Monday, August 5, 2019

கலங்கிய நதி வாசிப்பனுபவம்



தில்லியில் இருந்த சமயங்களில் அறிந்த ஒன்று அங்குவாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தில்லிவாழ் மக்கள் எப்போதும் பொருட்படுத்தி அவர்களை மதித்து அவர்களுடன் இணக்கமாக மற்ற மக்களிடம் இருப்பது போல் இருந்ததில்லை என்பதுதான். அதாவது அவர்கள் இரண்டாம்தர மனிதர்களாகத்தான் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அகதிபோல் வாழ்வது ஒரு காரணம். அவர்கள் வாழ்ந்த இடம் மிக மோசமானதாக சூழல் தொடரும் இடமாக இன்றும் இருக்கிறது.

மத்திய அரசு துறையில் இருக்கும் ஒருவரை பழிவாங்க அவரை தண்ணியில்லா காட்டிற்க்கு அனுப்ப வடகிழக்கு மாநிலங்களுக்கு தான் தேர்வாவார்கள். அதிக தூரம், சரியான போக்குவரத்து வசதியின்மை, பெருகும் மத சாதிக்கலவரங்கள், கடத்தல்கள், கலச்சார வேறுபாடுகள் என்று எல்லாமே பெரிய பிரச்சனைகள் கொண்ட மாநிலங்கள். அத்தோடு மற்றொன்று உண்டு, செல்வம் கொழிக்க நினைக்கும் அரசு அதிகாரிக்கு அந்த இடங்கள் சரியானவைகள் அல்ல.

நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ மனநிலைக்கு பழகாத இன்னும் பழங்குடிகளாக இருக்கும் அம்மக்களை ஏமாற்றுவது எளிதாக இருந்தது. அவர்களை மற்றவர்கள் விரும்பும் சட்டகங்களுக்குள் அடைக்க எளிதாக முடிவதும் அதற்கான முயற்சிகளை செய்வதில் பெருமிதம் கொள்வதும் காரணங்கள். எண்ணற்ற மொழிகள், இனங்கள், அதற்குள் சாதிகள். ஆசைவார்த்தைகளும், பணமும் நம்பிக்கைகளை, மதங்களைக் மாற்றி, சிதைத்து அவர்களை மேலும் சிக்கல்களில் சிக்கவைப்பதுமாக இருக்கிறது இன்றைய சூழல். சிக்கிம் சேர்த்து 8 மாநிலங்களை கொண்ட வடகிழக்கு இந்தியாவில் அஸ்ஸாம் பெரிய மாநிலம். அதிக சிக்கல்களை கொண்ட மாநிலமும் அதுதான்.

ஆங்கிலேயர்கள் இந்தியா என்கிற தேசத்தை விட்டு செல்லும் சமயத்தில் எப்படி இந்த இடியாப்ப சிக்கலை இந்தநாடு தீர்வு கண்டு கொள்ளப்போகிறது என்றுதான் நினைத்தார்கள். சில ஆண்டுகளே அதன் வாழ்வும் என்றும் பிறகு பல்வேறு சிறுநாடுகளாக சிதறுண்டுவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் காந்திக்கு இந்தியாவின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய ஜனநாயகம் கலங்கிய நதி என்றும், அது தெளிந்த நீரோடையாக ஆக இன்னும் காலம் பிடிக்கும் என்றார்.

பி..கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி, காந்தி சொன்ன கலங்கிய நதியைதான் உவமைப்படுத்துகிறது

அதிகாரத்தை செலுத்தும் வித்தையை ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக் கொண்டோம். ஆனால் அதிகாரத்தின் எதிர்விளைவுகளை இன்னும் நாம் புரிந்துக் கொள்ளவில்லை. அதற்கான எதிர்வினைகளை சட்டமும் அதிகாரமும் கொண்டு ஒடுக்க நினைப்பது தவறான வழிமுறையாக தான் மாறியபடி இருக்கின்றன.

நாவலில் ரமேஷ் சந்திரன் நேர்மையான அதிகாரிக்கு தண்ணியில்லாத காட்டிற்கு (அஸ்ஸாம்) மாற்றப்படுகிறார். அவர் அங்கு சந்திக்கும் இன்னல்கள் பேசுபொருளாக கொண்டுள்ள கலங்கிய நதி, ஊழலும், நேர்மையின்மையும், அதிகாரமும் அதன் எதிர் ஊசலான உழலின்மையும், நேர்மையும், அதிகாரமின்மையையும் பற்றி பேசுவதுதான் களமாக கொண்டிருக்கிறது.

இந்திய நிறுவனத்தின் உயிரதிகாரி கடத்தப்படும்போது அரசு மட்டத்தில் எப்படி எதிர்வினை கொள்வார்கள் என்பது நாம் இதுவரை அறிந்திராதது. அரசு மட்டம் என்பது நியாயத்தின் வெளிப்பாடோ அல்லது சூட்சும கையாடல் என்று எதுவுமின்றி தன்னதிகாரம் செல்லுபடியாகும் இடத்தை கவனமாக தக்க வைப்பதில் இருக்கும் கடமையுணர்ச்சி. அதனால் சகமனிதர்களுக்கு உண்டாகும் வெறுப்புணர்ச்சி ஜனநாயகத்தை உடைத்து பார்ப்பதாக இருக்கிறது.

கோஷ் என்கிற உயரதிகாரி கடத்தப்பட்டதும், ரமேஷ் சந்திரன் என்கிற அதிகாரி அவரை கண்டுபிடிக்க வருவதும் அவரின் முயற்சியால் கடத்தல் பின்னணியில் இருக்கும் ஊழல்கள் வெளியாவதும் அதற்கு அவரே பலிகடாவாவதும் என்று எளிய சூத்திரங்களால் இந்நாவலை புரிந்துக் கொள்ளலாம்.

தனிமனிதர்களின் சுயநலத்திற்கு அளவேயில்லை. தனக்கு என்று இருக்கும் ஒவ்வொன்றுமே மற்றவர்களிடமிருந்து பறித்ததுதான். அவைகளை தக்கவைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் தன்னுயிரினும் மேலானதாக இருக்கிறது. பணம், அதிகாரம் உடைய மேல் மட்டத்தில் நிகழும் நிகழ்வுகள்கூட இந்த தேசத்தின் நலம் என்கிற பயம் சிறிதுமின்றி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரம்மபுத்திரா நதி அஸ்ஸாமின் கலங்கிய நதி. குறியீடாக நாவலில் இது தொடர்ந்து வந்தபடியே இருக்கும் நதி, இந்தியாவின் ஊன்றுகண்ணாக ஊழலை நினைக்க தோன்றுகிறது. கூடவே அது தெளிவடைய காந்தி நினைத்ததைவிட இன்னும் அதிக காலம் பிடிக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.


[27/7/19 அன்று தஞ்சைக் கூடல் நிகழ்வில் பேசியதன் தொகுப்பு.]
 

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காந்தி நினைத்ததைவிடவும் அதிக காலம் பிடிக்கும்.