Thursday, February 28, 2019

கூடல் கூட்டம் - பிப்ரவரி'19


நவீன இலக்கிய கூடுகைகள் பல்வேறு காரணங்களால் சிலசமயங்களில் குறைந்த எண்ணிக்கையிலான, எப்போது இருப்பதைவிட, நண்பர்கள் கலந்துக் கொள்ளும் காரணத்தை அவதானித்திருக்கிறேன். புதிய சினிமாக்கள் வெளிவரும்போது, பெரிய பண்டிகைகள் வரும்போது, ஊரில் சர்க்கஸ்போன்ற நிகழ்ச்சிகள் வரும்போது வருபவர்களில் பாதிபேர் அங்கே போய்விடுவார்கள். அதேநாளில் மற்ற இடங்களில் இலக்கிய கூட்டங்கள் இருந்தாலும் பெரியளவில் மக்கள் வருவதில்லை. இப்படிதான் இந்தமாதம் அமைந்துவிட்டது. ஆனாலும் நிறைவளிக்கும் கூட்டம் என்றுதான் சொல்லவேண்டும்
  
பாயுமொளி கண்ணன் தில்லைஸ்தானம் அவர்கள் வாசகர்களின் வாசிப்பு தேர்வுகளும், ஆசிரியர்களின் படைப்பு தேர்வுகளும் குறித்த கேள்வியுடன் விவாதம் ஆரம்பமானது. வாசகர்களில் பொதுவாக நான்கு வகையினர்கள் உண்டு, அவர்களில் புனைவுகளை அதிகம் வாசிப்பவர்கள், புனைவுகள் அபுனைவுகள் இரண்டையும் வாசிப்பவர்கள், அபுனைவுகள் மட்டும் வாசிப்பவர்கள், அவ்வப்போது வாசிப்பவர்கள் என்று பொதுவாக வகைப்படுத்தலாம். அதைத்தவிர எதையும் வாசிக்காமல் வாசிப்பவரைப் போன்ற பாவனை செய்பவர்களும் உண்டு. முதல் மூன்று வகையினர் தீவிரமாக வாசிப்பவர்கள், ஆனால் இவர்கள் பொது விவாதங்களில், கூடுகைகளில் எதிலும் அதிகம் கலந்துக் கொள்வதை தவிர்ப்பவர்கள். 

தீவிர வாசிப்பு எல்லா காலங்களிலும் சில நேரங்களில் சாத்தியமாவதில்லை. ஆனால் தீவிர வாசிப்பு தொடர்ந்தால் மட்டுமே சில நாவல்களை வாசித்து அதன் உள்ளடுக்களில் கூறியவற்றை புரிந்துக் கொள்ள முடியும். அப்படியான ஒரு நாவல் குள்ளச் சித்தன் சரித்திரம். இந்த நாவலை தேர்வு செய்தபோது நண்பர்கள் குழப்பத்துடனே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வாசித்துவிட்டு வந்தவர்கள் தங்கள் மேலான வாசிப்பு அனுபவத்தை அடைந்ததாகவே கூறினார்கள். பா.சாமிநாதன் எப்போதும் போல நல்ல வாசிப்புடன் வந்திருந்தார். அவருக்கு அந்த நாவலில் இருந்த அமானுஸ்ய விஷயங்கள் பிடித்திருந்தன.

நாவல்களின் கதாப்பாத்திர இடைவெளிகளை வாசகர்களே நிரம்பிக் கொள்ளும் விதத்தில் இருந்தது. ஆகவே வாசகர்கள் தங்களுக்குள் தோன்றிய இடைவெளிகளை பேசிப்பேசி தீர்க்க வேண்டியிருந்தது. எனக்கு தி.ஜானகிராமனை ஆழமாக பின் தொடரும் உணர்வை இந்த நாவல் ஏற்படுத்தியது. குறிப்பாக விஸ்வேஸ்வர அய்யர், காலாஸ்யம் போன்ற கதாப்பாத்திரங்கள் அவர்களின் சொளசொளப் பேச்சுகளில், குணாதிசயங்களில் தி.ஜாவின் கதாப்பாத்திரங்களின் சாயல்களை ஒத்திருக்கின்றன என்றேன். கவியரசு நேசன் சில ஒத்த நாவல்களை பற்றி பேசினார். அப்படியே வேறு நாவல்களைப் பற்றிய செய்திகளும், பெரிய நாவல்களில் தெரியும் சின்ன மறக்கமுடியாத கதாப்பாத்திரங்களைப் பற்றியும் பேச்சு தொடர்ந்து. முடித்துவிட்டு வெளியே வந்தும் கூட வேறு வகையான பேச்சுகள்கூட சுவாரஸ்யமான இருந்தன. அடுத்த கூட்டம் வரும்போது அதிக வாசிப்பை கோறும் நாவல்களை தேர்வு செய்யவேண்டும் என நினைத்துக் கொண்டோம்.

No comments: