Tuesday, September 3, 2019

இசைவாகா வாழ்க்கை - கானல் நதி விமர்சனம்


இசை வாழ்க்கை என்பது ஒரு பழமையான வாழ்க்கை முறையோடு இயைந்துவிட்டது என்கிற எண்ணம் நம் மனதில் எங்கோ இருக்கிறது. கிராமபோன், அதன் இசைத்தட்டுகள், வால்வு ரேடியோக்கள், ஹார்மோனியம், பழைய வீணை ஆகியவைகளின் நினைவுகள் நம் அந்த உணர்வுகளை உறுதிப்படுத்துகின்றன. பழமையடையும்போது இசைக்கு திடமான ஒரு அழுத்த உணர்ச்சி கூடிவிடுகிறது போலும். இசை பழமை அடைய அடைய அது எளிமையடைகிறது, கூடவே இசையின் நுணுக்கங்கள் புரிபட ஆரம்பிக்கின்றன. புதிதாக இருக்கும்போது மெட்டின் மேல் குவியும் மனம் பழையதாகும்போது வார்த்தைகளின் மேல் குடிகொள்கிறதே அதுபோல.

இசையை விவரிக்கும் போதெல்லாம் வாழ்க்கை விரிவடைகிறது. எந்த பெரிய கற்பனையை கொண்டும் இசையுடன் நம் வாழ்வை இணைத்துக் கொள்கிறோம். கற்பனை வாழ்வு இருப்பதில் மிகப்பெரியது, வலி நிறைந்தது. போட்டி வாழ்க்கையிலிருந்து எவ்வளவு தூரம் விலகுகிறோமோ அவ்வளவு கற்பனை வாழ்விற்குள் வந்துவிடுகிறோம் என்று சொல்லலாம்.

இசையை/கலையை வாழ்க்கையாக கொள்பவர்களுக்கு சோகங்களும் தோல்விகளும் அதிகமிருப்பதை நாம் அறிந்தேயிருக்கிறோம். இது அவர்களின் நுண்ணுர்வால் விழைந்த விழைவு. எல்லாவற்றையும் அகஉணர்வாகவே தன் கற்பனை மூலம் காண்பதால் புறஉலகின் சிக்கல்கள் புரிபடாமல் அவைகளை எதிர்கொள்ளும்போது தன் கைமீறி செல்பவைகளை கண்டு அதிர்ந்து வாழ்க்கையை தொலைக்க ஆரம்பிக்கிறார்கள். இசைக் கலைஞனான தனஞ்செய முகர்ஜியின் கதையாக சொல்லப்படும் நாவல் கானல் நதியும் இசைக்கலைஞனின் தோல்விகளை சொல்லும் கதைதான். யுவன் சந்திரசேகரின் ஆழ்ந்த இசையனுபவங்களை அவரது தீவிர நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அழகியல் நாவல்.

இசைக்கலைஞன் தன் தேடல்களை அவனது பலவீனங்களின் வழியே அடைய முற்படுவது என்பது தேடும் அவனறியா ரகசியத்தை வைத்திருக்கும் சாவி தொலைந்த பழைய பெட்டிக்கு ஒப்பானது. விரும்பும் இசையையும் பெண்ணையும் ஒரே நோக்கில் காண்பதும் இசைக் கலைஞனின் வெகுளிதனமா? இரண்டையும் ஒரே வகையில் அடைய முயல்வதும் தனஞ்செயன் போன்ற அப்பாவி கலைஞர்கள் தானா?. எல்லா கலைஞனைப் போல கடைசிவரை அவன் உணராத தனஞ்செயனின் அகஉலகம் நம்மை படுத்திக் கொண்டேயிருக்கிறது.

சங்கராபரணம், மேகசந்தேசம், சலங்கைஒலி, சிந்துபைரவி போன்ற திரைப்படங்களில் இசைக்கலைஞனின் உலகை சொல்ல முயற்சித்தவைகள். அவைகள் எல்லாவற்றிலும் கலைஞன் தோல்வியடைகிறான். லெளகீக வெற்றிபெறும் கலைஞர்களுக்குகூட மென்சோகம் ஒன்று அவர்கள் மனதில் குடிக்கொண்டிருக்கிறது என தோன்றுகிறது. அந்த சோகமே இசைமீதான நாட்டத்தை மீண்டும் மீண்டும் அவர்களை செலுத்திக்கொண்டியிருக்கிறது.

தனஞ்செயன் சிறுவிஷயங்களுக்குகூட உள்ளம் அசைபவன். அவன் சிறுவயதிலேயே இசைமீதான நாட்டத்தை அவன் அப்பா புரிந்துக் கொள்கிறார். குருவிடம் சேர்ப்பிக்கிறார். இரண்டாம் குழந்தை தனஞ்செயனுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்துவத்தை வெறுப்புடன் ஏற்கும் அண்ணன் சுப்ரதோ, சோட்டூ என்று செல்லமாக அழைக்கப்படும் அண்ணனை தாங்கும் தங்கை அபர்னா. எல்லாவற்றையும் தனஞ்சயனுக்கு விட்டு தரும் அம்மாவும் அப்பாவும். வாழ்க்கை அவனுக்கு அழகாக, தேடுவது எதுவும் கையில் கிடைப்பதாக அமைந்திருக்கிறது. அவன் தேடும் வாழ்வின் அர்த்தத்தை இசையும் அவனுக்கு வசப்படுகிறது. மிக இளம்வயதிலேயே மேடையேறி கச்சேரியும் செய்துவிடுகிறான். இனி அவன் வாழ்வில் தன் குருவைப் போல வாழ்நாளெல்லாம் மேடை கச்சேரிகளை செய்து வாழவேண்டியதுதான் பாக்கி. பதின்பருவத்தில் சந்தித்த சரயு என்கிற பெண் அவன் வாழ்வில் இசையையும் தாண்டி அவன் மனதில் முக்கிய இடத்தை பிடிக்கிறாள்.

அது எப்படி என்ற கேள்வி நம்மனதை அரிக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் சரயுவை காமத்தின் வழியாகவே புரிந்துக் கொள்கிறான். காமத்தின் வடிகாலிற்கு சில பெண்கள் அவனுக்கு இருந்தாலும், அத்தை, அண்ணி போன்றவர்கள் அவன் மனதில் காமஎண்ணங்களாக வளர்வதை, இசையை மீறி செல்லும் இந்த எண்ணங்களை, எண்ணி வருந்துகிறான். அது அவனது மிகப்பெரிய பலவீனமான அவனுக்கு தோன்றுகிறது. இசையை வெறுக்கிறான். அதனால் அவனை தூக்கிவிடும் அவன் நண்பனான குருசரண் பிரசாதை வெறுக்கிறான். கஞ்சா, மது போன்ற வஸ்துகளின் மீது அவனையறியாமல் நாட்டம் கொள்கிறான். வீட்டை விட்டு வெளியேறுகிறான். அலைந்து திரிந்து மனிதர்களை சந்திக்கிறான். ரயில் நிலையத்தில் ஒரு நோயுற்ற பெண்ணையும், முஸ்லீம் நண்பனையும் பெறுகிறான்.

சரயுவை வேசியாக சந்திக்கிறான். அவள் அவனுக்கு கிடைத்தாலும் அவன் விரும்பவில்லை. தங்கையை கன்னியாஸ்திரியாக சந்திக்கிறான். அவளின் உந்துதலால் மீண்டும் அப்பாவையும் அம்மாவையும் வீட்டிற்கு வந்து பார்க்கிறான். நோயுற்ற அவர்களுக்கு அவன் தேவை இருக்கிறது. குருவை சந்திக்க நினைக்கிறான். மீண்டும் பழைய வாழ்க்கையை வாழ நினைக்கிறான். ஆனால் அவன் மனபோராட்டத்தில் ஒரு நாள் இரவு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

எல்லோருக்கு எளியவாழ்க்கையின் நேர்க்கோடு அமைவதில்லை. அவர்கள் விரும்பும் வாழ்வின் சிறு தோல்விகள் அவர்களை வேறு திசை நோக்கி செலுத்துகிறது. எத்தனை ஆச்சரியம். சிறு தோல்விகள் வாழ்வின் திசை மாற்றுகிறதா? கலையார்வம் கொண்டவர்களுக்கு கலைமீறல்கள் அனைத்துமே நோக்கற்றவைகள்தாம். செல்லும் இலக்கைவிட செல்லமுடியா இலக்கின் பாரம் அழுத்திக் கொண்டேயிருக்கிறது. பிறமனிதர்களின் சறுக்கல்கள்கூட அவர்களுக்கு பாரமாக இருக்கிறது.

ஓப்பீட்டளவில் சஞ்சாரம், மோகமுள் போன்ற நாவல்கள் இந்நாவலுக்கு நெருக்கமானவைகள் என்று சொன்னாலும் காடு நாவல் மிக நெருக்கமானது என நினைக்கிறேன். கிரிதரனும், தனஞ்செயனும் ஒரே வகையான பதின்பருவத்து சிக்கல்களில் இருப்பவர்கள். அவர்கள் தங்களுக்கென்று சில இலக்குடன் வாழ்க்கையை தொடங்குபவர்கள். அவர்கள் அடையும் இடம் அவர்கள் எதிர்பாராதது, ஆனால் அவர்கள் உணர்ந்தே இருப்பவர்கள் போன்று இருப்பவர்கள், தோல்வியும் மரணமும் வாழ்வின் ஒரு பகுதி என உணர்ந்தவர்கள் போல.

இசையில்லா தனஞ்செயன் வாழ்வை நாம் இவ்வளவும் தூரம் புரிந்துக் கொண்டிருப்போமோ என்பது சந்தேகம். இசையின் தோல்வி கொண்டடப்படுகிறது. அதற்கு ஒரு கெளரவமும் கிடைத்துவிடுகிறது. நேர்கோடாக பயணிக்கும் இந்நாவலை புரிந்து கொள்வதில் சிரமமில்லை. ஆனால் புரியாத விஷயங்கள் நம்வாழ்வில் இருப்பதன் ரகசியத்தை திறந்து வைக்கிறது கானல் நதி நாவல்.

[31/8/19 அன்று தஞ்சைக்கூடல் கூட்டத்தில் கலந்துரையாடியவைகளின் கட்டுரை வடிவம்.]

No comments: