Wednesday, May 8, 2019

வெள்ளையானை: மகத்தான தோல்வியின் வரலாறு


ஆழமான தாக்கத்தையும் உணர்வெழுச்சியையும் உண்டாக்கும் பிரதிகளை மீண்டும் வாசிக்க நினைக்கும்போதே உள்ளூர ஒருவித நடுக்கம் கூடிவிடுகிறது. நுண்மையாக அடிபட்ட தருணங்களை வெளியே சொல்லமுடியாமல் தவிப்பதை போல, காலத்தின்முன் நிழலாக படிந்துவிட்ட பயத்தின் மென்னடுக்குபோல. ஏய்டனின் வெள்ளை மனச்சாட்சியும் காத்தவரானின் கருப்பு புத்திசாலித்தனமும் இருந்தும்கூட சென்னை ஐஸ்பேக்டரியில் போராடும் தலித் மக்களை காப்பாற்றமுடியவில்லை. தங்கள் முயற்சிகளால் உயர்சாதியும் இடைச்சாதியும் ஒரு துளிகூட தலித் மக்கள் முன்னேற்றத்தில் முன்னெடுக்க விடாமல் செய்கிறார்கள். இப்படியான உண்மை வரலாறு எப்படி மறைக்கப்படுகிறது?



வெள்ளையர்களால் உருவான பஞ்சத்திற்கு வெள்ளையர்கள் உருவாக்கிய பட்டணம் நோக்கி பிழைத்து வாழ மக்கள் எறும்புகள் போல ஊர்ந்து செல்கிறார்கள். பஞ்சம் அதிகமாகும்போது மரணத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதை தடுக்க அல்லது மேலும் தொடராமல் இருக்க மனசாட்சியின் எந்த உள்ளுறுத்தலும் இல்லாமல் மரணம் அவர்கள் விதி என்று தங்கள் வாழ்வை ஸ்திரபடுத்திக் கொள்வதில் அதிக கவனத்துடன் இருக்கும் பிரிட்டிஷார், உயர் இந்திய சாதிகள், இடைநிலை சாதிகள். ஒரு பக்கம் தாதுவருட பஞ்சம் மற்றொரு பக்கம் ஐஸ்ஹவுஸ் சம்பவம், இரண்டையும் இணைத்து உருவான வரலாற்று நாவல் வெள்ளையானை.

வெள்ளையர்கள் இந்தியர்களை கருப்பர்கள் என்று பார்க்கிறார்கள். கருப்பர்கள் ஆன்மா அற்றவர்கள் அவர்கள் தங்களுக்கு கீழானவர்கள், தன் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழ்பவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆகவே கருப்பர்களின் மரணம் அவர்களுக்கு எந்த குற்றஉணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. கேள்விகேட்காத மனிதர்களை மனிதர்களாக பார்க்கவும் முடியவில்லை. பஞ்சத்தை தங்களுக்கு சாதகமாக குறைந்தவிலையில் கட்டிடங்கள் கட்ட அம்மக்களை பயன்படுத்திக் கொள்ள பெரும் திட்டங்கள் தீட்டுகிறார்கள். சென்னையில் உள்ள பெரும் கட்டிடங்கள் ஷோலம் போன்றவர்களின் முன்னெடுப்பால் தான் கட்டப்பட்டன. பக்கிம்காம் கால்வாய் அந்த சமயத்திலேயே கட்டப்பட்டது. இதேபோலவே உயர் சாதி இந்துக்கள் தலித்துகளின் மரணத்தை பொருட்டாக நினைக்கவில்லை. அவர்களின் மரணம் முன்ஜன்ம வினைகளே என்று விலகி நின்றார்கள். கீழானவர்களில் மரணம் தங்கள் வெற்றி என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதன் வழியாக அதை எளிதில் செய்யமுடிவதை புரிந்துக் கொண்டாரகள்.

அதிகாரத்தின் அடுக்குகளில் மனிதர்கள் நின்று எடுக்கும் முடிவுகள் அந்த அதிகாரத்திற்கு உட்பட்ட தன் தரப்பாக அதை மிக நேர்மையானது கறாரானது என வெளிப்படுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் தான் அலாதியானது. அதிகார முடிவுகள் இரக்கமற்றவையாக அமைப்பதில் அவர்களுக்கு எந்த மனதொந்தரவும் இருப்பதில்லை. தன்னை நிறுவிக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு அமையாது என்பதில் அவர்களின் தரிசனம் மிக கூர்மையானது. அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்வதில் ஆங்கிலேயர்களும் உயர் சாதியினர் ஒரே நிலைதான்.

அதிகாரத்தின் பிடியில் இருப்பவர்களின் மனதில் குற்றஉணர்ச்சியோ தன்னிலை விளக்கமோ இருக்காது என்றே நம்புவோம். ஆனால் குற்ற உணர்ச்சிக்கு ஆட்படும் கவி மனதிற்கு அந்த குற்றங்களிலிருந்து அல்லது அதை செய்யாமல் இருக்க தோன்றும் தன்னிலை விளக்கம் ஒன்று இருக்கவே செய்கிறது. கவிமனம் உருகி உருகி தன்னை வருத்தி கொண்டு வாழ்நாளேல்லாம் தன்னை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். அப்படியானவன் இந்த ஏய்டன் பைர்ன். அவன் பார்வையில் நாவல் ஒரு தன்னிலை விளக்கமாக இந்திய மனதில் ஒவ்வொரிடமும் வெளிப்படும் கழிவிரக்கமாகவும் விரிகிறது.

கவிமனம் கொண்ட ஏய்டனுக்கு ஏன் இந்த கழிவிரக்கம். தலித்துகளின் மேல் படியும் ரத்தம் தன்மேல் படிந்த ரத்தமாக ஏன் நினைக்கிறான்? பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட அயர்லாந்தில் ஒரு அடிமையாக்கப்பட்ட இனத்திலிருந்து வருகிறான் ஏய்டன். அவனுக்கு தெரியும் என்ன உயர்பதவியில் இருந்தாலும் உயர்குடியால் அவன் ஐரிஸ்காரனாக மட்டும் அறியப்படுவான் எனபதை. அந்த வலி அவன் தலைமுறைக்கு தொடரும்.

அவன் அப்பா தொப்பியை எடுத்து தலை கலைந்துக் கொண்டு ஜீசஸ் என்று சொல்வது, அதையே அவனும் செய்வது படிமங்களே. தொப்பி, தலைப்பாகை, மது, பங்கா, இந்த நாவலில் இடம்பெறும் அனைத்தும் படிமங்களே. ஒருவகையில் அதிகாரத்தை தன்வசப்படுத்தும் முனைப்புகளை வெளிப்படுத்தும் குறியீடுகள். தொப்பி இருக்குபோது கொள்ளும் மனநிலையையும் அதை எடுத்திருக்குபோது கொள்ளும் மனநிலையையும் வேறானவையாக தெளிவாக காட்டுகிறார் ஆசிரியர். அதிகாரம் தலைக்கேறும் சமயங்களில் பங்கா அசைய வேண்டும் வெறிகொண்டு ஆணையிடுகிறான் ஏய்டன். முரஹரியும் காத்தவராயனும் என்னிலையிலும் தலைப்பாகைகளை எடுப்பதில்லை. மதக்குறியிடுகள் அவர்கள் முகங்களை விட்டு விலக அனுமதிப்பதில்லை. இந்தியர்களின் மதக்குறிகளை குறித்து ஏளனமாக நினைக்கும் சமயங்களின் அவனின் மதம், அவனின் அதிகாரம் குறித்த தடுமாற்றங்களை காணமுடிகிறது.

அதிகாரத்தின் எதிர்நிலையாக ஆன்மீகத்தைதான் குறிப்பிடவேண்டும். அதிகாரம் செல்லாத இடங்களில் ஆன்மீகம் தயங்கி மண்டியிட்டு உள்ளே சென்றுவிடுகிறது. தூயவறிவின் துணை அதற்கு தேவையாக இருக்கிறது என்பதை உணரும் ஒவ்வொரு தருணத்திலும் அதிகாரத்தின் சுவடுகள் காய்ந்த சருகாக மணலில் மறைகிறது.

முரஹரியின் அதிகாரத்திற்கு ஆன்மிகம் துணையாக நிற்பதுபோலவே, காத்தவராயனின் ஆன்மீகத்திற்கு அதிகாரம் தேவையாக இருக்கிறது. காத்தவராயன் கடைசியில் மதக்குறியை துறக்கும்போதும் தலைப்பாகையை துறப்பதில்லை. அப்போதும் வேறு மதக்குறியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

முரஹரி, காத்தவராயன் செய்யாத ஒன்றை ஆண்ட்ரூ செய்கிறான். பஞ்சத்தின் கோரக்காட்சிகளைப் பார்த்து மனம் பதபதைத்து தனக்கான ஆன்மீகப் பாதை இதுதான் என இறங்கி ஓடுகிறான் ஆண்ட்ரூ. அதிகாரத்தை துறப்பதிலும் ஆன்மீகத்தில் நுழைபதிலும் இருக்கும் போராட்டமாத்தான் வெள்ளையானை. உண்மையில் வாழ்க்கையேகூட இதைதான் நாம் நம் இறுதிவரை போராடிக்கொண்டிருக்கிறோம் என தோன்றுகிறது. ஆன்மீகம் பெருங்கடல் போன்றது, அதில் அலையடித்து செல்லும் பெரிய கப்பல் அதிகாரம். அதிகாரத்தின் அகங்காரம் கப்பலை செலுத்துகிறது. என்றாவது ஒரு நாள் முழ்கும்போது ஆன்மீகம் தானாக கப்பலை அதை சுவீகரித்துவிடுகிறது. கப்பலில் முழ்காமல் வெற்றிகரமாக செல்பவர்களும் இருக்கிறார்கள். முரஹரி, காத்தவராயன், டியூக், ரஸ்ஸல் அதிகார வெற்றியை காண்கிறார்கள். ஏய்டன், ஆண்ட்ரூ, மரிஸா ஆன்மீக தோல்வியை தழுவுகிறார்கள். ஜெயமோகன் வரலாற்றை சிறப்பான பதிவுடன் இந்த புனைவை கண்டடைந்திருக்கிறார். இதற்கு அவர் மெனக்கெட்ட முயற்சிகளை அவர் தனியே எழுதியிருக்கிறார்.

எளிய வெற்றிகளும் மகத்தான தோல்விகளின் வரலாறுதான் வெள்ளையானை

(தஞ்சைக்கூடல் 25 விழாவில் 27/4/19 அன்று பேசியதன் கட்டுரை வடிவம்)


1 comment:

Unknown said...

படிக்கவில்லை என்றாலும், உங்கள் விமர்சனம் நாவலைப் படிக்க தூண்டியுள்ளது. மிகவும் நேர்த்தியான விமர்சனம். நாவலைப் படித்துவிட்டு சொல்கிறேன்.