Monday, January 7, 2019

நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன்

ஒரு பகுதியின் வரலாற்றை, அம்மக்களின் வாழ்க்கைமுறைகளை அவர்களின் ஆட்சிமுறைகளை அறிந்துக் கொள்ள பல்வேறு வழிகள் இருக்கின்றன. அங்கு கிடைக்கும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஃபாசில்கள் என்று சில‌ வழிகளில் தெரிந்துக் கொள்ளமுடியும். பெரிய நாகரீகமாக வளர்ச்சியடைந்து பின் மறைந்த ஒரு சமூகத்தை காலம்காலமாக இப்படிதான் கண்டுகொண்டு வருகிறார்கள். இப்போதும் வாழும் சமூகமென்றால் அவர்களின் பழக்கவழக்கங்கள், பயன்படுத்தும் கருவிகள் போன்றவைகள் பயன்படும். தொடர்ச்சியாக இடம்பெயர்வில் இருந்த இரு சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மாறி மாறி வேவ்வேறு இடங்களில் வாழ்ந்து பின் ஒரு இடத்தில் ஒன்று சேர்வது சற்று அபூர்வமானது என்றே நினைக்கிறேன். அந்த அபூர்வ இரு இனங்கள் யூதர்களும், பாலஸ்தீனர்களும் தான்.


என் கிருஸ்தவ/முஸ்லீம் நண்பர்கள் சிலர் அவர்களின் வரலாற்றை பேசும்போது யூதர்களையும் பாலஸ்தீனர்களையும் பற்றி சொல்லும் செய்திகள் அவர்களுக்கு அந்த நிலம்பற்றி சரியாக தெரிவதில்லை என்பது புரியும். உண்மையில் ஒருதலைப் பட்சமான வரலாறாகத்தான் சொல்லுவார்கள். கிருஸ்தவர்கள் வழியாக யூதர்களையும், பாலஸ்தீனர்களைப் பற்றி முஸ்லீம்களின் வழியாகவே நாம் அங்கிருக்கும் வரலாற்றை புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இரண்டுக்கும் இடையில் வேறு ஒரு வரலாறு இருக்கிறது.

இந்தியாவில் அருகருகே வாழும் இரு பழங்குடிகள் தங்களுக்குள் பகைமைகளை வளர்த்துக் கொள்வதுபோலதான் வளர்ந்து வந்திருக்கிறார்கள் யூதர்களும் பாலஸ்தீனர்களும். ஏசுவின் பிறப்பிற்குபின் மிகச் சிறிய குழுவாக மட்டுமே அங்கு வாழ்ந்துவிட்டு உலகின் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த யூதர்கள் ஹிட்லரின் கொலைகளுக்கு பின் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு மீண்டும் தங்கள் தாய் நிலத்தை 2000 ஆண்டுகளுக்குப் பின் வந்து குடியேறி அங்கிருந்த பாலஸ்தீனர்களை விரட்டி அவர்களுக்கு சின்ன இடங்களை (மேற்குகரை, காஸா) மட்டும் கொடுத்துவிட்டு வாழ்ந்துவரும் நீண்ட வரலாறு யூதர்களுக்கு.

பா.ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் (கிழக்கு) நூலில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடந்த நிகழ்ச்சிகளை சிறுநதிகளின் ஓட்டமெல்லாம் ஒரு நதியை நோக்கிவந்து கலந்து பெருநதியாக உருபெரும் வரலாற்று சித்திரத்தை அளிக்கும் முயற்சிதான் இந்த நூல். பல்நூல்களின் வாசிப்பு, பல்வேறு துறை ஆளுமைகளின் உரையாடல்களின் வழியே இது சாத்தியமாகியிருக்கிறது.

ஒருவகையில் பாலஸ்தீனர்களுக்கு சாதகமாக எழுதியிருப்பது போன்ற தோற்றம் தெரிகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு இனக்குழுவிற்கு சாதகமாக எழுத வேண்டிய அவசியமும் இருக்கிறது. யூதர்களின் பயணம் ஆச்சரியம்தான். ஆரம்பத்து கிருஸ்தவர்கள் எல்லாம் யூதர்கள் தான். வேறு பழங்குடிகளாக இருந்த பாலஸ்தீன்கள் முகம்மதுவின் ஜெருசலம் விஜயத்திற்குபின் மூஸ்லீமாக மாறியிருக்கிறார்கள். கிருஸ்துவின் வருகை நடந்த 700 ஆண்டுகளுக்குபின். ஆனால் வேறுமதத்திலிருந்து யூதமதத்திற்கு மாறமுடியாது. தங்களின் அமைதியான சொரூபத்தால் ஒடுங்கியே வாழ்ந்தார்கள். இடம்பெயர்ந்தாலும் தங்கள் தனித்தன்மைகளை இழக்காமலும் வாழ்ந்தவர்கள். இப்படியொரு சமூகம் 2000 ஆண்டுகளாக எப்படி வாழ்ந்தார்கள் என்பது அறிவது ஆச்சரியமூட்டும் தகவல்தான். கூடவே கலைகளையும், கலாச்சாரத்தையு, மொழியையும் பேணுவது எப்படி என்பதை யூதர்களிடமிருந்து நாம் கற்கவேண்டியது என நினைக்கிறேன்.

ஹிட்லரின் யூதக்கொலைகள் மேற்குல ஆட்சியாளர்களை அவர்கள் பக்கம் சாய்த்துவிட்டது. அவர்களின் உதவியோடு மீண்டும் பாலஸ்தீன் வந்து இஸ்ரேலை உருவாக்குகிறார்கள். சுற்றி முஸ்லீம் நாடுகள் இருந்தாலும், சரியான உதவிகள் இல்லாமல் பாலஸ்தீன் காணாமல் போய்விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை. எகிப்தை சேர்ந்த அராஃபத் வந்து ஓரளவிற்கு அவர்களை தூக்கி நிறுத்தியிருக்கிறார். ஒரு 50 ஆண்டுகளில் பெரும்பாண்மை (பாலஸ்தீனர்கள்) சிறுபான்மையாகவும், சிறுபான்மை (யூதர்கள்) பெரும்பான்மையாகவும் மாறிவிட்டார்கள்.

இந்த வரலாற்றை பார்க்கும்போதே ஏசுவின் வரலாறும், முகம்மதுவின் வரலாறு நமக்கு தெரிந்துவிடுகிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்ட மூன்று அப்ரகாமிய மதங்களும் உலகை எப்படி கூறுபோட்டன என்கிற வரலாற்றின் வரைவை இந்நூலில் புரிந்துக் கொள்ளலாம். இதுஒரு கழுகுபார்வை மட்டுமே, இந்த வரலாற்றின் உள்மடிப்புகளை தெரிந்துக் கொள்ள வேறு  நூல்களையும் வாசிக்க வேண்டும்.

3 comments:

prapanchapriyan said...

மனதால் மகத்துவமிக்க மூலாதாரத்தை அறிய வழி இருப்பினும் மாயையின் தாக்கத்தால் மதி மயங்கி தனது மனுகுலத்தையே எதிரியென எண்ணி அழித்தொழிக்கும் போராட்டம் பேராபத்தை உண்டுபண்ணும் நிலையில் இதனை வரலாற்றுப்பதிவில் விடைகண்டதாக நினைத்து பெருமிதத்துடன் பவனி வருபவரையும் ஏற்றுக்கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழி!?!?!?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அதிகம் எழுதப்படாத, ஆனால் தேவையான பொருண்மையில் அமைந்த நூல். மதிப்புரை, நூலை முழுமையாகப் படிக்கும் ஆவலைத் தூண்டியது. நன்றி.

writerpara said...

இம்மதிப்புரையை இப்போதுதான் கண்டேன். மிக்க நன்றி.