Saturday, August 18, 2018

வண்டியோட்டியின் உரையாடல்கள்

இந்த ரோடு ஏன் வளஞ்சு வளஞ்சு போகுது... நடுவுல பள்ளம் வேற நோண்டிவச்சிருக்காங்க.

ஸ்...அப்பா... பதினோறு மணி வெய்யிலு, அதுக்குன்னு இப்படியா...

இந்த மழ வேற பெய்யமாட்டேங்குது, ஊரெல்லாம் இதுல மழை, வெள்ளம், புயலு.

ஏங்க அந்த மாட்டுக்கு பின்னாடியே போறீங்க….மாடு வேற புள்ளதாட்சியா இருக்கும் போலருக்கு.

மழை பேச்சாதான் என்னவாம். கொஞ்சம் வெக்காயாவது குறையுமில்ல.


ஏன் இந்த கடையெல்லாம் சாத்தியிருக்கு. இன்னிக்கு என்னா கிழமை, வியாழக் கிழமைதானே... எதாவது பந்தா...

அய்யோ மாடு.... ஏங்க இந்தமாதிரி மாட்டுக்கு பக்கத்திலேயே போறீங்க... நா வேற சிவப்புசுடிதார் போட்டிருக்கேன். சிவப்பு கலர பார்த்தா மாடு முட்ட வருமாமே.

உண்மையாங்க அது....?

கேட்டா வண்டியோட்டும்போது பேசமாட்டேம்பிங்க...

அங்க பாருங்க.... கடையில பச்ச கலர்ல மஞ்ச பூ போட்ட சுடுதாரு... அழகா வேற தச்சிருக்காங்க...

திரும்பி பாருங்க.... அந்த கடதான்.

வண்டியில கடமுடான்னு ஏதோ சத்தம் வருது. வண்டிய சர்வீஸ் கொடுங்க முதல்ல. ப்ரேக்வேற சரியா புடிக்க மாட்டேங்குது...

உங்களயெல்லாம் கொண்டுபோயி டெல்லியிலதான் விடனும். அங்க ஆர்த்தி வீட்டுகாரரு மாச ஒருவாட்டி சர்வீஸ் கொடுத்துடுவாராம். ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் போவாரமே...

புனேயில இருக்கும்போது சர்வீஸ்கரெக்டா கொடுத்துகிட்டிருந்திங்க. .. அம்மா... இந்த ஸ்பீடு பிரேக்கர்வேற.

இருங்க நல்லா உட்காந்துகிறேன். வண்டிவேற நா ஆட்ரேம்பிங்க...

அம்மா, கொத்தமல்லி பச்சையா நல்லா இருக்கே. எங்கேந்து வருதோ தெரியல. அந்த  முறுங்ககா நல்லா இருக்கே. கீர வேற இப்ப கிடைக்கமாட்டேங்குது. வாங்கலாம்னா, வண்டிய வேற நிறுத்தமாட்டேம்பிங்க...

உங்க கட வந்திடுச்சு... கடக்காரர் உங்களையேவேற பாக்குறாரு…. உங்க மாகசின் வந்திடுச்சா? வால்போஸ்டர் வெச்சிருக்கே. ... மா... வண்டிய அதுக்குள்ள திருப்பிட்டீங்க

ஆத்துல என்னங்க இவ்வளவு தண்ணி போகுது. பச்சையாவேற இருக்கு. பைப்புலதான் தண்ணி வரமாட்டேங்குது. நீங்க எதுக்கு வேகமா போறீங்க.

அண்ணி சொன்னமாதிரிதான். அவுங்க சொல்லுவாங்க, உங்க அண்ண வண்டியில போகும்போது, கண்ண இருக்கி மூடிக்கனும்னு..,

நீங்க வண்டியோட்டும்போதும் கண்ண மூடிக்கனும்போல.

பேசாம தொப்பி போட்டுவந்திருக்கலாம். தல என்ன இவ்வளவு சுடுது.

இந்த பேங்க் வேலையெல்லாம் நீங்களே செய்யகூடாதா? கையெழுத்து மட்டும் போட்டிருக்கலாம். இதுல நெட்லேயே எல்லாம் பண்ணிட்டேன் வேற சொன்னீங்க.

இந்த கடையிலதானே அன்னைக்கு இட்லி வாங்கிவந்தீங்க... கட என்ன ஒரே புகையா கிடக்கு.

பெர்மண்டே ஆவல அந்த மாவு. ஆருனஒடனே தொடகூட முடியல அந்த இட்லிய... காஞ்ச இட்லி, தண்ணியா சாம்பாரு, வெறும் பொட்டுகடல மட்டுமே உள்ள சட்னி...குனிஞ்ச தல நிமிராம வேற சாப்பிடிங்க...

அரிசியும் உளுந்து அளவ அஞ்சுக்கு ஒன்னுன்னு பாத்து, சரியா அரைச்சு, நல்ல குவாலிட்டி பருப்புல சாம்பார் செஞ்சு வெச்சா... நடுவுல மாவா இருக்குமிங்க... உளுந்தா இருக்குமிங்க... கேட்டா நா எங்க சொன்னேம்பிங்க...

நீங்க வடையில உளுந்து வாசன அடிக்குதன்ன ஆளுல்ல.... எங்கம்மா சொல்லி சொல்லி சிரிச்சாங்க...ஊருக்கே தெரிஞ்சுபோச்சு நீங்க சொன்னது. எங்கம்மா 'உளுந்தில்லாம எப்படிம்மா அரைக்கிறது'.

இவரு பொறந்தநாளுன்னா இவனுங்க வரிசையா நிப்பாங்களாமா? அதுல கைய கீறிக்கிட்டு வேற போஸ்டர்ல ஒருத்தன் இருக்கான்.

உங்க புள்ளையும் பெரியவனானது இப்படிதான் நிக்கபோறான். அன்னைக்கு ஏண்டா செய்யலன்னு கேட்டதுக்கு, பளார் வெச்சுடாங்க முதுகுல... அம்மா தெரியாம செய்சுட்டம்மா, தெரியாம செய்சுட்டம்மா... வேற. எல்லாம் நீங்க குடுக்கிற இடம்.

அப்பாவும் புள்ள தப்பாம பொறந்திருக்கு.

காத்துவேற இப்படி அடிக்குது. இந்த கொடியெல்லாம் என்ன பன்னுவாங்க...

ஏங்க அந்த மஞ்சள்ல வாடாமல்லி கலர்ல ஒரு சேல கட்டிக்கிட்டு போச்சே, அந்த பொம்பளைய, பாத்தீங்களா.

அது கடைசியில சமையல்காரியாம். அது என்னமோ அன்னைக்கு அந்த வீட்டுகாரி மாறி பேசுச்சு.

காலைல போயி ரெண்டு புள்ளைகளையும் ஸ்கூலுக்கு கிளப்பிட்டு, ஒரு சட்னியும், ஆறு தோசையும் சுட்டு வெச்சுட்டு, ஒரு பொரியலோ, கூட்டோ பண்ணி, ஒரு சாம்பார் வெச்சு, சோறு வடிச்சு வெச்சுட்டு, சாமானெல்லாம் தேச்சுட்டு வீடு பெருக்கிட்டு வந்துடனும், அவ்வளவுதான் வேல, அதுக்கு ஆறாயிரம்.

ஏங் இப்படி ஊர சுத்திகிட்டு போறீங்க... கேட்டா ஒன்வேபிங்க... ஆனா எல்லா இந்த பக்கமாதான் போறாங்க.

அந்த பொம்பளபேரு வாணி. நம்ம ஏழு தெருவிலேயே சமைக்கிறதுல அந்த பொம்பளதான் ஃபெமஸ்ஸாம்.

அதுக்குன்னு ஓவரா பேசுது உங்க தங்கச்சி மாதிரி... வீட்டுக்கு வரும்போதே அம்மா புள்ளைக்கு பால வையுன்னு அதட்டவேண்டியது..

அந்த பாட்டி என்னமோ விக்கிது. நாவப்பழமா... பாவம்.

ஸ்... அப்பா... ஒருவழியா வீட்டுக்கு வந்தாச்சு. அரமணிநேரம் ஃபேனை போட்டு உட்காரப்போறேன். ஸம்மா...

ஹயகீரீவருக்கு விளக்கு போடனும் ஞாபகம் வெச்சுகங்க.

உட்காந்தோனே அதகொண்டா இதகொண்டான்னு கேட்காதிங்க.. இப்பயே சொல்லிட்டேன்.

நீங்க உள்ள போனவுடனேயே புக்க எடுத்து வெச்சுகுவிங்க... இல்லன்னா பேப்பரு... அதுவும் இல்லேன்னா இப்ப புதுசா கிண்டில் பண்டில் வேற....

இப்ப எதுவும் கேக்காதிங்க... இல்லன்னா காமாட்சிக்கு போயி ரெண்டு சாப்பாடு நீங்கதான் வாங்கிட்டு வரணும்.

ஏங்க ஒரே இருட்டா கிடக்கு.

[இதைதவிர வண்டியோட்டி , ம், ம்ஹும், சரி, இல்ல... போன்ற வார்த்தைகளை உரையாடலில் பயன்படுத்தினார்.]

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசனையான உரையாடல்கள்.