Saturday, October 21, 2017

சுயபுராணம்என்னைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும் வாசகர்களின்/நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க(!!) அவர்களை திருப்திபடுத்த வேண்டி இந்த பதிவு செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு இது சற்று அதீதமாகப் படலாம். அல்லது இணைய உலகின் வேறு பயனுள்ள தளங்களை பார்க்க வேண்டுகிறேன். இருந்தாலும் தலைப்பு சுட்டுவதுபோல் இக்கட்டுரையை சுயபுராணமாக அமைத்துவிடாமல் இருக்க முயற்சிசெய்கிறேன். 

என் பள்ளி, கல்லூரி நாட்களிலும் ஆரம்ப அலுவலக நாட்களிலும் கதைகளை எழுதி கூட இருப்பவர்களுக்கு காட்டி விமர்சனங்களை கேட்டிருக்கிறேன். பல நேரங்களில் ஆச்சரிப்படத்தக்க அளவில் பெரும் மரியாதையோடு என்னை நடத்தியிருக்கிறார். இது வேலையற்ற வேலை என்று ஒருவர் கடிந்துக் கொண்டதில்லை. ஆனால் அந்த சமயங்களில் நிகழ்ந்த நெருக்கமானவர்களின் மரணமும், நோய்மையும் என்னை எழுதவிடாமல் செய்துவிட்டன. புனே சென்று சற்று அலைகழிப்பையும் வேலை அழுத்தங்களையும் மறந்த நிலையில் எழுத ஆரம்பித்தேன். அப்போது எழுதிய கதைகள் உயிர் எழுத்து, வார்த்தை இதழ்களில் வெளியாயின. பின் சொல்வனம் இணைய இதழில் எழுத ஆரம்பித்தபோது மற்றவர்களுக்கு தெரிந்த எழுத்தாளனாக ஆனேன். அங்கு முக்கிய கதைகளான சாமத்தில் முனகும் கதவு, வெளவால்கள் உலவும் வீடு, அத்திமரம் போன்ற கதைகள் வெளியாயின. அங்கு .சீனிவாசன் அவர்களது நட்பால் பல கதைகள் சொல்வனத்தில் எழுதமுடிந்தது. மிக சிலாகித்து சாமத்தில் முனகும் கதவு கதை பற்றி கட்டுரையாக அடுத்த சொல்வனம் இதழில் எழுதியிருந்தார். எழுத்தில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக அதைச் சொல்லலாம். நேர்மறை எதிர்மறை விமர்சனங்களை அழகாக சுட்டிக்காட்டி அந்த நாட்கள் மறக்கமுடியாத படைப்பூக்க நாட்களாக இன்றும் நினைக்கிறேன்.

எழுத்தாளர்களான எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன் ஆகியோரது நட்பு என் ஆரம்ப இலக்கிய ஆக்கங்களின் மீதான நம்பிக்கையை அளித்தன. பாவண்ணன் அவர்கள் நீண்ட நாட்கள் நட்பு கொண்ட நண்பனைப் போலத்தான் இருந்தார். அவரிடமிருந்து இலக்கியத்தை வேறு ஒரு கண் கொண்டு பார்க்க வேண்டிய அவசியத்தை புரிந்துக் கொண்டேன். ஜாகிர் ராஜா, எஸ்.செந்தில்குமார் போன்றவர்களின் போன் பேச்சுகள் மூலம் இலக்கிய வேடிக்கைகளும் அக்கப்போர்களும் என் ஆர்வத்திற்கு தீனிபோடுவகையில் இருந்தன.

ஜெயமோகன் அவர்களின் நட்பு அலைகடலில் நடுவே கிடைத்த அசையாத பெருங்கப்பல் போன்றது. இலக்கிய உத்திகள், ரகசியங்கள், மர்மங்களை கொள்ளையடித்தது அவரிடமிருந்துதான் என்றால் மிகையில்லை. அவரது இணைய பக்கத்தில் என் சிறுகதை ஒன்று (வாசலில் நின்ற உருவம்) பெரிய கவனத்தை பெற்றது (http://www.jeyamohan.in/36402).

தினம் ஒன்று என பன்னிரெண்டு எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் அவர் இணைய பக்கங்களில் வெளியாகி புதிய வாசல் என்கிற தொகுப்பாக அதை ஜெ. வெளியிட்டார். ஜாகிர் ராஜாவும் அவர் தொகுத்த 21ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் என்கிற தொகுப்பில் என் கதை இடம்பெற்றிருக்கிறது.

சிறுகதை தொகுப்பு சாமத்தில் முனகும் கதவு என்கிற பெயரில் டிஸ்கவரி புக் பேலஸின் வழியாக மே'16ல் வெளியாகியது. என் ஆக்கங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிபுரிந்த ஜெயமோகன், பாவண்ணன், .சீனிவாசன் ஆகியோர்க்கே சமர்பணம் செய்திருந்தேன்.

நேரடி அறிமுகமில்லாத நண்பர்கள் என் எழுத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள். நாகரத்தினம் கிருஷ்ணா, எஸ். ராமகிருஷ்ணன், ராமையா அரியா போன்ற எழுத்தாளுமை மிக்கவர்கள் அவர்கள். எஸ்.ரா. அவரது இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் என்னும் கட்டுரையில் என்னை குறிப்பிட்டிருக்கிறார்.

ப்ரான்சில் வாழும் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா என்னை இளவல் என்று விளித்து எழுதிய குறிப்புகள் களைத்திருக்கும் நாட்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றன. அவர் என் கதைகளை உள்வாங்கிய விதம் மிக நெருக்கமாக உணர்த்தியவை. ராமையா அரியா என் ஆரம்ப கதைகளை ஒவ்வொன்றையும் வாசித்து அதற்கு கமென்ட் இட்டு உற்சாகமூட்டிய சகபயணி.

வாசகசாலை சிறுகதை தொகுப்பு விருது 2016ல் கிடைத்தது. அந்த விருதை எஸ்.ரா, பா.இரஞ்சித் முன்னிலையில் ஜெயசந்திர ஹாஸ்மிடம் பெற்றேன். தொகுப்பு குறித்த அவரது விமர்சன காணொளி யூடியூபில் கிடைக்கிறது. நெருஞ்சி இலக்கிய முற்றம் அமைப்பு 2016க்கான சிறந்த சிறுகதை தொகுப்பாக என் 'சாமத்தில் முனகும் கதவு' தொகுப்பை தேர்தெடுத்திருக்கிறது.

சொல்வனம் சிறுகதைகள்:

.சீனிவாசன் அவர்கள் எழுதிய விமர்சனம்

பாவண்ணன் அவர்களது முன்னுரை

ஜெயமோகன் அவர்களது குறிப்புகள்

நாகரத்தினம் கிருஷ்ணாவின் குறிப்புகள்

எஸ்.ராவின் குறிப்பு

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சுய மதிப்பீடு தேவைதான். நான் பல நேரங்களில் அதனை எனக்குள் செய்வதுண்டு. சில சமயங்களில் பரிமாறிக்கொள்வதும் உண்டு. இவ்வாறான மதிப்பீடுகள் நம்மை மென்மேலும் முன்னுக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வாசகர் கடிதம் எழுதத் தொடங்கிய என்னை நடுப்பக்கக் கட்டுரைகளை எழுதவைக்குமளவு ஆக்கியது என் சுய மதிப்பீடும், நண்பர்களின் ஊக்குவிப்புமே. தொடருங்கள், அவ்வப்போது சுயமதிப்பீடு செய்துகொள்ளுங்கள், சுய புராணத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களைப் பற்றி அறிந்துகொள்ள இப்பதிவு எனக்கு மிகவும் உதவியுள்ளது
நன்றி ஐயா

கே.ஜே.அசோக்குமார் said...

இருவருக்கும் நன்றி அய்யா.

இதை ஏன் எழுதினேன் என்கிற சங்கடம் எனக்கு இருந்தது. உங்கள் இருவரின் பேச்சுகள் சற்று தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது. நன்றி.