Thursday, June 13, 2019

பில்டர் காபியின் மணம்


எவ்வளவோ விஷயங்கள் மருத்துவ துறையிலிருந்து வெளிவந்து மக்களை இதைச் செய் இதைச் செய்யாதே என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதில் தினசரி உடல்நலம் பற்றிய செய்தியில் முதலில் இருப்பது காபியை, டீயை தவிர்க்க சொல்வதுதான். அதற்குப்பின், சாராயம், புகையிலை போன்றவைகள் இருக்கலாம். ஆனால் முதலில் இருக்கும் காபி மிகச் சமீபமாக அதாவது ஒரு 250 ஆண்டுகள் இருக்கலாம் அது கண்டுபிடிக்கப்பட்டது. (17ஆம் நூற்றாண்டில் வந்தாலும் பிரபலமாக பரவியது 19ஆம் நூற்றாண்டில்), அதற்குபிறகுதான் இந்தியாவில், தமிழகத்தில் பிரபல்யமாகியது. என் தாத்தாவிடம் ஒரு காபிக் கொட்டை அரைக்கு ஒரு சிறு மெஷின் இருந்தது. அதை டேபிள் போன்ற பலகையில் நிறுத்தி காபி கொட்டைகளை மேலே சிறு கிண்ணம் போன்ற பகுதியில் போட்டு கையால் சுற்ற வேண்டும். தூளாக வெளிவருவதை பில்டரில் போட்டு சுடுதண்ணிரை விடவேண்டும். பிறகே அடியில் பில்டர் காபி கருநிறத்தில் கிடைக்கும். அதை பாலில் சேர்த்து குடிக்கவேண்டும்.
டெல்டா பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பொதுவாக காபித் தூளை நேரடியாக கொதிக்கும் பாலில் கலந்து சுடவைத்து வடிகட்டி (பில்டரிட்டு) டீயை போல குடிக்கிறார்கள். இன்னும் சிலர் தனியாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி பின் பாலுடன் சேர்ந்து குடிக்கிறார்கள். இரண்டும் தவறாக வழிகள். பில்டர் காபியின் மணம்தான் நம்மை அருந்த தூண்டுகிறது. அது புத்துணர்ச்சி (ஃபிரஸ்னஸ்) யுடன் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றும்.

கடைகளில் கொடுக்கப்படும் பில்டர் காபி அதன் டிகாசனை எப்போதோ போட்டு வைத்திருப்பார்கள், மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து கொடுப்பதனால் ஒருமாதிரி மட்டையாக இருக்கும். பாலும் மீண்டும் மீண்டும் கொதிக்கப்படுவதனால் இரண்டும் சேராமல் ஒருமாதிரியாக இருக்கும்.

நல்ல ஃபில்டர் காபிக்கான சில வழிமுறைகளை சொல்லிப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
  1. காபித் தூளில் இருவகை உண்டு: பீபெரி, -காபி. உங்களுக்கு எது ஒத்துவருகிறதோ அதில் 100லிருந்து 250 கிராம் மட்டுமே வாங்க வேண்டும். அப்போதுதான் அதன் மணம் குறையாமல் இருக்கும். அதை காற்றுப் புகாத டப்பாவிலிட்டு குளிர்சாதன பெட்டியில் வைப்பது சிறந்தது. காலையில் உபயோகித்ததும் மீண்டும் அங்கே வைத்துவிடவேண்டும்.
  2. காபி மேக்கர் அல்லது பில்டர் பாத்திரத்தில் எத்தனை நபர்கள் என்ற எண்ணிக்கையில் தூளை இட்டு அழுத்த அதற்கென உள்ள கரண்டியில் அழுக்கி வைக்க வேண்டும். மேலே கொஞ்சம் சக்கரையை இடுவது அதற்கு கெட்டிதன்மையை கொடுக்கும்.
  3. கொதிக்கும் நீரை மெதுவாக மேல் பில்டரில் விடவேண்டும். சூடு குறைவாக இருந்தால் அதில் சிறந்த மணம் வெளிப்படாது. அதேபோல பாலும் சரியான கொதிப்பில் இருக்க வேண்டும். ஒருகொதிப்பு இருந்தாலே போதும். அதிகமாக பொங்க ஆரம்பித்தால் பால் சுண்டி டிகாஸனின் மணத்தை குறைத்துவிடும்.
  4. பாலில் டிகாஸனை சேர்ப்பதும், டிகாஸனின் பாலை சேர்ப்பதும் இரண்டுவிதமான சுவையை அளிப்பதை கவனித்திருக்கிறேன். பாலில் தான் டிகாஸனை சேர்க்க வேண்டும் என சுவை வல்லுநர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன். ஆனால் முதலில் ஒரு டம்ளரில் சக்கரை பிறகு டிகாஸனை சேர்த்துவிட்டு பிறகே பாலை சேர்க்கும்போது சரியான சுவையாக அமைகிறது.
  5. இரண்டு ஆத்து ஆற்றி குடித்துவிடவேண்டும். சூடு குறைவாக வேண்டுமெனில் அப்படியே வைத்துவிட்டு காத்திருந்து குடிக்க வேண்டும். மீண்டும் ஆத்தும்போது அதன் சுவை குறையும்.
ஆனால் ஏன் ஒரு காப்பிக்கு இத்தனை தியரிகள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு யானை தனக்கு பிடித்த பூக்களை சின்னச் சின்னதாக தன் துதிக்கையில் உருண்டு ரசித்து உண்பதுபோல, ஒரு திமிங்கலம் கரையில் வாழும் சில சின்ன மீன்களுக்காக கடற்கரைக்கு சிரமபட்டு வந்து உண்டுவிட்டு செல்வது போலதான் இதுவும். ஒரு பாதாம் பாலுக்கு அல்லது லஸ்ஸிக்கு சில கிமீ பயணத்தி குடிப்பதில்லையா அதுபோலதான். தண்ணியடிக்கும் சில நபர்கள் அவர்களுக்கென்று ஒரு தியரி இருப்பது எப்படியோ அப்படிதான் காப்பியின் ரசிகர்களுக்கும் இருக்கும் தியரிகள்.
தொடர்ச்சியாக நாள் முழுவதும் காப்பி குடிப்பவனல்ல. காலையில் எழுந்ததும் ஒரு காபி பிறகு காலை உணவிற்குபின் ஒரு காபி அவ்வளவு தான். வீட்டில் இருந்தால் மட்டுமே அதுவும். வெளியில் டீ குடிப்பதே சிறந்தது. மாலையில் குடிப்பது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அல்லது பித்தத்தை அதிகரிக்க செய்யும்.

தஞ்சாவூர் (ஐங்கரன், நளன்), கும்பகோணத்தில் (வெங்கட்ரமனா) சில இடங்களில் மட்டுமே காபியை தாரளமாக நம்பி குடிக்கலாம். பொதுவாக காபி கடைகளில் என்ன செய்வார்கள் என்றால்:
  1. காலையில் ஒரு பில்டர் போட்டதும் அதை கழுவிட்டு மீண்டும் போடுவதில்லை. அதன் மேலேயே மீண்டும் தூளை போட்டு தண்ணீரை நிரப்புவார்கள்.
  2. தொடர்ச்சியாக டிகாசனை சூடு செய்து கொண்டேயிருப்பார்கள். அத்தோடு பாலும் சுண்டிக் கொண்டே இருக்கும். அதனால் நாம் நினைக்கும் காபி சுவை இருக்காது.
  3. சில கடைகளில் காபிக்காக மட்டும் பவுடர் பாலை பயன்படுத்துவார்கள், கெட்டியாக இருக்கும் என்பதால், ஆனால் அது உண்மையான சுவையை அளிக்காது.

தேநீரில் நாம் வேறு பொருட்களை சுவைக்காக சேர்க்க முடியும். ஏலக்காய், கசகசா, இஞ்சி என்று மசாலா பொருட்களை சேர்த்து சுவையாக கூட்ட முடியும். ஆனால் காபியில் அப்படி செய்ய முடியாது. அதனால் தான் இத்தனை கோட்பாடுகள் காபிக்கு மட்டும் இருக்கின்றன.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காபி பற்றிய செய்திகள் அருமை
நன்றி

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

பல இடங்களில் பல பெயர்களில் கும்பகோணம் காபி என்ற பெயரில் கும்பகோணம் பெயரை வைத்து கடை நடத்துவதைக் காணமுடிகிறது. அவர்கள் ஊற்றித்தருகின்ற பித்தளை டம்ளரும், டவராவும்கூட பளிச்சென்று வைத்திருப்பர். கும்பகோணம் என்ற திருப்தியை மனதில் தருவதற்காக வணிக நோக்கில் இவ்வாறு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் வேறு வழியின்றி ஏதோ கும்பகோணம் காபியையே குடித்த உணர்வைக் கொள்கின்றார்கள். இளமைக்காலத்தில் கும்பகோணம் தெற்கு வீதியில் அப்போது இருந்த காபி கடையும், குடித்த காபியும், அதன் சுவையும் இன்னும் நினைவில் உள்ளது.

Unknown said...

ஒரு நல்ல காபி குடிக்கணும் போல இருக்கு.