Wednesday, October 25, 2017

சலனம் (சிறுகதை)


அவளை முதலில் பார்த்தபோது முழுமயக்கதில் இருந்தாள். தெற்றுப்பல் போன்று ஒற்றைப்பல் ஒன்று நீட்டியிருந்த உதடுகளின் இடையே அசாதாரமான புன்னகை ஒன்று கூடியிருந்தது. அவளை கிடத்தியிருந்த‌ பலகையை அவளுடன் சேர்த்து தாறுமாக தூக்கிவந்தார்கள். உண்மையில் அதுஒரு கதவு. ஒரு பக்கம் தகரம் அடிக்கப்பட்ட மெல்லிய பிளவுட் மரத்தாலான கதவு. அதிகமாக நீட்டியிருந்த அதன் கால்களை ஒரு பக்கம் தூக்க வசதியாக இருந்தது. கால்கள் இல்லா மற்றொருபக்கம் தூக்கும் சமயங்களில் அவளின் தலை ஆடியபடியிருந்தது.

மருத்துவமனை வராந்தாவில் கிடத்தியபோது அவர்களிடையே ந்த சலனமும் இல்லை. பெரிய மிருகத்தின் சின்ன அசைவுகள் போல அவர்களிடையே சின்ன விசும்பல்களும், மூக்கு உறிஞ்சல்களும், அசாதரண கைஅசைவுகளும் மிகமெதுவாக தாமதமாக வெளிப்பட்டன‌. அவர்கள் ஏழுபேர். குறைந்தது மூன்று ஆண்கள் நான்கு பெண்கள் இருப்பார்கள். அண்ணன் போலிருந்தவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை அல்லது அப்படி அவன் இருக்க முயற்சிக்கிறான் என தோன்றியது. அவன் பக்கத்தில் இருந்தவன் தடித்து சற்று உயரமாக அவன் உடலுக்கு பொருந்தாத சாந்தக் கண்களோடு சூழலை மாற்றும் எண்ணம் கொண்டவன்போல காணப்பட்டான். அதேவேளையில் எந்தவித பிரச்சனையையும் எதிர்க்கொள்ளத் தயங்காதவன் போலிருந்தான். முன்றாமவன் ஒல்லியாக அங்குமிங்கும் அலைந்து அந்த கூட்டத்தில் சம்மந்தமில்லாதவனாக காணப்பட்டான். அவனுக்கு நடப்பவை எதுவும் சரியாக தெரியாது போலிருந்தது. பெண்கள் நால்வரும் சுவரில் சாய்ந்தோ, தலை குனிந்தோ மற்றவர்களை சந்திக்க பயந்தவர்கள் போலிருந்தார்கள். அக்காவை போலிருந்தவள் பதற்றமாக ஏதோ நடக்கப்போவதை எதிர்நோக்கி உதடுகளை அடுக்கடி குவித்து உஸ்... என்று சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள். மற்றப்பெண்கள் வாயையும் மூக்கையும் முத்தானையால் மூடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் கல்யாணத்திடம்தான் வந்தார்கள். தயங்கி தயங்கி அவள் விஷமருந்தி விட்டதை கூறியபின் அவர்களிடையே அசாதாரணமான மெளனம் நிலவியது. அந்த அதிர்ச்சியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை கவனிப்பது மாதிரியான அமைதி. எப்போது அருந்தினாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. கல்யாணம் டாக்டரை அழைத்துவரும்வரை சங்கோஜமாக நின்றிருந்தார்கள்.

அந்த தனியார் மருத்துவமனையில் சேர்ந்த மூன்றாண்டுகளில் கல்யாணம் இப்படிஒரு நிகழ்வை அவன் சந்திப்பது முதல்முறை. இரவும் ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது. ஒருசில கத்துக்குட்டி டாக்டர்களைத் தவிர பொதுவாக டாக்டர்கள் சென்றிருக்கும் நேரம் இது. அவசர நிலைகளுக்கு மட்டுமே தொலைபேசியில் அழைக்க வேண்டியிருக்கும். அவன் சென்று பார்த்தபோது நல்லவேளையாக டாக்டர் சாந்தா ஜோசப் மட்டும் இருந்தார். விஷயம் சொல்லி அழைத்தபோது அவர் முகம் வீட்டிற்கு போக நேரமாகும் என்பதில் இருக்கும் அலுப்பு தெரிந்தது. மேஜையில் இருந்த ஸ்டதஸ்கோப்பை தேடி எடுத்துக் கொண்டு அசதியும், களைப்புமாக லேசாக உடலை முறுக்கி தளர் நடையில் வந்தார். மயங்கிடந்த அந்த பெண்ணையும் சுற்றி நின்ற மக்களை கண்டதும் உடல்தளர்ச்சி மாறி விரைப்பு கூடியது. கண்களில் முகத்தில் சற்று கவனமான இறுக்கம் கூடி வந்தவுடன் சட்டென ஒரு கம்பீரமான குரலில் 'இந்த பொண்ணு என்ன குடிச்சிருக்கு, யாரு கூடவந்தவங்க' என்று சத்தமாக கேட்டார். ஸ்டதஸ்கோபை நிதானமாக‌ எடுத்து மூச்சை பரிசோதித்தார். வந்தவர்கள் முகங்களை திருப்பாமல் யோசிப்பதுபோல் இருந்தார்கள். 'ம்.. என்ன' என்றார். கண்களை திறந்து பார்த்தார். 'எலி பாசானத்தை குடிச்சிட்டாளா', வலது கன்னத்தை தட்டிப் பார்த்தார். தலை தன்னிச்சையாக ஆடி நின்றது. உதட்டில் கோழையாக வெளிவர ஆரம்பித்திருந்தது. 'ம்.. என்ன சொல்லுங்க' என்று சற்று அதிர்வுடன் தலைதிருப்பியபோது கல்யாணம் அவர்களில் ஒருவனிடம் சொல்லுங்க என்பதுபோல் கையை நீட்டியது சரியாக இருந்தது. சற்று தைரியம்பெற்று அல்லது பயந்துபோய் 'என்ன குடிச்சிருக்கு தெரியல டாக்டர் எலி பாசானம் வீட்டில இல்ல, சாயந்தரமாக மயக்கமா கிடந்துச்சி, இதோ இவ அக்காதான் பாத்திருக்கா' என்று ஒருத்தியை காட்டி கூறினார்.

கை காட்டப்பட்டவள் மேலும் பயந்துபோனாள். எப்பவும் சாய்ந்தரத்துல தூங்க மாட்டா, நா தான் சரி தூங்கட்டுன்னு நினைச்சேன் பாத்த புரண்டுகூட படுக்காம கிடந்தோன்னதான் பாத்து தூக்கிகிட்டு வந்தோம்’ என்றாள். சாய்ந்தரத்தை பலமுறை பயத்தில் அழைத்தார்கள். அவனுக்கு வேடிக்கையாக இருந்தும் சிரித்துவிடகூடாது என்கிற நினைப்பில் கவனமாக இருந்தான். அவள் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லாததால் திரும்பி அவளை கூர்ந்து கவனித்தார் டாக்டர் சாந்தா. அதில் அவள் மேலும் பயந்து புடவை சரிசெய்து கூந்தலை காதுக்கிடையே சொறுகி கைகளை பிசைய ஆரம்பித்தாள். 

இவ அப்பா அம்மா எங்க, அவங்களுக்கு தெரியுமா என்றார் டாக்டர் சாந்தா, இடது கையை எடுத்து பல்ஸ் பார்க்க ஆரம்பித்திருந்தார். ‘அம்மா இங்கதான் இருக்காங்க. ஆனா அவங்களுக்கு தெரியாது. வெளியில போய்ட்டு இப்பதான் வந்திருக்காங்க.’ என்றார் கூட்டத்தில் இருந்த நபர். அம்மா என்பவள் முன்னே வந்து மலக்கமலக்க விழித்தாள். அவர்களை நோக்கி சந்தேகப்படுவதும், வேறு காரணங்களை யோசிப்பதுமாக நிலைத்த கண்களுடனும் சிமிட்டிய கண்களுடனுமாக ஏதோ யோசிப்பவர் போல இருந்த டாக்டர். கடைசியாக நர்ஸ் என்று அழைத்து சில சிகிச்சைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டு நகர்ந்தார்.

வெள்ளை சேலையில் மஞ்சளில் சின்ன பூக்கள் வேலைப்பாடுகள் கொண்ட நல்ல டிசையின் இருந்தது அவள் சேலை. அவள் கண்களில் மோடாக் குடிகாரனின் போதை அப்படியே இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளின் ஏறியிரங்கும் மார்பங்கள் குலுங்க விலுக்கென்று எழுந்து அமர்ந்துக் கொள்வாள் என தோன்றியது.. பலகையில் வைத்து தூக்கி வந்ததால் ஆங்காங்கே மண் கலந்த தலை முடிகளோடு இருந்த அவளது வட்டமுகம் பார்க்க அழகாக இருந்தது. அந்த உதடு துறுத்தி தெரிந்த இடத்தில் செந்சிவப்பாக மெல்லிய கோடுகளோடு எச்சில் படித்து ஈரமாக இருந்தது. சுற்றியிருந்த மனிதர்களின் முகங்களில் தெரிந்த கவலைகள் போலில்லாமல் அமைதியாக சிரித்தபடி கிடந்தாள். கழுத்திற்கு கீழே ஈரமாக இருந்தது. சேலை சற்றுவிலகி தெரிந்த ஜாக்கெட்டில் ஈரம் பரவி மேல்பகுதி மட்டும் ஈரமாக இருப்பது அவளது வியர்வையாக இருக்கும்.

அவள் உடலில் சுகந்தமான வாசனை அடித்ததாக நினைத்துக் கொண்டான் கல்யாணம். அக்குளில் வேர்வையின் ஈரம் இன்னும் இருந்தது. இரவு வார்ட்பாய் குமரேசன் வந்துசேர்ந்தான். அவனிடம் கேஸ் சீட்டை ஒப்படைக்கும்போது காதல் விவகாரமாகத்தான் இருக்கும் என இருவரும் சொல்லி சிரித்துக் கொண்டார்கள்.

எதாவது ஒரு சாக்கிட்டு அவள் இருக்கும் 14ஆம் எண் அறைக்கு அடிக்கடி சென்று வந்தான். அரைமணிக்குபின் அவள் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருந்தது. டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த அவள் உடல் அழகிய பொம்மைபோல் கிடந்தது. கச்சிதமான உடல் அமைப்பு கொண்டிருந்ததால் அவள் கட்டியிருந்த சேலை தேவையற்ற பகுதிகளை காட்டவில்லை. மிக இளம் பெண் என்பதால் தன் உடல்மீதான நாணம் அவளுக்கு இருந்திருக்க வேண்டும். சின்ன மார்பகங்கள் சரியாக மூடப்பட்டிருந்தன. அதையும் மீறி சின்ன மேடுகளை கொண்டு அதன் முழு உருவத்தை கற்பனை செய்ய முடிந்தது. அவளைப்பார்த்துக் கொண்டே இருப்பதில் ஆலாதியான இன்பம் இருந்தது, ஆனால் கண்கள் முழித்தபின்னால் அவளை பார்க்க விடமாட்டாள். வலதுகை வலது பக்கமாகவும் இடது கை கீழ் இடது சேலையை இழுத்துவிட்டிருப்பாள்.

அவள் கண் திறக்க காத்திருந்தான். அப்படி கண் திறந்து தன்னைப் பார்ப்பதையும், மற்றவர்கள் தான் செய்த உதவியை சொல்லி அவளை ஆற்றுபடுத்தப் போவதையும் நினைத்துக் கொண்டான். தன்னை அவள் மறக்கப் போவதில்லை என்பதை அழகிய ஈரக்கண்களாலேயே அவள் சொல்லி விடுவாள்.

இதுவரை இதுமாதிரி எத்தனை கேஸ் பார்த்திருக்கிறேன் தெரியுமா என்று கூறியபடி வந்தான் குமரேசன். ‘என்ன மாப்ள வீட்டுக்கு போற நினைப்பு இல்லையா’ என்று நினைவு படுத்தினான்.

வேலைகளை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு வந்த உடை மாற்றி பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு நடந்து சென்றான். எப்போதும் பேசும் கடைக்காரரிடம் பேசுவதற்கு எதுவுமில்லை. வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு போன் செய்யவேண்டும் என நினைத்தான். கடைக்காரர் விடவில்லை, பேசிக் கொண்டேயிருந்தார். சம்பந்தமற்ற பேச்சுகளின் தொகுப்பின் கடைசியில் ‘எல்லாம் உங்க வயசு கோளாறு தம்பி’ என்றார். எதற்கு இதை சொல்கிறார் என்று தெரியாமல் சிரித்து வைத்தான்.

வீட்டிற்கு வந்தபோது போன் செய்யும் எண்ணம் மாறியிருந்தது. அம்மா ஐந்து நிமிடத்தில் பேச்சை முடிப்பவளல்ல. வீட்டிற்கு யார் வந்தார்கள், யாருக்கு காதுகுத்து, சீமந்தம் என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டுதான் வைப்பாள். அம்மாவின் பேச்சு எல்லாம் கடைசியில் அவன் திருமணம் குறித்தும், அவனுக்கு வயதாவதையும், சரியாக பெண் அமையாதது குறித்துமே இருக்கும்.

படுக்கை விரித்தபின்பு அந்தபெண்ணின் நினைவுதான் வந்தது. உதடுகளில் இருந்த ஈரப்பதம் அவன் உள்நாக்கை தொடுகையில் பச்சிளம் குழந்தையின் வாசனையாக தோன்றியது. வயது கூடுவதால் ஏற்படும் தளர்ச்சியும் நடுக்கமும் அவளுக்கு வ‌ராத ஒரு முதுமையை அவள் அடைவாள். கண்கள் மூடிகிடக்கும் அவளது கோலம் அவளின் வயதை தெரிவிக்காத ஒரு பதுமையாக மாற்றியிருந்தது.

அவள் கண் திறந்தது அதில் தெரியும் அழகில் உதட்டில் வெளிப்படும் நெளிவிலும் அவளை அதிகம் கண்டுக்கொள்ள முடியும் என நினைத்தான். இரவு முழுவதும் கோர்வையற்ற வெவ்வேறு யோசனைகள். சிலவேளைகளில் கனவுகளும் யோசனைகளும் ஒன்றாக இருந்தன. பிரித்தரிய முடியாதவகையில் குழப்பியடித்தன. நீண்ட தூக்கம் இருந்தாக‌ ஞாபகம் இல்லை. ஒருவேளை முழுஇரவும் தூங்கவேயில்லையா என்று தோன்றியது.

அவள் கண்களை திறந்து நீண்ட நகங்களை உடைய பிஞ்சு விரல்களை மென்மையாக ஆட்டி எதையோ பேசுவதுபோலவும், முகத்தில் உருண்டை கண்கள், சின்ன குவிந்த உதடுகளில் அழகிய வரிசைகிரமமான வெண்பற்கள் திறந்து கொஞ்சமும் அதிராத பேச்சுக்களால் மகிழ்ந்து அவன் விழித்தபோதுதான் அது கனவு என தோன்றவைத்தது. எப்படி தெளிவாக அவளைப் பற்றி அனைத்தையும் கவனித்திருக்கிறேன் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

காலையில் எழுந்தபோது என்றுமில்லாத உற்சாகமாக இருந்தது. உற்சாகத்திற்கான காரணங்கள் புரியவில்லை. அதில் இருக்கும் நிறைவுதான் மகிழ்ச்சியளித்தது. என்றும் கிடைக்காத அரிய பொருளை அன்று சேகரித்ததுபோல மனதில் முந்தைய காலபாரங்கள் குறைந்து லேசாகிய உடலோடு சிரித்தபடி இருந்தான். தன் நண்பர்களை சந்திக்க வேண்டும் என ஆவலாய் இருந்தது. அந்த சந்திப்பில் புதிய செய்திகளை பகிர்ந்துக் கொள்வதால் மனதில் சந்தோசங்கள் கூடிவரும் என தோன்றியது. ஆனால் அருகில் அவன் நண்பர்கள் தற்போது இல்லை. ஒரே வீட்டில் இருந்த மற்றொரு நண்பனும் ஊருக்கு சென்றிருக்கிறான். பஸ் பிடித்து இறங்கி கிளிக்கை நெருங்கும்வரை குடும்ப உறவில் இருக்கும் சிக்கல்களைப் பற்றியும் அதை எப்படி தீர்க்கபோகிறோம் என்பதைப் பற்றியும் வேடிக்கையாக நினைத்துக் கொண்டேவந்தான். என்றும் இல்லாமல் அன்று சீக்கிரம் வந்துவிட்டதை ஒரு சின்ன புருவஉயர்வால் வியப்பை வெளிப்படுத்தினான் குமரேசன். வேகமான அவனை அனுப்பி வேலையின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டான்.

குமரேசன் முகம் மலர்ந்திருந்தது. அவனைப் பார்த்ததும் நேற்று நடந்த விஷசயங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான். கூடவந்தவர்களும் அந்த பெண்ணும் நன்றி தெரிவித்ததை மிகுந்த உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தான். அவ கண்ண தொறந்தா பாரு... அப்படி ஒரு அழகு.. கண்ணுரெண்டும் முத்து சிப்பி... பார்வை அப்படி ஒரு அம்சம் மாப்ள… ஆனா மூணுமணிக்கு பாரு... ஒரு இழுப்பு மட்டும்தான் வந்தது, தூக்கத்திலேயே அப்படியே போய்டா மாப்ள... எல்லா அழுது ஒரே பொழம்புதான். அப்புறம் காலைலேயே டிஸ்சார்ஜ் பண்ணிட்டு தூக்கிட்டு போய்ட்டாங்க.

பாஸ்கர் மெதுவாக திரும்பி அவனைப் பார்த்தான். சின்ன‌ அதிர்ச்சி போன்று ஒன்று மனதில் ஓடியது. அவன் யோசித்துப் பார்த்தான், அவள் முகம் வெட்டவெளியின் தூரத்து வீடுபோல மங்கலாக தெரிந்தது. பிறகு எவ்வளவு யோசித்தும் அவள் முகம் நினைவிற்கு வரவில்லை.

(நான்காவது கோணம் செப்டம்பர்'17 இதழில் வெளியான சிறுகதை)

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படித்து முடிந்ததும், நான் எதையோ இழந்ததைப் போல உணர்ந்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கனக்கிறது