Friday, October 5, 2018

எட்டாவது அதிசயம் - கனவுப்பிரியன் (சிறுகதை)


கனவுப்பிரியனின் 'சுமையா' சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள எட்டாவது அதிசயம் கதை. அந்த தொகுப்பின் சிறந்த சிறுகதையாக தோன்றுகிறது. அதை இங்கே வெளியிடுகிறேன். நண்பர்கள் படித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.

-கே.ஜே.


எட்டாவது அதிசயம்

21 வருடம் ஊரை விட்டு வெளியே தங்கி விட்டவனுக்கு ஊருக்குள் என்ன நட்பு மிச்சம் இருக்கப் போகிறது. அதனால் நேரம் போக வேண்டி தனியாய் நடந்தே, மாலை வேளைகளில் கொஞ்சம் தொலைவில் உள்ள அந்த பூங்காவுக்கு நான் செல்வது வழக்கம். 


அமைதியாய் ஒரு சிமென்ட் தரையில் ஓரமாய் தனிமையில் அமர்ந்து கொள்வேன்.
எதற்காக வாழ்கிறோம் என்ற நிந்தனை கலந்த சிந்தனை நிரந்தரமாய் தொற்றிக் கொண்டது போன்ற நிறைய கவலை ரேகை ஓடும் முகம், துளியும் உண்மையில்லாத சூன்யமான சிரிப்பு,சுருங்கி விட்ட தோல்கள், என்னிடம் சொல்ல ஒன்றுமில்லை என்பது போல ஒரு இறுக்கம் கொண்ட மனம் உள்ள வயதானவன் என்னிடம் யார் நெருங்கி வருவார்கள்.

முதுமையே இவ்வுலகுக்கு தேவையில்லை என்பது இங்கு எழுதப்படாத ஒன்று. நல்லவேளை சீனக் கதையில் வருவது போல முதியவர்களை எல்லாம் வெட்டிக் கொல்லுங்கள் என யாரும் சட்டம் இயற்றவில்லை.    

குழந்தைகளின் பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் பூங்கா நிரம்பி வழிந்தது. குழந்தைகள் விளையாடுவதை வழக்கம் போல வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான், கையில் இருக்கும் மொபைலை கிண்டிய வண்ணம் என்னை ஒருக்களித்துப் பார்த்து செல்லும் அந்த இளைஞனை பார்த்ததும் எனக்கு எங்களுடைய பழைய கர்னல் பரன் நாத் தாப்பர் | நினைவில் வந்து போனார். அவரும் இப்படித்தான் துருதுருவென கண்களுடன் ஒரு அழகான சினிமா நாயகனின் சாயலில் பஞ்சாபிகளுக்கே உரித்தான நிறத்துடன் இருப்பார். இந்தியா-சைனா போரை தலைமை தாங்கியவர் என யாராவது அறிமுகம் செய்தால் தான் உண்டு.

மீண்டும் அந்த இளைஞனைப் பார்த்தேன். புதிதாக இந்த பூங்காவிற்கு வருகிறான் என நினைக்கிறேன். இதற்கு முன் பார்த்ததில்லை. வேர்க்க விறுவிறுக்க கணக்கு வைத்து கிரவுண்டை எட்டு ரவுண்டு சுற்றினான். ஒவ்வொரு முறை கடந்து செல்லும் போதும் என்னை ஓரக்கண்ணால் பார்ப்பான். ஒரு வாரம் கழித்து அதே ஓரக்கண்ணுடன் ஒரு பரிட்சய புன்னகையையும் என்னை நோக்கி சிந்தத் துவங்கினான்.

அவன் ஓடுவதை பார்த்து எனக்கும் ஓட வேண்டும் எனத் தோன்றினாலும் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் மனதில் நானும் வேகமாக வேர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டேன்.

உடலைப் பேணுவது ஒரு கலை. இந்த வயதில் அதை பிரியமுடன் செய்யும் அவன் மேல் ஒரு வித அன்பு என்னுள் ஊற்றெடுத்தது. இடது முழங்காலுக்கு கீழே தடவிப் பார்த்தேன். எலும்பு முறிந்து நான்கு வருடம் இருக்குமா...? இல்லை மூன்று வருடம் 9 மாதம் ஆகிறது. முறிந்ததை இரும்பு ராடு வைத்து சரியாக்கிய கையோடு ராணுவ வேலைக்கு விடை கொடுத்து விட்டு, யாருமே இல்லாத சொந்த வீட்டிற்கு வந்தாகி விட்டது.

என்பது கிலோ எடையுடன் ராணுவத்தில் சேர்ந்தேன் ஒரே வருடத்தில் 6௦ கிலோ என இருபது கிலோ கொழுப்பை ஓடவிட்டே கரைத்த பழைய நாட்கள் நினைத்து பெருமூச்சு வந்தது.

நடப்பதோ, ஓடுவதோ ஏதோ ஒன்று உங்களுக்கு பிடித்துப் போனால் வாழ்வின் கடைசி நாள் வரை அதை செய்ய மனம் சம்மதிக்கும் உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் விரும்பி செய்வீர்கள். அப்படி ஒரு எண்ணத்தால் தானே காலை கெந்திக் கொண்டு தினமும் மாலை வேளையில் நடந்தே இந்த பூங்காவிற்கு வருகிறேன்.

அவனை முதன் முதலாய் பார்த்த நாளில் இருந்து சரியாய் 27 நாட்கள் கழித்து, எட்டு ரவுண்டு அடித்து முடித்த கையோடு வியர்வை வழிய என் அருகில் வந்தான் அவன்.
“ ஹாய் அங்கிள் “

இந்த பூங்காவிற்கு பலகாலமாக வந்துக் கொண்டிருக்கும் எனக்கு முதன் முதலாய் கிடைத்த“ ஹாய்“ யை சந்தோஷமாக ஏற்று, லேசான புன்முறுவலுடன் பதிலுக்கு நானும்“ ஹாய்“ என்றேன்.  

“ தினமும் இப்படி கிராஸ் ஆகும் போது உங்களை பார்ப்பேன், என்னையே பார்க்கிற மாதிரி தோணும். என்னை தெரியுமா உங்களுக்கு“

“ இல்ல, சும்மாதான். கிராஸ் பண்ணுற எல்லாத்தையும் பார்ப்பேன் “

“ ஒ அப்படியா, இப்படி ஓரமா உக்கார போர் அடிக்காதா, நீங்களும்நடக்கலாமே “

“ இல்ல கொஞ்சம் கஷ்டம் “

“ ஏன்“

“ கால்ல ராடு இருக்கு “

“ ஆக்சிடென்ட் ஆயிருச்சா “ என்றான் சற்று ஆச்சர்யம் கலந்து

“ இல்ல, “ வார்” ல கால் உடைஞ்சிருச்சு “

“ அச்சச்சோ, சாரி தெரியாம சொல்லிட்டேன் “ நெருப்பை தொட்டவன் போல சட்டென வார்த்தைகளால் பின்வாங்கி திடிரென மரியாதையான அன்புடன்“ சாரி அங்கிள் “ என்று கூறியது நாட்டிற்கு உழைப்பவர்கள் மீதான அவனின் அன்பின் அடையாளம்.

“ என் பேர் பிரவின், உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா அங்கிள்“

“ தேவ சகாயம் “

“ வீடு“

“ இங்கிருந்து பத்தாவது தெரு “

“ வாங்க நான் வேணா வண்டியில கொண்டு போய் விட்டுறேன்“

“ பரவாயில்ல, இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு தான் போவேன். நான் போய்க்கிறேன்“

“ ஓகே அங்கிள், நாளைக்கு பாப்போம் “ சென்று விட்டான் அவன்.

மறுநாள் முதல் அவன் கொண்டு வரும் வாட்டர் பாட்டில்,மொபைல், பதினைந்து தோல்உரித்த பாதாம்பருப்பு, வண்டிச் சாவி, சிறிய முகம் துடைக்கும் டவல் எல்லாம் என்னிடம் அடைக்கலம் ஆகத் துவங்கின.

“ ஹாய் “ மற்றும் பொதுவான பேச்சுடன் தினமும் நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் உடல் ஒத்துழைக்கவே மறுக்க அடம்பிடித்து “ வீட்டில் இருந்தால் சீக்காளி ஆகி விடுவோம் ” என்று வேண்டுமென்றே மனதுடன் சேர்த்து உடலை இழுத்துக் கொண்டு தாமதமாக பூங்கா வந்தேன்.

தூரத்தில் இருந்து ஓடிக் கொண்டே ஒரு ஹாய் யை என்னை நோக்கி பறக்க விட்டான்.
சிமென்ட் பெஞ்சில் சாய்ந்து அமர்ந்தேன் மூச்சிரைத்தது. நடந்து வந்த களைப்பு. கண் இருட்டுவது போல இருந்தது. தலை சுற்றியது. கண்களை மூடி குனிந்து அமர முயற்சித்தது மட்டும் நினைவில் உள்ளது மற்றபடி தள்ளாடி கீழே விழுந்தது எல்லாம் அவன் சொல்லித்தான் தெரியும்.

கண் விழித்த போது சுற்றிலும் ஆட்கள் நின்றிருந்தார்கள்.

“ முழிச்சிட்டார், என்ன சார் செய்யுது, சார் ஆஸ்பத்திரிக்கு போலாமா, தண்ணி வேணுமா, பிரெஷர் இருக்கும்ன்னு நினைக்கிறேன், இவரு வீடு எங்க இருக்கு “ என சுற்றிலும் அவரவர் விருப்பம் போல சம்பாசனைகள்.

தண்ணி என்று சைகை காட்டினேன். தந்தார்கள். மீண்டும் சிமென்ட் பெஞ்சில் சாய்ந்து அமர வைக்கச் சொல்லி சைகைக் காட்டினேன். அமர வைத்தார்கள். எனக்கு ஒண்ணுமில்லை நீங்க போங்க என்று சைகைக் காட்ட “ எனக்கு தெரிஞ்சவரு தான். நான் பாத்துக்கிறேன் “ என்று அந்த இளைஞன் கூறுவதும் மற்ற ஆட்கள் “ பாத்துக்கோப்பா“ என்ற வண்ணம் நகரத் துவங்கினார்கள்.

சற்று நேரம் என் முழங்காலில் கை வைத்து என்னையே பார்த்த வண்ணம் அமைதியாக இருந்தான். புத்திசாலி, பலஹீனமானவனை கேள்விக்கணைகளால் துளைக்கும் நேரம் இதுவல்ல என புரிந்திருக்கிறானே சந்தோசம், என நீண்ட மூச்சு வாங்கினேன்.

அரை மணி நேரம் கழித்து நான் தெளிவாக நிமிர்ந்து அமர்வதைக் கண்டு “ சரி இப்போ போவோமா. எங்க இருக்கு உங்க வீடு காட்டுங்க நான் கூட்டிட்டு போறேன் “

என் உடல் இயலாமை அதற்கு சம்மதிக்க அவன் தோளில் கைபோட்டு சாய்ந்து அவனுடன் மெதுவாக நடக்கத் துவங்கினேன்.

வீடு வந்ததும் “ இந்த சாவி “ என நான் நீட்ட,ஆச்சர்யத்துடன் “ வீட்டுல யாரும் இல்லையா. எங்க போயிருக்காங்க  “ என்றான்

லேசாக சிரித்து அமைதியாக சுவர் பிடித்து வீட்டின் உள்ளே நுழைந்து லைட்டை போட அறையின் இருட்டு மிரண்டு வெளியே ஓடியது.

அறையை சுற்றி நோட்டமிட்டான் “ புல்லா மிலிட்டரி போட்டோவா இருக்கே, நல்ல ரேங்ல இருந்தீங்களோ சார், ஆமா வீட்டுல எங்கேயாவது போயிருக்காங்களா “

“ இல்ல“

“ அப்படின்னா“

“ பொண்டாட்டி மேல போயிட்டா, மகா விட்டுட்டு போயிட்டா, தனி ஆளாயிட்டேன்“

கேட்டிருக்கக் கூடாது என தோன்றியது போல அவனுக்கு “ ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரணுமா, டாக்டர்கிட்ட போணுமா“

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல, எனக்குஹீமோகுளோபின் குறைஞ்சா தலை சுத்து வரும். அங்க ஒரு கோப்பையில மாதுளம்பழம் இருக்கு. எடுத்துத் தாங்க சாப்பிட்டா சரியாயிரும்“

“ ஒ.... வேற ஏதாவது செய்யணும்ன்னா சொல்லுங்க “

“ ஒன்னும் வேணாம், இங்க வரை கொண்டுவந்து விட்டதே பெரிய காரியம் தம்பி “

“ இங்க சுத்தி இருக்கிற போட்டோவை எல்லாம் பார்த்தா உங்ககிட்ட நிறைய பேசலாம் போல தோணுது. நாளைக்கு வரலாமா“

“ தாராளமா“

“ சரி,கதவை பூட்டிக் கோங்க, பை“

மறுநாள்காலையில் கையில் பார்சலுடன் வந்தான்.

“ இதெல்லாம் எதுக்கு “ என்றேன் என் மீதான வருத்தம் கலந்த கோபத்துடன்.

“ டென்ஷன் ஆகாதீங்க,எனக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்திருக்கேன். சேர்ந்து சாப்பிடுவோம் “ என்று பார்சலை டேபிளில் வைத்தான்.

என்னைப் போன்ற அனாதைத்தனம் உள்ளவன் அவனிடம் கோபமாக பேசியிருக்கக் கூடாதோ என்ற எண்ணம் தோன்ற எதிர்வாதம் இன்றி இருவரும் அமைதியாக சாப்பிட்டோம்.

எதிராளியின் மனநிலையை விருட்டென புரிந்து கொள்ளும் அவன் புத்திசாலித்தனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அமைதியாக சாப்பிட்டான்.
சற்று நேரம் கழித்து “ வீடு தேடி வந்த ஆளுக்கு நாங்கள் எல்லாம் டீ தர்றது பழக்கம் “ என்றான் சாப்பிட்ட பார்சலை வெளியே வீசும் போது

அடிக்கடி குடிக்க என செய்து பிளாஸ்கில் வைத்திருக்கும் டீ இருவருக்கும் சேர்த்து எடுத்து வந்தேன்

அவன் ஹாலில் இருந்த ஒரு புகைப்படத்தின் முன் நின்றிருந்தான்.

“ இது என்ன இடம் “ கையில் டீ வாங்கிக் கொண்டு கேள்வி எழுப்பினான்.

“ அதுவா, காரகோரம்“

“ சாதாரண ஒரு பிரிட்ஜ் படம் தானே, இதுல என்ன ஸ்பெஷல்ன்னு பெருசா பிரேம் செஞ்சு போட்டிருக்கீங்க “

சிரித்தவண்ணம்“ எட்டாவது அதிசயம் ஆகவேண்டியது, ஊரான் வீட்டு சொத்துங்கிறதால உலகம் ஏத்துக்கலை“

“ இதுல என்ன அதிசயம் இருக்கு “

நானாக அவனுக்கு ஒப்புகொடுத்தது போல பேசத்துவங்கினேன், பேச ஆள் இல்லாத ஒருவனின் பேச்சை கேட்க விரும்பும் அவன் முன்பு.

“ இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர்ல ஒரு பெரிய இடத்தை சைனா புடிச்சி வச்சிருக்குன்னு தெரியுமா “

“ பாகிஸ்தான் தானே புடிச்சி வச்சிருக்கு, சைனா எங்க இருந்து காஷ்மீர்ல வந்துச்சு “

“ கரகோரம் ஊரோட ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு நாட்டுப்பக்கம் இருக்கு, ஒரு பக்கம் லடாக் இந்தியாவோட இருக்கு, இன்னொரு பக்கம் இருக்கிற கில்ஜீத் பல்திஸ்தான் பாகிஸ்தானோட இருக்கு, இன்னொரு பக்கம் இருக்கிற சிங்சியான்ங் ஊரு சைனாவோட இருக்கு, இன்னொரு பக்கம் இருக்கிற வகான் கொர்ரிடோர் ஊரு ஆப்கானோட இருக்கு. இந்தியாவுக்கு சொந்தமான நிலம் ஆனாலும் சைனாவோட கட்டுப்பாட்டுல இருக்கு “

“ அங்க எதுக்கு போனீங்க “

அமைதியானேன்

“ சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க “ என்றான்.

“ அங்க எங்க போனேன். ஜம்முல இருந்தேன். திடிர்ன்னு பொண்டாட்டி செத்துப் போயிட்டா வான்னு தந்தி வந்துச்சு. ஒரு குழந்தை போதும் ஒரு குழந்தை போதும்ன்னு அடிக்கடி அபார்ஷன் செய்வா, சொன்னா கேக்குறதில்ல. தொடர்ச்சியாக “ D&C “ செஞ்சு உதிரப்போக்கு அதிகமாகி யூட்ரெஸ் நீக்கி சரியா சர்ஜெரி செய்யாம ஒரு நாள் செத்தே போயிட்டா. அம்மா இறந்த பயத்துல மகா பெரிய மனுசி ஆயிட்டா. ஊருக்கு வரும் போது எல்லாம் கர்ப்பம் ஆக்கி நீ தான் பொண்டாட்டிய கொன்னுட்டன்னு மாமனார் வீட்டுல ஒரே சண்டை. பொண்ணு பெரிய மனுசி ஆயிட்டா உன்கிட்ட விட முடியாது பெண்கள் துணை வேணும்ன்னு சொல்லி மகளையும் கூட்டிட்டு போய்ட்டாங்க. கொஞ்ச நாள் போலிஸ் கேஸ் அது இதுன்னு ஓடிச்சு. அதனால மிலிட்டரியில கொடுத்த லீவு முடிஞ்சு உடனே அங்க போக முடியல. அதிகமா லீவு எடுத்தேன்னு பனிஸ்மென்ட்டா லடாக்ல போஸ்டிங் போட்டாங்க. 13௦௦ கிலோ மீட்டர் நீளமான பாதை அது. உண்மையிலே எட்டாவது அதிசயம் தான் அது. 2௦ வருஷம் ஆச்சு அந்த பாதை செஞ்சு முடிக்க பாகிஸ்தான்காரங்களும் சைனாகாரங்களும் ஆயிரத்துக்கு மேல வேலை பார்த்தாங்க. நிறைய பேரு செத்துப் போனாங்க. 1986 அதை திறக்கும் போது லடாக்ல சண்டை வராம இருக்க அங்க போயிருந்தோம். அதுக்கு “ சைனா –பாகிஸ்தான் பிரண்ட்ஷிப் ஹைவே “ன்னு பேரு. 275 மில்லியன் ஆச்சாம் அதை கட்டி முடிக்க. சில இடம் பார்க்கவே பயமா இருக்கும் எப்படி கட்டிமுடிச்சாங்கன்னு தெரியல. அவ்வளவு ரிஸ்க். ஆனாலும் அந்த இடம் இந்தியாவுக்கு சொந்தமானதுங்கிறதால எட்டாவது அதிசயமா உலகம் ஏத்துக்கலை. இந்த போட்டோ ஹுன்சா ஆற்றுக்கு மேல இருக்கிற பாலத்துல எடுத்தது. இன்னும் பல ஸ்பெஷல் இருக்கு கரகோரத்துல தான் உலகத்திலே ரெண்டாவது உயரமான மலை உச்சி இருக்கு. உலகத்துலே உயர்ந்த ஹைவே ரோடு இது தான். வெப்பத்துல வேற பனி மலைகள் உருகும் போது இது மட்டும் இன்னும் இறுகுது. இந்த ஊரு நேரா ஆப்கான்ல இருக்கிற அபோதாபாத்ல போய் சேரும். அது தான் பின்லேடன் தங்கி இருந்த இடம். பிரான்ஸ்காரன் இந்த ஊரை பத்தி படமாவே எடுத்து விருது வாங்கிட்டான். THREE CUP of TEA ன்னு வெளிநாட்டுக்காரன் புத்தகம் எல்லாம் எழுதிட்டான் ஆனா நமக்கு அதிகம் அதைப் பத்தி தெரியல. இமய மலை ஆறு, வயல்வெளின்னு சொர்க்கம் மாதிரி இருக்கும் வெள்ளை, பச்சை, ஊதான்னு பல நிறத்தில் அந்த ஊரே “

“ குடும்பத்தை இழந்ததையும் ஒரு கதை மாதிரி சொல்லுறீங்களே அங்கிள்“

“ என்ன செய்யச் சொல்லுற, ரொம்ப யோசிச்சா அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில என் மேலயும், செஞ்ச வேலை மேலயும் தான் கோபம் வரும். ரெண்டுக்குமே இடம் குடுக்க வேண்டாம்ன்னு அதிகம் எதையும் யோசிக்கிறதில்ல “

“ இது என்ன போட்டோ “

“ கில்லெர் மௌன்டைன் ன்னு சொல்லுற நங்க பர்பத் போற வழியில ஒரு செக் போஸ்ட் இருக்கு. பாகிஸ்தான் பார்டர் அது தான் இது “

“ அவுங்க உள்ளே போன அனுமதிப்பாங்களா “

“ குளிருக்காக இருந்த சிகரெட்டை நான் பாகிஸ்தானி சோல்ஜர் சைனிஸ் சோல்ஜர்ன்னு மாத்தி மாத்தி தம் அடிச்சிருக்கோம் “

“அப்போ யாருக்கு யார் கூடத்தான் சண்டை “

“ ஜனங்களுக்கு தேவையில்லாத ஆனா யாருக்கோ தேவையான சண்டை. ராணுவத்துக்கான பட்ஜெட்ன்னு சொல்லி ராணுவ தளவாடம் வாங்குறேன்னு சொல்லி காசு பாக்கலாம். மக்கள் ஏதாவது காரணத்துக்காக கட்சி மேல கோபப் படுறமாதிரி தெரிஞ்சா பத்து இந்தியன் சொல்ஜரை கொல்லலாம். ரெண்டு நாடுமே அரசியல் செய்யலாம். ஐநா சொன்ன பிரகாரம் ராணுவத்தை வெளியேத்திட்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இருந்தா இந்த பிரச்சனை தீர்ந்து 6௦ வருஷம் ஆயிருக்கும். அப்பாவி காஷ்மீரி தான் திண்டாடுறான் “

“ இது தான் உங்க பொண்ணா “ என்றான் அடுத்து இருந்த மகளின் தற்சமய புகைப்படம் பார்த்தபடி

“ ஆமா“

“ என்ன பண்ணுறாங்க “

“ நீ எல்லாம் ஒரு அப்பனா, என்னை தனியா விட்டுட்டு காஷ்மீர்ல போய் உக்காந்துகிட்டியே. உன் மூஞ்சியிலே முழிக்க நான் விரும்பலன்னு சொல்லி நான் கொடுத்த காசுல லண்டன்ல மனித நேயம் (ஹியுமனிசம்) படிக்கப் போயிட்டா “

“ என்ன சார் அதையும் சிரிச்சிக்கிட்டே சொல்லிறீங்க “

“ என்ன செய்யச் சொல்லுற அழவா முடியும், இந்த நொண்டிக் காலோட அப்படியே திரிய வேண்டியது தான். எப்போமாவது அடிவாங்கினா வலிக்கிறது தெரியும், வாங்கிகிட்டே இருந்தா, மரத்துப் போச்சு அதான் “

“ நீங்க தான் சார் எட்டாவது அதிசயம் “ என்றான்.

“ சுயம் இல்லாம வாழ்றது அதிசயம் ஆயிருச்சு “ என்ற படி ஜன்னல் வழியே வானத்தை பார்த்தேன். யாரை பற்றிய சிந்தனையும் இன்றி ஒரு பறவை பறந்துகொண்டிருந்தது.

1 comment:

Nandhi Tv said...



இதைப்போன்று மனதை நெகிழச்செய்யும் சூழல்களில் வாழும் மனிதர்களின் கதையை வாசித்து வெகு நாட்களாகிவிட்டது.
குறிப்பாக ராணுவம், யுத்தம்,இழப்பு, என்கிற பின்னணியில் .
தேசப்பற்றையும், தியாகத்தையும் அடிப்படையாக வைத்து நாடுகள் நடத்தும் ராணுவ அரசியலும் அதில் சிதையும் தனிமனித, குடும்ப உறவுகளும்
மிகவெளிப்படையாக த்தினச் சுருக்கமாக தீட்டப்பட்டிருக்கிறது.
எதுவுமற்ற நிலையில் எதிர்படும் இளை ஞனின் தோழமை வாழ்வுமீதான நம்பிக்கையை மிச்சம் வைத்திருக்கிறது.
அருமையான கதை!