Thursday, July 12, 2018

'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்



அன்புள்ள அசோக்குமார்

வணக்கம். சொல்வனத்தில் வந்திருக்கும் சிறுகதையைப் படித்துவிட்டேன்.  தொடர்ந்து வீட்டைத் தேடிவரும் சிறுவியாபாரிகளுக்கும் மருமகளுக்கும் இடையிலான உரசல்/உறவு புதிய களமாக இருப்பதால் படிக்க உற்சாகமாக இருந்தது. வியாபாரிகளின் ஒட்டுறவை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய வேகத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலேயே வாழ்க்கை ஓடுகிறது. ஒரு புதிர்போல போய்க்கொண்டே போகிறது. யாருக்கும் நேரமில்லை, யாரும் யாருக்கும் தேவையுமில்லை என்கிறபோது வேறெப்படி இருக்கமுடியும்?

எனக்கு அந்த இறுதிவரிக்கு நீங்கள் சற்றே கூடுதல் அழுத்தம் கொடுத்துவிட்டீர்கள் என்று தோன்றவைக்கிறது.  விற்பவர் போகிறார், மருமகள் பார்க்கிறாள், வாசல்முன் வந்து கூவக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த வீட்டை கூச்சலின்றி கடந்துவிடுகிறார். வேணுமா பாப்பா என்று கேட்கவில்லை. அந்தச் சித்தரிப்போடு சொல்லியிருந்தாலே போதும். தேவையின்றி ‘ஒருநாளும்’ என்றொரு சொல்லால் நீங்கள் தரும் அழுத்தம் ‘ஒரு துளி உப்பு’ கூடுதலாவதுபோல கூடிவிட்டது. அது வெறும் சித்தரிப்பு என்னும் நிலையைக் கடந்து நீங்கள் விரும்பும் முடிவாக மாறிவிட்டது.

அன்புடன்

பாவண்ணன் 

 

No comments: