Thursday, January 11, 2018

தெய்வமரம் (சிறுகதை)



பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்ததுமங்களவிலாஸ்வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார். ஏதோ சிந்தனையில் அமர்ந்திருப்பவன்போல உடலிலிருந்து நகர்த்தி வேறு திசையில் முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.


அந்த வீட்டில் பக்கவாட்டில் ஒரு அறைபோன்ற ஒரு சிறுவாடகைப் பகுதி. ராணி மிஸ் தன் குடும்பத்தோடு வாடகைக்கு அங்கு இருக்கிறார். சுவர் ஓரங்களில் மழைநீர் தேங்கிய கருப்புவளையங்கள் தெரியுமளவிற்கு நடையில் ஒரு குண்டுபல்பு எப்போதும் எரிந்துக் கொண்டிருந்தது. நடைக்குப் பின் சின்ன முன்னறை. புத்தகப் பைகள் வரிசையில் கிடந்தன. குழந்தைகள் சின்ன குழுக்களாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் அப்பாவலது ஓரத்தில் இருந்து மகிழன் வந்து கால்களை கட்டிக்கொண்டான்.

மகிழனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தபோது முத்தையா அதே இடத்தில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் தெரிந்த அர்த்தமின்மையும் பயமும் அவரிடம் வேடிக்கையாகப் பேச்சை வளர்க்க தூண்டியது. எப்போதும் அவருக்கு இருக்கும் குழந்தைத்தனத்தால் வார்த்தைகள் எளிதில் வராமல் பாதி யாரிடமோ பக்கத்தில் கேட்டுவிட்டுச் சொல்வது போலிருக்கும். ஒரு பெரிய வீட்டின் ஒரே வாரிசு பேசும் துடுக்குதனம் இல்லை அவரது பேச்சில். பேச்சுக்கொடுக்கும் ஒவ்வொரு சமயமும் பதறித் தன்னை மறந்தவராகப் பேசினார்.

மூடிய துணிக்குள் வளர்ந்துவிட்ட குளவிபோல் இருந்த மிகச்சிறியதாக குச்சிக்கால் குழந்தையுடன் சாந்தியும் வெளியே வந்து முகமன் கூறினாள். குழந்தையின் மீதான அளவில்லாத ஆசையால் பத்திரமான நடை ஒன்று வந்திருந்தது. குழந்தையைக் கீழே வைப்பாளா என்கிற சந்தேகமும் வலுத்தது. அந்தப் பகுதியில் ஆண்களிடையே சாந்தி பிரபல்யமாக இருந்தார் என்பதை எப்போதும் நம்பமுடிவதில்லை. பத்தாண்டுகளாக அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதும், போன ஆண்டுதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பதும் எதிர்பாராத ஒரு செய்தியின் முதன்மைப்படுத்தல் போல இருந்தது. முன்னிலும் சாந்தி மெலிந்திருந்தார். ஆனால் அவர் மேனியில் ஒருமெல்லிய தகிப்பு இருந்தது. முகத்தை எப்படி வைத்திருப்பது என்று தெரியாத மிகச்சாதாரண முகம். ஒருவித அயர்ச்சியுடன் வெளிப்படும் சிரிப்பு. ஆண்மகனை கவர நினைத்து செய்யப்படும் சிரிப்பல்ல. ஆனால் அது தோற்றுவிக்கும் அவர் மீதான புணர்ச்சி எண்ணத்தை யாராலும் மறைக்க முடியாது. ஒவ்வொரு சமயமும் ஒரு திடுக்கிடலுடன் அந்த எண்ணத்தை மறக்க வேண்டியிருந்தது. முத்தையாவின் அப்பாவித்தனத்தால்கூட அந்த எண்ணம் உருக்கொண்டிருக்கலாம்.

முதலில் அது குறித்து வெளிப்படையாகப் பேசியது சந்திரமோகன்தான். அடுத்த தெருவில் உள்ளடக்கமாக இருக்கிற ஒரு வீட்டில் மாடியில் குடியிருப்பவர். இளம்வயதில் விடுபட்ட குறும்புகளை இப்போது தொடரும் நடுவயது மனிதர். பிரதான அலுவலக வளாகத்தில் தேநீர் இடைவெளியில் சந்திப்பவர். வேறு ஒரு துறையின் கிளார்க். எப்படிப் பழக்கமானார் என்பதை நினைவில் கொண்டுவரமுடியவில்லை. நடப்பு அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராகத் தெரிந்தாலும் சிலஅடிப்படை அரசியல் அக்கப்போர்களைத் தாண்டி அவர் செல்வது இல்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பார். அதிலும் பேச்சில் பெண்களைப் பற்றிப் பேசாமல் முடிக்க விரும்பாதவர் என்று சொல்லிவிடலாம். சாந்திக்குப் பிறந்திருக்கும் குழந்தையின் தகப்பன் அவள் வீட்டில் எதிர்சாரியில் இருப்பவர், ஆனால் அவர் பெயரை சொல்லப்போவதில்லை என்றார் ஒரு முறை. அப்போது அவர் முகத்தில் ஒருவித மிதப்பும், பரவசமும் பல வண்ண நீர்க்குமிழிபோல மின்னி மறைந்தன. உண்மையில் அது நல்ல உந்துதலாக அமைந்தது. ஒரு நாள் முழுவதும் அது யார் என்று யோசித்துக் கொண்டிருக்க வைத்துவிட்டார். இந்தச் செய்தி மற்ற சிலருக்கு தெரிந்திருப்பது அதை வதந்தி என நினைக்க முடியாமல் செய்துவிட்டது.

பெரிய வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கும் சாந்தி நல்ல அதிர்ஷ்டசாலி என்று நினைப்பதுபோல முத்தையாவைப் பரிதாபத்திற்குரியவராக, பாவப்பட்ட மனிதராக நினைத்தார் சந்திரமோகன். “சின்ன வயசிலேர்ந்தே கிறுக்குங்க, அவங்க அப்பாவ எனக்கு நல்லாத் தெரியும், திருவாலூர்காராரு, கும்மோணத்துல பொண்ணு எடுத்து, அங்க இருந்த நிலபுலங்கள வித்துட்டு இங்கேயே வந்து செட்டில் ஆயிட்டாரு. அந்த பய கிறுக்கன்னு தெரிஞ்சே தான் அந்த புள்ள அவன கட்டிக்கிச்சு, பெரிய சொத்து, ஒரே வாரிசு வேற. வந்தோன்னதான் தெரிஞ்சிருக்கும், இவன் அதுக்கும் லாயக்கு இல்லன்னு. அத்தோடு இந்தமாதிரியான ஆளுங்க ரொம்ப நாளு இருக்கமாட்டாங்க வேற. வேற எவனையும் இழுத்துக்கிட்டு ஓடிப்போகவும் முடியாது. சொத்து இருக்குல்ல. பக்கத்து வீட்டுல ஒருத்தன செட் பண்ணினா, ஆனா சரிவரல்ல. அதான் அவ எதிர்த்த வீட்டுல ஒருத்தன செட் பண்ணிக்கிட்டா. எந்த மாதிரியெல்லாம் ஏமாத்தி வாழ்க்கைய நடத்துதுங்க பாருங்க.” இப்படி விலாவாரியாக விவரிக்கும் தோரணை இந்தமாதிரி சமயங்களில் அழகாக வந்துவிடுகிறது சந்திரமோகனுக்கு.

அலுவலக இடைவெளி நேரத்தில் முத்தையாவைப் பற்றிய வேடிக்கைகளை தினம் ஒன்று சொல்வதில் சந்திரமோகனுக்கு ஒரு மயக்கம் இருந்தது. உதடுகளில் வழியும் புன்சிரிப்புடன் அவர் போடும் வார்த்தைகளின் வர்ணஜாலங்கள் காற்றில் மிதந்து கிச்சுகிச்சு மூட்டவைப்பவை. சைக்கிள் ஓட்டத் தெரியாத முத்தையாவை சைக்கிள் விடக் கற்றுக்கொடுத்து கால் முட்டி உடைத்தது, சினிமா அழைத்துச் செல்வதாகக் கூறி இரவில் நடுக்காட்டில் விட்டுவிட்டுவந்தது என்று சொல்லி சிரித்துக் கொண்டிருப்பார். மற்றொரு நாள் வெண்ணாற்றில் எப்படி தள்ளிவிட்டுத் தத்தளிக்க வைத்தேன் என்பதைச் சொல்லி சிரிப்பார். அடுத்த தெருவில் இருக்கும் அவருக்கு எப்படி நட்பு கிடைக்கிறது என்பதை அவர் சொல்வதேயில்லை.

~oOo~

நான் சொன்ன அந்த மரம் தெரியுது பாருங்கவீட்டிற்கு போகும் அவசரத்தைப் புரிந்துக் கொள்ளாதவராக வண்டியை மடக்கி பேச ஆரம்பித்தார் சந்திரமோகன். மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது மரம். அவர் சொன்ன எந்த அறிகுறியும் அதனிடமில்லை. எதையோ தேடுவதுபோல் நின்றிருந்தது அவ்வளவுதான். ஆனால் அடியில் இருந்த அகல்விளக்குகளின் வெளிச்சத்தால் விடைத்துக் கொண்டது போன்று பொலிவுடன் லேசாக காற்றில் தள்ளாடியது. உற்றுப்பார்த்ததில் அதன் இலைகளும், அடிமரமும் வேறுவேறாக இருப்பது தெரிந்தது. ஒன்று அரசமரம், மற்றொன்று வேப்பமரம். இரண்டும் அருகருகே இருந்தன அல்லது பிணைந்து கிடந்தன, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதுபோல. அரசமரத்தில் வேப்பமர கிளைகள் வளர்ந்திருந்தன. வேப்பமரத்தின் ஒரு கிளை அவசரமாக அரசமர கிளையாக மாறியிருந்தது. உண்மையில் அப்படி இல்லாமல் அது நம் கற்பனையோ என்றுகூட தோன்றியது. அதைப் பற்றி என்றோ அவர் சொன்னதாக நினைவு, இப்போது நினைவில்லை. ஆர்வத்தை மறைத்து நடந்துக்கொண்டேஅப்படி என்ன அதுல விஷேசம்என்றான். “தெய்வ மரங்கஎன்றார் ஒற்றைவரியில். ஒரு மரம் எப்படி தெய்வத் தன்மையைக் கொண்டுவிடுகிறது என்பதில் அவருக்கு அதீத ஆர்வமிருந்தது. தெய்வம் குடியிருப்பதால் மட்டுமே அது சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை அவர் வார்த்தைகளில் வெளிப்பட்டது. இயற்கையில் இம்மாதிரியான சாத்தியங்கள் நிகழவே செய்கின்றன. நிருபணங்களைவிட அற்புதங்கள் அவருக்கு பிடித்திருந்தன. “தினமும் இவளக் கும்பிட சொல்லியிருக்கேன்சொல்லிவிட்டு சிரித்தார்.

மஞ்சள் கயிற்றை மரத்தைச் சுற்றி கட்டிவிட்டு அவரைப் பார்த்து சிரித்தாள் மதி. “பொண்ணு யாருன்னு தெரியுதாஎன்றார் சந்திரமோகன். மதியின் விழிகளில் அடர்ந்த பூரிப்பு சூழ்ந்திருந்தது. உற்றுப் பார்க்கும்தோறும் மெல்லச் சிரித்தாள். மேடிட்ட வயிற்றை குனிந்து பார்த்தபோது தெரிந்த அதன் உருவபெருக்கம் மதிக்கு நெகிழ்வை அளிப்பது அவள் முகத்தில் தெரிந்தது. கைமேலெழும் சமயங்களில் கனிவான முகக்குறிகளுடன் வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள். உடல் பின்பக்கம் சாய லாவகமாக நடப்பது போலிருந்தது. சிவமணியன் அவளைக் கூர்ந்து பார்த்தான். சில வீடுகளில் தண்ணீர் எடுத்துதரும், பாத்திரங்களைக் கழுவும் வேலைக்காரி. சந்திரமோகன் அவளிடம் என்ன ஆவப் போவுதுன்னு உனக்கு தெரியுமா? என்று கேட்டுவிட்டு சிவமணியனைப் பார்த்தார். விரிந்த கண்களால் ஒரு முறை நோக்கிய மதி, வேறு ஒரு சிந்தனையில் சொல்பவள் போல்புள்ள பொறக்க போவுதுங்க சாமிஎன்றாள். இதை எத்தனையாவது முறை அவர் கேட்கிறார் என்கிற யோசனை அவளுக்கு வந்திருக்க வேண்டும். அவரையே பார்த்தபடி கீழிருந்த குடத்தை எடுத்து இடுப்பில் வைத்து நடக்கத் தொடங்கினாள். பார்த்தியா என்று கண்களாலேயே தலையாட்டிக் கேட்டார் சந்திரமோகன். இந்த உலகின் ரகசியங்களை அறிந்த ஒரே ஞானியின் குறுகுறு பார்வை அது. அவளைப் பார்ப்பதும் குடத்தைப் பார்ப்பதுமாக இருந்துவிட்டு நேர்க்கோட்டில் செல்லாது நடந்து செல்லும் அவள் கால்களை பார்த்துக் கொண்டிருந்தான் சிவமணியன்.

அவள் அம்மா இருக்கும்வரை மதிக்கு ஒர் இடம் இருந்தது. அம்மாவின் கைகளே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அக்கைகளின் சொரசொரப்பு முகத்திலும் முதுகிலும் படும்போது சிலிர்த்துக் கொள்வாள். அவளின் அடைபட்ட தொண்டைக் குரலில் ஆசையாக மதிஎன்று அழைப்பதைச் சின்னப் புன்னகையுடன் எதிர்கொண்டாள். பெரிய மனுசி ஆனதும் பாவாடை கட்டிவிடுவதிலிருந்து சேலை கட்டிவிடுவது வரை அம்மா செய்வதை ரசித்தாள்.

ஒடிந்துவிடக்கூடிய மெல்லிய அவள் தேகத்தைப் பார்த்து வீட்டுக்காரர்கள் சற்று கவலைப்படுவார்கள். தேவைக்கு அதிகமாக மஞ்சள் பூசிய குச்சிபோன்ற கைகளைக் கொண்டு அவள் எப்படி வேலை செய்கிறாள் என்று ஆச்சரியம். “எப்படியம்மா இதெல்லாம் செய்ற?” என்று கேட்கும்போது லேசாக ஆடும் தலையுடன் அவர்களை ஒன்றரைக் கண்ணால் பார்த்துச் சிரிக்கும்போது அவர்களும் சிரித்துவிடுவார்கள்.

அம்மா இறந்தபோது அவளுக்கு 40 வயது. அதுவரை அவளுக்கு எந்த உடல்சுகமும் கிடைத்ததில்லை. வீட்டுகாரர்கள் அவளை ஏமாற்றி, கொடுக்கும் மீதமான கெட்டுப்போன உணவுகளைப் புகார்கள் இல்லாமல் உண்டாள். கொடுக்கப்படுவது கெட்டுப்போன உணவு என்று தெரியாமல் உண்டதைப் போல கள்ளப் புணர்ச்சிகள் அவளுக்கு தெரியாமல் கிடைத்தன. அவன் யாரென்று அறியாது அவன் தரும் சுகங்களை ஏற்றுக்கொண்டாள். அவள் எப்படி பிள்ளை பெறப் போகிறாள் என்று ஊர் அதிசயித்தது. யார் இதைச் செய்தார்கள் என்கிற விவாதத்தை அவளை வைத்துக் கொண்டே செய்து மகிழ்ந்தது.

ஒரு காலைப் பொழுதில் ரெங்கமணி வீட்டுக் கொல்லையில் பாத்திரம் கழுவும் நேரத்தில் வலிவந்து அங்கேயே மதிக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டதை சிவமணியனிடம் சின்ன குழந்தையின் களிப்பேற்றப்பட்ட மகிழ்ச்சியுடன் ஒரு நாள் வீடுதேடி வந்து தெரிவித்தார் சந்திரமோகன். இனி அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் கடினமாக அமையப்போகின்றன என்கிற நினைப்பு சிவமணியனை அலைக்கழித்தது.

~oOo~

தூரத்தில் இருண்ட வானம் துவண்டு கிடந்தது. நடுவே இருமேக திரள்கள் மோத தயாராக காத்திருந்தன. காற்று வேகமாக அடித்தபோது கீழிருந்த புழுதியுடன் மண்ணையும் சேர்ந்து அடித்தது. பொடிமணல் அதன் சின்ன உருட்டைகள் கண்களிலும் உதட்டிலும் பட்டு கலங்கடித்தது. முத்தையா மிக சமீப மழைநாள் ஒன்றில் இறந்தது நினைவிற்கு வந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை, இருவாரங்கள் இருக்கலாம். அவன் எப்படி இறந்தான் என்பதை புரிந்துக் கொள்ள முயல்வது அதீத பாவத்தை உடைய மனதின் ஒரு மூலையை தொடுவது போலிருந்தது.

மீண்டும் அதே வீடு, அதே மனிதர்கள். ஆனால் ஏதோ ஒன்று மாறியிருந்தது. இல்லாத ஒன்றின் வெறுமையை ரசிக்கும் இருப்பின் ரகசியங்கள். வீட்டு வாசலைத் தாண்டிச் சென்றபோது முத்தையாவின் நினைவு கிளர்ந்தெழுந்தது. அவன் இல்லாத வீட்டில் தனிமையில் அவன் அம்மா புலம்புவதுபோன்று ஒரு தோற்றம் மனதில் எழுந்தமர்ந்தது. சாதாரணமாக வீட்டின் கூடத்தை வருடியன அவன் கண்கள். சந்திரமோகனின் வார்த்தைகளில் சாந்தியை தேடி அலைந்தன அவைகள். அவள் உள்ளிருக்க வேண்டும் கொலுசொலி கேட்டது. கால்களை அரக்கி அரக்கி நடந்து வருவதுபோல அந்த ஒலி அன்மித்தது. சட்டென திரும்பிபார்த்தான் பின்னால் நின்றிருந்தாள். “வாங்கண்ணே, அக்கா எப்படி இருக்காக, தம்பிய அழைக்க வந்தீகளாஎன்றாள்.

ஆமாம், ரொம்ப வருத்தம் எனக்கு, இப்படி ஆகும்னு நா நினைக்ககூட இல்ல”, அவனுக்கே தெரியாமல் வாத்தைகள் வெளிவந்தன.

லேசாக கண்கள் மாறுபட்டாலும்அதெல்லாம் ஒன்னுமில்ல விடுங்க, எல்லாம் நம்ம கையிலயா இருக்குஉள்ள வாங்கண்ணே ஒரு டீ குடிங்க”.

இல்ல வேண்டாம். நா கூட்டிகிட்டு போவனும்.

இன்னும் நேரம் இருக்கும் போலருக்கே. இருங்க, “ புள்ள சாருக்கு ஒரு டீய போடு இங்க வாசத்தமாக சின்ன குழந்தையை அழைப்பதுபோல கையை வீசி அழைத்தாள்.

தூரத்தில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு கேட்டிருக்க வேண்டும் மெதுவாக எழுந்து வந்தாள். கால்களின் அழுத்தம் சற்று கூடுதலாக வீட்டில் எதிரொலித்தது. தளர்ந்து மார்பு, சிறிய வயறும், வெளிறிய முகத்தில் கோடிட்ட கன்னங்கள் பார்க்க வேறுமாதிரியாக இருந்தாள் மதி.

இங்க வேல செய்றாங்களா”.

ம்ஹூம். இங்க தான் இருக்கு. பின்ன புள்ள பொறச்துடுச்சுல்ல”.
புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அடுப்படிக்கு போய் டீபோட கைகளால் சைகை காட்டினாள்.

சந்திரமோகன் அண்ணன்தான் சொல்லியிருப்பாங்களே…”

ஆங்அவங்களுக்கு குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னாரு..”

அதில்ல அது இங்கேயே இருக்கால்ல அது”.

….

அது இனிமே இங்கதான் இருக்கும். இனிமே எங்கேயும் வேலைக்கு போகத் தேவையில்லை. மத்தவங்கள நம்பி அது வாழ்க்கை வாழ தேவையில்ல பாருங்க. முன்னமே கூப்பிட்டு வந்திருக்கனும், நாந்தான் புள்ள பிறக்கட்டும்ன்னு இருந்தேன்.

அவள் சொல்வதை புரிந்து புரியாமல் அவளைப் பார்த்தான்.

என்ன அப்படி பார்க்கிறீங்க, அதுக்கு பிறந்திருக்க மகன் இந்த வீட்டு புள்ள. அந்த குழந்தைக்கு அப்பா செத்துப்போன என் வீட்டுகாரர்தான்”.

அவள் இப்படியான ஒரு வார்த்தையை சொல்வாள் என நினைக்கவில்லை. அப்பட்டமான வார்த்தையில் அவன் பேச்சு குழறியது. அவளை வேறு வார்த்தைகளில் எப்படி எதிர்கொள்வது என புரியாமல் திணறினான்

உள்ளே வலதுபுறமாக இருந்த தொட்டிலில் குழந்தை இரு கைகளையும் காவடி தூக்குவதுபோல பக்கவாட்டி இருக்க தூங்கிக் கொண்டிருந்தது. அருகே சென்று குழந்தை தூங்குவதை கவனித்தான். முத்தையாவின் முகத்தை ஒத்தது போல் அதன் முகம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டான்.

அவளே பேச்சை ஆரம்பித்தாள். அதுகூட இருந்தேன்னு அவரே என்கிட்ட மறைமுகமா சொல்லியிருக்காரு, அதான் இங்கேயே கூட்டி வந்துட்டேன். இந்தசொத்தெல்லாம் இனிமே இவனுக்குதான். இவன்தான் எங்க ராசா, எங்க வாரிசு”. “என் செல்லக்குட்டி, கன்னுக்குட்டிஎன்று கொஞ்ச ஆரம்பித்தாள்.

சுழலும் விசிறிக் காற்று அவளை கடந்து சென்றது. கூந்தல் பின்பக்கமாகப் பறந்தடித்தது. அவள் முகம் தெளிவாகத் தெரிந்தது. தீர்க்கமான அவள் கண்களுள் எந்த அசைவையும் காணமுடியவில்லை.

[சொல்வனம் 181வது இதழில் வெளியான சிறுகதை]

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தெய்வ மரம் படித்தேன். நடைமயினை அதிகம் ரசித்தேன்.