Monday, July 1, 2019

இடம்பெயர்வின் துயரம்: காஃப்காவின் நாய்க்குட்டி



1

பெருநகரத்தில் தனித்துவிடப்படவனின் சஞ்சலங்கள் போன்ற தீராத மனவாதை பிறிதொன்றில்லை. ஓய்வில்லாத மக்கள் கூட்டத்தின் மத்தியில் புலம்பெயர்ந்து கள்ளவழிகளில் ஐரோப்பிய நகரங்களில் வாழும் மனிதர்கள் அடையும் பெரும் கலக்கங்கள் விவரிக்கவியலாத தனிமனித கலக்கங்கள். மற்ற நபர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே முடியாத அனுபங்களை என்ன செய்ய முடியும். அவைகளை எங்கே கொண்டு கொட்ட முடியும். வாழ்நாள் முழுவதும் இருக்கும் இந்த துக்கம், மனிதர்கள் தங்களின் அடையாளமாகவே ஆகிப்போனததன் அடையாளமற்ற வாழ்க்கையை என்ன செய்வது.

வெவ்வேறு அலைக்கழிப்பில் வாழ்க்கின்ற மனிதர்களும் அவர்களின் மனங்களும் அடைகின்ற துயரங்களை பேசுபொருளாக கொண்டது காஃப்காவின் நாய்க்குட்டி நாவல். இடம்பெயர்வின் அலைகழிப்பை துல்லியத்துடன் பதிவு செய்ய விழைகிறது. நிலத்தை விட்டு பணத்திற்காக, வேலைக்காக, ஏமாறிய அவமானத்திற்காக, எதிரிகளின் தாக்குதலின் தப்பித்தலுக்காக, சொந்தங்களை பிரிந்து, இழந்த சோகத்திற்காக என்று எத்தனை வகைகள் உண்டோ அத்தனை வகைகளிலும் இன்று மனிதர்கள் இடம்பெயர்கிறார்கள். வந்த இடத்தில் நிலைத்திருக்க, புதிய உறவுகளை தேடிக்கொள்ள, தக்கவைத்துக் கொள்ள அத்தனை எத்தனங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது. முந்தைய காலங்களில் அது உணவிற்காக மட்டுமே இருந்தது. தன் வாழ்வின் பெரும்பகுதியை இதற்கே விட்டுகொடுத்து வாழ்த்து மறையும் ஒரு சாராருக்கு தெரியாதன சில இந்த புவியில் உண்டென்றால் அது அன்பும், பிறரின் தம்மீதான சந்தேகமின்மையும்தான் என நினைக்கிறேன்.

காஃப்காவின் நாய்க்குட்டி இந்த மனிதர்களைப் பற்றி எளிய கோட்டோவியம் மட்டுமே அளிக்கிறது. பாலா, நித்திலா, நித்திலாவின் தமக்கை, என்று மனிதர்கள் வளமையான இடம் தேடி இடம்பெயர்கிறார்கள். ஆனால் கூடடைந்த குருவிகளாக என்றும் இரைத்தேடி செல்லாத வாழ்க்கை அவர்களுக்கு அமைகிறது. உண்மையில் நாவல் கலைந்து விரிந்த பார்வையும், கலைத்து போட்ட சிதறலான வாசிப்பு அனுபவத்தையும் அளிக்கும் பின்நவீனத்துவ பாணி கொண்டது. நாவல் நமக்களிக்கு அனுபவம் பாதுகாப்பற்ற பகுதியில் (unsafer zone) வாழும் மனிதர்களின் உளசித்தரிப்பை மட்டும் தான். பாதுகாப்பற்ற பகுதி என்பது உயிருக்கு உத்திரவாதமற்ற வேலையை செய்பவர்கள் அல்லது சேரியில் சாக்கடையின் அருகில் வாழ்பவர்கள் என்கிற அர்த்தமல்ல. மற்றவரது கண்காணிப்பில், கொடிய அதிகாரத்தின் பிடியில், எந்நேரமும் இருக்கும் நிலையிலிருந்து முற்றிலும் எதிரான தாக சட்டத்திற்குபுறம்பானதாக மாறிவிடும் சூழலில் வாழும் வாழ்க்கை அது. மிக கவனமாக கையாளவேண்டிய புனைவுலகத்தை சரியாக செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 

சுவாரஸ்ய பிண்ணனியில் நாவலை அமைக்க வேண்டும் உந்துதல் எதுவும் ஆசிரியருக்கு இல்லை. நேரடியாக தன்னை ஒப்புக்கொடுத்து அதன் போக்கில் நாவலை வளர செய்திருக்கிறார். நாவலின் போக்குகளில் சில நுண்ணிய தருணங்களை தேர்ந்த ஆசிரியராக அழகாக பிடித்திருக்கிறார். வாசீகனை சந்தித்து வந்த நாளில் தமக்கையின் கணவன் கோபித்து அவளை அவமானபடுத்தியதும், கிளம்பி நேராக சென்று வாகீசனை சந்தித்ததும் அவனை கட்டிப்பிடித்து அழுவது ஒரு முக்கிய தருணம். ஒரு பெண்ணின் உண்மையான மனஉந்துதல் அதுவாகத்தான் இருக்கும். அதேபோல நித்திலா இந்தியா வழியாக பிரான்ஸ் செல்லும் காட்சிகளை நுல்லியத்துடன் விவரிக்க அவரால் முடிந்திருக்கிறது. சாமியின் பாத்திரம் இந்த நாவலில் மிக முக்கியமானது. சாமியின் பாத்திரபடைப்பு ஒருவகையில் இந்த நாவலுக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அவரது இழப்பும் இலக்கற்ற பயணமும் இடம்பெயர்வின் கொடூர தருணங்கள்.

2
நாகரத்தினம் கிருஷ்ணா தொடர்ச்சியாக நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். நீலக்கடல், மாத்தாஹரி, கிருஷ்ணப்ப கெளமுதி நாயக்கர், ரணகளம், இறந்தகாலம் போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். நேரடி வரலாற்று பின்புலம்கொண்ட அல்லது வரலாறு பிண்ணனியில் எழுதிய நாவல்களில் அவருக்கு ஆர்வம் என தெரிகிறது.

கடின சொற்சேர்கைகளை கொண்ட வாக்கியங்களை அமைப்பதில் அதிக கவனம் கொள்கிறார். ஆரம்ப பகுதியில் அவ்வாறு செய்தாலும் நாவலின் பிற்பகுதியில் மிக இயல்பாக தேவைக்கேற்ப மட்டுமே வார்த்தைகள் உள்ளன. வெவ்வேறு வரிசையில் இருக்கும் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம், ஆண்டு, கிழமை, நாள் போன்ற குறிப்புகளுடன் ஆரம்பிக்கிறது. இதைப் பின்தொடர்ந்தால் நாவலின் முழுமையான நீளத்தை கண்டடையலாம்.


இலக்கியம் என்பது நிகர்வாழ்க்கையின் அனுபவத்தை அளிப்பது. எவ்வளவு தூரம் வாசகனுக்கு நெருக்கமாக ஒரு பிரதியால் சொல்ல முடிகிறது என்பது புனைவினுடைய வெற்றியாக கருதப்படுகிறது. காஃப்காவின் நாய்க்குட்டி அப்படியான ஒரு புனைவு.

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு முன்னோடியாக யாரை குறிப்பிடமுடியும்? அவர் பின்பற்ற விரும்பும் ஒரு எழுத்தாள வரிசையை கண்டுபிடிப்பது சிரமம் என்றே நினைக்கிறேன். அவர் தொடர்ச்சியாக வெவ்வேறு புனைவுகளின் வழியாக தன்னை மறுஆக்கம் செய்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பிரன்ச் காப்கா, ஆல்பர்ட் காம்யூ போன்றவர்கள் அவரது மிக நெருங்கிய ஆதர்சயங்கள் என்றாலும் அவரின் பிரஞ்சு இலக்கிய ஆர்வங்கள் அவரின் எழுத்துமுறைமைகளை மாற்றியமைத்திருக்கின்றன என்றே நினைக்கிறேன். அத்தோடு புனைவுகளை ஒரு வரலாற்று பிண்ணனியில் வைத்து எழுதும் முறைகளில் அவருக்கிருக்கும் ஆர்வம் என்பது தொடர்ச்சியாக புனைவின் மீதான காதலை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிதான்.

ஆசிரியரது கதைப்பின்புலம் யதார்த்தமானது தான் என்றாலும் அவர் தொடர்ந்து பின் நவீனத்துவ பாணியை தன் கதையுலகில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பிரியப்படுகிறார். இந்நாவலிலும் காஃப்காவின் நாய்க்குட்டியாக மாறும் நாயகனது மனைவியும், பின் நாயகனும் நாயாக மாறுவது குறியீட்டு அடிப்படையில் தங்களை குறைத்துக் கொள்வது என்று வாசகனால் பொருள் கொள்ளவேண்டியிருக்கிறது.

காஃப்கா பிறந்த ஜெர்மனி பகுதியிருலிருந்து கதை தொடங்குவது ஒரு நல்ல அறிகுறி. வாசகனை பலவகையில் ஊகிக்க வைக்கிறது. பாலா (வாகீசன்) வாழ்வில் தன்னை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், நித்திலா தன்னை தன் காதலை நிலைநிறுத்தி முயற்சிப்பதில் இருக்கும் எத்தனிப்பும், பல தவறுகள் செய்த சாமி தொடர்ந்து சிக்கலிலிருந்து தன்னை தேடும் பயணத்திலும், மத்யூஸ், அவரது மனைவி இருவரும் தங்கள் வாழ்வில் புதிய மலர்ச்சியை எப்படியேனும் கொண்டுவரும் முயற்சியும் எல்லாமும் சேர்ந்து காஃப்கா தன்னை கரப்பான்பூச்சியாக உருமாறிக் கொள்வதன் கற்பனைக்கு சமமானதுதான். அதை ஆசிரியர் பல்வேறு வழிகளில் வாசகனுக்கு அளிக்கும் முய்ற்சிதான் காஃப்காவின் நாய்க்குட்டி.

சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை அளித்த நாகரத்திரன் கிருஷ்ணா அவர்களுக்கு வாழ்த்துகள்.

(தஞ்சைக் கூடல் 29/6/19 அன்றையகூட்டத்தில் விவாதித்தின் கட்டுரை வடிவம்.)

No comments: