Tuesday, October 24, 2017

பச்சை அனார்கலி (சிறுகதை)

இன்று மாலை சுலோசனா ராணி தன் கணவன், குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி, கண்களுக்கு அவள் செய்திருந்த ஐலைநர் அலங்காரங்களை பற்றி இதற்கு முன்பே இருமுறை சொல்லிவிட்டாள். காலையில் எழுந்ததும் முதலில் அதைப் பற்றிதான் பேசினாள். தன்னை மறந்து சொல்லிவிட்டவள் போல் இல்லாமல் தெரிந்தே புதியதாக சொல்வதைப்போல மிக நிதானமாக சொன்னாள். நான் புதியதாக கேட்டுக்கொள்பவன் போல் கேட்டுக்கொண்டேன். அந்த முடிதிருத்தங்களையும் ஐலைனர்களையும் நானும் செய்துக் கொள்ளட்டுமா என்று என் அனுமதியை கடைசியாக கேட்டுக்கொண்டாள். பொதுவாக இதைப் பற்றி அவள் ஒரு முடிவு செய்திருப்பாள், வேண்டாம் என்று சொல்வதனால் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை அப்படி மறுத்து கூறுவது அவளது அன்றைய தின சந்தோசத்தை பாதிக்கவும் கூடும் என்பதால் சரி என்பதுபோல் தலையசைத்தேன்.

வேகமான நடையின் மூலம் அவள் அதிக உற்சாகமானவளாக தெரிந்தாள். வீட்டில் உள்ள அத்தனை அறைகளுக்கும் எதாவது ஒரு காரணத்திற்காக அடிக்கடி சென்று வந்துக்கொண்டிருந்தாள். ஒரு பொருளை எடுப்பதும், அதை வைத்துவிட்டு அடுத்த அறைக்கு சென்று அங்கே விட்டுவிட்டு வந்திருந்த வேலையை தொடர்வதும், பின் வேறு ஒரு இடத்தில் சென்று மற்றொரு வேலையை ஆரம்பிப்பதுமாக இருந்தாள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவள் ஒரு அவசரமான பிரயாணத்திற்கான தயாரிப்பில் இருப்பதாகதான் தோன்றும். மதியஉணவுக்குபின் கட்டிலில் அமர்ந்த சிறிது நேரத்தில் எழுந்துக் கொண்டாள். உண்டபின் சின்ன தூக்கம் எடுப்பது அவள் வழக்கம். மதிய தூக்கத்தை அவள் எதற்கு இழந்ததாக நினைவில்லை. ஆனால் அதிசயமாக களைப்பையும் மறந்து மாலை அவர்கள் வரப்போவதற்கு தேவையானவைகளை உடனே செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
வாசனைப் பொருட்கள் கலந்த நிறைய உணவுவகைகளை காலையிலிருந்தே தயாரித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு முக்கிய பண்டிகைபோல பலவகை வாசனைகள் வீடுமுழுவதும் கலந்து அடித்தன. பொதுவாக பெண்கள் இதழ்களில் வரும் புதிய உணவுவகைகளை இன்று முயற்சித்திருக்கலாம். அவள் தோழி வந்ததும் செய்முறைகளை குறித்து பேசிக் கொள்வதாக இருக்கலாம். அடிக்கடி உணவுதயாரிப்பு முறைகளைப் பற்றி இருவரும் சந்திக்கும் சமயங்களில் பேசிக்கொண்டதை அவள் கூறியிருக்கிறாள்.
இன்று அவளின் முகத்தில் தெரிந்த பாவனை அவசரமா அல்லது மகிழ்ச்சியா என்பது புரியவில்லை. பல நேரங்களில் அவளுக்கு நேரும் அவசரங்களில் மற்றவர்களை குறைசொல்லும் ஒரு புள்ளி இருக்கும். ஊருக்கு போகும்போது பெட்டியை நான் சரியாக அடுக்கவில்லை என்பாள். வெளியே கிளம்பும்போது தண்ணீர் பாட்டிலை நிரப்பவேண்டிய அவசியம் ஏன் புரியவில்லை என்பாள். கிளம்பும் அவசரம் புரியாமல் மகன் ரிஷி நிதானமாக விளையாடிக் கொண்டிருப்பதாக புகார் கூறுவாள். ஆனால் இன்று அவைகள் எதுவும் இல்லை. நாங்கள் அமைதியாக சும்மா இருந்தாலே அவள் மகிழ்ச்சி அடைந்தது போலிருந்தது.
இன்று சனிக்கிழமை என்பதும் கூடுதல் மகிழ்ச்சி அவளுக்கு. வாரத்தின் ஐந்து நாட்கள் வீட்டு வேலைகளைச் செய்து களைத்துப் போயிருக்கும் அவளுக்கும் சனிக்கிழமையை வீட்டை சுத்தம் செய்யவும் மற்றவர்களை ஆணையிடுவதற்கும், ஞாயிற்றுக்கிழமையை நல்ல‌ தூக்கத்திற்கும், வெளியே செல்வதற்கும் என பிரித்து வைத்திருக்கிறாள். அப்படியான அன்றாட பரபரப்புகள் அற்ற நாளில் தன் கல்லூரி சிநேகிதியை சந்திப்பது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்.
ரிஷியிடம் அவன் தன் சேட்டைகளை விட்டுவிட்டு அவர்கள் வரும்போது அமைதி காக்க வேண்டும் என அடிக்கடி கேட்டுக்கொண்டாள். என்னிடமும் இவனை அமைதியாக இருக்க சொல்லுங்கள் என்றாள். என்னால் தான் அவன் கெட்டுப் போய்விட்டான் என்றும், நீங்கள் இருக்கும் சமயங்களில் அவன் அதிக பொறுப்பின்மையுடன் நடந்துக் கொள்வதாகவும் கூறுவாள். ஆனால் எப்போதும் அதிக சேட்டைகளை செய்யும் அவன் அம்மாவின் அதீத பரபரப்பினால் பயந்து காலையிலிருந்தே அவன் அமைதியாக இருந்தான். இதற்குமேலும் தன்னை அமைதிப் படுத்திக்கொள்ள அவனால் முடியுமா தெரியவில்லை. அவர்கள் வரும்போது எதையாவது செய்து விட்டு அவர்கள் போனபின் முதல்வேலையாக என்னிடம் அவன் குறும்பைச் சொல்லி விசனப்படபோகிறாள் என்று தோன்றியது.
‘நாங்கள் அவளை சுலோ என்றுதான் அழைப்போம். எப்போதும் அவள் மிக சுலோவாகதான் இருப்பாள், கணக்கு பொதுவாக வராது. படிப்பில் எல்லோருக்கும் ஒன்று புரியும்போதும் அவளுக்கு புரியாததும், தவறுகளில் எல்லோருக்கும் ஆசிரியையிடம் தப்பிக்க தெரியும்போது அவளுக்கு தெரியாததும் என பல இருந்தன. அவளுக்கு சில விஷயங்கள் புரிவதில்லை, குறிப்பாக கடி ஜோக்குகள் அவளுக்கு புரிவதில்லை அல்லது கொஞ்சம் மெதுவாக நாங்கள் சிரித்து முடிந்தபோதுதான் புரிந்துக் கொண்டுதான் சிரிப்பாள்.’ இவையெல்லாம் சுலோசனா பற்றி அனு கூறியவைகள்.
படிப்பில் அவள் சற்று புத்திசாலியாக இருந்தாலும் படிப்பைத் தாண்டி இருக்கும் பொதுஅறிவு அல்லது அந்த படிப்பில் இருக்கும் ஒரு வாழ்க்கை செய்தியை அவள் புரிந்துக் கொண்டவளல்ல என்கிற எண்ணம் அனுவுக்கு இருந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னும் அவள் தோழியின் வாசிப்பு, குழந்தையின் வளர்ப்பைப் பற்றிய அக்கறைகள், வீட்டு நிர்வாகம் பற்றி புரிதல்கள் போன்றவைகளைப் பற்றிய போதுமான புரிதல் இல்லை என்ப‌து அவள் எண்ணமாகவும் இருந்தது.
அவள் தோழியை மீண்டும் சந்தித்தது ரிஷியின் பள்ளியில்தான். ரிஷியை அழைத்துவர சென்றபோது சுருதியின் அம்மாவாக அங்கே நின்ற சுலோசனாவை எட்டு ஆண்டுகளுக்குபின் அவள் அடையாளம் காணாதபோதும் அனு அடையாளம் கண்டுக் கொண்டாள். உப்பிய கன்னங்கள் பெருத்துப்போன உடலையும் மீறி அவளை சரியாக அடையாளம் கண்டு நீ சுலோச்சனா தானே என்றபோது வெட்கத்தோடும், தடுமாறும் கண்களோடும் ஆமா, நீங்க யாரு என்று கேட்டதை அவள் பலமுறை கூறி நகைத்திருக்கிறாள்.
இப்போதும் அதே மாதிரி ஒல்லியாக இருக்கும் தான் யாரென்று அவளால் கணிக்க முடியவில்லை என்றாள். அப்படி சொல்லும் போது அவளுக்கு சிரிப்பு தாங்க முடியாததாக இருந்தது. 'ஏங்க அவளால கண்டுபிடிக்க முடியல' என்று கேட்டுக் கொண்டாள். 'நல்லதான் படிப்பா ஆனா கண்டுபிடிக்க முடியல பாருங்க'. படிப்பிற்கு இதில் என்ன சம்பந்தம் என நான் கேட்கவில்லை. நான் அவள் கூறுபவைகளை அலசி சாதகமான ஒரு பதிலை கூறவேண்டும் என எதிர்பார்க்கிறாள். அவள் எதிர்ப்பார்ப்பிற்கு மேலாக 'எல்லோராலயும் அப்படி கண்டுபிடிக்க முடியாது, சிலபேருக்கு பக்கத்துல போய் நின்னாலும் நாம யாருன்னு அவங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாது' என்றேன். அந்த பதிலில் அவள் மகிழ்ச்சியுற்றதாக தெரிந்தது. கையால் மூடிய வாயுடன் கன்னகதுப்புகள் அசைய கால்களை மாற்றி வைத்து லேசாக ஆடி ‘ஓ..’ என்று ஒரு சின்ன சிரிப்பு சிரித்தாள். 'போங்க... நீங்க ரொம்ப சொல்றீங்க ' என்றாள்.
தோழியின் வருகைக்காக‌ புதியதா சுடிதார் உடை அணிந்திருந்தாள். முன்பே அது வாங்கியிருந்ததுதான். அது பச்சை வண்ண சுடிதார், இதுவரை அந்த வண்ணத்தில் எடுக்காதது. அனார்கலி முறையில் அதை தைக்க அவளுக்கு பரிந்துரைத்தது சுலோச்சனாதான். கல்லூரிக்கு பின் அவள் பேஷன் டெக்னாலஜி படித்திருந்தாள். அனுவின் உடலிற்கு தகுந்தார்போல் எப்படி தைக்க வேண்டும் என்பதும் யாரிடம் கொடுக்கலாம் என்பதையும் அவள் தான் சொல்லியிருந்தாள்.
அனார்கலியாக அதை தைத்தபின் அவள் உடனே அதை அணிந்துவிடவில்லை. ரொம்ப நாள் அணிவதை தள்ளிவைத்து தோழிவரும் இன்றைய நாளில் அதை அணிந்திருக்கிறாள். அவள் அணிந்திருந்தது எப்போது போன்ற ஒன்றாக இல்லாமல் சற்று மேம்பட்ட உடையாகவும் அதில் அதிக வேலைப்பாடுகளும் இருந்தன. கண்ணாடியில் அந்த வேலைப்பாடுகள் சரியாக இருக்கின்ற‌னவா என்பதை ஆராய்வதையும் அல்லது வேறு ஒன்றை அணிந்துக் கொள்ளலாமா என்று யோசிப்பது மாதிரியும் அடிக்கடி நின்றாள். சிவப்பும் மஞ்சளும் வேலைப்பாடுகள் கொண்ட சுடிதாரின் மேல் பகுதியும் பச்சை வண்ணம் கொண்ட கீழ்ப்பகுதியுமாக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நடுப்பகுதியிலிருந்தே கீழ்நோக்கி விரிந்து செல்லும் அமைப்புடன் கவிழ்ந்த குடைபோல் இருந்தது. கண்ணாடி முன் நிற்கும்போது ஒவ்வொருமுறையும் சுடிதாரை இழுத்துவிட்டபடி நல்லா இருக்கா என கேட்டுக்கொண்டாள். நன்றாக இருக்கிறது என்கிற வார்த்தை பலமுறை சொல்லியும் அது அவளை திருப்திபடுத்தவில்லை. உண்மையில் அது இருப்பதிலேயே சிறந்த உடையாக அமைந்துவிட்டது அவளுக்கே தெரிந்துதான் இருந்தது.
அதிகப்படியான ஒப்பனை சாதனங்களால் முகம் பொழிவு பெற்றிருந்தது. தலைக்கு புதிய சிகை அலங்காரம், புருவங்களுக்கு புதிய மைகோடுகள், காதுகளில் தொங்கும் புதிய பெரிய தோடுகள், கைகளில் புதிய தடிமனாக வளையல்கள் என்று அவளுக்கு தெரிந்த அனைத்து சாத்தியங்களை பயன்படுத்தியதை பார்க்கும்போது எங்களூர் பச்சைக்காளி வலம் வருவதையே எனக்கு நினைவூட்டியது. நிலைத்துவிட்ட விரிந்த கண்களும் நீண்ட நாக்குடன் முட்டிவரை வளையளைகள் அணிந்த பச்சைவண்ண காளி வருடம் ஒருமுறை வீதிகளில் சுற்றி சன்னதம் வந்து உக்கிரம் கொண்டு ஆடி அருள் வழங்கி மீண்டும் கோயிலில் உறை கொள்வாள். பாய்ந்து ஆடிய பச்சைக்காளியை அணிந்த மனிதர் அதற்கும் தனக்கும் சம்பந்தமற்றதுபோல் மயங்கி தரையில் வீழ்ந்து கிடப்பார். அப்பச்சைக்காளியைப் போலதான் அனுவும் தன்னையும் உணர்ந்திருப்பாள் என தோன்றியது. இன்று அனுவின் புதிய மெல்லிய நடைகூட பச்சைக்காளியின் எட்டுபோல தான் இருந்தது அவள் கோபப்படக்கூடும்.
நேரம் ஆகஆக சற்று பரபரப்பு கூடுவது தெரிந்தது. கடந்த ஓராண்டாக பள்ளியில் மட்டுமே சந்தித்து பேசிக் கொண்டவர்கள் இன்று வீட்டில் சந்தித்துக் கொள்ள போகிறார்கள். அவர்களுக்கு இடையூராக அவர்களின் கணவர்களும் குழந்தைகளும் இருப்பதாக ஏனோ ஒரு எண்ணம் தோன்றியது. இன்றைய சந்திப்பிற்கு காரணம் இந்த பள்ளியாண்டிற்கு பின் சுலோச்சனா கணவனின் வேலை காரணமாக குடும்பமாக வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். தொலைபேசி, இணையம் வழியாக அவர்கள் சந்திப்பு தொடரபோகிறது என்றாலும் கடைசியாக ஒரு விருந்து அவர்களை மகிழ்விக்க கூடும் என அவள் நினைத்தாள்.
நாங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்துவிட்டோம் என்று சொல்லப்போகும் அலைப்பேசி அழைப்பிற்காக அவள் காத்திருப்பதாக தோன்றியது. அலைப்பேசியை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக் கொண்டாள். சாப்பாட்டு மேஜையில் அவள் தயாரித்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ஏதோ சொல்ல வருவதும் பின் இதெல்லாம் எடுத்து வையுங்க என்பதுமாக இருந்தாள். வீட்டில் இருக்கும் எல்லாப் சாமான்களும் அவளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக தோன்றியிருக்க வேண்டும். சிலவற்றை வேறு இடத்தில் மாற்றினாள், சிலவற்றை ஒளித்துவைத்தாள். ஹாலில் இருந்த சோபாக்களை அவ்வப்போது சற்று நகர்த்தி வைத்து சற்று தொலைவில் நின்று பார்த்து திருப்தியுற்றாள். என் நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு என்னை பார்க்க வந்தபோது எந்த பரபரப்பு வீட்டில் இல்லை. திட்டமிட்ட சந்திப்பு என்றாலும் ஒரு திடீர் விருந்தாளி வந்து போவதுபோலதான் அது இருந்தது என்பதை ஏனோ இப்போது நினைவிற்கு வந்தது.
மேஜையில் அடுக்கி வைத்துவிட்டு நிமிர்ந்த அவள் முகத்தில் வேர்வை துளிகள் கார் கண்ணாடியில் விழும் முதல் மழை துளிகள்போல அரும்பிருந்தது. ‘அப்பாடா நான் சற்று அமர்கிறேன்’ என்று சொல்லியபடி அவள் பேனுக்கு கீழே அமர்ந்தபோது அலைபேசியின் அழைப்பு அழும் குழந்தைபோல வீறீட்டது. வந்துடுச்சு வந்துடுச்சு என்று அதே வேகம் எழுந்து கையில் எடுத்துக் கொண்டாள். பெயரை பார்த்துவிட்டு எடுக்காமல், சைகையால் டிவியை அணைக்கவும், ரிஷியை அமைதியாக இருக்கவும் சொல்லிவிட்டு ஒரு புன்சிரிப்போது எடுத்துசொல்லு சுலோ’ என்றாள். சிரித்தபடி இருந்த அவள் உதடுகள் லேசாக அவள் சிரிப்பு குறைய ஆரம்பித்து இறுக்கமான உதடுகளோடு சரி என்று சொல்லி போனை வைத்தாள்.
அவள் கண்கள் என்னை பார்ப்பதும் பின் போனை சரிசெய்வதும் என இருந்துவிட்டு சின்ன இடைவெளிக்கு பின்னால்தான்அவ வரலையாம்’ என்றாள். நானும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏன் என்று சற்று அதீத உணர்ச்சியை காட்டுபவன்போல் என்னையும் அறியாமல் கேட்டேன். ‘அவ பொன்னுக்கு உடம்பு சரியில்லையாம். நாளைக்கு ஊருக்கு போறதால வரவேண்டாம்னு விட்டுடாங்களாம்’. அவர்கள் இங்கு வர சந்தர்ப்பம் இனி வாய்க்குமாக தெரியவில்லை. இப்போதைக்கு அவர்கள் வரபோவதில்லை, அது உறுதியாக தெரிந்தது. அனுவிற்கு மனவருத்தத்தை அளித்திருக்க வேண்டும். சாப்பிட்டு தூங்க செல்லும் வரை அவள் அதிகம் எங்களுடன் பேசவில்லை. ரிஷி தூக்க கலக்கதில் இருந்தவன், சாப்பிட்டதும் சோபாவிலே தூங்கிவிட்டான். அவர்களுக்காக செய்து மிச்சமான சாப்பாடுகளை பொறுமையாக ப்ரிஜ்ஜில் அடுக்கிவைத்தாள் அனு.
அவளுக்கு மனசு ஆறவில்லை போலும் சின்ன பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருந்தாள். ரிஷியை தூக்கி கொண்டு படுக்கைக்கு செல்லும்போது, ‘அவங்களுக்கு மத்தியானமே தெரியாதா? கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா, இவ்வளவு பண்ணாமலாவது இருந்திருப்பேன்’ என்றாள். அதை மிக மென்மையான தொணியில் சொன்னாள். வேறொரு சமயமாக இருந்திருந்தால் நிச்சயம் கோபமாக பேசியிருப்பாள், நெருங்கின தோழி என்பதால் சற்று சமாதானமாக நடந்துக் கொண்டதுபோல் இருந்தது. அனார்கலி கழற்றிவிட்டு நைட்டியை அணிந்துக்கொண்டு உறங்கச் சென்றாள். ஆனால் அதன் பின்னால் பச்சை அனார்கலி உடையை அவள் அணியவில்லை. தீபாவளி போனஸாக அந்த பச்சை அனார்கலியை வீட்டு வேலைக்காரியிடம் அவளின் பன்னிரெண்டு வயது மகளுக்கு கொடுக்க சொல்லி கொடுத்து அனுப்பி வைத்தாள்.
(உயிர் எழுத்து செப்டம்ப‌ர்'17 இதழில் வெளியான கதை)

1 comment:

Nandhi Tv said...

பச்சைக்காளி சூப்பர்!
தோழி வராதது, ஏமாற்றமடைந்தது,அனார்கலியை பணிப்பெண்ணுக்கு கொடுத்தது,
இதையெல்லாம் விட,அவளுக்காக எடுத்த பச்சைகளி அவதாரம்தான் சூப்பர் அதுவும் நடையில் கூட!

வராத தோழியும் அழகாகவே வந்திருக்கிறாள்! கடி ஜோக்குகளைகூட தாமதமாக புரிந்துசிரிக்கும் பெண்ணாக!