Thursday, April 2, 2020

தன்முனைப்பு வாழ்க்கை: எழுதாப் பயணம் - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்



தாய் தன் பிள்ளையை தன்னுடலின் ஒரு பகுதி என்றே நினைக்கிறாள். எப்போதும் குழந்தையை அணைத்துக் கொண்டிருப்பதையும், அவள் இடையில் ஒசித்து வைத்திருப்பதிலும் தெரியும். தந்தை தன் பிள்ளையை தன்னுயிராகவே நினைக்கிறார். ஆகவே தன் பிள்ளையை நான்தான் அவன்/அவள் என நினைக்கிறார். நீண்டநாள் குழந்தையின்மைக்கு பின்னான குழந்தை பிறப்பால், அல்லது தன் பால்ய கால மோசமான அனுபவங்களின் விளைவாகவும், அவர்களிடம் இந்த பண்பு அதிகமாகவே தெரியும்.


ஆட்டிசம் அல்லது மூளை திறன் செயல் குறைபாடுள்ள குழந்தைகளை அவர்களது 18 மாதத்திற்கு பின்னே கண்டறியமுடியும். பல்வேறு கனவுகளில் மிதந்த தம்பதிகள் 18 மாதத்திற்குபின் அடையும் மனஅவசங்கள் எளிதில் மற்றவர்களால் புரிந்துக் கொள்ளமுடியாதது. ஆட்டிசத்தின் காரணங்கள் கண்டறியப்படாததும், அதற்கு இன்னும் மருந்துகள் கண்டறியப்படவில்லை என்பதும் ஆட்டிச குறைபாடின் மிகப்பெரிய பிரச்சனை. அத்தோடு ஆட்டிச குழந்தைகள் ஒவ்வொன்று ஒவ்வொரு மாதிரியானவர்கள். அக்குழந்தையின் மூலம் பெற்றொர்கள் பெறும் அனுபவங்களும் வித்தியாசப்படும். இப்படியான சிக்கலான சூழலில் அக்குழந்தையை வளர்ப்பது பெரிய சுமைதான். அந்த குழந்தைவளர்ப்பு பற்றி எழுத்தில் மற்றவர்களுக்கு குறிப்பாக ஆட்டிச பெற்றோர்களுக்கு புரியும்படி எழுதுவது பெரிய சவால். ஏனெனில் பல்வேறு குறைபாடுகள் சேர்த்தே ஆட்டிசம் எனப்படுகிறது. லக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருக்கும் எழுதாப் பயணம் என்கிற நூல் அக்குறையை சற்று போக்கும் என நம்புகிறேன்.

ஆட்டிச குழந்தை வளர்ப்பு ஒரு திட்டமிடாத பயணம். அந்த பயணம் ஆரம்பித்த இடத்தை தொலைப்பதும் இலக்கை அடையமுடியாத துயரமும் நிறைந்தது. எழுதாப் பயணம் நூல் நாளும் அடைந்த அனுபவங்களையும், மூளை செயல்திறன் குறைபாடு என்றால் என்ன என்பதையும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் கலவையாக எழுதப்பட்டிருக்கிறது. முழுக்க அனுபவ பதிவு என்றாலும் மற்ற அடுத்த இரண்டையும் சேர்த்திருக்கிறார் ஆசிரியர்.

வழிகாட்டி நூல் என்று இந்நூலை பிரிக்க முடியாது. ஆட்டிச வழிகாட்டி என்று ஒன்று இல்லை என்று உலகத்தின் எல்லா பகுதிகளிலும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சில புதிய முயற்சிகள், புதிய வழிமுறைகள் என்று மாறுவதுதான் காரணம் என நினைக்கிறேன். சில குழந்தைகளுக்கு இசை அல்லது ஓவியம் அல்லது விளையாட்டு என்று அவர்களின் ஆர்வங்கள் இருக்கும். அதை கண்டறிவதும் அவர்களுக்கு சரியான நேரத்தில் விதத்தில் சொல்லித் தருவதும் பெரிய சவால்தான்.

ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் என்பதுதான் இதன் உபதலைப்பு. அந்த வகையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. குழந்தையினுடனான பேச்சுப் பயிற்சி, செயல்வழிப் பயிற்சி, சிறப்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டதன் அனுபங்கள் சின்ன நகைச்சுவையுடன் பேசப்படுகிறது. சாதாரண பள்ளியில் சேர்ப்பதில் ஏற்படும் சிரமங்கள், அதிலும் குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம், போன்றவைகள் உண்டு.

ஆட்டிச குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சிரமத்தில் முக்கியமானது இந்த சமூகத்தின் பார்வை. மூளைவளர்ச்சியற்ற குழந்தை என்று எளிதாக பேசி, அறிவுரை வழங்கும் ஆட்களை சமாளிப்பதுதான். குழந்தை வளர்ப்பதில் அசாத்திய பொறுமை. தன் வாழ்நாளை முழுவதும் அக்குழந்தை வளர்ப்பதில் கழியும் என்பதில் அடையும் விரக்தியும் உண்டு.

எல்லா மனிதர்களும் தங்கள் துறையில் சிறந்து விளங்குவதில்லையோ அதுபோல ஆட்டிச குழந்தைகளும் தங்கள் வாழ்வில் வெற்றிகளை பெறுவதும் இழப்பதும் நடக்கும். அந்த மர்மம் இருக்கும்வரை எல்லா பிரச்சனைகளின் நடுவிலும் வாழ்க்கை இனிக்கவே செய்கிறது.

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பிரச்னைகளுக்கு நடுவே இனிக்கும் வாழ்க்கை. யதார்த்தம்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆட்டிசம் புரிந்து கொள்ளளும், ஏற்றுக் கொள்ளலும், பொறுமையும் அவசியம்
எனது இரண்டு நண்பர்களின் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆனாலும் அவர்களின் அயரா உழைப்பு குழந்தையின் எதிர்காலத்தை நல் வழிப் படுத்துவதாக உள்ளது
அனைவரும் படிக்கத் தகுந்த நூலினை அறிமுகம் செய்துள்ளீர்கள்
நன்றி