Thursday, July 12, 2018

சாமத்தில் முனகும் கதவு தொகுப்பு குறித்து சுரேஷ் சுப்ரமணி

எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் அவர்களுக்கு உங்கள் முகநூல் நண்பர் Suresh Subramani எழுதுவது,

வணக்கம். தங்களின் சிறுகதை தொகுப்பானசாமத்தில் முனகும் கதவுபுத்தகத்தை படிக்கிறேன் என நான் உங்கள் பதிவில் சொல்லியிருந்ததுக்கு நீங்கள் அதை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என சொல்லியிருந்தீர்கள். பல்வேறு வேலைகளுக்கிடையே இன்றுதான் அதை முழுதும் படித்து முடித்தேன். அனைத்து கதைகளும் அருமையாக வந்துள்ளன.

புத்தகத்தின் தலைப்பான சாமத்தில் முனகும் கதையில் கூத்தையனின் மன அவசங்களை நுண்ணிப்பாக எழுதியிருந்தீர்கள். அவன் மனைவி வாசுகியின் மரணத்தை முன்னிட்டு அவனுள் எழும்பியிருந்த குற்ற உணர்ச்சியை குத்திக்காட்டும் விதமாக கதவு அகோரமாக முனகுவது வாசுகியின் ஆற்றாமையையே நினைவுறுத்துகிறது.


வெளவால்கள் உலவும் வீடு சிறுகதையில் அண்ணன்தம்பி பாச உணர்வுகளை நெகிழ்வாக எழுத்துக்களால் கொண்டு வந்துள்ளீர்கள். என்னதான் உடன்பிறப்பென்றாலும் பொறுப்பில்லாமலும் ஒழுக்கமில்லாமலும் ஊதாரியாகவும் இருப்பவனை வெறுக்கத்தான் வேண்டும் என்ற உலகியல்புக்கேற்ப அண்ணனின் அக்கா தம்பி நடந்து கொளவதை இயல்பாக படைத்துள்ளீர்கள். மாறாக ஒரு தம்பியின் பாத்திரத்தை மட்டும் அண்ணன்மேல் பாசமுள்ளவனாக அவர் மென்மையான மனசை அறிந்தவனாக படைத்திருப்பதுதான் கதையின் சிறப்பு.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் வேதனைகளைஅந்நியன் என ஒருவன்என்ற கதையில் நிதர்சனமாக காட்டியிருக்கீங்க. அதேசமயம் கைவிடப்பட்டதால் பிள்ளைகள் மேல் எழும் நியாயமான கோவத்தை காட்டாமல், ‘அவங்ககிட்ட அன்பு பாசம் இல்லாமல் இல்ல..செய்ய நிறைய மனசு இருக்கு. ஆனா அவங்களுக்கும் குடும்பம், குட்டின்னு ஆன பிறகு அதெல்லாம் செய்ய முடியறதில்லஎன மிகுந்த மன முதிர்ச்சியோடு பேசும் அந்த முதியவர் கதாபாத்திரம் என்றும் நினைவிலிருந்து நீங்காமல் இருப்பது ஒன்று. இதேபோலவாசலில் நின்ற உருவம்கதையும் முதுமையின் வேதனையை தெரிவிப்பதாகவே உள்ளது. மனிதர்களிடம் எதை விதைகிறோமோ அதைய நாம் அவர்களிடமிருந்து அறுவடை செய்யமுடியும் என்ற வாழ்க்கை சூத்திரம்தான் இக்கதை என்றால் அது மிகையில்லை. அன்பு, பரிவு போன்றவற்றை இளவயதில் கைகொள்ளாமல் போனால் வெறுப்பு, உதாசீனம் போன்றவற்றை முதுமையில் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்ற வாழ்க்கை படிநிலையை தந்தைமகன் உணர்வுகளின் மூலம் உணரவைக்கப்பட்டிருப்பது படிபவருக்கு அவசியமானது.

அப்ரஞ்ஜி சிறுகதை இயல்பான போக்கில் எழுதப்பட்டுள்ளது படிக்கும் வாசகருக்கு எளிதாக உள்ளது. இவ்வுலகத்தில் உண்மையான அன்பு, பாசமெல்லாம் இல்லைமனிதர்கள் சுயநலத்தின் காரணமாகத்தான் அன்பாக பாசமாக இருப்பதுபோல நடிக்கிறார்கள் என்பதை அப்ரஞ்ஜி பாட்டியின் முடிவின் மூலம் எடுத்துக்காட்டியிருப்பது நிதர்சனமானது. இக்கதையின் முக்கியமான ஆன்மாவாக இருப்பது பாட்டியின் மரணத்தை அவர் சார்ந்த வீட்டிலுள்ளவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான். பல ஆண்டுகளாக ஒரு சில குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டும் அவர்கள் வீட்டிலேயே தங்கிக்கொண்டும் இருக்கும் ஒரு மனுஷியை அவள் மரணத்திற்குப் பிறகு அக்குடும்பத்தார் கண்டுகொள்ளவேயில்லை என்பது தர்கப்படி நம்பமுடியாததாக இருக்கிறது. குறைந்தபட்சம் அவள் மரணத்தை அக்குடும்பத்தார் கண்டுகொளாமல் இருப்பதற்கான காரணத்தை சில உரையாடல்கள் மூலமாவது படிக்கும் வாசகருக்கு தெரியப்படுத்தியிருந்தால் அக்கதை ஒரு டிரமாடிக் முடிவு போல இல்லாமல் அழுத்தமான இயல்பான முடிவாக இருந்திருக்கும் என்பது படிக்கும்போது எனக்கு தோன்றியது. இக்கதையை படித்துக்கொண்டிருக்கும்போது யதார்த்தமாக போய்க்கொண்டிருந்த கதை சட்டென ஒரு வலுவான காரணமில்லாமல் முடிந்தது எனக்கு ஒரு திருப்தியின்மையையே ஏற்படுத்தியது

தொகுப்பிலுள்ள மற்ற கதைகளும் சிறப்பாகவே வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம் என சில புத்தகங்கள் என் அலமாரியில் உள்ளது. அதில் உங்கள் கதை தொகுப்பையும் இடம் பெறச் செய்துவிட்டதில் சந்தோஷமடைகிறேன். உங்களின் வேறு படைப்புகள் பற்றி எனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இப்படிக்கு,

சுரேஷ் சுப்பிரமணி
கிருஷ்ணகிரி.


அன்புள்ள நண்பர் சுரேஷ் சுப்ரமணி அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.

தொகுப்பில் இருக்கும் முக்கியமான கதைகளை கண்டுபிடித்து அதைப் குறித்து உங்கள் பார்வையை சரியான விமர்சனத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி.
கே.ஜே.அசோக்குமார்.



No comments: