ப பரம்பரையாக இப்போது இல்லை, வேறு வேலைக்கு சென்றுவிட்டார்கள், அப்படி பல வேலைகள், இப்படி நம் கைவிட்டு போயிருக்கிறது.
நெட்டிவேலை, பொம்மலாட்டம், தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் பெயிண்டிங், தட்டு, ஆடும் குதிரை என்று நிறைய சொல்லலாம். புதிய தொழிற்நுட்ப வளர்ச்சியால் சில இயற்கையாக அழிந்தாலும், சிலவற்றை விட மனமற்று செய்துக் கொண்டிருக்கிறார்கள். நாகஸ்வரம் செய்யும் கலைஞர்கள், பித்தளை விளக்கு செய்பவர்கள் இன்னும் விடாமல் செய்துக் கொண்டிருகிறார்கள், அவர்கள் தமிழகத்தில் மொத்தமே 100 பேர்கள்தான் இருப்பார்கள். ஈடுபாடுடன் செய்யப்படும் இந்த வேலையை அவர்களால் விடவே முடியாது. அதில் அவர்களின் முழு ஆன்மாவும் இருக்கிறது.
இதே போன்ற கதைகளை தேடிப் படித்து எழுதியமைக்கு மிக்க நன்றி.
-கே.ஜே. அசோக்குமார்
குதிரை மரம், குறுநாவல்:
https://solvanam.com/2021/03/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
No comments:
Post a Comment