Monday, April 22, 2019

தஞ்சைக் கூடல் 25



சற்று விரிந்தப் பரப்பிற்குள் தஞ்சைக் கூடல் வருமென்று நினைத்திருக்கவில்லை. ஏனெனில் அவசரத்தில் உருவான டெண்ட் கொட்டகை இது. ஆரம்பத்தில் சிறுகதைகள் பேசப்பட்டன. ஒரு சிற்றிதழில் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து பேசினார்கள். சில நேரங்களில் மொத்தமாக பேசினார்கள். எல்லோரும் படித்த ஒன்றை விவாதித்தார்கள். யாரும் படிக்காத ஒன்றையும் பேசினார்கள். பேச்சு சுவாரஸ்யம் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் போலும். ஒவ்வொரு மாதமும் ஒன்றை விஞ்சும் ஒன்று நிகழந்துக் கொண்டிருந்தது. புதிய இலக்குகளுக்குள் விரும்பிச் சென்றோம், சில நேரங்களில் தள்ளப்பட்டோம். ஒவ்வொரு மாதமும் ஒரு நாவல் குறித்து பேசுவோம் என முடிவானபோது, சற்று அதிர்ந்திருந்தோம். அதுவரை தற்காலியமான ஒன்று நிரந்தரமாகும் சூழல். நாவலை மனதில் நிறுத்துவார்களா என்று பயம்.

நண்பர்கள் சிலர் பிரிந்தார்கள், புதிய நண்பர்கள் உள்ளே வந்தார்கள். ஒரு கட்டத்தில் முற்றிலும் புதியவர்கள் என்கிற எண்ணத்தை தோற்றுவித்தது. துவாரகா சாமிநாதன், கிருஷ்ணப்ரியா, புலியூர் முருகேசன், ஸ்டாலின் சரவணன், தினேஷ் பழநிராஜ் போன்றவர்கள் சிலகாரணங்களுக்காக‌ வெளியேறினார்கள். பா.சாமிநாதன், கலியபெருமாள், கவியரசு, பாயுமொளி கண்ணன், பிரசன்ன கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ஹேமலதா, கண்ணம்மாள் போன்றவர்கள் உள்ளே வருவதும் நிகழ்ந்தது. பலர் அவ்வப்போது வந்து சேர்வது போவதுமாக இருந்தார்கள். வேவ்வேறு காலங்களில் கழிதலும் புகுதலும் நிகழ்ந்தபடி இருக்கிறது. இத்தனையும் இரண்டு ஆண்டுகளில் நிகழ்கிறது என்றால் அது இலக்கியத்தின் சுவாரஸ்யம்தான். புனே வேலையை வீட்டு வேலையாக மாற்றிக் கொண்டு தஞ்சைக்கு வந்தபோது, அதன் இலக்கிய செயல்பாடுகள் அதிபரவசமாக இருந்தது. துடிப்புடன் எதையாவது செய்ய தோன்றியது.

நானும் எழுத்தாளர் ஹரணியும் ஆரம்பத்தில் இதை வடிவமைத்தோம். திட்டங்களும் விதிகளும் உருவாக்கிக் கொண்டோம். தஞ்சையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் திருக்குறள் பேரவை அமைப்பு போல பழந்தமிழுக்கு மாற்றாக நவீன தமிழுக்காக ஒரு கூடலை அமைப்போம் என பேசிக்கொண்டோம். அதன் பெயரும் அதிலிருந்தே தொடங்கியது. கூடல் மதுரையை குறிப்பதால் தஞ்சையை சேர்த்தோம். தஞ்சைக் கூடலானது. தஞ்சைக் கூடல் இலக்கிய வட்டம். சிறந்த நாவல்களை தேர்வு செய்வதும், அதுகுறித்த விவாதங்களை எழுப்புவதும், முக்கிய எழுத்தாளர்களை கவனப்படுத்துவதும் தான் தஞ்சைக் கூடலின் இதுவரை நோக்கமாக இருக்கிறது.

இப்போது 25ஆவது கூட்டம். என்ன புதுமை செய்யலாம் இதற்கு என்று தனியாக யோசிக்கவில்லை என நினைக்கிறேன்.. இதுஒரு சாக்குதான். இதைவிட இன்னும் ஒரு படி மேலே செய்யவேண்டியதைப் பற்றி ஒவ்வொரு மாதக் கூட்டத்தின் முடிவில் பேசிக் கொண்டேயிருந்தோம். குடிகாரர்களின் போதைபோல இன்னும் கடின இலக்காக்கி கொண்டோம் என்று சொல்லவேண்டும். ஒரு சிறப்பு பேச்சாளரை பேச அழைப்பதும் அந்த நாவலின் ஆசிரியரின் முன்னால் மூன்று அல்லது நான்கு வாசகர்கள் நாவல் குறித்து பேசுவதும், சிறப்பு பேச்சாளர் கடைசியாக தொகுத்து பேசுவதும் பிறகு அந்த நாவலின் ஆசிரியரின் ஏற்புரையும் நிகழ்வது என்று யோசித்திருக்கிறோம். வெள்ளையானை நாவல் முடிவான போது அதன் ஆசிரியர் ஜெயமோகனை அழைக்க முடியாத சூழல். இனி கூட்டங்களில் கலந்துக் கொள்ளமுடியாது என முன்பே அறிவித்திருந்தார். ஆனாலும் வெள்ளையானை நாவல் இலக்கிய சர்ச்சைகளும் இலக்கிய மதிப்புகளையும் ஒருங்கே கொண்ட படைப்பு. அதை கட்டாயம் பேசுவது என்று முடிவு செய்தோம்.

சிறப்புரையை பேச சுனில் கிருஷ்ணன் சரியானவர் என்பதால் அவரை பேசவும், நாவல் குறித்து பேசும் வாசகர்களாக சுரேஷ் பிரதீப், வீ.கலியபெருமாள், எம்.சரவணக்குமார், அருள் கண்ணன் போன்றவர்களையும் பேச அழைத்திருக்கிறோம். எங்கள் பகுதியை கட்சியின் பொருளாளர் திரு.எஸ்.வி.சரவணன் அவர்கள் தஞ்சைக் கூடலைப் பற்றி அறிந்ததும், கூடலில் கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறேன் என்றார். ஆக இயல்பாக நடந்தேறியது எல்லாம்.
நாவலைப் பற்றி சொல்லதேவையில்லை. அதன் சொல்லழகையும், அழகுணர்ச்சியும், வரலாற்றுப் பார்வையையும் என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டேபோகலாம். நாவல் இந்தியாவில் நடந்த முதல் தொழிற்சங்க வேலைநிறுத்தத்தைப் பற்றி பேசுகிறது, எப்படி தலித்சாதி மக்களின் ஒருங்கிணைப்பை இடைச்சாதியினர் எவ்வாறு தடுத்தார்கள் என்கிற குறிப்பு வருகிறது, நீதியுணர்ச்சியற்ற பிரிட்டிஷாரிடம் எப்படி ஊழல்கள் மலிந்திருந்தன, எவ்வாறு பஞ்சம் ஏற்பட்டது, அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை என்று அனைத்தையும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் பார்வையில், அதற்கு தலித் காத்தவராயனின் பின்னணியும், என்று விரிந்துச் செல்கிறது.நாவலின் அடித்தளத்தை புரிந்துக் கொள்ள இது போதுமானது என நினைக்கிறேன்.

இருவத்து ஐந்தாவது கூட்டம் வரும் 27/4/19 சனிக்கிழமையன்று மாலை சரியாக 6 மணிக்கு தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளியில் நடக்க இருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். வருக, நன்றி.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலகட்டத்தில் இவ்வாறாக அமைப்புகளை நடத்திச்செல்வது என்பது கடினமான பணியாகும். தஞ்சைக்கூடல் 100க்கும் மேற்பட்ட கூடலைக் காணவும், மென்மேலும் வளரவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.