Monday, June 10, 2019

கிரேஸியும் நாடகங்களும்



பின்பக்கத்தில் சற்று நீண்ட தலைமுடியும் டை அடித்த ஆனால் வேர்களில் வெள்ளை முடி முளைத்த தோற்றத்துடன் தலையை இங்குமங்குமாக திருப்பியபடி மைலாப்பூரில் ஒரு கடையில் வெத்தலைப் பாக்கு, புகையிலையை வாங்கி மென்றபடி நின்றுக் கொண்டிருப்பார் கிரேஸிமோகன். தொண்ணூருகளின் மத்தியில் அப்படி அவரை மாலை வேளைகளில் பார்த்திருக்கிறேன். அதேபோல அடையாறில் ஒரு கடையில் சிகரெட் குடித்தபடி நிற்கும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் பார்த்திருக்கிறேன். இவர்களிடம் சும்மாவேணும் கை கொடுத்துவிட்டு போவோம். பகோப விடம் என்ன எழுதுறீங்க இப்ப என்றால் நாவல் என்பார். எதில எழுதுறீங்க என்றால் உல்லாச ஊஞ்சல்ங்க என்பார். மீண்டும்  ஒரு முறை கை கொடுத்துவிட்டு விடைபெறலாம். கிரேஸிமோகன் அதைவிட சுவாரஸ்யமாக பேசுவார். பேசும்போது பின் மண்டை தனியாக ஆடும். எல்லா கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார். ஒரு சின்ன கூட்டம் அவர் முன் நின்று கேட்டுக் கொண்டிருக்கும். பக்கத்தில் திரும்பி கடைக்காரரிடம் ஒரு பீடா கேட்டு வாங்கி மெல்லுவார். போகும்போது இன்னொன்றை வாங்கி மென்றுகொண்டே செல்வார். பேசிய மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். அதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும். அவர் யாரிடமும் பேசவில்லை. தன்னை ஒரு நிலையில் நிதானப்படுத்திக் கொள்கிறார் அவ்வளவுதான்..

யோசித்து பார்க்கும்போது படைப்பாளிகள் தங்களை ஒருமைப் படுத்திக் கொள்வதற்கு வேறு புதிய யோசனைகளை செய்வதற்கும் மட்டுமே இப்படி செய்கிறார்கள். ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் இப்படி செலவழிக்கும்போது புதிய செய்திகள் சிந்தனைகள் வெளிப்படும். இதை எல்லா படைப்பாளிகளும் செய்யக் கூடியவர்கள் தாம் (நான் காலை மாலை வாங்கிங் செல்கிறேன்). 

சிரிப்பு வெடிகள் வரக்கூடிய வசனங்கள் அவருக்கு தேவை, நாடகத்தின் ஆள்மாறாட்டங்களின் குழப்பங்கள் தேவை. எழுபதுகளில் தொலைக்காட்சி நாடகங்கள் வெளியானபோது உருவான ட்ரூப்புகள் என்று சில சென்னையில் இருந்தன. காலையில் அரசு வேலையில் இருந்து வீடு திரும்பியதும், மாலை சிரிப்பு மேடை நாடகங்களை அரங்கேற்றினார்கள். தூர்தர்சனில் தேவை பொருத்து மற்ற நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டார்கள். இந்த சிரிப்பு நாடகங்கள் சென்னை தாம்பரத்தை தாண்டி போனதில்லை. மும்பை, தில்லி என்று பெருநகரங்களிலும் லண்டன், பாரிஸ் போன்ற வெளி நகரங்களிலும் மட்டுமே நடந்திருப்பதாக தெரிகிறது. சென்னை மக்களின் வேக வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகள் தான் அதன் மையம்.
ஒய்.ஜி.பார்த்தசாரதி, கே.பாலச்சந்தருக்கு பிறகு சோ, மவுலி, காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகருக்கு அவர்களுக்கு பின்னால் வந்து இணைந்துக் கொண்டவர் கிரேஸி மோகன். மற்றவர்கள் ஸட்டலைட் டிவி வந்ததும் மெதுவாக காணாமல் போக, அல்லது புதிய சரக்குகள் இல்லாமல் போக, எஸ்.வி சேகர் கிரேஸி மோகன் மட்டுமே நின்றார்கள். அதிலும் புதியவகை சிரிப்பு நாடகங்களால் கிரேஸி மோகன் தொடர்ந்து நீடித்தார்.

என் வீட்டில் இரவுணவின் போது கிரேஸி மோகன் நாடங்கள் பார்த்து கேட்டபடி (செல்போனில்) சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. சிரி சிரி கிரேஸி, விடாது சிரிப்பு, மாது சீனு போன்ற டிவி நாடங்கள் அதில் மிகப் பிரபலம். மேடை நாடகங்களில் மாது +2 விலிருந்து கிரேஸி பிரிமியர் லீக் வரை அத்தனையும் பிரபல்யமே. சோவின் புத்திசாலித் தனமான நாடகங்களும் எஸ்.வி.சேகரின் பத்திரிக்கை குபீர் சிரிப்பு நாடகங்களுக்கு மத்தியில் சுவாரஸ்யமான புதிய சிந்தனையான சிரிப்பு நாடகங்களாக இருக்கும். ஒரு நாடகத்தில் மாது தன் வீட்டிற்கு செல்ல கயிறு கட்டி வாசலை தொடாமல் தொங்கி செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அவரது மனைவி எங்க அதுக்குள்ள திரும்பி வந்துட்டிங்க என்பார். சட்டென யோசித்து எதிர்த்த வீட்டுக் காரர் ஒருநாள் வீட்டுக்கு வந்து தலைய காட்டிப்போன்னு படுத்திக்கிட்டே இருந்தான்ல, அதான் எட்டிப் பார்த்துட்டு வந்துட்டேன் என்பார். சட்டென நம்மையறியாமல் நாடகத்தில் நாம் ஒன்றிவிடுகிறோம்.

எல்லா நாடகங்களும் கிட்டத்தட்ட சிலவகை டெம்ளேட்டுக்குள் அடக்கிவிடமுடியும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன பிரச்சனை, ஆள்மாறாட்டம், பேய்களின் வருகை, கடவுளின் வருகை இந்த குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருக்கும். எல்லாமே மாது என்கிற பாத்திரம் மையமாக இருக்கும். அந்த மாது அவர் தம்பி பாலாஜிதான் நடிப்பார். அவர் நல்லவராகவும், நல்ல வேலையில் இருப்பவராகவும், இருப்பார். அதாவது சென்னை நகரத்து மத்தியதர மனிதராக இருப்பார். வித்தியாசமான ஒரு பாத்திரம் இருந்தால் அது கிரேஸி மோகந்தான். தலையை இடப்பக்கமாக திருப்பி ஒரு வெட்டு வெட்டி எதிர்பாத்திரத்தின் வசனத்தை எதிர் கொள்வது அவரது பாணி. அதன்பின்னே அவர் பாத்திரம் பேசும். இதை ரொம்ப நாட்களாக செய்துக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் தம்பியும் இதை செய்ய ஆரம்பித்திருக்கிறார் இப்போது.

அவர் சினிமாவில் பொய்க்கால் குதிரையில் (1983) வசனகர்தாவாக பயணத்தை ஆரம்பித்துவிட்டார். 'கதாநாயகனுக்கு' பின் கமலுடன் அபூர்வ சகோதரர்களில் தொடர்ந்தார். கமலுடன் இணைந்த அத்தனை படங்களும் முக்கியமானவைதான். வெடிச் சிரிப்புக்குபின் சிரிப்பாக மலர்ந்திருக்கிறது. முக்கியமானவைகள் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா, போன்றவைகள்.

மற்றவர்களின் சிரிப்பு நாடகங்களிலிருந்து வித்தியாசப்படுவது அவரது புத்திசாலித்தனமான சிந்தனைகளில் பாத்திரங்களின் அப்பாவித்தனமான வெளிப்பாடுதான். அவ்வை சண்முகியில் காக்கா எச்சம் போட்டிச்சின்னா அத லவ் பண்ணிடுவீங்களா என்பது மாதிரி. குறிப்பாக எந்த கொச்சையும் கீழ்தரமும் இருக்காது. எதிலிருந்து திருடியதாக இருக்காது. இதற்குமுன்பே கேட்ட ஜோக்குதான் இது என எங்குமே இருக்காது. வசனம் முழுவதும் அவர் சொந்த சிந்தனையில் உதித்ததுதான். இதுவே அவரது வெற்றி. சிரிப்பு நாடகங்களின் காலம் முடிந்தபின்னும் தொடர்ந்து கோலோச்ச முடிந்தது அவரது இந்த சுயகால் நிற்றல்தான் என்றால் மிகையில்லை. கிரேஸி மோகனின் மறைவு இன்று நிகழ்ந்திருக்கிறது. அவரது 66ஆவது இளம் வயதில் மறைந்திருக்கிறார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

2 comments:

Unknown said...

ஆழ்ந்த இரங்கல்

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

நல்ல கலைஞனுக்கு சிறந்த அஞ்சலி.