Friday, June 14, 2019

புரியாதவர்கள் - விமர்சனங்கள்

புரியாதவர்கள்

சொல்வனம் 191வது இதழில் என் சிறுகதை 'புரியாதவர்கள்' வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் கதை குறித்து விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். சிலரிடம் நானே கேட்டிருந்தேன். ஏதோ ஒருவகையில் அந்த நண்பர்களின் கருத்துகள் முக்கியமானவையானவை என தோன்றுகிறது.

சில கருத்துக்கள் சம்பிரதாயமானவைகள் என்றாலும், அவைகள் தொகுக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. இன்று ஒருவகையில் அது தேவை என்றே நினைக்கிறேன். எல்லா பக்கங்களிலிருந்தும் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், சமூக நியாய அநியாயங்கள், வேடிக்கைகள், விநோத விளையாட்டுகள் என்று கொட்டப்பட அம்மாவின் அகன்ற கைநிறை உணவு சிறிய குழந்தையின் வாயை அடைப்பதுபோல விழிபிதுங்க நிற்கிறார்கள் வாசகர்கள்.

இவற்றில் ஒரு சிறுகதை கவனம் பெறுவது என்பது எழுதியவர் அதிக நண்பர்களுக்கு காலை மாலை வணக்கங்களையும், குட்நைட்களை சொல்பவராக இருக்கவேண்டும், அத்தோடு மற்றவர்களின் 'பெரிய' கவலைகளுக்கு பதிலளிப்பவராகவும் இருக்கவேண்டும். அல்லது தினப்படி செய்திகளுக்கு எதிர்வினையாற்றுபவராக இருக்கவேண்டும். அல்லது எதிர்வினையாற்றுபவர்களுக்கு எதிர்வினையாற்றுபவராக இருக்க வேண்டும். என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு அப்படி நேர்வழிகளில் செல்ல முடியாததால் இப்படியெல்லாம் சுற்றி வரவேண்டியிருக்கிறது.

தொகுக்கப்பட்ட நண்பர்கள் சிலரின் கருத்துகள்:

Ramiah Ariya
நல்ல சிறுகதை. உங்கள் கதைகளில் எப்போதுமே இந்த மனதைத் தொடும் பாணி இருக்கிறது. பொதுவாகத் தமிழ் கதைகளில் intro அல்லது கதையில் நுழையும் தருவாயில்இருந்தது”, “இருந்தனபோன்ற வார்த்தை முடிவுகள் நிறைய வரும். அது போல உங்கள் கதைகளிலும் வருகின்றன. அவ்வாறு ஒரே மாதிரியான முடிவுகள் கொண்ட வார்த்தைகளைத் தவிர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கதையில் உள்ளே நுழைந்த பின் இந்தப் பிரச்சினை இல்லை. இதை Sentence Variety என்று சொல்வார்கள்.  

கமலினி பன்னீர்செல்வம் 
எதெல்லாம் தொல்லையாக நினைக்கிறோமோ, அந்த தொல்லைகள் முற்றிலுமாக ஓயும்போது ஒரு கட்டத்தில் மனம் ஓரு சூன்யத்தை உணரும். அப்போது அந்த தொல்லைகள் தான் நம்மை உயிர்ப்புடன் இயக்கியதா என்ற கேள்வி எழும். மனித மனதின் சிக்கல்களில் எழும் இந்த கேள்விக்கு சரியான விடை கிடைப்பது அரிது. அப்படியான ஒன்றை தான் இக்கதையின் தளம் தொட்டிருக்கிறது. ஒரு கதையை வாசிக்கும் ஆர்வத்தை முதல் பத்தி தூண்ட வேண்டும், இழுத்து தள்ள வேண்டும் அந்த வகையில் ஆரம்ப பத்தியில் ஏதோ ஒரு கதைக்குள் ஒட்டவிடா தன்மை இருக்கிறது. ஆனால் அதை தாண்டி வாசிக்கும்போது எழுத்து நடை, எளிமையும் சுவராஸ்யமாகவே உள்ளது.



புரியாதவர்கள்...அருமை சார்....வீட்டிற்கு வருபவர்களை இம்சையாக நினைப்பது அறியாமையே என்பதை அருமையாக சொல்லியிருக்கீங்க....அவர்கள் ரெகுலராக வருவது வியாபாரம் ஒரு காரணம் என்றாலும் பாசமே முதன்மை காரணம் என்பதுதான் நிதர்சனம்....என் அம்மாவும் இப்படித்தான் இருந்தார்கள்...அவர் மறைவுக்குப்பின் தெரு வியாபாரிகள் எங்கள் வீட்டின் முன் நின்று கூவுவதை விட்டு விட்டார்கள்.... உங்கள் கதை என் அம்மாவின் வாழ்வியல் முறையை ஞாமகப்படுத்திவிட்டது சார்...நன்றி..

அருமை. தனது வீட்டுக்கு யாரும் வந்து தொந்தரவு தர வேண்டாம் என்று நினைப்பவள் தனது மாமியார் இறப்புக்குப் பின்னர் அதனை நடைமுறையில் காணும்போது நம்மை மற்றவர்கள் ஒரு காசுக்கு மதிக்கவில்லையே என்ற எண்ணம் அவளுக்குத் துன்பத்தையே தரும். உதாசீனம்தான் பெரிய தண்டனை. கதை அதனை உள்ளடக்கமாக வெளிப்படுத்துகிறது.

அறையில் படுத்திருப்பதாகவும், பின் இறந்து போவதாகவும் சொல்லப்பட்டு கதை நிகழ்வில் காட்டப்படாத அந்த மாமியாரின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. சக மனிதர்களை மதிக்கும் அவரது குணம் போற்றுதலுக்குரியது. வெகு சிறப்பு தோழர்.

சொ பிரபாகரன்
அருமையான நடை. சிறுகதைக்கான வடிவம் சிறப்பாக வந்துள்ளது. மாமியார் காலமான பிறகு, ஊதுபத்தி தாத்தா, எலுமிச்சை அக்கா, காமாட்சி பாட்டி, முண்டாசு அண்ணன் யாரும் வீட்டுப் படி மிதித்துவேணுமா பாப்பாஎன்று கேட்கவில்லை என்பது வடிவ அழகில் சிறப்பாக இருந்தாலும், அப்படி உண்மையில் நடக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. சிறு வியாபாரிகள் சகமனிதனிடம் பேசி தாங்கள் விரும்பினாலும் சரி விரும்பா விட்டாலும் சரி தங்கள் பொருளை விற்கவே முயல்வார்கள். கதாசிரியர் மேற்படி சம்பவத்தை எங்கோ அவதானித்துதான் எழுதியருப்பார்.

பா.ஜம்புலிங்கம்
படித்துக்கொண்டிருக்கும்போது கதாநாயகி தன்னை திருத்திக்கொள்வாள், மாமியார் பிழைத்துக்கொள்வாள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு திருப்பத்தினைக் கண்டேன், சற்றும் எதிர்பாராத வகையில். வேணுமா பாப்பா என்பது அவளுக்காக அல்ல, என்பதை புரிந்துகொள்வதற்கு அவளுக்குப் பக்குவம் இல்லை. நன்கு ரசித்தேன். பாராட்டுகள். 

 


No comments: