Sunday, August 26, 2018

காச்சர் கோச்சர்: படிமங்களற்ற பாழ்வெளியின் தனிமை


காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் (தமிழில்: கே.நல்லதம்பி) - காலச்சுவடு பதிப்பகம்

1

குடும்ப அமைப்பு என்பது ஒருவரது ஆளுமையின் கீழ் மெல்லமெல்ல உருவாகிவருவது. குடும்ப உறுப்பினர்களுக்குகூட அவர் உழைப்பையும், தியாகத்தையும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த ஒருவர் குடும்பத்திலிருந்து விலகும்போதோ அல்லது இறக்கும்போதோ சர்வநிச்சயமாக குடும்பம் சிதைந்துவிடுகிறது. பொதுவாக அப்பாக்கள் தான் அந்த ஆளுமையை உருவாக்குகிறார்கள். சில குடும்பங்களில் தாத்தா, பாட்டி, அம்மா என்று யாராவது ஒருவர் தீவிரமாக நிலைப் பெற்றிருப்பார்.

மிக வறுமையான நிலையில் இருக்கும் குடும்பங்கள் மேலேறுவது, மிக செழிப்பாக இருக்கும்.
குடும்பங்கள் கீழிறங்குவது அதில் இருக்கும் ஒரே ஒரு உறுப்பினரால் தான் என நினைக்கும்போது இந்த தீவிரத்தை ஓரளவு நாம் புரிந்துக் கொள்ள முடியும். கூடவே குடும்பம் என்கிற அமைப்பு சிதைவுறாமல் இருக்க ஒருவர் செய்யும் பிரயத்தனங்கள், முயற்சிகள், திருட்டுதனங்கள் எல்லாம், வறுமை நிலையில் இருக்கும்போது ஒன்றும் வளமைநிலையில் இருக்கும்போது ஒன்றுமாக இருக்குமா என்கிற சந்தேகம் நம்மை ஆட்டிவைக்கவே செய்யும்.


அதிகபட்சமான 80 வருட வாழ்வுதான் நமக்கு. நாம் செய்பவைகள் சுயநலம் சார்ந்தும், பொருளற்ற தற்பெருமைகள் கொண்டும் செயல்படுவதை புரிந்துக்கொள்ள, விலகி நிற்கும் ஒரு மனநிலை வரும்போதே வாய்கிறது. அதுவரை நல்லவர்களாக காட்டிக் கொள்ளும் வித்தைக்கு நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அந்த விலகல் உருவாகிவருவது கூட நம்மைபுரட்டிப்போடும் ஒரு பெரிய இழப்பை சந்திக்கும்போதுதான் ஏற்படுகிறது.
வறுமையில் குடும்பம் இருக்கும்போது நிலைபெற்றிருக்கும் அறம் பற்றிய சிந்தனைகள் சற்று மேலானதாகவும், வளமையில் குடும்பம் இருக்கும்போது இருக்கும் அறம் குறித்த சிந்தனைகள் சற்று கீழானதாகவும் நிலைபெறுகிறது என நாம் நினைக்கிறோம். உண்மையில் எல்லா காலமும் ஒன்றுதான். வறுமையில் குற்றம் குறித்த பயங்கள் மூடிய பாவனையாக வெளிப்படுவது, வளமையில் குற்றஉணர்ச்சியற்ற நிலையை மிக எளிதாக பாவனைகளற்று ஏய்துவிடமுடிகிறது.

வறுமையில் இருந்த ஒற்றுமை வளமையில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாகும்போது எப்படி காணாமல் போகின்றன?

குடும்ப அமைப்பின் கட்டுக்கோப்பின் மீது உண்டாகும் ஒவ்வாமை புதிய உறுப்பினர்கள் அதில் சேரும்போதுதான் தோன்றுகிறது. அதுவரை இருந்த மகிழ்வு, நிறைவு எல்லாமே எப்படி காணாமல் போகின்றன என்கிற துயரம் மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. நான்கு அண்ணன் 4 அக்காக்கள் இருந்த வீட்டில் ஒவ்வொருவராக திருமணம் ஆகும்போது அந்த எப்படி தங்களை அந்த இணைப்பிலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள் என்பதை காண ஆச்சரியம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.


2

வாழ்க்கை நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள்தான் போலும். ஒருவரை மனதார மகிழ்வாக நினைப்பதற்கும், அதேபோல வெறுப்பதற்கும் மற்றொரு சம்பவத்தின் துணை தேவையாக இருக்கிறது. ஒரு சிக்கனமான சின்ன நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்துவரும் கதைச்சொல்லி, இளமையில் நடுத்தர சூழலும் திருமண சமயத்தில் பணக்கார குடும்பமாகவும் மாறியிருக்கும் வீட்டில் எதைப் எப்படி புரிந்துக் கொள்வது என்கிற தயக்கத்தில் வாழ்க்கிறான். நேராக சென்றுக்கொண்டிருந்த வாழ்க்கை கோணல் மாணலாக மாறுவது கதைசொல்லியின் திருமணத்திற்கு பின்தான். மனைவி அனிதா வீட்டிற்கு வந்ததும் நடைமுறையில் இருக்கும் பலவிஷயங்களை நோக்கி யதார்த்தமாக கேள்வி கேட்பதும், அதனால் வீட்டிலிருப்பவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பை உண்டுபண்ணுவதாக அமைகிறது. உண்மையில் அந்த குடும்ப உறுப்பினருக்கும் நடைமுறையில் இருக்கும் தவறு எதுவும் புரிவதில்லை.

தன் குடும்பத்திற்காக எதையும் செய்யும் அம்மா. தன் குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் அப்பா, குடும்ப நலனிற்காக துணை நிற்கும் அப்பாவின் தம்பி, எதையும் அலட்சியமாக எதிர்கொள்ளும் அக்கா என்று இருக்கும் குடும்பத்தில் நடுவில் தத்தளிக்கிறான் கதைசொல்லி.

திருமணம் செய்துகொள்ளாத சித்தப்பாவின் ஆளுமை தலைதூக்கியபின் குடும்பம் பொருளியல் வளமை பெற்று மேலேறுகிறது.

கட்டுக்கோப்பை இழக்காத வரைதான் குடும்பம். அதை புரிந்தே ஒவ்வொரு உறுப்பினர்களும் அதில் இருக்கிறார்கள். அப்பாவை, சித்தப்பாவை சந்தோஷமாக வைத்துக் கொள்ள படாதபாடாய் படுகிறார்கள். இல்லையென்றால் சொத்தை யாருக்காவது கொடுத்துவிடுவார்கள் என்கிற எண்ணம் மற்ற மூவருக்கும் இருக்கிறது. அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் அப்படிதான் குடும்பம் சொத்திற்காக அலையும் என்று நினைக்க தோன்றுகிறது. ஏனெனில் பணம் இல்லாத காலங்களை நினைத்து வருந்துவதும், அந்த இடத்திற்கு மீண்டும் சென்றுவிடக்கூடாது என்கிற நினைப்பும், சொகுசான இப்போதைய வாழ்வை இழந்துவிடக்கூடாது என்கிற நினைப்பும் கதைசொல்லியிடமும், அக்காவிடமும் எப்போதும் காணப்படுகிறது. சொகுசை பழகிவிட்ட அவர்களுக்கு எந்தவகையிலும் பின்னோக்கி சென்றுவிடக்கூடாது என்று சித்தப்பாவின் தவறுகளை பெரிதாக கவனிப்பதில்லை.

கதைசொல்லி படிக்கும் காலத்தில் தீவிரமாக வேலைக்கு செல்ல நினைப்பதும், பணக்காரர்களாக மாறியபின் எந்த வேலையும் செல்லாமல் வெறுமனே சுற்றித் திரிவது புதுப் பணக்காரகளுக்கு உரிய செயல்கள். ஏழ்மையில் இருந்தபோதிருந்த அமைதி, வளமையடைந்து திருமணம் முடிந்த அவன் அக்கா தன் கணவன் விக்ரமை சித்தப்பாவின் ஆட்களைக் கொண்டு மிரட்டி வரதட்சனை பொருட்களை மீட்டு திருப்பி வருவது அதனால் சந்தோஷமடைவதும், பணம்படுத்தும் பாடுதான். மனிதர்களுக்கு எதை செய்கிறோம் என்கிற எண்ணம் மறைந்து மமதை கூடிவிடுவது பணம் வந்தபிறகுதான்.

நாவலில் இருக்கும் சில ஒற்றுமைகளும், எதிர்சாயலும் நாவலின் மீது நமக்கு ஒரு ஈர்ப்பை உண்டாக்கிவிடுகிறது. மிக கவனமாக அதை எந்த அலட்டலும் இல்லாமல் அவைகளை கடந்து செல்கிறார் என்று தோன்றுகிறது:
 


அம்மா வறுமையின் போது நாளெல்லாம் வேலைசெய்துபின் இரவு நேரத்தில் கையில் விளக்குடன் முட்டியிட்டு எறும்புகளை ஒழிக்க அவர்பாடுபடுவதும் பின் வளமைகாலத்தில் அனிதாவை ஒழிக்க குடும்பத்தினருடன் பேச்சுவாக்கில் கூறுவதை ஒற்றுமைப் படுத்திக் கொள்கிறான் கதைச்சொல்லி.

அப்பாவின் ஆளுமையில் நிதானமாக போகும் குடும்பம், சித்தப்பாவின் ஆளுமையில் வேகம் கொள்கிறது. பழைய வீட்டின் பொருட்கள் புதுவீட்டில் அவற்றின் அலங்கோலத்தால் வைக்கமுடியாமல் பார்வைப்படாத இடத்தில் போய், பின் காணாமல் போகிறது.

வாங்கிய பொருட்களின் பில்களை மேஜையில் தெரியும்படி சேமித்து வைக்கும் புதுமனைவி அனிதா, கணவனின் செய்கைகளில் மனம்வெறுத்து, அவைகளை கிழித்து குப்பைதொட்டியில் போட்டுவைக்கிறார்.

வேலைஇழந்து வீட்டுக்கு வரும் அப்பாவின் என்றுமில்லாத உற்சாகம். என்ன படிக்கிறார் எப்போது தேர்வு போன்ற கேள்விகளை மகனிடம் கேட்பது.
 

3

காச்சர் கோச்சர் என்றால் தமிழில் கோணல் மாணல் என்று அர்த்தம் கொள்ளலாம். சிக்கல், இடைச்சொருகல் என்றும் சொல்லிக்கொள்ளலாம். அது நேரடி கன்னட வார்த்தை இல்லை. விளையாட்டாக அனிதாவின் தம்பி சொல்லும் வார்த்தை. ஆனால் நாவலுக்கு மிக சரியாக பொருந்திவிடுகிறது. பட்டம் விடும்போது நூல்கண்டு சிக்கிக் கொள்வதை இது கோச்சர் காச்சர் ஆயிடுச்சு என்று அனிதாவின் தம்பி கூறுகிறான். பின்னாட்களில் தீர்க்கமுடியாத சிக்கல் என்பதை இப்படிதான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றாகிறது.

கோச்சர் காச்சர் என்று நாவலில் குறிப்பிடும் வார்த்தை வீட்டிற்கு செல்லாமல் கதைசொல்லி காபி ஹவுல் இருக்கும் சமயம் மனதில் தோன்றும் வார்த்தையென்னவோ 'காச்சர் கோச்சர்'. இன்னேரம் சிக்கல் தீர்ந்திருக்கும் என நினைப்பை நமக்குள் விதைக்கும் ஒரு உத்தியாக கொள்ளலாம்.

இந்தியளவில் பத்தாண்டுகளில் வந்த சிறந்த நாவலாக சொல்லப்படுகிறது காச்சர் கோச்சர். ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் தொடர் விவாதத்தில் இருக்கிறது இந்நாவல். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கே.நல்லதம்பி. சிறந்த மொழிபெயர்ப்பு என்றே சொல்லவேண்டும். நேரடி தமிழ் படைப்பை படிக்கும் உணர்வு மட்டுமே எஞ்சுகிறது. எந்த மொழிக்கும் பொருந்திப் போகிறது. நிலக்காட்சிகளற்ற, கதாப்பாத்திரங்களின் உடைகளின் வர்ணனையற்ற, காலத்தை நேரடியாக சொல்லாத படைப்பு இவ்வளவு வசீகரிப்பது மட்டுமே என்றேன்றும் ஆச்சரியம்.

[25/8/18 அன்று தஞ்சைக் கூடலில் பேசிய விமர்சன உரையின் கட்டுரை வடிவம்.]

1 comment:

சொ பிரபாகரன் said...

கன்னடத்தில் இருந்து பெரும் படைப்புகளும் பெரும் புத்திஜீவிகளும் வந்த வண்ணம் உள்ளது. காச்சர் கோச்சர் நாலவைப் படிக்கும் ஆர்வத்தை இந்த பதிவு ஏற்படுத்தி உள்ளது. சிறந்த அறிமுகம்.