Monday, April 13, 2020

கொரோனா காலத்தில் எப்படி வாசிக்கலாம்?



பகத்சிங் தூக்கு மேடைக்கு செல்வதற்கு முன்புவரை வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. வாசிப்பினால் ஒருவர் அடையும் உணர்ச்சிகள் வெளிவுலகில் இருக்கும் உணர்ச்சிகளை விட உன்னதமானவை என்று சொல்லாமல் சொல்லும் சம்பவம் அது. புறஉலக இன்பதுன்பங்களை கடக்க வாசிப்பு எவ்வளவு பயன்பட்டாலும் புறஉலகை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதை சிறிது நேரம் மறக்கலாம் அல்லது ஒத்திப்போடலாம். பல சமயங்களில் வாசிப்பிலிருந்து அதற்கான தீர்வுகளும் கிடைக்கலாம். தமிழ் இந்துவில் (12/4/2020) ஜி.குப்புசாமி எழுதியிருக்கும் கரோனா காலத்தில் என்னென்ன வாசிக்கலாம்? என்கிற கட்டுரையிலிருந்து எப்போது அல்லது எப்படி வாசிக்கலாம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்ததின் விளைவு இது. அதேவேளையில் இது என் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே.

என்னென்ன வாசிக்கலாம் என்பது அவரவர் தேர்வுபோல எப்படி வாசிக்கலாம் என்பதும் அவரவர் தேர்வுதான். ஆனால் சில உண்மைகளை எடுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். வாசிப்புக்கான நேரத்தை அல்லது மனதை சரிபடுத்துவது வாசிப்பின் இடத்தில் பாதியை அடைவதுபோல.

சிலர் அதிகாலையில் எழுந்து வாசிப்பதும், சிலர் இரவுணவிற்குபின் வாசிக்காக தொடங்குவதும் உண்டு. பொதுவாக அதிகாலையில் வாசிப்பது சிறந்தது, காலை 3 அல்லது 4 மணியிலிருந்து தொடங்கலாம். 6 அல்லது 7 மணிக்கு முடித்துவிட்டு வீட்டில் மற்ற வேலைகளை தொடங்கலாம். காலை உணவிற்குபின் இந்த கொரோனா காலத்தில் யாரும் தொல்லைப்படுத்தபோவதில்லை. 10 மணி தொடங்கி 2 மணிவரை வாசிக்கலாம். மதியஉணவிற்குபின் ஒரு குட்டி தூக்கம் போட்டபின் மாலை டீக்கு பின் மீண்டும் தொடங்கலாம். இப்போது 6 மணி தொடங்கி 8 மணி வரை வாசிக்கலாம். பிறகு இரவுணவிற்கு பின் தூங்கிவிடலாம். அதிகாலை எழுபவர் இரவில் கண்விழித்து வாசிப்பது சரியாக இருக்காது. அடுத்த நாள் வாசிப்பை பாதிக்கும். குறைந்த பட்சம் மூன்று இரண்டு மணிநேரங்கள் கிடைக்கும் கொரோனா காலத்த்தில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 16 மணிநேரம் வரை வாசிக்க ஏதுவாக நேரம் இருக்கிறது. ஆழ்ந்து கவனித்து வாசிப்பது வெறும் 3 மணிநேரம்தான் இருக்கும். சராசரியாக இந்த மூன்று மணிநேரத்தை ஒரு நாளில் சாதாரண நாட்களில் வாசிக்கும்போது கொரோனா காலத்தில் இதைவிட அதிகம் வாசிக்கலாம்.

வாசிக்கும் புத்தகங்களை தேர்வு செய்வதில் ஒரு டிரிக் இருக்கிறது. ஒரு நேரத்தில் ஒரே புத்தகத்தை படித்து முடிப்பது. மற்றொன்று வெவ்வேறு சமயங்களில் (காலை, மாலை) வெவ்வேறு நூல்களை வாசிப்பது. அவரவர் வாசிப்பு பழக்கம் பொறுத்து மாறுபடும். எழுத்தாளர் சுஜாதா கழிவறைக்கு செல்லும் நேரத்தில் தினம் இந்திய வரலாறு ஆக்ஸ்போர்ட் எடிசனை வாசித்து முடித்துவிட்டார். ஒரு கால்மணிநேரம் அதற்கு செலவிட்டதன் பயன். ஆனால் ஒரே நேரத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பது நல்லது.

ஒரு நூலின் மூன்றில் ஒரு பகுதியை வாசித்துவிட்டால் அந்த புத்தகத்தை நீங்கள் முழுமையாக வாசித்துவிடுவீர்கள். பலகாரணங்களுக்காக ஒரு நூலை பாதியில் விடுவது நடக்கும். ஆகவே எப்படியாவது 30% முடிக்க பாருங்கள் (சில நூல்களுக்கு 50% ஆகலாம்). நான் 300 பக்கங்கள் கொண்ட ஒருபுத்தகத்தை 100 பக்கத்தை கடக்க மூன்று நாட்கள் ஆயின, ஆனால் அடுத்த 200 பக்கங்களை கடக்க 2 நாட்களே தேவைப்பட்டது.

கொரோனா காலத்தில் வீட்டில் அனைவரும் இருப்போம். தொலைக்காட்சி ஓடிக்கொண்டேயிருக்கும். செல்போன் பார்ப்பதும் அதிகரித்திருக்கும். ஆனால் இந்த இரண்டும் வாசிப்பிற்கு இடைஞ்சலானவை. அதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிடுங்கள். வாசிக்க வேண்டும் என நினைத்திருக்கும் நேரத்தில் எக்காரணம் கொண்டும் இந்த இரண்டிற்கு இடமளிக்காதீர்கள். உண்மையில் தனிமைப்படுத்தலுக்கு சிறந்தது புத்தகவாசிப்புதான்.

போன வருடம் புத்தககாட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் வாசிக்கவில்லை என்று குறைபடும் மக்களுக்கு இந்த கொரோனோ காலம் இன்னும் நீட்டிக்கபட இருப்பது மகிழ்ச்சியைத்தான் அளிக்கும். கொரொனோ முடியும் சமயத்தில் அனைவரும் சிறந்த வாசிப்பு திறனை அடைந்திருப்பார்கள். அதே வேளையில் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை கொஞ்சம் அறிமுகப்படுத்தி வைப்பதும் சிறந்ததாக முடியும். அனைவருக்கும் கொரோனா கால வாழ்த்துகள்.

5 comments:

நான் said...

nice

சாந்தமூர்த்தி said...

Happy Reading!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான உத்தி. வாசிப்பைவிட எழுதுவதில் நான் அதிகமாக கவனம் செலுத்திவருகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள் என்பர்
வாசிப்போம்
கொரோனா காலத்தை வாசிப்பு காலமாய் மாற்றி வாசிப்போம்

பாஸ்கர் said...

நல்ல காலத்திலேயே புத்தகம் படிப்பது கஷ்டமாக இருக்கிறது. கொறாணா கவலையும் சேர்ந்து கொண்டால் எப்படி வாசிப்பது? அது இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கிறது