Sunday, September 30, 2018

உப்பு நாய்கள்: முதிரா நகரத்தின் கதை

மாற்றத்தை சொல்வதற்குதான் இருக்கிறது நாவல். ஒரு தெருவின் கதை, ஒரு பகுதியின் கதை, ஒரு மரத்தை பற்றிய கதை, ஒரு பெருநகரத்தின் கதை என்று ஒரு இடம் அல்லது இருப்பை சொல்லும் நாவல்கள் நமக்கு இருக்கின்றன. ஆனால் கூடவே அதன் காலத்தையும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. காலமும் இடமும் சேர்ந்து ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வதை நாவல்கள் பொதுவாக செய்து கொண்டிருக்கின்றன.
 
பள்ளிகொண்டபுரம் ஒரு நகரத்தின் வளர்ச்சியையும் அதன் வீழ்ச்சியையும் பேசுகிறது. புளியமரம் இருக்கும் ஒரு பகுதியையும் அந்த நகரத்தையும் பேசுகிறது புளியமரத்தின் கதை. ஒரு தெருவில் வாழும் குடும்பங்களின் கதை ரெனீஸ் அய்யர் தெரு. காவல் கோட்டம் மதுரை பற்றிய கதை என்றும் சொல்லலாம். விஷ்ணுபுரம், நெருங்குருதி எல்லாமே ஒரு நகரத்தின் ஒரு இருப்பிடத்தின் கதைதான்.


இருப்பிடத்தை காலத்துடன் பிணைத்து சொல்லும்போது ஒரு வடிவம் கிடைத்துவிடுகிறது. ஒரு நகரத்தை சொல்லும்போது அங்கு எந்தமாதிரியான மனிதர்கள் இருந்தார்கள் என்கிற சித்திரம் கிடைத்துவிடுகிறது. ஒரு வரையறைக்குள் நம்மை வைத்து பூட்டிக்கொள்ள நமக்கு இந்த நாவல்கள் பயன்படுகின்றன.

அந்த மனிதர்களின் பழக்கவழக்கங்கள், உறவுமுறைகள், அவர்களின் தொழில்கள் என்று எல்லாவற்றையும் பேசிவிடமுடியும். .பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி ஒரு நல்ல உதாரணம். அதில் மலைவாழ் மக்களின் செய்கைகளை, இன்ப, துன்பங்களை விவரிக்கிறது.

நமக்கு நன்கு பரிச்சயமான நகரமான சென்னையைப் பற்றி, அம்மனிதர்களின் வாழ்வைப்பற்றி சமகாலத்தில் எழுதப்பட்டிருக்கின்றனவா என்றால் தெரியவில்லை என்றுதான் சொல்லமுடியும். சென்னையில் வாழும் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கும் முழுநாவல் இல்லை என்று நினைக்கிறேன். சில முயற்சிகள் இருக்கதான் செய்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் நாவல் யாமம் சென்னை நகரை பின்புலமாக கொண்டது. லஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள் சென்னை நகரத்திற்கு இடம்பெயரும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பற்றிய கதை.

ஒரு நகரம் வளர பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் நகரங்கள் வெவ்வேறு மொழிகளின், இனங்களின் மக்களால் வளரத் தொடங்குகிறது. முதலில் விளிம்புநிலை மக்கள்தான் அந்நகரை ஆக்கிரமிக்கிறார்கள். நகரிலுள்ள சின்ன சந்துகளின் வழியே அவர்கள் வாழ்க்கை விரிகிறது. கூவம் நதியோரமாக பெருஞ்திரளான அடித்தட்டு மக்கள் சென்னை நகரை ஆக்கிரமித்தார்கள்.

நகரம் வளர்ச்சியடையும்போது சந்துகளில் இருந்தவர்கள் நிலங்களை இழந்து வேறு இடம் செல்லவேண்டியிருக்கிறது. புதிய மனிதர்கள் வருகை ஒருபுறமும், இருக்கும் மனிதர்கள் பலகாரணங்களால் வேறுஇடங்களுக்கு இடம்பெயர்தலும் நடந்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் நகரங்களின் வளர்ச்சியில் அம்மனிதர்களின் பங்கு மிக முக்கியமானது.

அம்மனிதர்களைப் பற்றிய முழு சித்தரிப்பு புனைவை அளிக்க பல ஆய்வுகளின் வழியே செல்லவேண்டியிருக்கும். கைவிடப்பட்ட நகரமாக இருக்கும் வடசென்னை நகரம் முழுவதும், இடம்பெயர்ந்து வந்து பல நூற்றாண்டுகளாக சென்னையின் வயதளவே இருக்கும் மனிதர்களை, அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், உடைகள் என்று  வழியே பேசுவது பெரிய சிரமமான காரியம். பல ஆண்டுகள் அங்கு வாழ்ந்து அந்த அனுபவங்களை பேசவேண்டியிருக்கும். ஒரு சில ஆண்டுகளை மட்டும் சொல்லிவிடுவது முழுமையை தரமுடியாது.

இன்று சென்னைக்கு வரும் அடித்தட்டு மக்கள், அதிகமும் கட்டிடவேலை, கூலிவேலை என்று தனியாகவும் குடும்பசகிதமாகவும் இடம்பெயர்கிறார்கள். திருட்டும் வேறுசில சட்டப்புறம்பான வேலைக்கு வருகிறார்கள். இந்த அடுத்தட்டு மனிதர்களைப் பற்றி தான் பொதுவாக உப்பு நாய்கள் நாவல் பேசுகிறது. ஆனால் முழுமையானது இல்லை என்று ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. நகரத்தில் ஏற்படும் மாற்றங்கள், புதிய வாழ்விடங்களால் அங்கிருக்கும் மக்கள் படும் துன்பங்கள், அதனால் ஏற்படும் புதிய வாழ்க்கை சாத்தியகூறுகள் என்று எதையும் பேசவில்லை. சிறு திருட்டுகள், குழந்தைக் கடத்தல், கொலைகள் செய்யும் மனிதர்கள் இதில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் குறித்த முழுமையான சித்திரமே இல்லை. புதியதாக ஜெமினி பாலம் கட்டப்பட்ட அபோதைய வாழ்வை அசோகமித்திரன் ஒரு நாவலில் எழுதியிருப்பார். கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் ஒரு காடு நகராவதை அழகாக விவரித்திருப்பார். அப்படி எந்த மாற்றததையும் இந்த நாவல் சுட்டவில்லை.

கடப்பாவிலிருந்து வரும் ஆதம்மா, மதுரையிலிருந்து வரும் செல்வி, முத்துலெஷ்மி, ராஜஸ்தானிலிருந்து வரும் ஷிவானி போன்றவர்களும், சென்னையிலிருக்கும் சம்பத், கனேஷ் போன்றவர்களும் இந்த நாவலில் முக்கியபாத்திரங்கள். இவர்களின் சுக,துக்கங்கள், பிரச்சனைகள், அதிலிருந்து விடுபதல்கள் என்று கலவை சொல்லபட்டுள்ளன. செல்வியின் வாழ்க்கை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பிக்பாக்கெட் திருடியான அவர், சின்ன சின்ன திருட்டுகளை செய்வதை சொல்வது புதிய நாம் அதிகம் அறியாத வாழ்வின் பக்கங்கள். அவர் கொள்ளும் மனஉழைச்சல்கள், அவசங்கள் போன்றவைகளை சிறப்பாக எழுதியிருக்கிறார் லஷ்மி சரவணக்குமார்.

அதைத்தாண்டி பெரியதாக எதையும் சொல்லமுடியவில்லை. கூலிவேலை செய்வது, திருடுவது, கஞ்சா கடத்துவது, சோரம் போவது என்று ஒரு மாதிரி கலவையாக சென்றாலும் எங்கும் முழுமையான விவரங்கள் இல்லை. உதாரணமாக கஞ்சா கடத்துவதில் இருக்கும் பேச்சுவழக்குகள், குறியீட்டுவார்த்தைகள் பற்றிய புரிதல், நிகழும் களம் குறித்த அக்கறை என்று எதுவும் இல்லை. சினிமா காட்சிகளைப் போன்று வாசகரை எளிதாக ஏமாற்ற நினைக்கிறது. அனுபவங்களோ, களப்பணியோ எதுவும் இல்லாமல், செவிவழி செய்திகளை மட்டுமே நம்பி இந்த செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே செல்கிறார் என்பதை படிக்கும்போது உணரமுடிகிறது. ஆதம்மாவும் அவள் அம்மாவும் வரும் பக்கங்கள் எளிய சினிமா ரசிகர்களுக்காக எழுதப்பட்டுள்ளன என்று சொல்லலாம்.

வெகுஜன எழுத்தில் நடையும் சொல்லும் விதத்தில் ஒரு தொழிற்நுட்பமும் இருக்கும். திரைக்கதையாக எழுத நினைத்து நாவலாக்கிவிட்டார் என நினைக்கிறேன். இதில் வெறும் சினிமா மொழிதான் தெரிகிறது. கொஞ்சம் தீவிரமான வாசகர்கள் யோசிக்கதான் வேண்டும்.



[தஞ்சைக் கூடல் கூட்டத்தில் 29/9/18 அன்று பேசிய உரையின் கட்டுரை வடிவம்.]
 


1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குறை நிறைகளைப் பகிர்ந்த விதம் அருமை.