Wednesday, January 3, 2018

நெருஞ்சி 2017 விருதுசிறுகதை தொகுப்பிற்கான வாசகசாலை விருது 2016 டிசம்பரில் கிடைத்தது. நெருஞ்சி விருது 2017ல் அதே டிசம்பரில். விருதுகள் குறித்த எந்த எண்ணமும் அப்போது இருந்திருக்கவில்லை. அதுகுறித்த உற்சாக மனநிலை நினைக்கும்தோறும் வந்துவிடுகிறது. ஒரே நூலுக்கு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. நெருஞ்சி விருது நாவலுக்கான விருது பெற்ற சோ.தருமன் போன்ற மூத்த படைப்பாளியுடன் சிறுகதை விருதை நான் விருதை பெற்றேன் என்பதை வரும் நாட்களில் நினைத்துக் கொள்வேன் என நினைக்கிறேன். அதுவும் தஞ்சையின் இலக்கிய அரசியல் உலகில் என்று இருக்கும் சி.நா.மீ உபயதுல்லா போன்ற பெரியவர் கைகளிலிருந்து பெறுவேன் என்று நினைக்கவில்லை.

நெருஞ்சி விருதை அளிக்கும் முத்தமிழ் விரும்பி நான் அறிந்தவரல்ல. அவரது இலக்கிய செயல்பாடுகள் நீண்டு நெடிய தன்னார்வ தொண்டுள்ளம் கொண்டது. பரபரப்பை தக்கவைத்துக் கொள்ளும் மனநிலையை உடையதல்ல அது. அவர், நந்தி செல்லதுரை, இளையபாரதி, தென்பாண்டியன் போன்றவர்கள் இலக்கிய பரிசளிப்புகளில் எதையாவது செய்யவேண்டும் என முனைப்புடன் தொடங்கிய விருது. முன்பு கோவையிலிருந்து செயல்பட்ட நெருஞ்சி இப்போது திருச்சியிலிருந்து செயல்படுகிறது.


விருதளிக்கும் விழா தஞ்சையில் அதுவும் நான் இருக்கும் பகுதியில் உள்ள பெசன்ட் அரங்கில் வழங்கப்படுகிறது என்கிற செய்தி சின்ன குதுகூலத்துடன் வந்தடைந்தது. எஸ்.செந்தில்குமார் முதல்நாளே போன்செய்து நாளை மாலை வருவதை சொன்னார். நான் அழைக்க செல்லும்போது அவரே வந்துவிட்டார். உள்ளே நுழைந்தபோது பெளத்த ஆய்வுகளை செய்யும் பா.ஜம்புலிங்கம் அவர்கள் முன்பே வந்திருந்தார். நடுவே செல்ல இருப்பதால் என்னை சந்தித்து பாராட்டு தெரிவிக்க காத்திருந்தார். ஒவ்வொரு சமயமும் பேனா ஒன்றை பரிசளிக்கும் அவர் இந்த முறையும் ஒரு பேனாவை பரிசளித்தார்.

முத்தமிழ் விரும்பி, .செல்லதுரை, ராகவ் மகேஷ், ராம் கோபி போன்றவர்கள் முன்பே வந்திருந்தார்கள். பா.ஜம்புலிங்கம், எஸ்.செந்தில்குமார் ஆகியோரோடு பேசிக் கொண்டிருந்தபோது நா.விச்வநாதனும் அண்டனூர் சுராவும் வந்துசேர்ந்தார்கள். உத்தமசோழன் வந்திருந்தார், அவரிடன் சின்னதாக ஒரு வணக்கத்தை வைத்து அமர்ந்துக்கொண்டேன். கலைச்செல்வி தன் குடும்பத்துடன் திருச்சியிலிருந்து காரில் வந்தார். சோ.தர்மன் வருகிறார் என்கிற செய்தி அலையாக உள்ளே வீசியது.

ஐந்து மணி நிகழ்ச்சி என்று போட்டிருந்தாலும் ஆறு மணிக்கு தொடங்கியது. திருவாளர்கள் உபயதுல்லா, சிஎம்.முத்து, சோ.தர்மன், இளையபாரதி, நா.விச்வநாதன் மேடையில் அமர்ந்திருக்க விழா தொடங்கியது. ஜே.தமிழ்செல்வன் வரைவேற்பை தொடங்க, விழாவை வழிநடத்தி கொண்டிருந்தார் முத்தமிழ் விரும்பி அவர்கள்.

முதல் வித்தியாசமாக அண்டனூர் சுராவை ஏற்புரையை வழங்க வைத்தார். பின் ஒவ்வொருவராக வாழ்த்துரையை வழங்க வந்தார்கள். முதலில் சிஎம்.முத்து, நா.விச்வநாதன், .செல்லதுரை, உபயதுல்லா போன்றவர்கள் வழங்க. பரிசளிப்பு விழா தொடங்கியது. முதலில் நாவலுக்கு சோ.தர்மன் பெற்றுக் கொண்டார். பின் சிறுகதை தொகுதிகளுக்காக, நான், அண்டனூர் சுரா, கலைச்செல்வி பெற்றுக் கொள்ள, கவிதை தொகுதிக்காக ஜே.மஞ்சுளா தேவி பெற்றுக் கொண்டார். கவிதைக்கான பெறும் மற்றொரு விருதாளர் தமிழ்மணவாளன் உடல் நலம் சரியில்லாததால் வரவில்லை. சோ.தர்மன் கோவில்பட்டியிலிருந்தும், மஞ்சுளாதேவி உடுமலைப்பேட்டையிலிருந்தும் கலைச்செல்வி திருச்சியிலிருந்து விருதிற்காக வந்திருந்தார்கள். என் மனைவியும் மகனும் விழாவிற்கு மெதுவாக வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவருக்கும் இது நிச்சயம் புது அனுபவம்தான்.

ஏற்புரையை முதலில் மஞ்சுளா தேவி பேசினார். வைரமுத்துவிற்கு ஞானபீட விருது பற்றி ஜெயமோகன் கூறிய கருத்துகளை பற்றி தமிழர்களில் ஒருவருக்கு விருது கிடைப்பதை பொறுக்கமுடியாத்தை கண்டித்து பேசினார். அடுத்து ஏற்புரையை பேசிய கலைச்செல்வி அதுகுறித்து பேசும்போது ஞானபீட் விருதினால் அந்த புத்தகம் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்றும் தகுதியற்றவைகள் அப்படி போவது சரியல்ல என்று கூறிய ஜெ. கருத்தை  அவரும் வழியுறுத்திப் பேசினார்.

அடுத்து நான் பேசும்போது சிறுவயதிலிருந்து நான் பெற்ற அனுபவங்களும் எப்படி கடந்து வந்திருக்கிறேன் என்பதையும் பற்றி ஏற்புரையாக நன்றியுரையை பேசி முடித்தேன். அடுத்து சோ.தர்மன் பேசினார். அவர் பேசியதுதான் அழுத்தமான பேச்சாக இருந்தது. ஒரு நாவலுக்கும் அடுத்த நாவலுக்கு இடையில் 10 ஆண்டுகள் இடைவெளி இருப்பதை பற்றி கூறினார். இன்று எல்லா எழுத்தாளர்களும் அவசரகாரர்களாக இருக்கிறார்கள், அவர்களும் முகநூலில் இருக்கும் பிரபல்யம் ஒரு முக்கியமானதாக இருக்கிறது, அதை தக்கவைக்க போராட்டமே இந்த வெற்று நாவல்களின் பெருக்கம் என்றார். அத்தோடு இந்த விருதை ஏற்கும் காரணங்களையும் பேசினார். கேரளா போன்ற மாநிலங்களில் அவருக்கு கிடைத்த மரியாதைகள்விட எந்த விருதும் பெரியதல்ல என்று பேசினார்.

அவர், மேலாண்மை, பொன்னீலம் போன்றவர்கள் சென்றிருந்தபோது அங்கு ஏற்பட்ட அனுபவங்கள் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. வெளியே இரவுணவு ஏற்பாடு செய்திருந்தார் நந்தி செல்லதுரை அவர்கள். வெளியே எல்லோரிடமும் இரவுணவோடு இலக்கிய பேச்சுகளும் தொடர்ந்தன.

அனைவரும் சென்றபின்னும் .செல்லதுரை அவர்களோடு ராகவ் மகேஷ், செழியன் போன்ற நண்பர்களோடு நெடுநேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். வீட்டிற்கு வந்தபின்னும் அந்த பேச்சுகள் அடுத்த நாளும் தொடர்ந்துக் கொண்டிருந்தது. குடும்பத்தாருக்கு ஒரு மகிழ்வான மாலையாக இருந்தாலும் 2017ன் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நன்றி அனைவருக்கும்.

3 comments:

devaraj vittalan said...

அற்புதமான நிகழ்வு சார்..

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விழாவில் கலந்துகொண்டபோதிலும் முழுமையாக விழா நிகழ்வில் கலந்துகொள்ள இயலா நிலையை உங்களது இப்பதிவு போக்கிவிட்டது. உங்களது எழுத்து மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.