Monday, October 30, 2017

விமர்சனம்: சாமத்தில் முனகும் கதவு தொகுப்பு பற்றி மேரி கிறிஸ்டி
என் அன்பு வாசக நண்பர்களுக்கு, திரு.கே.ஜே. அசோக் குமார் வளர்ந்து வரும் நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்; விரைவில் மிக முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக வரவிருப்பவர். சென்ற தடவை மலேசிய தமிழ் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தேன். தற்போது வாசித்தது கே.ஜே. அசோக் குமார் அவர்களின் "சாமத்தில் முனகும் கதவு" - 18 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் நான் சொல்ல ஆரம்பித்தால் அதுவே ஒரு பெரிய புத்தகம் அளவுக்கு வந்துவிடும். ஏனெனில் அவரின் கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மேலே மேலே சிந்தனைகளைக் கிளறிவிடுகின்றன.  அதனால் உதாரணத்திற்கு என்னைக் கவர்ந்தவற்றுள் ஒன்றிரண்டு வாக்கியங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். "சாமத்தில் முனகும் கதவு" என்று ஒரு சிறுகதை. அதில் இப்படி ஒரு வாக்கியம்: "கடை எண்ணெய் தினமும் பார்த்துப் பழகி சாதாரணமாகி விட்டிருப்பதை உணர்ந்தபடி சைக்கிளை எடுத்தான்". இது ஒரு சாதாரண மனித மனதின் அன்றாட பரிணாம வளர்ச்சி. இதை மிக இயல்பாக சொல்லிவிட்டார். நம் வாழ்வின் ஒவ்வொரு சமயத்திலும் நிகழ்வது இதுதான்அடுத்து "முகங்கள்" என்னும் சிறுகதையில், "வெறும் முகமாற்றம்தான் வாழ்க்கையா என ஓவியம் வரையும் ஒவ்வொரு சமயமும் யோசித்திருக்கிறேன்". இந்த வரியை சிறிது நேரத்துக்கு என்னால் கடந்து செல்ல இயலவில்லை. கொஞ்சம் அதிகமாகவே என்னை யோசிக்க வைத்துவிட்டார்.

இன்னொரு "வருகை" என்னும் சிறுகதையில் அவர் புலியாக இலக்கியத்தை புனைந்திருப்பதாக நானாக கற்பனை செய்து வாசித்ததில் என் மனம் சொல்லொணா உவகை அடைந்தது. அதில் வரும் ஒரு வரியை வாசித்ததில் நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன். "அது(புலி) யாரையும் துன்புறுத்தாத போதும், அது வரும் பாதையில் மக்கள் தேவையில்லாத நடமாட்டத்தை வைத்துக் கொள்வதில்லை." இது அப்படியே என் நண்பர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்து வருவது. இச்சிறுகதையை மிகவும் சிலாகித்து வாசித்தேன்.

இப்படி ஒவ்வொரு சிறுகதையிலும் அசால்ட்டாக அவர் சொல்லியிருக்கும் சில வரிகள் மிகவும் நுட்பமானவை. இந்த நுட்புநோக்குத் திறன் இவரிடம் கதாபாத்திரங்களைப் பற்றிய வர்ணனையிலும் இயற்கைச் சூழலை வர்ணிப்பதிலும் மிக அதிகமாகவே வெளிப்பட்டுள்ளது.
முதல் சிறுகதையாகிய "வௌவால்கள் உலவும் வீடு"வில் வாசுவின் பார்வையில் அவர் அண்ணனைப் பற்றிய வர்ணனைகள் என் கண்களில் நீரை வரவைத்துவிட்டன.  "சாமத்தில் முனகும் கதவிலோ" அவளின் வெளிர் நிற உதடுகளுக்கு யோனியை போகிறபோக்கில் ஒப்பிட்டிருந்ததை வாசித்த கணம் முகம் சுழித்துக் கொண்டாலும், அதைக் கடந்து கொஞ்சம் யோசிக்கையில், இதுல என்னாயிருக்கு, அது அவ்வளவுதான், இதுக்கு போயி எல்லாரும் பெரிசா அலட்டிக்கிறீங்களே என ஆசிரியர் ஒவ்வொருவரையும் அறைந்து கேட்டது போல கன்னம் வலித்துக் கொண்டது. "சாமத்தில் முனகும் கதவு" ஒரு இல்லற வாழ்வை ஆராய்வது போல புனைந்திருந்தாலும் அது சகலமானோரும் வாசிக்க வேண்டியது. சாமான்யத் தம்பதிகள் வாசித்து சூசகமாக நடந்து கொள்ள வேண்டிய பக்குவத்தைத் தருகிறது. அதே சமயம் விஷேசமானவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டத்தில் துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதையும் அது சுட்டிக் காட்டத் தவறவில்லை.

"முகங்கள்" சிறுகதை ஒரு உளவியல் ஆய்வு. "அவன்" - என் மனதின் போராட்டம்; நான் அடிக்கடி எதிர்கொள்வது; ஒருநாள் எழுதவேண்டும் என இருந்தது..இதை எப்படி தாங்கள் அப்படியே எழுதினீர் என இச்சிறுகதை ஆசிரியரிடம் நான் கேட்க வேண்டும். "பின்தொடரும் காலம்" - ஒரு வாழ்வின் அபத்தம் நிகர் வாழ்வாக இறுதிக் கணம் வரை ஆசிரியரால் லாவகமாக கொண்டுசெல்லப்பட்டுக் காட்டப்படுகிறது. "வாசமில்லா மலரை" வாசித்து நாவடக்கம் கற்றேன். இன்றுதான் வாசித்தேன். இன்றே என்னை அது இருவரிடமிருந்து காப்பாற்றி கண்ணீர் மல்க நன்றி கூற வைத்தது. "அப்ரஞ்ஜி": சுரண்டலுக்கும் சுயநலத்துக்கும் கொடுக்கப்பட்ட சரியான சவுக்கடி. "கைக்கு எட்டிய வானத்தில்" மேகங்களைத் தேங்காய் துருவலாக்கி நட்சத்திரங்களை சீனித் துகள்களாக்கி பொட்டுக்கடலையுடன் சீனியைச் சேர்த்து சாப்பிடுவதுபோல இந்த தேங்காய் துருவலை சீனித்துகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என மூன்று குட்டி நண்பர்கள் சங்கர், வசந்தன், கமலி மூவரும் மாலை வேளைகளில் கோயில் திட்டுகளில் மல்லாந்து படுத்து வானத்தை துழாவுகையில் ஆசிரியரின் குறும்புத்தனம் மெல்லிதாய் எட்டிப் பார்த்து புன்னகை கொள்ள வைத்தது. இக்குறும்புத்தனங்களையும் கற்பனை வளத்தையும் பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை. பெற்ற பிள்ளைகளைக் காணடித்துவிடுகிறார்கள். இச்சிறுகதையை வாசிக்கையில் அனிச்சையாக மனம் படபடத்தது. நானும் ஒரு பிள்ளையைப் பெற்றவள் என்ற காரணமாகவும் இருக்கலாம்

"எறும்புடன் ஒரு சனிக்கிழமை": இச்சிறுகதை என்னிடம் உண்டாக்கிய தாக்கம் வேறு. நான் தினமும் இரவில் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் என் இருசக்கர வாகனத்தை நிறுத்துமிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் என் மகனின் வயதொத்த, எங்கள் வீட்டு, புஸ்புஸ் முடிகொண்ட வெண்ணிற, ரோஸ் ரோஸ் என செல்லமாக எங்கள் அனைவராலும் அழைக்கப்பட்ட துருதுரு நாயின் இறப்பை நினைவுபடுத்தியது. "பிணவாடை": மிகச் சிக்கலான சிறுகதை. ஏனெனில் எனக்கு புரியவில்லை. கூடுவிட்டுக் கூடு பாயும் அனுபவம் உள்ளவர்கள் வாசித்து எனக்கு சொல்லலாம். அடுத்து, ஒரே விஷயத்தை இனிப்பானதாகவும் கசப்பானதாகவும் எழுத்தில் வடிக்கும் திறன் இச்சிறுகதை ஆசிரியருக்கு உண்டென ஆணித்தரமாக கூறலாம். இதை "கால்கள்" சிறுகதையில் வாசகர்கள் வாசித்து உவகை கொள்ளலாம். ஆகமொத்தத்தில் என்னை சிரிக்க வைத்து அழவைத்து முகம் சுழிக்க வைத்து, நன்றி கூற வைத்து என் முகத்தில் பல பரிணாமங்களைத் தோற்றுவித்து, "முகமாற்றம்தான் வாழ்க்கை!" என்ற அறிதலை என்னுள் நிகழ்த்தியிருக்கிறார்.

எழுத்தாளர் திரு. கே.ஜே. அசோக் குமார் அவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு நிறைவு செய்கிறேன்..

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தன் படைப்பு நன்கு விவாதிக்கப்படும்போது அப்படைப்பாளியின் எழுத்து இன்னும் சிறப்பு பெறுகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.