Saturday, June 22, 2019

காலத்தின் வரிகள்: மீஸான் கற்கள்


சமாதி மீது வைக்கப்படும் நினைவு கற்களான கல்லறை கற்கள், வெறும் வார்த்தைகளை கொண்டவையாக இல்லாமல் வாழ்ந்த மனிதர்களின் பெருவாழ்க்கையை எழுதிச் சென்ற காலத்தின் வரிகளாக பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும். நீண்ட நெடிய வாழ்க்கையும், சிறிய குறுகிய வாழ்க்கையும் மரணத்தின் முன் ஒரே அர்த்தம் பொதிந்த வாழ்வாகவே எப்போது பார்க்கப்படும். காலம் பெரும் கனவு போல எளியவாழ்வின் மீது மிதந்து செல்கிறது. நேரடியாக புரிந்துக் கொள்ள முடியாத சிக்கல்களை கொண்ட கனவை காலையில் பிரித்து பொருள் கொள்ள முயற்சிப்பதுபோலத் தான் இந்த வாழ்க்கையும் இருக்கிறது. முயற்சிக்கும் வழிகளே வாழ்வு மீதான நம் பார்வைகள் எதுவானாலும் வாழ்க்கை நமக்களிப்பது சிக்கல்களையும் அதிர்ச்சிகளையும்தான். வாழ்வின் முடிச்சுகளும் திருப்பங்களும் நாம் புரிந்துக் கொள்ளமுடியாத கண்ணிகளாக நிலத்தில் மறைந்திருந்து வெடிக்க காத்திருக்கின்றன. 

 
ஸ்மாரக சிலகள் தமிழில் நினைவு சிலைகள் என்று பொருள் சொல்லப்பட்டாலும் மீஸான் கற்களின் குறியீடு அற்புதமானது. அறக்கல் வீட்டின் கதைகளும் அதன் வீழ்ச்சியும் தான் நாவல். அறக்கல் இல்லத்தை ஒட்டியிருக்கும் பள்ளிவாசலும் எதிரே சற்று தள்ளியிருக்கும் டீக்கடையும், ரெயில் நிலையமும், பள்ளிக்கூடமும் சேர்த்து மிக குறுகியது இந்தமனிதர்களின் வாழ்க்கை.

“ஆம்!. பழைமை வாய்ந்த பள்ளி வாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது.”

இதுதான் நாவலின் ஆரம்ப வரிகள். தீர்க்கமான முடிவுடன் இதைப்பற்றியே பேசப்போகிறோம் என்கிற முடிவுடன் எழுதப்படுகிறது நாவல். வாசகர்களுக்கும் இந்த அமைப்பு பெரும் உதவியாகதான் இருக்கும். பொதுவாக 10% பக்கங்களை முடிக்கும்போதுதான் நமக்கு நாவல் தெளிந்தவர ஆரம்பிக்கும், ஆனால் மீஸான் கற்களின் ஆரம்பத்திலேயே தெளிந்த நீரோட்டமாக வந்துவிடுகிறது.

பூங்கோயத் தங்ஙள், எல்லா பெண்களும் குப்பாயம் அணியவேண்டும் என்கிற நினைத்து செயல்படும் அறம் அவருக்கு இருந்தாலும் நிலப்புரவாக பெண்களின் மீது தன் வன்முறை செலுத்துவதும் பிற ஆண்களுடன் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த எல்லா முயற்சிகளை செய்வதுமாக இருக்கிறார். பயந்து ஓடாமல் காலரா பரவியபோது துரிதமாக செயல்படுவதும் என நவீனமயமானவராகவும் இருக்கிறார். குஞ்ஞாலியைதான் தன் வாரிசாக நினைத்திருக்கிறார். ஆனால் அவர் யாருக்கோ பிறந்த காஃபிர் மகன். ஒரு இடத்தில் குஞ்ஞாலியை புள்ள நம்ம புள்ளதான் என்று சொல்கிறார். தனக்கு பிறந்த ஒரே மகளான பூக்குஞ்ஞிபீவியை விட அதிகம் குஞ்ஞாலியை நேசித்தார்.

தங்ஙள் ஒவ்வொருவரையும் அதிகம் நேசிக்கிறார், உலகம் நவீனமயமாக மாறவேண்டுமென ஆசையும் கொள்கிறார். ஆனால் பிரபுத்துவ மனநிலையிலிருந்து அவர் வெளிவருவதில்லை. காலையில் எழுந்து குதிரையில் ஏறி அது நிற்கும் இடத்திலுள்ள ஏதோ ஒரு குடிசையில் புகுந்து அங்குள்ள பெண்ணிடம் சல்லாப்பிக்கிறார். அவள் கணவன் மீன் பிடிக்க சென்றிருக்கும் நேரம். அவரை எதிர்க்க முடியாத மீன் குப்பத்தை அவர் எளிதில் வசப்படுத்துகிறார். ஆனால் ஒரு நாள் அதனாலேயே இறப்பார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அவர் இறப்பிற்குபின் அறக்கல் வீடு முற்றிலும் மாறிவிடுகிறது. பட்டாளத்து மாமா கொஞ்சம்கொஞ்சமாக வீட்டினுள் தன் அதிகார்த்தை நிலைநிறுத்துகிறார். குஞ்ஞாலி வீட்டைவிட்டு விரட்டப்படுகிறான். காவலாளி வீட்டிலிருந்து ஓடிப்போகிறான். அத்துராமன் தன் அழகு மனைவியை விட்டுவிட்டு குதிரையை தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறான். பூக்குஞ்ஞப்பீவி அவள் கனவுலைகைப் போலவே கடல்கன்னியாக மாறி இறக்கிறாள்.

எல்லா மனிதர்களும் வாழ்க்கைக்கு கட்டுபடுகிறார்கள். ஒன்று மரணம் அவர்களிடம் வருகிறது அல்லது அவர்கள் மரணத்தை நோக்கி செல்கிறார்கள். இடையில் வாழ்க்கை தன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கிறது.

(தஞ்சைக்கூடல் 25/5/19 கூட்டத்தில் விவாதித்தது.) 

மீஸான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லா (குளச்சல் மு.யூசுப்)


1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எல்லாம் சில நாட்களுக்குத்தான் என்பார்கள். அது பொருத்தமாக உள்ளது.