Wednesday, July 3, 2019

விகாசம் வாசிப்பனுபவம்



நவீன வாழ்வின் மாறுதல்களும் அது தருகின்ற மயக்கங்களும் அதனால் மனிதர்களுக்கு உண்டாகும் சஞ்சலங்களை பிரதிபலிக்கிற கதைகளில் முக்கியமானதாக சுந்தரராமசாமியின் விகாசம் சிறுகதையை குறிப்பிடலாம். கூடவே சிறுகதையின் வடிவத்தைப் பற்றிய நம் எண்ணத்தை மீறி ஒரு அழகிய வாழ்க்கைப் போக்கை மிக குறைந்த வார்த்தைகளில் சொல்ல முடிவது இக்கதையின் சிறப்பு.

கதை ஏன் நமக்கு பிடிக்கிறது என்பதிலிருந்துதான் இந்த கதையை நாம் புரிந்துக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். எல்லா நவீனத்துவ சிறுகதையைப் போலவே கச்சிதமான தொடக்கம், நடு, மற்றும் முடிவுடன் கூடிய சிறுகதைதான். அதில் தெறிக்கும் குறியீட்டை நாம் கவனமாக பின் தொடரும்போது கிடைக்கும் வாழ்க்கை தரிசனம் நம் மனதில் நீங்காத இடத்தை இக்கதை பெற்றுவிடுகிறது.

கதையில் ஒரு மனிதர் வருகிறார் அவருக்கு கண் தெரியாது. ஆனால் கணக்குகளை மிக துல்லியமாக போடும் மனிதர். பணத்தாசை பிடித்த அவரது செய்கைகள் அவரது முதலாளிக்கு தொடர்ந்து தொந்தரவாகவே இருக்கிறது. வேறு கடைக்கு போகிறார், பிடித்து இழுத்துவருகிறார்கள். கடனுக்குமேல் கடனாக பொருட்களை வாங்குகிறார், முதலாளி ஐயர் கோபப்பட, வேலைக்கு வராமல் வீட்டோடு இருந்துவிடுகிறார். ஓணம் சமயத்தில் கடையில் கூட்டநெரிசலில் அவரின் இருப்பு தேவையாக இருக்கிறது. மீண்டும் அழைத்துவரப்படுகிறார். முதலாளி ஒரு சமயம் கோபத்தில் உம் கொட்டம் அடங்கும் என்று சொல்வதுபோல ஒரு சமயம் வருகிறது. கால்குலேட்டர் கண்டுபிடித்த காலம் வருகிறது. கண்தெரியாத ராவுத்தர் பேத்தியும் கடைமுதலாளியின் மகனும் ராவுத்தர் போடும் கணக்கின் வேகத்திற்கு விடைகளை கூறுவதை ஒருநாள் அறிகிறார். பேத்தி இந்த மெஷின் போடுது தாத்தா என்கிறாள். அதிர்ந்துவிடுகிறார். எப்படி தன் மூளையைவிட வேகம் கொள்ளும் மெஷின் வரும் என்று அமைதியாக பறி கொடுத்தவர் போன்று சில நாட்கள் இருக்கிறார். மெதுவாக முதலாளிக்கு வழக்கதிற்கு மாறாக உதவிகளை செய்கிறார், எப்போது ஈபி கட்டவேண்டும், என்னென்ன துணிகள் கடையில் ஸ்டாக் இருக்கின்றன என்கிற விவரங்களை கேட்காமலே சமயம்பார்த்து சொல்லி தன்னை நிறுவிiக் கொள்கிறார். இனி கணக்கு போட வரமாட்டீங்களா என கோமதி கேட்க இல்லை இனி கணக்கு மெஷின் இல்லை, மேனேஜர் என்று தன்னை கூறிக் கொள்கிறார்.

‘உம்ம கொட்டம் அடங்குறத்துக்கு காலம் வரும்’ என்று சொல்லும் முதலாளியின் வார்த்தைதான் நடுமையம் இக்கதைக்கு. ஆனால், ராவுத்தர் கொட்டம் அடங்கும் காலம் வந்தபோது தன்னை கணக்குப் போடும் மெஷினிலிருந்து மேனேஜராக உறுமாற்றிக் கொள்கிறார். அதாவது காலத்திற்கேற்ப நிலபிரபுத்துவ மனநிலையிலிருந்து முதலாளித்துவ மனநிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறார்.

சுந்தர ராமசாமியின் குடும்பம் ஜவுளி வியாபாரம் செய்த குடும்பம். ஒவ்வொரு கதையிலும் கடை, வியாபாரம் பற்றிய செய்திகள் இடம்பெறுவதை காணலாம். ஆனால் இந்த கதை ஜவுளிக் கடையிலேயே நடக்கிறது. அவரது பிரசாதம், ரத்தினாபாயின் ஆங்கிலம், கோயில்காளையும் உழவுமாடுகளும், விகாசம், காகங்கள் போன்ற கதைகள் சிறந்த கதைப்பட்டியலில் எப்போது இடம்பெறுபவைகள்.

ஆயிரத்து தொள்ளாயிரது அறுபதுகளின் தொடக்கத்தில் பெரிய கால்குலேட்டர்களின் சிறிய வடிவமான பாக்கெட் கால்குலேட்டர் வந்த காலத்தில் அது தந்த அனுபவ அதிர்ச்சி இப்போது டிஜிட்டல் செல்போனின் வருகையால் வந்ததைவிட அதிகம் இருந்திருக்க வேண்டும். கணக்குகளை சிறிய பெட்டியில் போட்டு விடைகளை கண்டுபிடிப்பது பெரிய பெரிய லட்ஜர்களில் எழுதி பழக்கப்பட்ட மனிதர்களுக்கு அதுவரை இருந்ததிலிருந்து வாழ்வின் மீது உருவாகும் இலகுதன்மையை அதிர்ச்சியோடு அனுபவிக்கிறார்கள்.

சம்பிரதாய வாழ்க்கை முறையை கொண்ட நிலப்பிரபுத்துவ வாழ்வில் புரிந்துக் கொள்ளப்பட்ட உயர்வு தாழ்வுகள் கலைக்கப்பட்டு தொழிநுட்பம் முன்நிறுத்தப்படுகிறது. அதுவரை இருந்த மனிதன், அடிப்படையில் அவன் வேறு மாதிரியான மனிதன் என்பதை காட்டிவிடுகிறது.

இந்த கதையின் ஆரம்பத்திலிருந்து மிக சம்பிரதாய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பிரதிபதிலித்து கொண்டே இருக்கிறது. அம்மாவின் நோய்க்கூறு அப்பாவின் முன்கோபம் சூர்யயோதயத்திற்கு முன் குளியல் என்று நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். நவீனம் வரும்போது குருட்டு ராவுத்தர் போன்று திகைத்து நின்றுவிடுகிறான். ஆனால் சுதாகரித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவனுக்கு தெரிகிறது.

குருட்டு மனிதன் போலதான் நம் வாழ்க்கை, நவீனத்துவம் வந்ததும் பழமையானவைகள் வேண்டாதவையாக எண்ண தோன்றுகிறது. மனிதனின் முக்கிய பிரச்சனையே நவீனத்தை எப்படி கைகொள்வது என்பதுதானே.

(குடந்தை வாசகசாலை 30/6/19 அன்று பேசியதின் எழுத்து வடிவம்.)


1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுவரை இக்கதையினை வாசித்ததில்லை. நீங்கள் அதனைப் பகிர்ந்ததோடு கருத்து கூறிய விதம் அருமை.