Thursday, January 31, 2019

ஜனவரி'19 கூடல் கலந்துரையாடல்

எல்லா மாதங்களிலும் கூடல் கூட்டம் பற்றிய செய்திகளை எழுதிவிடவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இந்த வருடத்து ஆரம்ப கூட்டத்தை ஆரம்பித்தோம். கூட்டம் என்பது எப்போது 10 பன்னிரெண்டு பேர் தான். கநாசுவிலிருந்து செல்லப்பா வரையிலும், கலாபிரியாவிலிருந்து ஜெயமோகன் வரையிலும் இலக்கிய விவாதங்கள் எப்போது 10 நபர்களுக்குள்தான் இருந்திருக்கின்றன. நான், சாமிநாதன், கண்ணன் தில்லைநாதன், முருகன், அய்யனார் மற்றும் தனபால் ஆகிய அன்பர்கள்தான் இந்த மாதத்தில். சற்று தாமதமாக நந்தி செல்லதுரையும், சுந்தர்ஜியும் வந்து சேர்ந்துக் கொண்டார்கள்.
 அய்யா அய்யனார் கூட்டம் துவங்கும்போது நாவல் குறித்து ஒரு சிறுஅறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம், அது புதியவர்களுக்கு பயன்படும் என தொடங்கிவைத்தார். அதிலிருந்தே நாவலின் வகைமையையும் அதன் பேசுபொருளையும், காலத்தையும் எப்படி வரையறுத்துக் கொள்வது என்று தொடரஆரம்பித்தோம். இந்த மாதம் பிஏ கிருஷ்ணன் எழுதிய புலிநகக் கொன்றை நாவல் கலந்துரையாடப்பட்டது. நான் நாவலின் விரிவையும், அதன் போதாமைகளையும் பற்றி பேசியதும் சாமிநாதன் விரிவாக நாவல் குறித்து பேசினார். இதுவரை அவர் பேசிய நாவல் கலந்துரையாடல்களில் இந்த பேச்சு அவரளவில் சிறப்பானது. எல்லா நுண்தகவல்களையும் ஒருங்கிணைத்துக் கொள்ள முடிந்தது. இது அரசியல் நாவல் என்று அழுத்தமாக எடுத்துவைத்தார். ஆனால் எனக்கு இதில் அரசியல் குறித்த ப்ரஞ்ஜை இருந்தாலும், கதாப்பாத்திரங்களோ அல்லது ஆசிரியரோ அரசியலின் ஏற்றதாழ்வுகளையும், மக்கள் அடைந்த அரசியல் வீழ்ச்சியையோ எட்டவில்லை என்றுபட்டது.

நூற்றியிருபது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து செல்லும் நாவலில் அரசியல் ஒரு மையமாக இருந்தாலும், சித்தாந்த விழ்ச்சியை பற்றியோ, வாழ்விலிருந்து விலகி பொதுவெளியில் உந்துதலுடன் செயல்பட்ட ஒரு கதாப்பாத்திரமோ இடம்பெறவில்லை. மாறாக, திருநெல்வேலி மாவட்ட தென்கலை அய்யங்கார் மக்களுக்கு அரசியல் வாழ்க்கையின் அங்கமாக அமைந்திருக்கிறது. அதைக் கொண்டு தங்கள் வாழ்வின் லெளகீக தேவைகளை பூர்த்தி செய்யமட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். நம்மாழ்வார் தவிர மற்ற யாருக்கும் தங்கள் வாழ்வு பற்றிய மிக தெளிவான அக்கறையுடனே செயல்படுகிறார்கள். ஆசிரியர் பிஏகே மிகுந்த ப்ரஞ்ஜைபூர்வமாகவே இதை எழுதியிருக்கிறார்.

விவாதங்கள் பல்வேறு வழிகளில் நீண்டுக் கொண்டே சென்றது. பிறகு தாமதமாக வந்த சுந்தர்ஜியும், நந்தி செல்லதுரையும் வஉசி நடத்திய பள்ளியில் சமபந்தி போஜனம் தடை செய்யப்பட்டது பற்றிய (அந்த நாவலில் இடம்பெற்றிருந்த) பேச்சு எழுந்தது. அதன்பின் காரசாரமாக விவாதங்கள் வெளிக்கிளம்பின. பெரியார் அங்கு பொருளாளராக இருந்தார் என்பதும் அதற்கு கடுமையாக எதிர்த்தார் என்பதும் நாம் அறிந்ததுதான். ஆனால் நாவலில் தன் பக்கத்தில் செட்டிப் பிள்ளையும், மற்ற பிள்ளைகளும் அமர்ந்ததைப் பற்றி கூறுவான் கண்ணன். இரு பிள்ளைகள் மட்டும் இந்த செயலை விரும்பாமல் தனியே அமர்ந்ததாக வருகிறது. அது எந்தளவிற்கு உண்மை என்கிற விவாதம் சற்று நேரம் நடந்தது. இந்த நிகழ்வு நாவலில் ஒரு பக்கம் மட்டுமே வருகிறது.

நாவல் கூறும் பல்வேறு காலநிலைகளையும், அதன் மாற்றங்களையும் பற்றி அதிகம் பேசமுடியவில்லை. அய்யங்கார் குடும்பங்களின் குடும்ப வாழ்வின் மிக நெருக்கமான ஒரு பதிவு இந்தநாவல். மீண்டும் ஒருமுறை படித்து விரிவாக எழுதவேண்டும்.
அந்தளவில் கலந்துரையாடல் நிறைவையடைந்தது. அடுத்த கூட்டத்திற்கு செய்யவேண்டிய புதிய மாற்றங்களைப் பற்றி பேசி கலைந்து சென்றோம்.

No comments: