Thursday, July 12, 2018

'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்



அன்புள்ள அசோக்குமார்

வணக்கம். சொல்வனத்தில் வந்திருக்கும் சிறுகதையைப் படித்துவிட்டேன்.  தொடர்ந்து வீட்டைத் தேடிவரும் சிறுவியாபாரிகளுக்கும் மருமகளுக்கும் இடையிலான உரசல்/உறவு புதிய களமாக இருப்பதால் படிக்க உற்சாகமாக இருந்தது. வியாபாரிகளின் ஒட்டுறவை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய வேகத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலேயே வாழ்க்கை ஓடுகிறது. ஒரு புதிர்போல போய்க்கொண்டே போகிறது. யாருக்கும் நேரமில்லை, யாரும் யாருக்கும் தேவையுமில்லை என்கிறபோது வேறெப்படி இருக்கமுடியும்?

எனக்கு அந்த இறுதிவரிக்கு நீங்கள் சற்றே கூடுதல் அழுத்தம் கொடுத்துவிட்டீர்கள் என்று தோன்றவைக்கிறது.  விற்பவர் போகிறார், மருமகள் பார்க்கிறாள், வாசல்முன் வந்து கூவக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அந்த வீட்டை கூச்சலின்றி கடந்துவிடுகிறார். வேணுமா பாப்பா என்று கேட்கவில்லை. அந்தச் சித்தரிப்போடு சொல்லியிருந்தாலே போதும். தேவையின்றி ‘ஒருநாளும்’ என்றொரு சொல்லால் நீங்கள் தரும் அழுத்தம் ‘ஒரு துளி உப்பு’ கூடுதலாவதுபோல கூடிவிட்டது. அது வெறும் சித்தரிப்பு என்னும் நிலையைக் கடந்து நீங்கள் விரும்பும் முடிவாக மாறிவிட்டது.

அன்புடன்

பாவண்ணன் 

 

சாமத்தில் முனகும் கதவு தொகுப்பு குறித்து சுரேஷ் சுப்ரமணி

எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் அவர்களுக்கு உங்கள் முகநூல் நண்பர் Suresh Subramani எழுதுவது,

வணக்கம். தங்களின் சிறுகதை தொகுப்பானசாமத்தில் முனகும் கதவுபுத்தகத்தை படிக்கிறேன் என நான் உங்கள் பதிவில் சொல்லியிருந்ததுக்கு நீங்கள் அதை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என சொல்லியிருந்தீர்கள். பல்வேறு வேலைகளுக்கிடையே இன்றுதான் அதை முழுதும் படித்து முடித்தேன். அனைத்து கதைகளும் அருமையாக வந்துள்ளன.

புத்தகத்தின் தலைப்பான சாமத்தில் முனகும் கதையில் கூத்தையனின் மன அவசங்களை நுண்ணிப்பாக எழுதியிருந்தீர்கள். அவன் மனைவி வாசுகியின் மரணத்தை முன்னிட்டு அவனுள் எழும்பியிருந்த குற்ற உணர்ச்சியை குத்திக்காட்டும் விதமாக கதவு அகோரமாக முனகுவது வாசுகியின் ஆற்றாமையையே நினைவுறுத்துகிறது.

Saturday, July 7, 2018

அஞ்சலை: மீறலில் துளிர்க்கும் கனவு


புறஉலகை நேரடியாக உள்ளதை அப்படியே சொல்லும் இயல்புவாத அல்லது யதார்த்த நாவல்களில் அதிகமும் அழகியலை எதிர்பார்க்க முடியாது. ஆசிரியரின் விலகல் கொண்ட நேரடியாக கதைக்கூறலில் மனஎழுச்சி கொள்ளும் இடங்கள் மிக குறைவாகவே இருக்கும். ஆசிரியரும் தன்முனைப்போடு எதையும் வாசகருக்கு சொல்லவேண்டிய அவசியமும் இருப்பதில்லை. இப்படி எல்லாவற்றையும் தாண்டி இயல்புவாத நாவலான அஞ்சலை, மிகுந்த அழகியலோடும், மனஎழுச்சி உணர்வோடும் படைக்கப்பட்டிருக்கிறது. எழுதியிருக்கும் கண்மணி குணசேகரனும் எந்த பெரிய மெனக்கெடல்களும் இல்லாமல் சரியான விதத்தில் உருவாக்கிவிட்டதாகவே தெரிகிறது.