Thursday, October 11, 2018

நூற்றாண்டுகளை கடக்கும் சிறுகதை


1
பெரிய விஷயங்களை பேசும் இலக்கியங்கள் இருந்த காலத்தில் சின்ன விஷயங்களின் கலையை சொல்ல வந்த வடிவம் சிறுகதை. முதலில் சிறுகதைகள் கேளிக்கைக்காகதான் உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் கேளிக்கைகள் மாறி தீவிரத்தன்மை கூடி இன்று நாம் படிக்கும் சிறுகதைகளாக வளர்ச்சியடைந்தன


ஏன் சிறுகதைகளை வாசிக்க பட்டன? 1700களின் கடைசியிலும் 1800களின் ஆரம்பத்திலும் சிறுகதைகள் எழுத தொடங்கினர். அனைவருக்குமான பொதுக் கல்வி வந்து உலகம் நவீனமயமானபோது புதிதாக வாசித்து பழகிய வாசகனுக்கு கேளிக்கை தேவையாக இருந்தது.

நவீனகாலம் உருவாகிவந்தபோது, நவீன இலக்கியமும் கூடவே உருவாகியது. நாவலும் சிறுகதையும் வளர்ச்சியடைந்தன. காவியங்கள், கவிதைகளை பின்னுக்கு தள்ளி நாவல், சிறுகதைகள் அதன் நெகிழ்வுதன்மையால் அதிகம் வாசிக்கப்பட்டன.

சிறுகதைகள் அரை மணியிலிருந்து ஒரு மணிக்குள் வாசிக்க தகுந்ததாக இருக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்டது. ஒரு பிரயாணத்தில் படிக்க முடிவதுபோல அல்லது மனிதர்களின் சந்திப்புகளில் படித்து காட்ட அரைமணி போதுமானதாக இருந்தது.

சிறுகதைகள் சிறிய கதைகள் என்கிற அர்த்ததில் சொல்லப்படவில்லை. இப்போது இருப்பதுபோல சிறிய கதைகள் வழக்கத்தில் அப்போதும் இருந்தன. நீதி, போதனைகள் வழியுறுத்த சிறிய கதைகளின் தேவையிருந்தது. அதற்கு முக்கிய மையம் இருக்கும். ஆனால் சிறுகதைகள் மையத்தை பேசாது, வாசகருக்கு எந்த அறிவுரையும் வழங்காது, வாழ்வின் ஒரு துணுக்கை சொல்லி அதில் ஒரு திருப்பத்தை மட்டுமே சொல்லும்.

பல தேக்கங்கள் சிறுகதையில் இருந்தாலும் இன்றும் சிறுகதைகள்தான் நவீன இலக்கியத்தின் நுழைவாயிலாக இருக்கின்றன. ஆரம்ப வாசகனுக்கு சிறுகதைகள் தான் சிறந்த இலக்கிய வடிவம். அவற்றில் அவன் தேர்ச்சி பெற்றுவிட்டால் மற்ற வகைமைகளை நோக்கி அவன் செல்லமுடியும்.

இன்று நாம் இன்னும் நவீனமாகிக் கொண்டிருக்கிறோம். கூடவே சிறுகதைகளும் அதிக நவீனத்துடன் அதிக சிக்கல்களுடன், புதிய கோட்பாடுகளுடன் வளர்ச்சியடைந்து வருகிறது.

சிறுகதைகள் வாசிப்பின் அவசியம்? வாசிப்பு இன்பத்தை தாண்டி அது ஒரு இனிய அனுபவத்தை தருகிறது. சிறுகதை வாசிப்பு வாழ்வின் முக்கிய கணங்களாக அத்தருணங்களை மாற்றி தருகிறது. நம் அடுக்கிவைக்கப்பட்ட சிந்தனையை கலைத்து மீண்டும் வேறுவகையில் அடுக்கி வைக்கிறது. வாசிப்பை நேசிக்கும் அனைவருமே கூடவே வாழ்வின் இனிய அல்லது அதிர்ச்சி தரும் தருணங்களை கவனத்தில் கொள்கின்ற, சிறுகதைகளை வாசிக்காமல் இருக்க முடியாது.

நாவல் தருகின்ற அமைதியை சிறுகதைகள் தரமுடியாது. ஆனால் நமக்கு மெல்லிய புன்னகையையோ, அதிர்ச்சியையோ சிறுகதைகள் தரமுடியும். அவற்றின் குறியீட்டுதன்மை, சிக்கல்கள் வாசகனை ஒரு படி முன்னோக்கி அழைத்து செல்கிறது. இந்த புதிய அனுபவங்கள் அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறது, ஆகவேதான் வாசகன் மீண்டும் மீண்டும் சளைக்காமல் சிறுகதைகளை வாசித்தபடி இருக்கிறான்.

வாசகன் தன்னை சிறுகதையோடு இணைத்துக் கொள்கிறான். கதைகளை கேட்கும் ஒருவர் அப்படி செய்வதில்லை. சிறுகதைகளை வாசிக்கும்போதே வாசகன் முன்பே கதைகளின் போக்கை அறிந்து கொண்டபடி செல்கிறான். முடிவுகள் அவனுக்கு தெரிந்தபடிதான் இருக்கும்.
ஆனால் சிறுகதை ஆசிரியர் வேண்டுமென்றே ஒரு திருப்பத்தை உண்டாக்கி வேறு திசையில் கதையை முடிக்கிறார். வாசகர் அதிர்ச்சியடையவும், மேலும் கதை குறித்த தன் சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும் அது உதவுகிறது.

பல நேரங்களில் ஆசிரியர் கதையை பாதியிலேயே முடிவை சொல்லாமல் சின்ன குறிப்புகளால் உணர்த்தி வாசகனை சிந்திக்கவைக்கும் உத்தி வெளியானது.

சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும்? சிறுகதைகள் பொதுவாக மூன்று பகுதிகளை கொண்டிருக்கிறது. ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள். எப்படி மனிதனுக்கு தலை, உடல், கால்கள் என்று பிரிக்க முடியுமோ அப்படி சிறுகதைகளுக்கும் இந்த மூன்று பகுதிகள்.
சிறுகதைக்கு ஒரு சிறப்பான ஆரம்பம் இருக்க வேண்டும். வாசகனை கீழே வைத்துவிடாமல் அது அவனை வாசிக்க செய்யவேண்டும். நடுப்பகுதியில் அந்த சிறுகதைக்கு தேவையான தகவல்களை கொண்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையான களத்தை உருவாக்குவதும் கதைமாந்தர்களும், காட்சிகளும், உணர்ச்சிகளும் விவரிக்கும் இடமாகவும் அது இருக்கவேண்டும். கடைசிப்பகுதி, வாசகனை சிந்திக்க வைக்கவும், இது வரை படித்ததை மறுவரையரை செய்ய தூண்டும் விதமாக ஒரு இறுதி முடிச்சு இருக்கவேண்டும்.

ஏதோஒருவகையில் உங்கள் சிந்தனைமுறைகளை, உங்கள் புரிதல்களை மாறியமைத்தால் அது சிறந்த சிறுகதைதான்.

சில உதாரணங்களை பார்ப்போம்:

சுஜாதா ஒரு கதையில் இப்படி ஆரம்பிக்கிறார்:

அவன் பெயர் கிருஷ்ணமூர்த்தி, ஆனால் அது நிஜப்பெயர் அல்ல. அதைப் பற்றி பிறகு கூறுகிறேன்.

இந்த வாக்கியங்களைப் படித்ததுமே வாசகன் தன்னை அந்த கதையோடு இணைத்துக் கொண்டுவிடுகிறான். அவன் யார்? அவனது நிஜப்பெயர் என்ன என்கிற கேள்விகளை சுமந்து அந்த மர்ம மனிதனை பின்தொடர்ந்தபடி,தொடர்ந்து வாசித்து அதை கண்டடைய விழைகிறான்.

முன்பே சொன்னதுபோல் சிறுகதையை அடுத்து விவாத தன்மையுடன் எடுத்து செல்வது நடுப்பகுதி. அப்போதுதான் வாசகனால் தொடர்ந்து தன்னை அக்கதையும் இணைத்துக் கொள்ள முடியும். அவற்றிற்காக ஆசிரியன் பல்வேறு வகையில் வாழ்க்கையின், அந்த கதையின் கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல், பகுதிகளை சலிப்பேற்படுத்தாதவகையில் எழுதிச்செல்லவேண்டும்.

கதையின் இறுதி முடிச்சு எப்போதும் வாசகனை வேறு கோணத்தில், திசையில் பயணிக்க வைப்பதாக இருக்கவேண்டும்.

உலகின் மிகச் சிறிய சிறுகதைகள் கூட உண்டு.

'கரடிவேஷம் போட்டவன் வாழ்வில் ஒரு நாள்'

என்னை சுடாதே

ஆங்கிலத்தில் ஸ்டென்லி பபின் எழுதிய கதை இது. இதில் சிறுகதைக்கு தேவையான அத்தனை விஷயங்களும் இதில் இருக்கின்றன. என்னை சுடாதே என்பது ஆரம்பம், நடு, இறுதிப் பகுதியாக இருகிறது. இந்த கதையை நாம் பலவகையில் பொருள் கொள்ள முடியும். கரடிவேஷம் போட்டவனை காத்திருந்து பழிதீர்க்க போலீஸ் வேஷம் போட்டவன் சுடுகிறான் என்று கொள்ளலாம். அல்லது கரடி வேஷம் போட்டவனை நிஜ கரடி என நினைத்து போலீஸ் அவனை சுடவருகிறது எனவும் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்ப்பட்ட சாத்தியங்கள் வரும்போதுதான் சிறுகதையும் பிறக்கிறது.

சிறுகதையின் வடிவத்தை புரிந்துக் கொள்வதற்கு இந்த மற்றொரு புகழ்பெற்ற கதையை எப்போதும் சொல்வதுண்டு.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு அழகிய மகள். அவளுக்கு ஒரு அடிமையிடம் காதல். ஒரு நாள் இதை அறிந்த ராஜா, அவனுக்கு தண்டனை அளிக்க நினைத்தார். மகள் அவனை விட்டுவிட கெஞ்சியதால், ஒரு வழியை கூறினார். அதாவது, பொது இடத்தில் தண்டனை அளிக்கப்படும் இரண்டு கதவுகள் இருக்கும். ஒன்றில் ஒரு அழகியப் பெண் இருப்பாள், மற்றொன்றில் பசித்த புலி அடைக்கப்பட்டிருக்கும். அடிமையின் வாய்ப்பு இரண்டில் ஒன்றை திறந்து அவன் வாழ்க்கையை அடையலாம். இளவரசிக்கு எந்த கதவில் யார் இருக்கிறார்கள் என்று தெரியும். அன்றிரவே சிலருக்கு லஞ்சம் கொடுத்து அறிந்து கொண்டுவிடுகிறாள். மறுநாள் தண்டனை சமயத்தில் மேடையில் இருந்த இளவரசி ஒரு கதவை கண்ணைக் காட்ட காதலன் வேகமாக சென்று கதவை திறந்தான். இவ்வளவுதான் கதை. அவன் வேறுஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை ஏற்பாளா அல்லது தன் கண்முன் பசித்த புலியிடம் கடிபட்டு சாவதை விரும்புவாளா என்பது வாசகரின் கற்பனை.

வாசக குறுக்கீடு இல்லாத சிறுகதைகள் வெறும் நீதி போதனைகள் தான். மேலே சொன்ன கதைபோல இறுதி முடிவை சொல்லாமல் வாசகனுக்கு சிந்தனையை தூண்டும் ஒரு திருப்பத்தை சொல்லவேண்டும் எனபதுதான் சிறுகதையின் முதன்மையான விதி. பல நேரங்களில் அந்த திருப்பமேகூட ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்.

முக்கியமான சில சிறுகதைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், தி.ஜாவின் பாயாசம், கி.ராவின் கன்னிமை, சுந்தர ராமசாமியின் பிரசாதம், அசோகமித்திரனின் புலிக்கலைஞன், சா.கந்தசாமியின் தக்கையின்மீது நான்கு கண்கள், கிருஷ்ணன்நம்பியின் மருமகள் வாக்கு, .மாதவனின் நாயனம், சுஜாதாவின் நகரம், ஜெயகாந்தனின் குருபீடம், வண்ணதாசனின் தனுமை, நாஞ்சில் நாடனின் பாம்பு, பாவண்ணனின் முள், ஜெயமோகனின் படுகை, எஸ்ராவின் தாவரங்களின் உரையாடல் போன்ற கதைகளை சொல்லலாம்.

2
நாம் இங்கு பேசும் இந்த மூன்று சிறுகதைகளுமே மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளை சேர்ந்ததாக இருக்கிறது. ஆண்டன் செகாவ் எழுதிய பந்தயம் 1889ல் வெளிவந்தது.

செகாவ் சிறுகதைகளை எழுதுவதில் திறமையானவர். அவர் எழுதி தமிழில் வந்திருக்கும் கிட்டதட்ட 50 கதைகளில் எல்லாமே முக்கியமானவைகள்தான். ஆயுள்தண்டனை, மரணதண்டனை இரண்ட்டில் எது கொடியது என விவாதித்துக் கொள்ளும் இரு நபர்களிடையே நடக்கும் பந்தயம்தான் கதை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுள் தண்டனை மரணதண்டனையைவிட சிறந்தது என்று கூறி பந்தயம் கட்டி 15 ஆண்டுகள் தன்னை சிறைப்படுத்திக் கொள்கிறார் ஒரு இளைஞர். வென்றால் 20 மில்லியன் தர ஒத்துக்கொள்ளும் வங்கியாளர் ஒருவர் 15 ஆண்டுகளால் தனிமையில் இருக்கும் அவருக்கு ஒயினும், கேட்கும் புத்தகங்களும் கொடுத்து வருகிறார். ஆனால் நிலைமை தற்போது சரியில்லை அவருக்கு. சேமிப்பைவிட கடன் அதிகமாக இருக்கிறது. இன்னும் ஆறு மணிநேரத்தில் வெளியேவந்தால் அவருக்கு கொடுத்தே ஆகவேண்டும். அதற்குள் அவரை கொலை செய்துவிடவேண்டும் என நினைக்கிறார். காவலாளிக்கு தெரியாமல் பூட்டை திறந்து உள்ளே செல்கிறார். தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞர் தற்போது முதியவராக தெரிகிறார்.

அங்கிருக்கும் அவர் எழுதியிருக்கும் கடிதத்தை பார்க்கிறார். அதில் புத்தகங்கள் வழியாக அனைத்தையும் பெற்றேன். ஆனால் ஞானத்தையும் சிறந்த உணவுகளையும் வெறுக்கிறேன். ஆகவே 5 மணிநேரத்திற்கு முன்பாக வெளியேறுகிறேன் என்று எழுதியிருக்கிறார். வங்கியாளர் சத்தமில்லாமல் வெளியேறுகிறார். பின் காவலாளி வந்து இளைஞர் தப்பிவிட்டதை கூறுகிறார். அமைதியாக மேஜையில் இருந்த கடிதத்தை குற்றஉணர்ச்சியோடு பெட்டியில் வைத்து பூட்டுகிறார்.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆறு மொழியில் எழுதிய கடிதத்தை அவருக்கு கொடுத்து அதில் தவறு இல்லாதிருந்தால் வானை நோக்கி துப்பாக்கியால் சுடவேண்டுகிறார். மற்ற எங்கும் அவர் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளவில்லை.

மனிதர்களுக்கு சிறந்த உணவு, இருப்பிடம், சிறந்த புத்தகங்கள், வாழ்க்கைப் பற்றிய  
தரிசனங்கள் எதுவும் தேவையில்லை என்பதை அதையெல்லாம் அனுபவித்தபின் முடிவுக்கு வருகிறார். எதுவுமே அவர் மனதை திருப்தியளிக்க வில்லை என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துக் கொள்கிறார்.

எதற்காக வெளியேறுகிறார் என்பதை அவர் அந்த கடிதத்தில் தெரிவிக்க வில்லை என்றாலும் அவர் விருப்புவது சக மனிதர்களின் அங்கிகாரத்தைதான். தான் செய்யும் ஒவ்வொன்று மற்ற மனிதர்களிடம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை மனிதன் அறியவிரும்புகிறான். குதிரையை பழக்கிய ஒரு குழுவினர்களிடம் ஒரு குதிரை எப்போது ஒரே ஒரு மனிதரின் பேச்சுக்களை கேட்டுவந்தது. அது ஏன் என்று புரிந்துக் கொள்ள முடியாமல் திணறியபோது, அந்த ஒரு மனிதர் கட்டளைகளை சரியாக செய்தவுடன் அவரையறியாமல் தலையை அசைத்து பாராட்டுவது தான் என்பதை கண்டறிந்தார்கள்.

உளவியல்ரீதியாக இந்த கதையை அணுகவேண்டும். போட்டியில்லாத உலகில் மனிதர்களால் வாழமுடியாது போலும். சின்ன உரசல்கள், மீறல்கள் அவனுக்கு தேவையாக இருக்கின்றன. தன்னை மற்ற மனிதர்களிடமிருந்து சற்று மேம்பட்டவன் என்பதை உணர மனிதர்கள் தேவையாக இருக்கிறார்கள். சிறந்த உணவு, புத்தகங்களைவிட அதுதான் தேவையாக இருக்கிறது.

கன்னிமை: கி.ராஜநாராயணன் எழுதிய கன்னிமை 1969ல் வெளிவந்தது. கன்னிமை கதை இரண்டு பகுதிகளாக இருக்கிறது. முதல் பகுதி அண்ணன் தன் தங்கையைப் பற்றி சொல்லும் கதை. இரண்டாம் பகுதி அவன் மனையாகிவிட்ட நாசியாரம்மாவைப் பற்றி அவள் கணவன் சொல்லு கதை.

நிலபிரபுத்துவ வாழ்க்கையின் நீட்சிதான் இந்த கன்னிமை. கன்னிமை என்பது இங்கு கபடமில்லாமை. வெளியுலகின் போராட்டங்கள் இல்லாமல் கள்ளங்கபடம் இல்லாமல் வேலையாட்களிலிருந்து வீட்டிலிருப்பவர்கள் வரை எல்லோருக்கும் உபசரிக்க அவளால் முடிகிறது. எதையும் எதன்பொருட்டும் விலக்காமல் அனைவரிடமும் அன்பு செய்ய அவளால் முடிகிறது. எல்லோருக்குமவள் தேவையாக இருக்கிறாள். கன்னியாக இருந்தாலும் பேரன்னையாக இருக்கிறாள். தெய்வத்தை கண்டதுபோல அறுவாளை எடுத்து வெட்ட வந்தவன் கூட குழுறி அழுகிறான்.

ஆனால் திருமணத்திற்குபின் அவளுக்கு கணவனும் குழந்தைகளும் என்றாகிவிட்டாள். மனிதர்களை அவளுக்கு பிடிக்கவில்லை. எல்லாவற்றிலும் கணக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டாள். இப்போது அன்னையாக இருந்தாலும் சாதாரணப் பெண்ணாகத்தான் தெரிகிறாள்.

“கி.ராஜராஜநாராயணனின் புனைவுலகத்தின் சிறப்பு அம்சம் என்று நான் எண்ணுவது மேலே குறிப்பிட்ட இரு கூறுகளும்தான். ஒன்று ஆசிரியனின் வாழ்க்கைத் தரிசனமும் வரலாற்றுத்தரிசனமும் கனிந்த உலகியல்நோக்கும் வெளிப்படுவது. இரண்டு அவை இப்புனைவில் வெளிப்படும்போது உருவாகும் கவித்துவமும் குறியீட்டுத்தன்மையும்” என்கிறார் ஜெயமோகன். 

அவற்றின் கண்கள் 2018 வெளியான பா.திருத்செந்தாழை எழுதிய அவற்றின் கண்கள். படிம மொழியில் எழுத்தப்பட்ட மிகச்சிறிய சிறுகதை இது. ஹவுசிங் போர்ட் முட்டுசந்தில் வாழும் தம்பதிகளின் கதை. குழந்தைகள் இல்லாத வில்சன் மேரி தம்பதிகள் மற்ற மனிதர்களிடமிருந்து விலகியே இருக்கிறார்கள். வீட்டில் குழந்தைகள் இல்லாததால் பொருட்கள் வயதேறி உருகுகின்றன. பிறகு கண்கள் திறக்கின்றன. திறந்தபின் அசுவாரஸ்யமாக இரு மனிதர்களையும் பார்க்கின்றன.

உண்மையில் இவற்றின் பொருள் என்று எதுமில்லை. ஆனால் இருவருக்கும் இடையே இருக்கும் அன்னியத்தன்மை அவர்களிடம் மட்டுமல்ல, மற்ற மனிதர்களிடமும் பரவுகிறது, ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டு பொருட்களிடமும் பரவுகிறது.

புதியவகை மனிதர்களிடம் இருக்கும் அன்னியத்தன்மை, அவர்களின் கண்களின் வழியே வெளிப்படும் அசெளகரியம். காவென கரைந்துவிட மினுக்கதில் இருக்கும் பைபிள். அந்த தம்பதிகளின் மொத்த வாழ்க்கையும் இவ்வளவுதான். அவர்கள் அறிந்தது மிக சொற்பம். பைபிளைத் தவிர வாழ்வில் வேறு எந்த அக்கறையுமற்ற வாழ்வில் வேறு என்ன இருக்கப்போகிறது என்பதை தான் கதை நமக்கு சுட்டுகிறது.

எந்த இலக்கியப் படைப்பும் நுண்மையில்தான் இருக்கிறது. அந்த நுண்மைதன்மை இருக்கும் சித்தரிப்பு, காட்சிகள், பாத்திரங்கள் எல்லாம் வாசகனின் வாழ்க்கை சித்திரங்கள்தான். அதுதான் எழுத்தை இலக்கியமாக்குகிறது.  சிறுகதைகளின் மீதான விவாதம் என்பது சிறுகதைகளை புரிந்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல, வாழ்க்கையை அதன் சகல சிடுக்குகளையும் புரிந்துக் கொள்வதற்கானது. இறைவனிடம் வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்வியில் அந்த அனுபவமே நான் என்பார். இலக்கியத்திற்கும் அது தான். நன்றி.


[தஞ்சை பாரத் கல்லூரியில் 11/10/18 அன்று வாசகசாலை மாதாந்திர சிறுகதை கூட்டத்தில் பேசியதன் கட்டுரை வடிவம்]

No comments: