Monday, October 29, 2018

பொன்னகரம் : விதியின் வழி வாழ்க்கை


1
மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையும் தருகின்ற ஒரு இடத்தை விட்டு மனிதர்கள் பிரிந்து செல்லமுற்படுவதில்லை. பிறப்பிலிருந்தே பெற்றுக் கொண்டிருக்கும் ஒன்றை விட்டு எளிதில் சென்றுவிடமுடியாத மனிதர்களாக தங்களை வைத்துக் கொள்வதில் ஆழ்ந்த நம்பிக்கைகளும், வெறுப்புகளையும் ஒரு சேர கொண்டவர்கள். அவர்கள் நகரத்தில் ஒதுக்கப்பட்ட யாரும் எளிதில் உள்நுழையாத, யாருக்கும் தெரியாத பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களின் மீதான நம்பிக்கைகளை அவர்களே இழந்தவர்கள். தங்களிடமிருந்து பிரிந்து வேறு ஒரு மனித கூட்டத்தில் சேர்ந்து வாழ முடியும் என்கிற நம்பிக்கையையும் இழந்தவர்கள். அவர்களது மொழியும், பழக்கங்களும் தனியே வரையரை செய்யப்பட்டவையாக உருவாக்கிவிட்டபின் அதுவே அவர்களின் பலமாகவும், பலவீனமாகவும் மாறிவிட்டிருக்கின்றன.

உருவாகிவரும் நகரத்தின் எல்லைகளைப் பொறுத்து வெவ்வேறு வகை மனிதர்கள் உருவாகிவருகிறார்கள். கிராமப்புற வாழ்வில் மனிதர்களால் ஒருவரைஒருவர் அறிந்துக் கொள்ள முடிகிறது. அவர்களின் சுகதுக்கங்களை உணரவும் பங்குகொள்ளவும் முடிகிறது. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் அறம் போன்ற சமூகசட்டங்களால் கட்டுபடுகிறார்கள் அல்லது கட்டுப்படுத்தப்படுகிறார்கள். பெருநகரத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் காணமுடியா அளவில் வேலைகளும் தூரமும் அவர்களை நெறுக்குகிறது. அறிந்து கொள்ளமுடியாத இடைவெளியில் வாழ்கிறார்கள். நகரத்தின் விளிப்புகளில், சாக்கடைகளாக மாறிவிட்ட நதிகளின் ஓரங்களில், அந்த நாற்றத்தில் வாழும் சேரிமனிதர்களின் சமூக சட்டங்கள் பொதுச் சட்டத்தை மதிக்காதவைகளாக உள்ளன.

சேரி எப்போது உருவாகிறது எனபதை நகரம் எப்போது உருவாகியது என்பதிலிருந்து தொடங்கவேண்டும். மிக மோசமான அருவருக்க தக்கவைகள் என நினைக்கும் எல்லாமே அவர்களுக்கு எப்படி எளிதானதாக இருக்கின்றன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. வெறும் பணம் மட்டுமே அவர்களை செலுத்தவில்லை. சேரிகளில் உயர்ந்த மாடி வீடுகளை கட்டிக் கொண்டு வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களின் அரசியல், திருவிழா எல்லாமே சாதியும் வெளிமனிதர்களே தீர்மானிக்கிறார்கள்.

மிக நெருக்கமான வீடுகள் மனிதர்களுடன் மிக நெருக்கமான அன்பை வெளிகொணர்கிறது, அதே வேளையில் வன்மத்தையும் அது எளிதாக ஏறுக்கொள்ளும் மனநிலையையும் தருகிறது. ஆகவே அங்குள்ள மனிதர்கள் எளிதாக கொலைகளையும், திருட்டுகளை, வன்முறைகளையும் செய்யமுடிகிறது. அவர்களின் விளையாட்டுகள், கோயில் திருவிழாக்கள், எல்லாமே இதேபோன்றே வன்மதை வெளிபடுத்துபவனவாக இருக்கிறன. அடிப்படையில் மனிதன் குழுக்களாக வாழ்பவன்தான், ஆதிமனிதர்களைப் போல. நவநாகரீகங்கள் நுழையமுடியாத இடங்களில் மனிதர்களின் ஆதிசக்திகள் வெளிதோன்றுகின்றன போலும். சென்னைக்கு புதிதாக வருபவர்கள் சேரிமனிதர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதை எல்லா சமயங்களிலும் உணரலாம்.

சேரி விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை சமீபத்திய நாவல்களில் அதிகம் காணப்படுகிறது. லஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள், அரவிந்தனின் பொன்னகரம், தமிழ்பிரபாவின் பேட்டை போன்ற நாவல்கள் சென்னையை ஒட்டிய வெவ்வேறு சேரிகளின் வாழ்வை பேசுகின்றன.

இந்தியாவில் உள்ள எல்லா பெரிய நகரங்களிலும் பெரிய சேரிகள் உள்ளன. சென்னையில் உள்ள சேரிகள் முற்றிலும் வித்தியாசமானது என்றே நினைக்கிறேன். அவர்கள் பலகாலமாக வாழ்ந்துவரும் ஒரு பூர்வகுடியாகவே தெரிகிறார்கள்.

2
எழுத்தாளர் அரவிந்தன் எழுதியிருக்கும் பொன்னகரம் நாவல், சென்னை சேரிவாழ் மக்களின் வாழ்க்கையை பேசுகிறது. சேரிமனிதர்கள் அல்லது விளிம்புநிலை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் இருக்கும் எளிய தேவைகளைப் பற்றியும், அவர்களின் போட்டிகளைப் பற்றியும் பேசுகிறது. மிக நீண்ட காலங்களைக் கொண்ட அவர்களின் வாழ்வை ஒரு சிறு துண்டைப் பற்றி பேசுபோது அதில் எல்லா கால மனிதர்களும் வந்துவிடுகிறார்கள். ஒரேவகை மோதல்கள், போட்டிகள்தான். காலத்திற்கு தகுந்தாற்போல் வளரும் சமூக விரோத செயல்களை எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்ய போட்டி நடக்கிறது, அதை உருவாக்கிக்கொள்ள தங்களில் பலசாலி, எதற்கு பயப்படாதவன், யாரோ அவனே முன் நிற்கிறான். இந்த நவீன உலகத்தில்கூட அங்கிருந்து படித்து வெளியே செல்பவர்கள் மிகக்குறைவுதான். அவர்களிடமும் சாதியிருப்பது அனைத்திலும் ஆச்சரியம்.

அரசியல்வாதிகள் அவர்களை செலுத்துகிறார்கள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நாவலில் இப்படியான நிறைய மனிதர்கள் வருகிறார்கள். குரு, வரதன், பாபு, முத்து, இஸ்மாயில், காதர் போன்றவர்கள் பகவதிபுரம், பார்டர் தோட்டம் என்கிற இரு பகுதிகளில் இருப்பவர்கள். தங்களுக்குள் சாராயம் விற்று பிழைப்பவர்கள். யார் சாராயம் குறைந்தவிலைக்கு விற்பது, யார் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது, என்பது போட்டியாக மாற ஒருவரைஒருவர் வெட்டிக் கொல்கிறார்கள்.

முத்து சின்ன திருட்டுகளை செய்பவன், அவன் மனைவி பார்வதி வெளியூரிலிருந்து வருகிறாள். அவளால் இந்த சேரிவாழ்க்கையை புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் நினைத்ததைவிட நல்ல மனிதர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை ஆச்சரியமான உணர்க்கிறாள். முத்து திருடுபவன், என்பதை அறியும் போதும், அவன் கைதாகி செல்வதை பார்க்கும்போதும் பார்வதி மிகுந்த துக்கமாக பார்க்கிறாள்.

குரு கராத்தே செய்து பழகும் ஒரு ரவுடி. மஞ்சா போடுவது என்று சிறுவேலைகளை செய்துவருகிறார். ஜெகதாலன் எந்த வம்புகளுக்கும் செல்லாதவன், கபடியே தன் உயிராக நினைப்பவன். தொடர்ந்து அதில் வெற்றிகளைப் பெற்று வருபவன். படிப்பு வராத அவன் மற்றவர்களின் உதவியுடன் +2 எழுதுகிறான், முதலில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது முயற்சியில் பெற்றி பெற காத்திருப்பவன். ஆனால் கபடி போட்டியில் வேண்டுமென்றே பார்டர் தோட்ட ஆட்கள் அவன் காலில் விழுந்து முட்டியை உடைத்துவிடுகிறார்கள். கருவுற்று பிரசவத்திற்கு செல்லும் பார்வதி, மயக்கதினூடே இந்த சேரியை அதிலுள்ள மனிதர்களையும் நினைத்துக் கொள்கிறாள். அவள் குழந்தை இங்கே வளரப்போகிறது. திருடனாக, பாடிபில்டராக, கஞ்சா விற்பவனாக அல்லது ஏதோ ஒரு சமூக விரோத செயலை செய்யப்போகிறது என்கிற சூட்சுமத்துடன்.

3
ஆசிரியர் சிறந்த எடிட்டர் என்பதால், புனைவில் ஒரு நிதானமும், அதற்குரிய நேர்மையும் தெரிகிறது. எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும் என்கிற வேகம் இல்லாமல் எது தற்போது தேவை என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார். அடக்கி எழுதவேண்டும் என்கிற பாவனையோடு எழுதப்பட்டதாக தெரிகிறது. நேரடியாக வாசகருடன் பேசும் அவரது எழுத்துக்களில் ஒளிவுமறைவற்ற தன்மை தெரிகிறது. அது அவரது பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. நாவலுக்குரிய தர்க்கமும், வாசக இடைவெளியும் மிகக் குறைவு. காட்சி ஊடகமாக எடுக்க முதலில் எழுதப்பட்டது என்பதால் சற்று நடை அன்னியமாகப்படுகிறது என தோன்றுகிறது.

சேரியைப்பற்றி புதிய அவதானிப்புகள் எதுமில்லாமல் சாதாரண கதையாக அமைந்திருப்பது வாசகனுக்கு சற்று எரிச்சலாக இருக்கும் என நினைக்கிறேன். நாவலுக்குரிய தரிசனமும், அமைதியும் இல்லையென்றே சொல்லவேண்டும். ஆனால் நேர்மையான பதிவு என்கிற வகையில் வரவேற்க வேண்டியிருக்கிறது. ஜெகதாலனுக்காக சில ஆய்வுகளை செய்திருக்கிறார், இன்னும் நம்பகத்தன்மை வருவதற்கு தேவையான தகவல்களும், உள்மடிப்புகள் கொண்ட கதைபின்னல்களும் இல்லை.

நல்ல நாவலை படித்தோம் என்று நினைக்க வைக்கிறது ஆசிரியரின் நடை. ஜெகதாலனின் பார்வையும், பார்வதியின் பார்வையும் மட்டுமே (அழுத்தமாக) நாவலில் வருகிறது. இன்னும் சில கதாப்பாத்திரங்கள் வலுவாக இருந்திருந்தால் முக்கியநாவலாக மாறியிருக்கும்.

[பொன்னகரம் (நாவல்), அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம்]

[தஞ்சைக்கூடல் 27/10/18 அன்று பேசியதன் தொகுப்பு]

4 comments:

ஹ ர ணி said...

தேர்ந்த ஆய்வுரை.

கரந்தை ஜெயக்குமார் said...

நூலினைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தூண்டுகிறது தங்களின் அறிமுக உரை
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நூலினை வாசிக்கும் ஆவலைத் தூண்டிய பதிவு. வாழ்த்துகள்.

Devarajvittalan Studio said...

அருமையான ஆழமான விமர்சனம் சார்