Friday, March 18, 2022

குதிரை மரம் & பிற கதைகள் - சுரேஷ் சுப்பிரமணி


எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் பல இணைய இதழ்களில் கதைகள் எழுதி வருபவர். தஞ்சைவாசி. இவரின் முதல் தொகுப்பான 'சாமத்தில் முனகும் கதவு' அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிறப்பான தொகுப்பு. இந்நூல் இவரின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.

இதில்,

1. தற்கொலை முகம்.

2. மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்.

3. கருடனின் கைகள்.

4. ஓசைகள்.

5. கணக்கு.

6. புரியாதவர்கள்.

7. அலர்.

8. எஞ்சும் இருள்.

9. பாம்பு வேட்டை

என்ற ஒன்பது சிறுகதைகளும்,

10. குதிரை மரம்.

என்ற குறுநாவல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது

ஏற்கனவே சில கதைகளை இணையத்தில் வாசித்திருந்தாலும் தொகுப்பாக வாசிக்கும்போது கதைகள் தரும் மன பிம்பங்கள் சுவாரஸ்யத்தை தருகின்றது.

முதல் கதை 'தற்கொலை முகம்' மனிதர்களின் உணர்வுகளை உளவியல்பூர்வமாக அணுகுகிறது. எதிர்காலத்தின் அசாதரணங்கள், மரணம் ஆகியவை பற்றிய பயங்கள் எல்லாம் படிக்காதவனுக்கும் படித்தவனுக்கும் ஒன்றுதான். மனிதர்களின் அடிப்படை மன ஊசலாட்டங்களை கதாபாத்திரங்கள் இக்கதையில் சம்பவங்கள் வழியே துல்லியமாக காட்டுகிறது.

இரண்டு தலைமுறைகளுக்கிடையேயான இடைவெளி ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்களை அழகாக அலசுகிறது 'கருடனின் கைகள்' கதை. முந்தைய தலைமுறை பெண்களுக்கு எப்போதும் கணவன் ஒரு கால்விலங்குதான். கணவன் மறைவுக்குப் பிறகு புவனாவின் அம்மா வெளிப்படுத்தும் அசாத்திய மாற்றங்களை யு.எஸ் ரிடர்ன் மகள் புவனாவாலேயே ஜீரணிக்க இயலவில்லையே.

வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இசை என்ற ஓசையே நிரப்புகின்றன என நம்பும் சுந்தரலிங்கம் பின் மெளனமே சாஸ்வதமானது என உணர்வதை மென்மையாக சொல்கிறது 'ஓசைகள்' கதை. தனிமையுடன் பழக்கப்பட்ட மனது குழுவுடன் பயணப்படும்போது நிதர்சனத்தை அறிந்து கொள்கிறது. எந்த வயதிலும் புதிது புதிதாக கற்றுக்கொள்வதுதான் வாழ்வின் இயல்பு. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.

பொருள் தேடும் உலகில் ஒரு நெசவுக் கலைஞனின் அகவயமான ஊசலாட்டங்களை, புற உலக நடைமுறை வாழ்வோடு பொருந்த முடியாத அவனின் கலை

மனசின் தவிப்பை பிரமாதமாக பேசுகிறது இத்தொகுப்பில் உள்ள 'குதிரை மரம்' என்ற குறுநாவல். தொழிலை கலைப்பூர்வமாக அணுகி தொழிலை செய்யும் கலைஞன் அத்தொழிலை கைவிட்டு வெறொரு தொழிலுக்கு பழகுவது நடக்க முடியாத ஒன்று. கலைஞனின் மனம் அதை ஏற்கவே ஏற்காது. மீறி அது அவனுக்கு தினிக்கப்பட்டால் அவன் உயிரையும் விட சித்தமாவான். நெசவுத் தொழில் கலைஞன் பிரபுராம் விஷயத்தில் அதுதான் நடந்தது. ஒரு கலைஞனின் பரிதாபகரமான வாழ்க்கை சூழலை படம்பிடித்து காட்டுகிறது இக்கதை. இத்தொகுப்பின் சிறந்த கதையாக இதை சொல்லலாம்.

இதுக்கு இதுதான் நேர்வழி என ஒரு முன்முடிவோடு எதிர்நோக்கும்போது அதுக்கு இன்னொரு வழியும் உள்ளது எனத் தெரியவரும்போது ஏற்படும் தடுமாற்றங்களை, அது ஏற்படுத்தும் தன்முனைப்பை 'கணக்கு' கதை உளவியல்பூர்வமாக அலசுகிறது.

வீட்டில் உள்ள பெரியவர்களை வைத்துதான் அவ்வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறது. அவர்கள் மறைந்துவிட்டால் மற்றவர்கள் உதாசீனப்படுத்தப் படுவார்கள் என்ற வாழ்வின் ஒரு நிதர்சனத்தை சொல்கிறது ' புரியாதவர்கள்'. வீட்டு வாசலில் கீரை விற்பவர்களும், புளி விற்பவர்களும், ஊதுபத்தி, மாவடு விற்பவர்களும் வந்து கதவை தட்டி வாங்கிக் கொள்ள கேட்பதை இந்த தலைமுறை அறியாது. காமாட்சி பாட்டி போன்றவர்கள் பொருள் மட்டும் விற்பவர்கள் அல்ல. அவர்கள் நம் உறவையும் நாடுபவர்கள்.

தொகுப்பின் ஏனைய கதைகளும் தனித்தனி களங்களைக் கொண்டு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது. கதைகளின் கரு இலகுவாக இருந்தாலும் அவை செறிவாக சொல்லப்பட்டிருப்பதால் அது நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது. எழுத்தாளர் கே.ஜெ.அசோக்குமார் கதைகளில் வரும் சூழலை நுட்பமாக எழுவது கதை தர்க்க ரீதியாகவும் பலமாக உள்ளது என எண்ண வைக்கிறது.. குறிப்பாக 'குதிரை மரம்' கதையில் நெசவுத் தொழிலின் பாடுகளை, தறி நெய்யும்போதும், பாவு தோயும்போதும் ஒரு நெசவாளி மேற்கொள்ளும் தொடர்ச்சியான வேலைகளை நுட்பமாக சித்தரிக்கிறார். கதைகள் நேர்கோட்டில் சொல்லப்பட்டாலும் கதைகளின் ஆரம்பம் சம்பவங்களின் இடையிலிருந்தே ஆரம்பித்து பயணிப்பது விறுவிறுப்பை தோற்றுவிக்கும் கதை சொல்லும் பாணி. இவரின் முதல் தொகுப்பை விட இது மேலும் சிறப்பாக அமைந்திருப்பது இவரின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.....

வாழ்த்துகள் கே.ஜே.அசோக்குமார் சார் 👍.

யாவரும் பதிப்பகம், வேளச்சேரி, சென்னை. விலை:ரூ.200/-

No comments: