Monday, September 3, 2018

நெடுங்குருதி: வெக்கை நதியின் துயரம்



சொற்களற்ற தொடர்பு (nonverbal communication) என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை தொடர்புறுத்தல் முறை நம் உடல்வழியாக எப்போது வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம், அதை உடல்மொழிம் என்று சொல்லலாம். ஒருவரது நேரடி மற்றும் மறைமுக சைகைகளை அதன்மூலம் அவருக்கு தெரியாமல் நாம் படித்துவிடமுடியும். அவர் நமக்கு உணர்த்துவதை புரிந்துக் கொள்ளவும் அவரது பொதுஇயல்புகளைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். அந்த சொற்களற்ற தொடர்ப்பு அல்லது உடல்மொழியை நம் இலக்கியத்திலும் காணமுடியும். குறியீடுகளாக, படிமங்களாக இலக்கியத்தில் சொல்லப்படுபவைகளை மறைமுகமாக இந்த தன்மையைதான் உணர்த்துகின்றன என்று சொல்லலாம்.


நேரடியாக பேசுகின்ற புனைவுகளில் போதாமை அதிகரிக்க, அதிகரிக்க படிமமொழிப் படைப்புகள் வாசகர்களை கவர்ந்தபடி இருக்கின்றன. தமிழில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்னால் வெளியான நாவல்களில் படிமமொழியில் 2003 எழுதப்பட்ட முதல் நாவலாக நெடுங்குருதியை சொல்லலாம் என நினைக்கிறேன். நெடுங்குருதிக்கு பின்னால் வந்த நாவல்கள் இந்தபடிம மொழியை இந்நாவலைக் கொண்டே சரியாக புரிந்துக் கொண்டன. படிமங்களை புரிந்துக் கொள்ளாமல் நாவலை நாம் புரிந்துக் கொள்ள முடியாது. படைப்பில் வெளிப்படும் இந்த உத்தியால், அகமொழியாக வெளிப்படும் தருணங்கள் படைப்பை மிக நெருக்கமான உணர்வை வாசக மனதில் கொண்டு சேர்க்கும் பணியை செய்கின்றன. சமீபத்தில் வந்து நினைவில் நின்ற படைப்புகள் எல்லாமே படிமமொழிப் படைப்புகள்தான்

‘‘படிமங்கள் தன்னுணர்வற்ற நிலையில் மனத்தில் சேகரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட அனுபவங்கள்’’ என்று ஒரு வரையறை உண்டு. அறிவாலும் உணர்ச்சியாலுமான ஒரு மனபாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம்


பெரிய அனுபவங்களும், நீண்ட பயணங்களும், தொடர் சிந்தனைகளும் உடைய மனிதர்களால் மட்டுமே படிம மொழியில் எளிதில் எழுதிவிடமுடியும். சிறப்பான படிமமொழியில் எழுதப்படும் படைப்புகள் வாசகனை காட்சியாக சிந்திக்க தூண்டுகிறது. காட்சிகளை வைத்து கற்பனை விளையாட்டுகளை விளையாட அழைக்கிறது. ஆனால் படிமங்களின் உருவாக்கத்தில் புதுமையில்லை என்றால் வாசிப்பவரை அயர்ச்சி கொள்ளவைத்துவிடும். அது ஒரு தொழிற்நுட்பமாக மட்டுமே இருக்கும். எஸ்.ரா அவர்களுக்கு இது எப்போதுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. எஸ்.ராவிற்கு இந்த விளையாட்டில் மிக பிடித்தமானதாக இருக்கிறது. ஓவ்வொரு அத்தியாத்திலும் அவர் விரும்பும் ஒரு வாழ்க்கை அனுபவத்தை தன்னையும் அறியாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். படிக்கும் வாசகருக்கு முதலில் இந்த படிமமொழி தடையாக இருக்கும். கதையை நேரடியாக கூறாமல் செல்கிறார் என்கிற நினைப்பை கொடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் 10% பக்கங்களை படித்ததுமே நம்மால் எளிதாக நாவலுடன் ஒன்றிவிட முடியும்.

வேம்பலை என்கிற கிராமத்தின் கதை. அதில் வாழும் கதாபாத்திரங்களின் கதை. வேம்பர்கள் என்கிற சாதியினர் கதை. அவர்களைத்தான் இந்த நாவலில் வாழும் தங்கள் நம்பிக்கைகள், உணர்ச்சிகள் எல்லாமே சேர்ந்துதான் நாவலை உண்டுபண்னுகிறது.

நாவலை யோசிக்குபோது நீண்ட காலத்தை கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை சித்திரம் என்று நினைக்க தோன்றுகிறது. 1920லிருந்து ஒரு ஐம்பது வருடம் இந்த நாவல் நடப்பதாக உருவகிக்க்கலாம். வேம்பலை கிராமம், அதில் வாழும் வேம்பர்கள் என்கிற இனகுழுமனிதர்கள் தான் பேசுபொருள். ஆனால் பலவகை சாதி மனிதர்களும் அவர்களுக்கிடையே நடக்கும் உறவுமுறைகளுமாக பேசுகிறது நாவல்.

நாகுதான் கதாநாயகன் என்று சொல்லலாம். அவனது அப்பா முருகையா, அவனது அம்மாவழி தாத்தா அய்யாவும் முக்கிய பாத்திரங்கள். ஒவ்வொருவருக்கு பின்னாலும் கதைகள் நீண்டு பின்னலான ஒரு உலகை படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். வேம்பலை என்பது ஒரு கற்பனை ஊராககூட இருக்கலாம். ஆனால் அதில் மனிதர்கள் வெறுப்போடும், கசப்புடனும் வெக்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நல்ல விஷயங்கள் வாழ்வில் நடக்கவில்லையோ என்று நினைக்கும்படி இருக்கிறது.

வேம்பர்கள் திருட்டை தொழிலாக கொண்டிருக்கும் சமூகமாக இருப்பதனால், அதிகம் உரையாடுபவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அதிகம் வாயாடியாக வெளிப்படுத்தும் பாத்திரங்கள் என்றால் ஆதிலெட்சுமியும், ரத்னாவதி மட்டும்தான். வெல்சி துரை அவர்களை அடக்கியதற்குபின்னால் விளிம்பு நிலை மனிதர்களால மாறி சின்ன சின்ன திருட்டுகளை செய்து கிராமத்தில் வாழ்கிறார்கள். கிடைப்பதை உண்டு, வெய்ய்லாடு பழகி, கசப்பை வாயில் தேக்கி தெருக்களில் வாழ்கிறார்கள். ஆம் தெருக்கள்தான். பொய்தேவு நாவலின் கதாநாயகன் தெருக்கள் தோறும் அலையும் சித்திரம் இந்த நாவலிலும் வருகிறது. பதின்பருவத்தில் சிறுவர்கள் தெருக்களில் அலைவார்கள். 'அங்கு என்ன நடக்கிறது' என்பதை அறிந்துக் கொள்ள ஓவ்வொரு தெருவாகவும் செல்வார்கள். அப்படியேதான் நாயகன் நாகு தெருக்களில் அலைகிறான்.

எண்ணிப்பார்த்தால் 20 கதாபாத்திரங்கள்தான் கொண்டிருக்கும் இந்தநாவல். ஒரு 500 பக்கங்கள் கொண்ட நாவலில் இவ்வளவு குறைவான பாத்திரங்கள் இருப்பது சற்று ஆச்சரியம். எல்லா பாத்திரங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன. தங்களை தாங்களே வழிநடத்திக் கொள்கின்றன. யாரும் மற்றவருடன் விவாதிப்பதில்லை, எந்த கருத்து மோதல்கள்கூட இருப்பதில்லை. ஒருவர் மற்றவரின் செய்கைகளில் தலையிடுவதில்லை. மற்றவர்களின் நியாய அநியாயங்களைப் பற்றி பேசுவதுகூட இல்லை. சில இடங்களில் மட்டும் அய்யாவு தாத்தா முருகையாவுடன் சண்டையிடுகிறார். அவரை வெறுத்து ஒதுக்குகிறார்.

இந்தநாவலில் அதிகம் இடம்பெறுவது வெய்யில். வெய்யிலை வர்ணிக்க பல வழிகளை கையாள்கிறார் எஸ்.ரா. வெய்யில் ஊர்வது, நடப்பது, பரவுவது என பலவழிகளில் செல்கிறது. கூரைகளை நெரிபடவைக்கிறது. பாம்பென நெளிகிறது, மனிதர்களுக்கு குடிக்க தருகிறது. வெயிலை பார்த்தே வாழும் மனிதர்கள் தங்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் இப்படியானதாகதான் இருக்கும். விரியன் பாம்பைப்போல உடலை அசைத்து அசைத்து தரையில் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது வெயில்

மற்றொன்று எறும்புகள். வெயிலுக்கு அடுத்து எறும்புகளை அதிகம் காட்சிப் படுத்துகிறார். காச்சர் கோச்சர் நாவலில் வீட்டில் இருக்கும் எறும்புகளை எந்த குற்றஉணர்ச்சியுமின்றி கொன்றுகொண்டேயிருப்பார்கள். ஆனால் இங்கு எறும்புகள் மனிதர்களை விட்டு விலகி சென்றுகொண்டிருக்கிறது அல்லது சமயம் கிடைக்கும்போது மனிதர்களை திண்ண செய்கிறது. இங்கிருக்கும் மனிதர்கள் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.

எறும்புகள் எங்கோ சென்றுக் கொண்டிருக்கின்றன என்று ஆதிலட்சுமி நாகுவிடம் கூறுகிறாள். “அவவீட்டுக்குள்ள குருணை சிந்தினது மாதிரி செல்லெறும்புகள் இருக்குது. படிக்கல்லைக்கூட மெதுவாக கருகிக் கருகித் திங்கிற எறும்புக அது. வீட்டு எறும்புக இல்லையடா அவக மாதிரியே அந்த எறும்புகளும் எதையோ முணுமுணுத்துக்கிட்டு தெருவிலே வருது.” என்கிறாள் ஆதிலட்சுமி. வெயிலும் எறும்பும் ஆரம்ப பக்கங்களில் நாவலில் நிறைகின்றன.

இதேபோல குறிப்பிடப்படும் மற்றொரு விஷயம் வேம்பும் அதன் கசப்பும். கசப்பு அவர்களது வாழ்க்கையில் வாயின் அடியில் ஊறும் நீர்போல எல்லாகாலங்களிலும் சுரந்துக் கொண்டேயிருக்கிறது.

நாவலின் கதை என்ன? நாகு சிறுவனாக இருக்கும்போது ஆதிலெட்சுமியுடனாக பேச்சுகள் எல்லா மாயயதார்த்த வகையில் அமைந்திருக்கின்றன. நாகு அவன் செய்கைகளுக்கு சம்பந்தமில்லாமல் வளர்ந்து தன் தாத்தாவோடும், அப்பாவின் நண்பரோடும் களவு தொழிலை செய்கிறார். வேசியான ரத்னாவதி அவனை விரும்புகிறாள், ஆனால் வசந்தா என்கிற பெண்ணோடு திருமணம் நடக்கிறது. ரத்னாவிற்கு திருமால் என்கிற மகனும், வசந்தாவிற்கு மல்லிகா என்கிற மகளும் நாகு மூலம் பிறக்கிறார்கள். ஆனால் நாகு ஒரு துப்பாக்கி சூட்டில் இறந்துவிடுகிறான். திருமால் மதம்மாறி இறையியல் படிக்க பிரான்ஸ் செல்கிறான். மல்லிகா மீண்டும் வாழ்வதற்கு வேம்பலை வருகிறாள். இவர்களைதவிர அய்யா, அய்யாவு, நாகுவின் அம்மா, அக்கா இருவர், அப்பாவின் நண்பன் செல்லையா, வேம்பலை மனிதர்களாக பக்கீர், அவர் மனைவி, அவர்களது இரு குழந்தைகள், ஆதிலட்சுமி, சிங்கி, அவர் மனைவி, அவர் நண்பன் குருவன், என்று சிலர்மட்டுமே வாழ்கிறார்கள்.

கிராமத்தில் பேச்சு வழக்கத்தில் சொல்லப்படும் சில கதைகள் அப்படியே கதைகளாக இதில் பொருந்திப் போகின்றன. சிங்கியும் குருவனும் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதும், 10 ஆண்டுகளுக்கு முன்னால் குருவன் இறந்தாலும் கண்தெரியாத சிங்கியின் வாழ்வில் தினம் வரும்வதும் என்று சுவாரஸ்யமான பக்கங்கள். தினம் சிங்கியுடன் ஆடுபுலியாடம் ஆடுகின்றான் குருவன். ஆனால் ஆட்டம் முடியுமுன்னே ஒவ்வொரு நாளும் காணாமல் போய்விடுகிறான். அது மரணத்துடனான சிங்கியின் போராட்டம், வாழ்வதும் சாவதுமான போராட்டத்தின் அலைகழிப்புகள். சிங்கிக்கு அமையும் அமைதியான மனைவியும், பின்னாளில் வெறுப்பான பெண்ணாக மாறுவதும் நாம் அறிந்த மனிதர்கள் தான். அவள் இறந்தபின் அவளை காண செல்லுமிடம் அருமையான புனைவு தர்க்கம் நிறைந்த பக்கங்கள். அவள் இறக்கவில்லை பொய் சொல்கிறார்கள் என்று நினைத்து கொண்டே செல்வதும், இறந்த உடலைப் பார்த்து மூடிய கைகளை மற்றவர்கள் திறக்க சொல்வதும், திறந்ததும் அதில் இருந்த பச்சை குத்திய தேள் தன் கைக்கு இடம்மாறுவதும் என்று வாழ்வில் முக்கிய தருணங்கள் ஒருவருக்கு. அவளிடமிருந்த வெறுப்பின் தேள் கொடுக்குகள் சிங்கியின் கைக்கு இடமாறுகிறது. அதன்பின் அவன் வெறுப்புடனும் எல்லோரையும் ஏசியபடி வாழ்ந்து மறைகிறான்.

மற்றொன்று காயம்புவின் வாழ்க்கை. ஒரு புதிய வரவான சாமியால் பணமும் அந்தஸ்தை பெறுவதும், அதே சாமியால் எல்லா வற்றையும் இழப்பதும்.

நாகு சிறுவனாக இருக்கும்போது அவரது அப்பாவும்  அவர் நண்பர் செல்லையாவுடனும் வேட்டைக்கு செல்வது அழகாக இடம். வேட்டைப் பற்றிய கிராமத்தில் நடக்கும் இயல்பான பேச்சுகளின் சுவாரஸ்யம், அமைதியான இடம், புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளுதல், அலைத்து செல்லும் நாயின் உற்சாகம் எல்லாமே வேட்டையை சுவாரஸ்யப்படுத்தும் அது இதில் அழகாக சொல்லியிருக்கிறார்.

நாகுவின் அப்பா முருகையாவின் நண்பர் பக்கீரின் வாழ்க்கை மற்றொரு விசித்திரமான வாழ்க்கை. பக்கீர் காணாமல் போனதும் அல்லது இறந்து போனதும் அவரது மனைவி அந்த ஊருக்கு வந்து அவர்களுடன் அவரது இறப்பைப் பற்றி எதுவும் தெரியாமல் வாழ்கிறாள்.  பின்னாலில் அவள் வேறு ஒருவரை வைத்துக் கொள்கிறாள்.

சில குறைக ளாக சிலவற்றை சுட்டிக்காட்ட முடியும். வேம்படி, படியடி, சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன. ஒரு பெரிய நாவலில் மிக குறைந்த நிலக்காட்சிகளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பிரம்மாண்டத்தை அதனால் அளிக்காமல் போய்விட்டது. சரியான காலம் வெளிப்படுத்தபடவில்லை. வேம்பர்களின் வாழ்க்கைப் பற்றி முழுமையான சித்திரம் நாவலின் மூலம் கிடைக்கவில்லை. குலத்தொழில் பற்றிய வரலாறு, வர்ணனைகள் எதுவும் இல்லை.

வாழ்க்கை சுவாரஸ்யங்களை கூட்டுவது அடுத்தவர்களுக்கு நேரும் துண்பங்களும், விசித்திரமான நிகழ்வுகளும்தான் என்றால் மிகையில்லை. முடிவற்று நிகழும் மரணங்களும், நேர்க்கோட்டில் செல்லாத வாழ்க்கை பயணங்களும் நம்மை எப்போது வாழ்வின் மீதும் வெறுப்பையும், விருப்பையும், ஆச்சரியத்தையும் கூட்டியபடியே செல்கின்றன.

உணவு தண்ணீர் என எதுவுமே இல்லாத வெக்கையான கிராமத்தில் வாழும் வேம்பலை மனிதர்களுக்கு தினப்படி மகிழ்வை ஒவ்வொரு தருணமும் தந்தபடியே இருக்கிறது. வாழ்வை அறியு உதவும் நுண்தகவல்கள் நீண்ட சன்னல்களும், முடிவில்லாத அறைகளும், கொண்ட ஒரு பெரிய கோட்டையைப் தனிமையில் வாழும் அச்சத்தை தருகிறது. மனிதரகள் வாழ்கிறார்கள் மடிகிறார்கள். அனுபவங்கள் அச்சத்தை தரும் குருதியைப் போன்று சொட்டியபடி செல்கின்றன.

சில இடங்களில் வெள்ளமெனவும் சில இடங்களில் சொட்டிக் கொண்டும் இருக்கும் ரத்த நதி, நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது. குரோதமும், நம்பிக்கையின்மையும் கொண்ட மனிதர்கள். பணம் அந்தஸ்து ஒரு பொருட்டாக அவர்களுக்கு இல்லை. பல தலைமுறைகளாக ஓடும் இந்த நதி வேம்பலையில் கடைசியாக வரும் நாகுவின் வாரிசான நாகுவில் வந்து நிற்கிறது. அதற்குபின்னும் தொடரக்கூடியதுதான். வெக்கை நிலத்தில் தனக்கேயுரிய படிம ரத்தம் கோடுகிழித்தபடி சென்றுக் கொண்டிருக்கிறது.

[2/9/18 அன்று மதுரை வாசகசாலை நிகழ்வில் பேசிய சிறப்புரையின் கட்டுரை வடிவம்].

3 comments:

தினேஷ் பழனி ராஜ் said...

இந்த நாவலையும் அதன் நுட்பத்தையும்
ஒரு வாசகன் எளிதாக புரிந்துக் கொள்வதற்கு பேருதவி உங்களுடைய சிறப்புரை.....

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நூல் பற்றியத் திறனாய்வு, நூலினைப் படிக்கத் தூண்டுகிறது
நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நேரில் வந்து பொழிவினை அனுபவித்ததுபோன்ற உணர்வு. நன்றி.