Thursday, November 2, 2017

ஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதைஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்துக் கொள்வேன். முன்பு சுஜாதா எழுதிய ஒரு சிறுகதை குறும்படம் பார்த்த காட்சிகள்போல் என் மனதில் எழுந்ததுண்டு. (பின்னர் குறும்படமாகவும் வெளிவந்தது). தி.ஜானகிராமன் எழுதிய காண்டாமணி என்னும் சிறுகதையும் அப்படியான கதைதான். தி.ஜா.வின் பல கதைகள் அப்படியானவைகள் என்று நினைக்கிறேன். ஆசிரியன் முற்றிலும் விலகி தன் மைய நோக்கத்தை பாத்திரத்தின் வாழியாகவே சொல்லிவிடுவது. வெறும் உரையாடல்களால் அல்ல, ஆசிரியரின் கூற்றுகளாலும் அல்ல, சில மெளனங்களாலும் ஒரு பார்வையாலும், சின்ன கோபத்தாலும் அதை செய்ய முடிவது என்பது எல்லா கதைகளிலும் சாத்தியம் இல்லை தான். ஜெயமோகன் எழுதி தினமணி திபாவளி'17 மலரில் வெளியான அயினிப்புளிக்கறி அப்படியான ஒரு கதை.


வாழ்க்கை எளிய சமன்பாடுகளால் ஆனது என்கிற தோற்றம் அளித்தாலும் சின்ன மாறுதலால் பெரிய சுமைகளாக இறக்கி சிக்கலான வழிகளாலாக மாறி நம்மை புரட்டிப் போடுபவை என்று புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் சில சமயம் ஏற்படுகிறது. நான் இப்படிதானே நினைத்திருந்தேன் ஏன் மாறிதெரிகிறது என்கிற நினைப்பு எந்த வயதிலும், எந்த அனுபவம் வாய்ந்த மனிதனிலும் தோன்றுகிறது. இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவது, இருக்கின்ற ஒன்றால் கவலை கொள்வது என்று எதற்கு தன்னை ஒப்புக் கொடுப்பது என்பதை புரியாமல் திணறும் மனிதன் நாம்.

வயதான மனிதன் தன் மகன் போடும் திட்டங்களில் குழப்பம் அடைகிறார். தன்னை நினைத்தே வெறுப்பு கொள்கிறார். நாம் வளர்த்த மகன் தானா என்கிற மயக்கம். கதையில் வயதான வர்மாணி வைத்தியன், பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் தன் மகன், மருமகளுடன் வாழ்கிறார். ஒரு காலையில் மூவர் அவர் வீட்டிற்கு வந்து அவர் மகனை பார்க்க வருகிறார்கள். வீட்டில் இருக்கும் அயினி மரத்தை விற்க மகன் முடிவு செய்திருப்பது அவருக்கு மகன் மேல் எரிச்சலை, கோபத்தை உண்டுபண்ணுகிறது. அதை எதிர்கிறார். மகன் ஏற்றுக்கொள்ளாததால் வயல் தோட்டத்தில் இருக்கும் சின்ன குடிசைக்கு செல்ல முடிவு செய்கிறார். தன் சிஷ்யனிடம் சில சாமான்களை வாங்கவரச் சொல்லிவிட்டு அங்கு சென்றுவிடுகிறார். போகும்போது அயினிமரத்தின் சில பிஞ்சு காய்களை பொறுக்கி/அடித்து எடுத்துச் செல்கிறார். அங்கு 40 ஆண்டுகளுக்கு முன் தன் முதல் மனைவி வைத்து கொடுத்த அயினிப்புளிக்கறி செய்கிறார், சுமாராக வருகிறது. மாலை சந்தைக்கு சென்று சாமான்களை வாங்கி குறுக்குவழியில் வர முதல் மனைவியை பார்க்கிறார். அவரது கணவன் இறந்து, தன் மருமகன் இறந்துவிட பெண்ணுடன் வசிக்கிறார். சின்ன சந்திப்பு, நல விசாரிப்புகள், பிரிந்து போகப்போனவர் திரும்பி வாரியாட்டீ என்கிறார் 'வாறேன்' என்று அப்படியே வருகிறார். வா என்று சொல்லிவிட்டு முன்னே செல்கிறார். 'நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன்' என்றார் ஆசான்.. 'செரியா வரேல்ல கேட்டியா' என்று கடைசி வரியாக முடிகிறது கதை.

சிஷ்யன் ஆசானின் முதல் மனைவியை பார்த்ததை ஆசானிடம் கூறும்போதே நமக்கு இக்கதையின் முடிவு பிடிகிடைத்துவிடுகிறது. முடிவைவிட பல்வேறு கேள்விகள் நம்முன் எழுதுகிறது. ஏன் அயினி மரத்தை வெட்ட நினைக்கும்போதுதான் அயினிப்புளிக்கறி செய்து ருசிக்க ஆசை கொள்கிறார். அதற்கு முன் நாற்பது ஆண்டுகள் அங்கேயே மரம் இருக்கிறது. முதல்மனைவி செய்த கறியை 40 ஆண்டுகளாக மனதில் தேக்கிவைத்திருக்கிறாரா?

2
நிலபிரபுத்துவ வாழ்க்கை வாழ்ந்த தகப்பனாரும், முதலாளித்துவ வாழ்வை பெற்றிருக்கும் மகனுக்கும் இருக்கும் மனப்பிரச்சனை. அயினி மரத்தை பறவைகள், கிளி, குருவி, மைனா எல்லாவற்றிற்கும் அள்ளிக் கொடுக்கும் அம்மையாக நினைக்கிறார். மகன் எல்லாமே பணம்தான் என்னும் முதலாளித்துவ வாழ்வை எதிர் நோக்குகிறார். நோட்டுநோட்டா வாரி வெச்சாலும் தீராது என்கிறார் சிஷ்யன்.

அயினிப்புளிக்கறியை 40 ஆண்டுகளுக்குப்பின்னால் ருசிக்க நினைக்கிறார். அந்த மரத்தை வேறோடு சாய்த்தபின் அந்த பழங்கள் சுற்று வட்டாரத்தில் கிடைக்கப் போவதில்லை. அத்தோடு மரம் இருக்கும் வரை அயின்ப்புளிக்கறியை சுவைக்க அவரும் நினைத்ததில்லை. அவர் இரண்டாவது மனைவிக்கு அந்த கறி வைக்க தெரியாது. புதிய தலைமுறையினருக்கு, மருமகளுக்கு அப்படி ஒரு கறி இருப்பதே தெரியாது.

என் அப்பா வயதான இறக்கும் காலத்தில் நல்ல விதவிதமான ருசியாக சமைத்து கொடுங்க என்பார். மனதில் இருக்கும் ருசியும், நாவில் இருக்கும் ருசியும் இணைய எவ்வளவு ஆர்வம் கொள்கிறார்கள் என்று தோன்றும். காலந்தோறும் புதிய பண்டங்கள் வர ருசிகளும் மாறுகின்றன. ஆனால் பழைய அடிமைப் படுத்திய ருசி ஒன்று மனதில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. வயதானபின் ஐம்புலன்களில் ருசியின் சுவை மட்டும் குறைவதில்லை. மாறாக அதிகரித்துதான் செல்கிறது.

3
அவர் மகன் பஞ்சாயத்தில் வேலை செய்வதை அறிந்த வீட்டிற்கு வரும் ஆட்கள் ஆசானைப் பற்றி அவர் திறமைகளைப் பற்றி யாரோ சொல்லிதான் கேட்டிருக்கிறார்கள். உண்மையில் ஆசானால் தன் மகனை எதிர்க்க முடியாது. அதனால் அவருக்குதான் நஷ்டம் ஏற்படும் என்பதை அவர் அறிந்தேயிருக்கிறார். கதையில் அது வரவும் செய்கிறது. ‘அந்த முடிவுக்கு முன்னரே வந்துவிட்டிருக்கவேண்டும், அதை அவரே அறிந்தது அப்போதுதான்.’ ஆளுமைகள் குறைந்த போயிருக்கும் தன் வயதான காலத்தில் தன் மகனின் செல்வாக்கில், மற்றவர்கள் இடும் கட்டளைகளை ஏற்கும் மனநிலையற்ற நிலையில் அவர் விலகிச் செல்லும் முடிவு முன்பே எடுத்ததுதான். மரம் ஒரு காரணமாக அவருக்கு அமைந்துவிட்டது.

பழமைகள் அழிவது அவருக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு வீம்பு. 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே கம்பீரத்துடன் இருக்க பிரியப்படும்போது அயினிப்புளிக்கறி ஒரு நல்ல தீர்வாகிறது. அவர் மனதை சாந்தப்படுத்த, தன் வைராக்கியத்தை உயர்த்திக் கொள்ள சரியாக செய்ய வராத ஒன்றை செய்துப் பார்க்கிறார். தன் முதல் மனைவியை அடித்து மண்டையை உடைத்தபோல தன் மகனை அடித்துவிடமுடியாது, ஆனால் அவள் செய்து தன்னை அசத்திய அயினிப்புளிக்கறி செய்யமுடியும் என நினைக்கிறார்.

4
கதையில் எத்தனை ஊடுபாவுகள் என்று ஆச்சரியப்படவைக்கிறார் ஜெ. உண்மையில் கதையை நினைத்திருக்கும்போது இவையெல்லாம் தோன்றியிருக்காது. எழுத ஆரம்பிக்கும்போது தானாவந்து சேர்ந்திருக்கும்.

எண்ணெய் தடவி சுளுக்கு எடுத்துவிடுபவர் ஆசான். அதை தொழிலாக முன்பு செய்தார். இப்போது வயதானதால் அவ்வப்போது செய்கிறார். அதில் சுமாரான வருமானம் வருகிறது. மனிதர்களை தொட்டு உரையாடும் மனிதர் அவர், அவர் மகனோ பஞ்சாயத்து அரசு பதவியில் அதிகாரத்தால் மனிதர்களிடமிருந்து தூர விலகி நிற்பவர். மரம் அளிக்கும் பணம் மட்டுமே அவருக்கு பெரியதாக இருக்கிறது. அதை தடுக்க வந்தால் தன் தகப்பனையே அடித்து சாய்க்க நினைக்கிறார். வயதானதால் கனிந்துவிட்ட தந்தை வேறு வீட்டிற்கு செல்ல நினைக்கிறார். அமைதியாக தன்பாட்டிற்கு வாழ நினைக்கிறார். அதை முன்பே யோசித்து வைத்ததுதான். இளமையில் அடித்து மண்டையை உடைத்த முதல் மனைவியை சந்திக்கும்போது சாதாரண நல விசாரிப்புகளோடு மட்டுமல்ல, அவளோடு தன் நாவில் என்றும் தங்கிவிட்ட அயினிப்புளிக்கறியையும் சேர்ந்து பார்க்கிறார்.

ஒன்றை இழக்கும்போது மற்றொன்றை பெறுவதுதானே வாழ்க்கை. அதுதான் நிகழ்கிறது. அரிதானதாக நினைத்த அயினிமரத்தை இழக்கும்போது அரிதான் தன் முதல்மனைவி அவளுடன் சேர்கிறார். தன் மகன்களுக்கு மகளுக்கு தாயானவள், தன் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் தாயாகிறவள் ஒரு காலகட்டத்தில் கணவனுக்கும் தாயாகிறாள். முதிர்ந்த காலத்தில் கணவன் சொல்லுக்கு செயலாக மாறுகிறாள் மனைவி.

வரியாட்டீ எனும்போது வாரேன் என்று மட்டுமே சொல்கிறாள். அதன் வா என்று பேசிக்கொண்டே முன்னே செல்கிறார் ஆசான். ஒரு வார்த்தைகூட அவள் பேசவில்லை. வெறும் மூச்சொலிமட்டும் கேட்கிறது. கனிந்த அயனிப்பழம்போல அவள் வருகை.
'நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன்' என்றார் ஆசான். 'செரியா வரேல்ல கேட்டியா'

சரியாக வந்திருக்கிறது.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விமர்சனம்
நன்றி நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அலசிய விதத்தினை ரசித்தேன்.