Wednesday, March 7, 2018

எஞ்சும் இருள் (சிறுகதை)இந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் அசதியை போக்க வேண்டி வேடிக்கையான சீண்டலும், போலியான கண் சிமிட்டல்களுமாக கேட்டாள். ஆனால் புதிய கதையை சொல்லும் அதே ஆர்வம் மனதில் இருந்தது. முழுவதையும் மாறாத புன்னகையுடன் கேட்டுவிட்டு அதே களிப்போடு, 'சின்ன புள்ளையில ரொம்ப வால்பையனாத்தான் இருந்திருக்கீங்க' என்றாள். காதில் ஹெட்போனில் பாட்டு கேட்டபடி வந்த ஹரீஷும் கதை முடிந்தபோது கதை குறித்த தன் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக ஹாஹாஹா என்று தன்பாட்டிற்கு சத்தமெலுப்பினான். அக்கதையை சொல்வதில் இதுவரை எனக்கு சலிப்பு வந்ததில்லை. சொல்லும் ஒவ்வொரு சமயமும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை நான் கண்டடைகிறேன். பார்த்திராத கோணமும், தவறவிட்ட பார்வையும் ஆழ்மனதிலுருந்து அப்போதுதான் எழுந்துவருவதாக தோன்றும்.
ஆனால் தஞ்சாவூர் வந்த ஒரிரு நாட்களிலேயே பல்பு கதையை அவளிடம் சொல்லியிருக்க தேவையில்லை என தோன்றிவிட்டது. சென்ற இடங்களில், உறவினர்களிடம் எல்லாம் பல்பு கதையை நான் சொல்லாமலேயே பேச ஆரம்பித்து விட்டாள். மறைவாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தது, எல்லோருக்கும் தெரியும்படி பேசி விரிவான ஏதோ ஒரு கதைப்பாடல் போல உருவாக்கிவிட்டாள்.

ஒரு வருடம் முன்பு சான்டீகோ வீட்டில் இருந்த பல்பு உடைந்தபோது தற்செயலாக சொன்ன கதை அது. அவளுக்கும் ஹரிஷுக்கும் அந்த கதை முதலில் புரியவில்லை. அது ஒரு நிஜக்கதை என்பதை தாண்டி பல்பும் அதன் நாயகனான மகேஷின் சித்தப்பாவும் அவர்களுக்கு மிக முக்கிய பாத்திரங்களாக இன்று மாறிவிட்டார்கள். வாணி எல்லோரிடமும் அக்கதையை பேசியதால் இங்கு மறந்துப்போன சிலருக்கு அது புது தெம்பை அளித்ததுபோல ஆகிவிட்டது. பார்க்கும்போதெல்லாம், அவரைப்பற்றி தெரிந்தவர்கள்கூட, என் சம்பந்தமான அந்த கதையை சொல்லச் சொல்லி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா, 'இவன் சொன்னது எதுவும் எனக்கு இப்ப ஞாபகமே இல்ல' என்று கூறினார் வாணியிடம். 'இதெல்லாம் வேற இவன் பண்ணானாமா' என்று கோபமாகவும் மகிழ்ச்சியாகவும் வெளிப்பட்டது அவரது குரல். உண்மையில் அந்த கதையில் பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை, பழமையாக, அதேவேளையில் அதிலுள்ள வேடிக்கையின் சாயலை கேட்கதான் உறவினர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதனால் சில ஆண்டுகளுக்குபின் அமெரிக்காவிலிருந்து மனைவி மகனுடன் ஊர் திரும்பியிருக்கும் இந்த பதினைந்து விடுமுறை தினங்களும் நான் முடிக்க நினைத்திருக்கும் பயணங்கள், சந்திப்புகள் போன்ற முக்கிய விஷயங்கள் இல்லாமல் இதிலேயே கழிந்துவிடும் என்ற பயம்தான் அதிகமாகிவிட்டது.

பள்ளியைவிட்டு வீட்டிற்கு வந்ததும் இருக்கும் தின்பண்டங்களில் எதாவது ஒன்றை சின்ன கின்னத்தில் போட்டு அம்மா கொடுத்து விடுவார். சீருடை கழற்றி முகம் கழுவியபின் எடுத்துக்கொண்டு பின்னால் இருக்கும் கிணற்றடிக்கு சென்று கால்களை நீட்டி அமர்ந்து சாப்பிட ஆரம்பிப்பேன். கிணறு என்று பெயர்தான் ஆனால் சின்னதாக இருக்கும். அதன் ஒருபக்கம் கருங்கல் பாவப்பட்டிருக்கும். அந்த கருங்கல்லில் அமர்ந்து பத்தடி முன்னால் உள்ள சுவற்றையும் கூரைக்கு இடையில் உள்ள மேகங்களையும் கவனித்தபடி அமர்ந்திருப்பேன். அந்த பக்கம் அடுத்த தெரு வீட்டின் கொல்லை வந்துவிடும். அங்கும் ஒரு கிணறு உண்டு. அதில் தண்ணீர் இறைக்கும் சரடையின் உரசல் ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். நடப்பவர்களின் ஆடை உரசல் ஒலிகளும், துணிதுவைக்கும், பாத்திரம் கழுவும் ஒலிகளும் கேட்டுக் கொண்டிருக்கும். ஒரு முறை எப்போதும் போன்ற ஒரு மந்தமான மாலையில் பறவைகளின் கீச்சுகுரலின் நடுவில் இதற்குமுன் கேட்டிராத ஒரு சன்ன குரலில் பல்பு என்று ஒரு குரல் கேட்டது. முதலில் அந்த சத்தம் தவறுதலாக கையிலிருந்து நழுவிவிட்ட ஒரு சின்ன பொருள்போன்ற ஏதோ ஒன்று என நினைத்துக் கொண்டேன். மீண்டும் அதே சன்னமான நடுவயது மனிதரின் குரல் பல்பு என்று யாரையோ அழைப்பது போல் கேட்டது. பயந்து தின்பதை நிறுத்திவிட்டு அப்படியே ஓடி வந்து அடுப்படியில் நின்ற அம்மாவிடம்பல்பு யாரோ சொல்றாங்கமா’ என்றேன்.

அடுப்பில் எதையோ செய்தபடி ஒரே திக்கில் யோசனையில் இருந்த அம்மா ஓடிவந்த மூச்சிறைப்புடன் நான் சொன்னதைகூட கேட்காததுமாதிரி இருந்துவிட்டு 'அதுக்கென்ன இப்ப?’ என்றார். ‘அங்க ஒரு பைத்தியம் இருக்கும் அதுதான் அப்படி சொல்லிகிட்டு இருக்கு சாப்பிட்டு முடிச்சுட்டு போயி படிக்கிற வேலைய பாரு’ என்றார். ‘பைத்தியமா? மனுச குரலுமாதிரியே இருந்துச்சுமா’ என்றேன். பைத்தியங்களை அகோர முகத்துடன் கடின உடற்கட்டுடன் இருப்பவர்களாக அப்போது நினைத்திருந்தேன். அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை, சமையலுக்கு தேவையான வேறு ஒரு பொருளை எடுக்க போய்விட்டார். மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது அந்த சத்தம் வரவில்லை.

சாப்பிட்டபின் கை கழுவ வரும்போது, வெளியே சென்று விட்டு கால்கழுவும்போது, அம்மா வைத்திருக்கும் செடிகளில் பூக்களை பறிக்க வரும்போது என்று கொல்லைக்கு வரும்போதெல்லாம் அந்த சுவரோரம் நின்று பல்பு சத்தம் வருகிறதா என்று பார்ப்பது என் வாடிக்கையாகி போனது.

நானே மறந்துபோன ஒரு நாளில் பல்பு பல்பு என்று இருமுறை சொன்னதை கேட்டதும் எப்போது கேட்கப் போகிறேன் என்று நினைத்திருந்த என் மறந்துபோன ஆவல்கள் எல்லாம் கிளர்ந்தெழுந்தன. சுவரில் கையூன்றி தலை ஒருபக்கம் சாய்த்து மற்றொரு பல்புக்காக காத்திருந்தேன். ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் பல்பு என்று கேட்டது. நான் இங்கு இருக்கிறேன் என்று அறிந்து சொல்லப்பட்டது. நான் சற்று தைரியம் பெற்றவனாக பல்பு என்று ஆச்சரியத்துடன் கேள்வி கேட்பதுமாதிரி பதிலளித்துவிட்டு கூடத்திற்கு ஓடிபோனேன். யாராவது வாசலில் அப்பாவிடம் வந்து கேட்கப் போகிறார்கள் என்று பயத்துடன் காத்திருந்தேன்.

அடுத்த நாள் மாலை வந்த போது இருமல் ஒலியினுடே பல்பு என்று சத்தம் வர பல்பு பல்பு என்று இருமுறை பதில் அளித்துப் பார்த்தேன். இப்போது அதிக தைரியம் பெற்றவனாக அங்கேயே நின்றிருந்தேன். முடிகள் அடர்ந்த தடித்த கை ஒன்று சுவரில் ஊன்றி தலை மட்டும் வெளியே தெரியயாருடா அது?’ என்று கேட்கும் என நினைத்திருந்தேன். ஆனால் மீண்டும் சன்ன குரலில்பல்பு …’ என்றே சத்தம் வந்தது. என்ன பண்ணலாம் என்று யோசித்துவிட்டு பல்பு பல்பே... என்று பெரிய குரலாக கத்தி விட்டு ஓட்டம் எடுத்தேன்.

கிண்டல் விளிப்புகளுக்கு அந்த குரல் அசரவில்லை என்பதை சில நாட்களில் தெரிந்துக் கொண்டேன். வேறு அதட்டல்களுக்கும், உறுமல்களுக்கும் அது அசரவில்லை. எதற்கும் மசியாத பிடிவாத எண்ணத்துடன் அந்த குரல் வேறு எந்த சம்பாவாஷனைக்கும் தயாராக இல்லை. எப்போதும் பல்பு என்கிற ஒற்றை வார்த்தையோடு மட்டுமே நிறுத்திக் கொண்டது. சில நேரங்களில் பல்பு என்று நான் சொல்லும்போது பல்பு பல்பு என்று தவறு செய்துவிட்ட பதற்றத்துடன் பதிலளிப்பதும் உண்டு. சில நேரங்களில் அடித்தொண்டையில் பல்பூ.... என்று பெரியஆள் தோரனையில் கூவிபார்ப்பேன். பயந்து போனபோனதுபோல் அவரிடமிருந்து பதிலிருக்காது. பொதுவாக இருமல் ஒலி, கரகரப்பான அடித்தொண்டை சொறுமல்கள், மூக்கு உறிஞ்சல்களைக் கொண்டு அவரின் இருப்பை அறிந்துக் கொள்ளமுடியும். ஒரு முறை சின்ன கல்லை விட்டெறிந்தேன். அங்கிருந்த தகர கூரையில் பட்டு தெறித்து கிட்டுகிட்டு ஒலியுடன் தரையில் விழுந்து ஓடியது தெளிவாக கேட்டது. ஆனால் அந்த குரல் அதனால் எந்த கோபமோ எதிர்வினையோ கொள்ளவில்லை. சிலநாட்கள் கழிந்து ஒருநாளில் டாய்... என்று அதிர்ந்த பெரிய சத்தம் கேட்டது. பதறியடித்து ஓடிவந்தேன். உண்மையில் அவர் தனக்கு தானே பேசிக்கொண்டார். சில நேரங்களில் எதிரில் இல்லாத நபரிடம் கேள்வி கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.

பள்ளி நண்பர்களுக்கும், தெரு நண்பர்களுக்கும் அது குறித்து பேசிய போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு முறை முருகானந்தம் மட்டும் மகேஷின் சித்தப்பா உன்னைதான் தேடிக்கொண்டிருப்பதாக கூறினான். அவரின் உறவுமுறையில் இருந்த ஒருவனை கேட்டபோதுஅந்த கல்ல தூக்கிப் போட்டது நீதானா? எங்க மாமா சொல்லிக்கிட்டு இருந்தாரு’ என்று சொல்லி அதை ஊர்ஜிதப்படுத்தினான். அது உண்மையென நம்பியிருந்தேன். தீபாவளி சமயங்களில் வெடிகளை கொளுத்தி அந்த பக்கம் தூக்கிபோட்டு வெடிக்க வைக்கும் அளவிற்கு தைரியம் பெற்றேன். ஒரு சமயம் பாயாசம் வைத்திருந்த டம்ளருடன் சென்று ‘எங்க வீட்டுல இன்னிக்கு பாயாசம், வேணுமா’ என்றிருக்கிறேன்.

வீட்டு தேவைக்காக பல்பு வாங்கிவரும் போதும் மின்சாரம் போய்விடும் நேரங்களிலும் அவரை நினைத்துக் கொள்வேன். அவர் பல்புகள் நிறைய இருக்கும் அறையில் அமர்ந்து பல்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பதாக தோன்றும். பல்புகளை ஏன் அவர் சேகரிக்கிறார், அதில் இருக்கும் தத்துவம் என்ன என்று என் கற்பனை தேடலை நானே விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன். ஸ்டாம்பு சேகரிப்பு போன்று பல்பு சேகரிப்பு அவருக்கு இருந்திருக்க வேண்டும். அதன் பல்வேறு வடிவங்கள், அதன் வரலாறு என்று எத்தனை சாத்தியங்களை அவர் கற்றிருப்பார். ஆனால் அடிக்கடி பல்பு என்று சொல்வதற்கான நிஜமான காரணம் இன்றுவரை அறியமுடியவில்லை. அம்மாவிடம் அப்பாவிடம் அவரைப் பற்றி கேட்கும்போது முக்கியமற்ற ஒன்றைப் பற்றி ஏன் இத்தனை கவலைப்படுகிறேன் என்கிற எரிச்சல் அவர்களிடம் வெளிப்படும். அதனால் அவர்களிடம் அவரைப்பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

படிப்பை முடித்து வேலைக்காக சென்னை சென்றபின்னும் திருமணம் முடித்து அமெரிக்கா சென்றபின்னும் அவரை மறந்துவிட்டேன் என நினைத்திருந்தேன். இடையே வரும் சில நாட்களை தவிர எட்டு தொடர் இந்திய பயணங்களுக்கு பின்னும் இந்தியா பற்றிய நினைவுகளில் நினைவுகளில் முதலில் வருவது பல்பும் அதை சொல்லும் மகேஷின் சித்தப்பா மட்டுமே. அமெரிக்காவில் வீடும் காரும் வாங்கி சற்று பெரிய இடைவெளிக்குப்பின் இந்தியாவிற்கு வரும் பயணம் இது. பல்பு சித்தப்பா இப்போது பின்பக்க வீட்டில் இல்லை. வயதின் காரணமாக வேறு இடம் மாறிவிட்டிருக்கிறார். அப்பா இறந்தபின் தனியாக இருக்கும் அம்மாவிற்கு நீண்டநாட்கள் கிடைக்காமல் இருந்த கீரின்கார்டும் கிடைத்துவிட்டது, அதனாலேயே என்னவோ பல்பு சித்தப்பாவின் காலம் முடிவதற்குள் கண்டுவிடவேண்டும் என்கிற எண்ணம் மனதை பலமாக அழுத்தி பிடித்திருந்தது.

ராமமூர்த்தி மாமாவை அவரது வீட்டு வாசலில் சந்தித்தபோது வாங்க மாப்பிள்ளே என்று வாய்நிறைய கூறினார். தயங்கி நின்றபோது ‘உட்காருங்க மாப்ளே, என் தங்கச்சி மாப்ளே நீங்க, வாணி பொண்ணு சொன்னா, உங்களுக்கு அவரை பாக்கணும் அவ்வளவுதானே! நா பாத்துகிறேன்’. ஒரு மாதிரி தலையசைக்க வேண்டியிருந்தது.

சாதாரண மனிதர்களைப் பற்றி விசாரிப்பதைவிட அவரைப் பற்றி விசாரிப்பதில் ஒரு சின்ன கூச்சத்தை வெளிப்படுத்ததாமல் இருக்க முடியவில்லை. ராமமூர்த்தி மாமாவிடம் பேசிய பின்னே பல்பு சித்தப்பாவை ஆறேலு தெருக்களைக் கொண்ட மானாம்புசாவடியில் காண்பது எளிதல்ல என தெரிந்தது. திருமணம் ஆகாத பல்பு சித்தப்பா அவரது அண்ணன் வழியில் மட்டும் உறவினர்களை உடையவர். அவர் அண்ணனின் பிள்ளைகள் நான்கு பேரும் ஒரு அத்தையும் மாதம் ஒரு வீடு என்று வைத்து அவரை கவனித்துக் கொள்கிறார்கள். இப்போது எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை மற்ற வீட்டுக்காரர்கள் சொன்னால்தான் அவரை காணமுடியும். அத்தனைக்கு மேலாக அவரை காண இப்போது இருக்கும் வீட்டில் இருப்பவர்களின் அனுமதியும் வேண்டும். ஒரே ஊரில் அடுத்த தெருவில் இருந்த பல்பு சித்தப்பாவை இதுவரை காணமுடிந்ததில்லை என்கிற சங்கடம் வந்தது இந்த பயணத்தில்தான். இரண்டு நாட்களில் ராமமூர்த்தி மாமா பல்பு சித்தப்பா வீட்டை கண்டுபிடித்ததோடு அவரிடம் பேசிவிட்டும் வந்துவிட்டார். அதைப் பற்றி சொல்லச் சொல்ல அவர் காணவேண்டும் என்கிற ஆவல் எழுந்துக் கொண்டிருந்தது.

எழுபது வயதுக்கு மேலாகிவிட்ட பல்பு சித்தப்பாவை செண்பகவள்ளி நகரில் நாலுகட்டில் ஒரு கட்டு வீட்டில் இருந்ததாக சொல்லி கையோடு அழைத்துச் செல்ல அடுத்தநாளே அரக்கபரக்க வந்துவிட்டார் ராமமூர்த்தி மாமா. கரைவேட்டியும் மேலே கதர் ஜிப்பாவும் நெற்றியில் குங்குமம் சந்தனத்தோடு வேகமான உடலசைவுகளோடு வந்திருந்தார். பல்பு சித்தப்பாவை காண கொண்டிருக்கும் ஆவலை அவரது உறவினர்கள் அறிவது சில சங்கடங்களை அளிக்கும் என்கிற பயத்தால், திடீரென அவரை சந்தித்துவிட்டேன் என்று காட்டிக்கொள்ள நினைத்தற்கு மாறாக இப்படி சடுதியில் அவர் எங்களை கிளப்புவது சற்று சங்கடமாக இருந்தது. அவரிடம் 'வேறு ஒரு நாள் வெச்சுக்கலாமா' என்றேன் மெதுவாக. ‘கொஞ்சம் வேலை இருக்கிறது’ என்றேன். வாணி இடையில் புகுந்து அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, ஏங்க அந்த வேலையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் வாங்க இன்னிக்கு போறோம்' என்று அவளே முடிவு செய்தாள்.போகும்போது ஆராய்ச்சி செய்ய செல்லும் ஒரு ஆராய்சியாளன் போல் உணரலானேன். தேவையற்ற மெனக்கெடலால் தோன்றும் லேசாக பதட்டம் மனதில் இருந்தது. 'இப்பயும் பல்பு ஞாபகம் வெச்சிருப்பாரா' என்று கேட்டு எரிச்சலூட்டினாள். மிக பழமையான வீடு, சுவரில் இருந்த சுண்ணாம்புகள் கழன்று உள்ளே இருக்கும் சிமெண்ட் அல்லது மண் காரைகள் பெயர்ந்து நோயுற்ற மனிதன் வீதியில் நிற்பது போன்றிருந்தது அந்த வீடு. உள்ளே தாழ்ந்து செல்லும் வழியில் வாசல்களில் வேடிக்கைப் பார்க்கும் மனிதர்களை கடந்து கடைசியில் வந்தபோது பளீச்சென்ற குண்டுபல்பு எரியும் ஒரு குறுகலான வீட்டை வந்தடைந்தோம்.

உள்ளே சற்று வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் ஒரு தூணை பிடித்து குனிந்த நிலையில் நின்றிருப்பது சற்று பயத்தை உண்டுபண்ணியது. அவரிடம் பல்பு சித்தப்பாவை காண வந்திருப்பதாக ராமமூர்த்தி மாமா என்னை காட்டியபோது அடி வயற்றிலிருந்து சில்லென்று உணர்வு மேலேறியது. ராமமூர்த்தி மாமா அதிக உற்சாகமாக இருந்தார். அவரது உற்சாகம் வாணிக்கும் ஹரீஷுக்கு தொற்றியிருந்தது. அவர்கள் தேவையற்றும் கவனமற்றும் சிலவிஷயங்களை செய்வது போலிருந்தது. வேண்டுமென்றே அடிக்கடி சிரிப்பதாக தோன்றியது. சற்று பெரிய இருட்டடைந்த அறை, பின்னால் ஒரு அடுப்படி, அதன் பின்னால் ஒரு முற்றம் கை கால் கழுவ பின் ஒரு கழிவறை அது வயதான பல்பு சித்தப்பாவிற்கு மட்டுமானது. அனைத்தையும் வீட்டின் நீள அகலங்களோடு விவரித்துக் கொண்டிருந்தார் மாமா. அறையிலிருந்து அடுத்த அறைக்கு செல்லும் நடைபாதையில் ஒரு நீள பெஞ்சு. அதன் கால்களின் மட்டும் முன்பு பூசப்பட்டிருந்த நீலவண்ணம் இருந்தது. மற்ற பகுதியில் மரத்தின் நிறத்தோடு சில இடங்களில் பெயர்ந்த வெண்மை நிறமும் இருந்தது. அதில் கைகளை ஊற்றி கால்கள் தொங்க தரையை பார்த்து அமர்ந்திருந்தார் பல்பு சித்தப்பா. இடது காலின் கட்டைவிரலும் அடுத்த விரலும் அடிக்கடி உரசிக்கொண்டிருந்தன. அவர் எந்த சிந்தனையும் அற்று இருக்கிறார் என்று தோன்றியது.

ராமமூர்த்தி மாமா உற்சாகமாக பேசஆரம்பித்தார். என்னை கைகாட்டி ‘மாப்ள அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு அதுவும் உங்கள பாக்கணும்னு’. பல்பு சித்தப்பா தலையை தூக்கி எந்த சிரத்தையும் இல்லாமல் அவர் கண்கள் என்னை தொட்டு திரும்பின. அப்பாவின் பெயர், குடும்பவகையறா, பரம்பரையின் பெருமை என்று எல்லாவற்றையும் நேற்று நடந்ததுபோல சொல்லிக்கொண்டிருந்தார். இடையே ‘அது என்ன ஸ்டேட் மாப்ள’ என்றார். தலை திரும்புவதற்குள் வாணி ‘கலிபோர்னியா மாமா’ என்று சொன்னதை ஏற்று, ‘ஆமாம் கலிபோர்னியா அங்கேந்து வந்திருக்காரு’. வேறு ஏதோ பேசிவிட்டு நினைவு வந்தவராக எழுந்து ‘நீங்க உட்காருங்க மாப்ள, அவருகூட பேசுங்க’ என்னை எழுவைத்து என் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார்.

மீண்டும் அவர் கண்கள் என்னை நோக்கின. அவரை ஏன் நான் சந்திக்க விரும்புகிறேன் என்ற எண்ணமே முதலில் எழுந்தது. இத்தனை நாட்கள் தோன்றாத எண்ணம் எப்படி வந்தது. எளிய மனிதர்களை காண்பதில் இருக்கும் சுகமா? நான் இங்கேயே இருந்திருந்தால் வந்து பார்த்திருப்பேனா? ராமமூர்த்தி மாமா சிரத்தையை எடுத்து இந்தளவிற்கு உதவியிருப்பாரா? எந்த மேன்மையும் புதிய விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளாத அவரை பார்த்து எதை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த மகிழ்வை நோக்கி என் மனம் ஒருமை கொள்கிறது. எதைக் காண இவ்வளவு துடிக்கிறேன். எதிரில் அமர்ந்திருப்பது அவர்தானா என்று சந்தேகம் எழுந்தது. மனதில் நினைத்திருந்த சித்திரத்தைவிட நன்றாகவே இருந்தார்.

அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்தபோது அந்த பெஞ்ச் சற்று ஆடிநின்றது. என் அருகாமை அவருக்கு என்ன உணர்த்தியதோ முகம்பார்த்து மீண்டும் தரையை பார்த்தார். ‘நல்லா இருக்கீங்களா’ என்றேன். சின்ன புன்முறுவல் அது அந்த கேள்வி புரிந்ததாலா என்று தெரியவில்லை. மெல்லிய நகைச்சுவை உணர்வு அப்போது தலைதூக்குவதை நானே வெறுத்தேன்.

ஆனால் அந்த சூழலை அப்படிதான் எதிர்கொள்ளவேண்டும் என தோன்றியது. நான் அவர் பழைய வீட்டின் பின்பக்கத்து வீட்டில் இருந்ததை அவருக்கு சொல்லி முடித்தபோது அவர் கண்கள் என் உதடுகளை நோக்கியபடி இருந்தது. எல்லாவற்றையும் பேசி முடித்த கணம் வாணி பேச ஆரம்பித்தாள். நாங்கள் வந்திருக்கும் நோக்கம், என்ன காரணம், உங்களிடமிருந்து என்ன தேவை என்பனவற்றை நான் பேசியதைவிட தெளிவாக பேசினாள். ஒரு முறை பேசிப்பார்த்ததுபோல பேசி முடித்தபோது பல்பு சித்தப்பாவின் உதடுகள் பின்னால் இழுபட்டு முன்வந்தன. அவள் கொண்டுவந்திருந்த பழங்கள், சாக்லெட்டுகள், பிஸ்கெட் போன்றவைகளை அந்த பெண்மணியிடம் அளித்தாள் வாணி. அமெரிக்க பதப்பொருட்களை எத்தனை நாள் வைத்துக் கொள்ளமுடியும் என்பதையும் கணவனின் வேலையின் அவசரம் பற்றியும் கூறிவிட்டு திரும்பி 'சரி கிளம்புவோமா' என்றாள். போகும்போது ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு கிளம்பினேன். அவரிடம் எதையோ ஒன்றை கேட்காமல் செல்கிறேன் என்று தோன்றியது. வீட்டிற்கு வந்தபோது பெரிய பயணத்தை முடித்துவிட்டு வந்த அசதியாக இருந்தது. பல்பு சித்தாப்பாவை பற்றிய ஹரிஷின் கேள்விகளை எரிச்சலோடு எதிர்கொண்டேன்.

தூக்கத்தில் இருட்டறையில் இருள் படிந்த பல்பு சித்தாப்பா அமர்ந்திருக்கிறார். அவர் உடலின் ஓரங்களில் மட்டும் வெளிச்சகோடுகள் அவரின் இயக்கத்தை உறுதிப்படுத்தின. அவருடைய கைகள் கணத்து தொங்குகின்றன. அதில் வீங்கிய விரல்கள் தன்னிச்சையாக வெவ்வேறு திசைகளில் காற்றை துளாவின. துளாவிய விரல்களில் கருமை எழுத்துகள் எழுந்துவந்தன. அவர் மூக்கை சொறிய கையை கொண்டு சென்றதும் கருமை இருள் அவர் மூக்கில் படிந்தது. கைகளை நீட்டி தொட்டபோது என் கருமை இருள் ஊர்ந்தோடியது. இருளை துடைத்தெறிய என் கைகள் அலைந்தன. பதறி எழுந்தமர்ந்தேன்.
இருள்விலகாத காலையில் டாக்சி கார் வந்து நின்ற சமயம் ராமமூர்த்தி மாமா வந்துவிட்டார். உதவிசெய்யும் மனநிலையில் இதை முன்ன வெச்சுடுங்க, ஞாபகமா எல்லாத்தையும் எடுக்த்துக்கங்க... என்று கட்டளைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். கடைசியாக பரபரக்கும் கைகளோடு ‘என்ன மாப்ள திருப்தியா’ என்றார். சாமான்கள் எடுத்து வண்டியில் வைக்கும் அவசரத்தில் நடுவே மையமாக சிரித்தேன். ‘ம்.. பின்ன அவர பாக்குறது சாதாரண விஷயமா’ என்றார். வாணி இடையே வந்து ‘இவரு இப்படிதான் மாமா எதையும் சொல்லவே மாட்டாரு, வாய தொறந்து சொல்லுங்க, நமக்காகதான வந்திருந்தாரு' என்றாள். பூட்டியதை இழுத்துப் பார்த்து இருட்டில் பொடிநடையாக நடந்து அம்மா பின்சீட்டில் தாராளமாக அமர்ந்துக் கொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த வாணி தலையை நீட்டி ‘சொல்லுங்களேன்…’ என்று இழுத்தாள். வண்டி ஏறியதும் திரும்பி ராமமூர்த்தி மாமாவிடம் 'திருப்திதான் மாமா' என்றேன். உற்சாகத்துடன் சிரித்தார்.
 
திரும்பிப் பார்த்தபோது கையசைத்துக் கொண்டிருந்தார். வேடிக்கைப் பார்க்கும் மனநிலையில் ஹரிஷ் என் மடியில் அமர்ந்திருந்தான். கையசைத்துவிட்டு முன்பக்கம் திரும்பி சாலையை கவனித்தேன். பின்னால் இருந்த இருட்டு பகுதியை நோக்கி வீடுகளும் மரங்களும் ஓடிமறைந்தன. சட்டென ஆழ்மனதிலிருந்து ஒரு எண்ணம் தோன்றி மேலே எழுந்துவந்தது. எண்ணம் தோன்றியதுமே உடலெல்லாம் சிலிர்த்தது. ஏதோ ஒரு பயம் மனதில் எழுந்தது, ஆனால் அது என்னவென்று புரியவில்லை. மன்னித்துவிடுங்கள் பல்பு சித்தப்பா என்று கண்களை மூடி மனதில் சொல்லிக்கொண்டேன். கண்கள் பொங்கி மொத்த கண்ணீரும் வெளியேறியது. தூசிபட்டுவிட்டது போன்ற பாவனையோடு தலைசாய்த்து கால்சிராய் பையிலிருந்து கைகுட்டையை எடுத்து அவசரமாக துடைத்தேன். கண்களை திறந்தபோது மெல்லிய ஈரக்காற்றில் இருட்டான உலகம் உயிர்ப்புடன் இருப்பதை அப்போது உணர்ந்தேன். வண்டி இருளை கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. 

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல்பு சித்தப்பா பளிச்சென்று மனதில் பதிந்துவிட்டார்.