Friday, September 14, 2018

மதுரைக்கு வந்த சோதனை



சோழநாட்டு தலைநகரிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தைத் தாண்டி பாண்டிய நாட்டிற்கு பல்வேறு நதிகளைக் கடந்து காலடி வைக்க மூன்று நாட்களாவது ஆகும் பயணத்திற்கு சரியான கட்டுசோறு தேவையைதாண்டி திருடர் பயமும் இருந்திருக்கும் அப்போது. இன்று நடுவில் புதுக்கோட்டையில் ஒரு கடையில் மதியஉணவை முடித்துக்கொண்டு மதுரைக்கு செல்ல நான்கு மணிநேரம்தான் ஆகியது. 

பதினைந்து நாட்களுக்கு முன்னால்வரை பயணத்திற்கான திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஒருநாள் தினேஷ் தொலைபேசியில் மதுரை வரமுடியுமா என்றார். அவர் முன்பே வாசகசாலை தோழர்கள் கார்த்திகேயன், அருண் இருவரின் வழிகாட்டுதலால் என்னை தொடர்புகொண்டிருந்தார். உடனே தயார் படுத்திக்கொள்ள முடியுமா என்று சற்று தயக்கமாக இருந்தது. முன்னே லைப்ரரி புத்தகமாக படித்திருந்தாலும் புத்தகம் கிடைக்கட்டும் என்றேன். வாசகசாலை கண்ணம்மாள் அவர்கள் புத்தகம் இருக்கிறது என்று கையோடு வாங்கிக் கொடுத்துவிட்டார். ஆகவே மனம் கொள்ளும் விடுபடல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. சரி என்று சொல்லவேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்களும் நெடுங்குருதியும், லேட்டாப்புமாக இருந்தேன்.


பதினொன்று நாற்பத்தைந்து மணியளவில் வண்டியில் பழைய ஹவுசிங் போர்ட் வரும்வழியில் ஏறிக்கொண்டார் தோழர் தினேஷ். வைத்திருந்த பென்டிரைவிலிருந்து கட்டுரையை அச்செடுத்துக் கொண்டு நிறுத்தத்தில் நிழலான ஒரு இடமாக பார்த்து வண்டியை வைத்துவிட்டு பன்னிரெண்டு மணியளவில் புதுக்கோட்டைக்கு வண்டியேறினோம். போகும் வழியில் கட்டுரையை படித்துக் கொண்டே செல்லவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

தினேஷிடன் ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றி பேசினால், அவர் பக்கத்திலிருந்து அவருக்கு அதுவரை வந்திருக்கும் அது சம்பந்தமான அனைத்து செய்திகளையும் சொல்லிவிடுவது. ஆனால் எதிரிலிருப்பவரின் பேச்சை மறிக்கவேண்டும் என்கிற எண்ணம் எதுவும் அவருக்கில்லை. நான் சொல்லும் ஒவ்வொன்றையும் ஆழமாக உள்வாங்கிக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். அரசியலும், சினிமாவும் தவிர்த்து இலக்கியம் மட்டுமே பேசவேண்டும் என்கிற என் எண்ணத்திற்கு ஈடுகொடுக்கிற வகையில் பேசிக் கொண்டுவந்தார். அதுவரை இருவருக்குள்ளும் இருந்த சந்தேகங்கள் விலகி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் உருவாக புதுக்கோட்டைவரை பயணிக்க வேண்டியிருந்தது.
புதுக்கோட்டையில் ஒரு அரசியல் ஊர்வலம். ஒரு கட்சியின் தலைவர்கள் வருவதை கொண்டாடி மகிழ வீதியெங்கும் பட்டாசுகளை கொழுத்துகிறார்கள். அரசியல் தலைவரை பார்த்ததும் அவரின் பின்புலங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார் தினேஷ். அரசியல், சமூகவியல், இலக்கியம் என்று அவரது ஆர்வங்கள் இருந்தாலும், அரசியலில் இருக்கும் ஆர்வம் இந்த வயதிற்கேயுரியது என்று நினைக்கிறேன். மீண்டும் வண்டியில் பேச்சுகள் தொடர்ந்தன. எங்கள் பேச்சுகளின் வேகம் அதிகரித்தபோது வண்டியில் இருந்த சில பயணிகள் முதலில் திருப்பியும் பின் காதுகளை திருப்பி பேச்சுகளை கேட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

சிவகங்கையிலிருந்து இருசக்கர வாகனத்தை கொண்டுவந்து மதுரையில் வைத்திருந்தார் தோழர் தினேஷ். ஆகவே மாட்டுதாவனியிலிருந்து இடத்திற்கு செல்வது எளிதாக இருந்தது. வழியில் அவரது பெரியப்பா வீட்டில் இறங்கி இளைப்பாறிக் கொண்டோம்.

நேராக இடத்திற்கு சென்றபோது தோழர் விக்னேஷ் குமார் கீழே இருந்த கடையில் நின்றிருந்தார். வாசகப்பார்வையை அளிக்க வந்த மா.குறிஞ்சித்தேன் தன் நண்பர்கள், பெற்றோருடன் வந்திருந்தார். தேநீர் குடிக்கவைத்த விக்னேஷுடன், குறிஞ்சித்தேன், நான், தினேஷ் ஒன்றாக சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். குறிஞ்சித்தேன் என்ன பேசுறதுன்னே தெரியல, எதாவது ஐடியா சொல்லுங்க என்றார்.

ஹாலுக்கு சென்றபோது 10 நண்பர்கள் இருக்கலாம், அவ்வளவுதான் வந்திருந்தார்கள். அதில் ஸ்ரி சங்கர் கிருஷணாவும் இருந்தார். மதுரையில் ஒரு விழாவிற்கு வந்திருந்தவர் அப்படியே வந்திருந்தார். அவரை சில இலக்கிய சந்திப்புகளில் சந்தித்திருக்கிறேன். தஞ்சைக் கூடல் வாட்ஸ்பிலும் இருக்கிறார்.

மதுரை ஜெயமோகன் என்னும் நண்பர் விழாவை தொகுத்து வழங்கினார். அவருக்கு நல்ல குரல்வளமும் வாசிப்பு அனுபவமும் இருந்தது. முதலில் பேசிய குறிஞ்சித்தேன் ஆரம்பத்தில் தடுமாறியது போலிருந்தது. பின்னால் வேகமாக பல்வேறு விஷயங்களை சேகரித்து பேசினார். அடுத்து தோழர் விக்னேஷ் குமார் ஆர்வமாக பேசினார். எப்போது படிக்க ஆரம்பித்தேன், நடுவில் நிறுத்தியது, பின் ஆரம்பித்தது, பயணங்களில் படித்தது என்று வாசிப்பில் இந்த நெடுங்குருதி நாவலின் மேல் இருக்கும் ஆர்வத்தை கொண்டு பேச ஆரம்பித்தார். தோழர் தினேஷ் போன்றே இலக்கியம் மீது ஆர்வமான மனிதர். சற்று நேரமானது முப்பதிற்கு மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்தார்கள். ஒன்றை கவனிக்க முடிந்தது, வந்திருந்தர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். சினிமா/விளம்பர துறையை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். தஞ்சையில் இலக்கிய கூட்டங்களில் இளைஞர்களே வருவதில்லை, வருபவர்கள் நடுவயது அல்லது வயதானவர்கள்.

நான் பேச ஆரம்பித்தபோது அதுவரை இருந்த பதற்றம் மறைந்துவிட்டிருந்ததை உணர்ந்தேன். நேரடியான பேசுவதைப் போன்று இயல்பான இலக்கிய பேச்சாக வடிவமைப்பது எழுத்தின் ஆரம்பவரியை தேடுவதுபோன்றது என்று நினைக்கிறேன். ஓவ்வொரு சமயமும் பேச்சாளரின் மனநிலையை பிரதிபலிக்கும் என்றே நினைக்கிறேன். நெடுங்குருதியை பதினைந்து நாளில் படிக்க முடிந்தது அதை முன்பே படித்திருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நீண்ட பயண அனுபவமும், வாசிப்பின் மீதான ஈர்ப்பும், எழுத்துகளை வடிவமைப்பதில் இருக்கும் மோகமும் வெளிப்படும் படைப்பு நெடுங்குருதி. அடுத்தவர்களின் வாழ்க்கைமீதான கரிசனமும், விமர்சனமும், கேளிக்கையும் கொண்ட கிராம மக்களின் பேச்சுக்களை போன்றது இந்த நாவல் என்றும் சொல்லலாம். அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழியே நாவலை நம் மனதில் நிற்கவைத்துவிடுகிறது. தெளிவாக பேசினேனோ தெரியவில்லை, இவைகள் குறித்தும் சில புனைவு தர்க்கங்கள் படைப்பில் வெளிப்படும் இடங்களை பற்றி பேசிவிட்டு அமர்ந்தேன். தஞ்சையில் பேசுவதைவிட இங்கு நன்றாக பேசினதாக கூறினார் தோழர் தினேஷ்.

வாசகசாலைப் பற்றி சில விஷயங்கள் பேசவேண்டும். வாசகசாலை அமைப்பை தோழர்கள் வெ.கார்த்திகேயன் மற்றும் டைர.அருண் முன்னின்று நடத்திவருகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்புவரை தமிழகம் முழுவதும் இருக்கும் இலக்கிய அமைப்புகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் ஒரே நோக்கத்துடன் செயல்படும் இலக்கிய கூட்டங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. முகநூல் ஒரு காரணம். அதன் வழியாக எல்லா நகரங்களில் நடக்கும் கூட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி அறியமுடிகிறது. பெரும் வாசிப்பு இயக்கம், கேரளகர்நாடக மாநிலங்களைப்போல, தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. இருபது/முப்பது அன்பர்கள் இருக்கலாம் ஒவ்வொரு நகரிலும். ஆனாலும் முக்கியமானதை அடைந்திருக்கிறோம்.

அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக வாசகசாலை வெ.கார்த்திகேயன், டைர. அருண், வாசகசாலை தினேஷ் பழனிராஜ், புத்தகத்தை அளித்த தோழர் கண்ணம்மாள் மனோகரன், மதுரை தோழர்கள் விக்னேஷ் குமார், ஜெயமோகன், குறிஞ்சித்தேன், முத்து, அபிராமி போன்றவர்களுக்கு.  
 

விடைப்பெற்று நானும் தோழரும் கிளம்ப 8.30 ஆகிவிட்டது. மாட்டு தாவணி வந்து உணவு அருந்திவிட்டு நான் தஞ்சைக்கு பஸ் ஏறினேன். அவர் சிவகங்கைக்கு கிளம்பினார். வீட்டிற்கு வந்தபோது மணி 1.30, படுக்கையில் படுத்தாலும் தூங்கும்போது நான்கு ஆகிவிட்டிருந்தது. அதுவரை பல்வேறு யோசனைகள். இலக்கியமும் பயணமும்.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இலக்கியமே வாழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள் போற்றுதலுக்கு உரியவர்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களுடன் மதுரை வந்து விழாவில் கலந்துகொண்ட உணர்வு. நன்றி.

சொ பிரபாகரன் said...

இலக்கியவாதியின் ஒருநாள் சம்பவம் ஆர்வமாகதான் உள்ளது. இவ்வளவு நண்பர்களைப் பெற்றிருக்கும் உங்களை பார்க்க பெருமையாக உள்ளது.