Monday, October 16, 2017

வனவாசி - விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயநான் முன்பு திருவாரூரில் இருந்த சமயத்தில் ஒரு நாள் ஒரு உறவினர் என்னை அவரது ஊரான அம்மையப்பனுக்கு அழைத்துச் சென்றார். சின்ன பையனாக இருந்த என்னை முன் பாரில் உட்காரவைத்து சைக்கிளை எளிதாக மிதித்து வந்தார். நடுவே இருந்த ஊர்களின் பெயர்களை அங்கு என்ன கிடைக்கும் என்பதை சொல்லிக் கொண்டுவந்தார். ஒரு இடம் வந்ததும் இதற்குமேல் ஊர் இல்லை என்றுவிட்டார். மனதை குடைந்துக் கொண்டேயிருந்தது அவர் சொன்னது. ஊர் இல்லையென்றால் அந்த இடத்தை எப்படி அழைப்பது, அங்கு யாரும் வசிக்கவில்லையா? பேய்கள் ஒருவேளை அந்த பகுதியில் இருக்கலாம் என்று தோன்றியது. இதற்குமேல் வயல்களும் காடும் மட்டுமே என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்குதான் புரிய சில காலமாகியது.


மனிதர்களற்ற இடமெல்லாம் காடுகள்தான். வயல் பகுதிகளும், நகர் பகுதிகளும் காட்டை அழித்து மனிதர்கள் உருவாக்கியதுதான். முன்பு இந்தியாவில் ஒரு 70% காடுகளே இருந்திருக்கின்றன. காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வயல்கள் உருவாயின. வனவாசி அதைப் பற்றிய கதை தான். கல்கத்தா நகரின் நெரிசலில் வேலையில்லாமல் வாழ்ந்துவந்த ஒருவன் காடுகளை பிரித்துக் கொடுக்கும் சர்வேயர்/மானேஜர் என்கிற வேலைக்கு நண்பனின் அப்பாவின் கம்பெனிக்காக பீஹார் வனப் பகுதிக்கு வருகிறான். அங்கு ஒரு ஆறு ஆண்டுகள் வாழ்ந்து தான் செய்த செயல்களையும் கற்ற சில விஷயங்களையும் பின் கல்கத்தா வந்து அமர்ந்திருந்த நாட்களின் நினைவுகளாக எண்ணிப் பார்க்கும் நாவல் 'வனவாசி'.

எளிய வார்த்தைகளால் விளக்கிவிடமுடியாத நுட்பத்தையும் எளியாக விள‌ங்கிக் கொண்டு விடமுடியாத பரந்த தன்மையும் கொண்டதுதான் காடு. காடும் அதன் தனிமையும் மிக அபூர்வமானவை. நம் வாழ்வில் கிடைத்துவிடகூடிய அரிய காலங்களில் ஒன்று நாம் காட்டில் வாழ்ந்த வாழ்வாக இருக்கும். காடு சிறியதோ பெரியதோ, அதன் மெல்லுணர்ச்சியை தொட்டுப் பார்க்க வேண்டும். நாம் காட்டில் வாழ்ந்தாக வேண்டும். அந்த சமயங்களில் நம் மனம் இலகுவாகவும், அதி தீவிர விழிப்புடனும் இருக்கும்.

காடு என்பது சுதந்திரத்தின் குறியிடு என்று சொல்லலாம். காட்டை புரிந்துக் கொள்ள பலகாலம் ஆகும். நம் மனமெங்கும் காட்டின் அதிர்வுதான் தொடர்ந்தபடி இருக்கும். புரிந்தபின் அதிலிருந்து வெளியேறுவது கடினம்.

விபூதிபூஷன் பந்யோபாத்யாய எழுதியிருக்கும் ஆரண்யக என்கிற நாவலின் தமிழாக்கம் வனவாசி. கதையின் நாயகன் வங்காளத்தில் இருக்கும் வேலையில்லாத பட்டதாரி, தன் நண்பன் ஒருவனின் நிலத்திற்கு குமாஸ்தாவாக செல்ல அழைக்கிறான். அது பீஹார் மாநில லிப்துலியா என்கிற பகுதி. முதலில் யோசித்து பின் சரி என்கிறான் கதாநாயகன் சத்யாசரன். முதலில் பிடிபடாத காட்டு வாழ்க்கை பின்னர் பிடித்துப் போய்விடுகிறது. அங்கிருக்கும் மனிதர்கள் அவர்களின் விசித்திர பழக்கங்கள் அனைத்தையும் நேசிக்க கற்றுக் கொள்கிறான். அவர்கள் நாவலில் வருவது போவதுமாகதான் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு வாழ்க்கையை அவன் இதுவரை கண்டிராத வாழ்க்கையை வைத்திருக்கிறார்கள். சலிப்பில்லாமல் அவன் இருந்த காலம் முழுவதும் கேட்டும் பார்த்தும் மகிழ்கிறான்.

சுடுசோறு கிடைக்கும் என்பதற்காக அவன் இருக்கும் இடத்திற்கு பலமைல் தூரம் நடந்தே வருகிறார்கள் சில மனிதர்கள். காட்டில் வசிக்கும் ஒரு சிறுவன் நடனத்தை தன் வாழ்க்கையாக வைத்திருக்கிறான். மற்றொருவன் காட்டை காற்ப்பாற்ற தினம் மரக்கன்றுகளை செல்லும் இடங்களில் எல்லாம் நட்டுவிட்டு செல்கிறார். மனைவியை இழந்த ஒருவர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க அங்கு வருகிறார். முன்பு ஒரு காலத்தில் வாழ்ந்த சிற்றரசனின் கிழவாரிசை காண்கிறான். இப்படி கதைகள் நீண்டும் சுருண்டி வால் தெரியாமல் சுழன்று சொல்லும் பாம்பின் உடலைப் போல செல்கிறது.

சரஸ்வதி குண்டம் என்கிற வனப்பகுதியை விவரிக்கையில் முழுமையான அழகியலோடு காட்டை வலம்வந்த தேர்ந்த பயணியாக எழுதியிருக்கிறார். உண்மையில் காடு அதன் சார்ந்த மனிதர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை சொல்ல அவர் மெனக்கெடல்கள்தான் அதிகம். ஆனாலும் மனிதர்கள் வியாதியாலும் பட்டினியாலும் சொந்தங்களை இழந்து தனிமையில் வாடுகிறார்கள். அதே வேளையில் சுதந்திரமான வாழ்க்கையின் அர்த்தத்தை ருசிக்கும் மனநிலையில் தான் வாழ்கிறார்கள்.

வங்காளத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பிஹார் காட்டில் வசிக்கிறது. அதை கேள்விப் பட்டு அவர் சென்று பார்க்கும்போது குடும்பதலைவர் முன்பே இறந்துவிடுகிறார். மூன்று பிள்ளைகளை உடைய அந்த பெண், வங்காளம் திரும்பிச் செல்ல மனமில்லாமல் தன் சொந்தங்களை இழந்து அந்த காட்டில் கிடைக்கும் உணவும், வேளையுமாக அங்கேயே இருக்க பிரியப்படுகிறார்.

வங்காளமொழியில் இந்நாவலை 1938ல் வெளியானது. இன்று யோசிக்கும்போது இம்மாதிரியான ஒரு நாவல் 38ல் வெளியானதே ஆச்சரியமளிக்கிறது. மிகத் தீவிரமாக காடழித்தல் என்கிற செயல் இன்று பேசப்படுவது போல் அன்று பேசப்பட்டிருக்காத, அப்படி ஒரு பொதுபுத்தி உருவாகியிருக்காத சூழலில் அவரால் இந்நாவல் அதே பொருந்திப் போகிற இன்றைய தீவிரத்துடன் எழுதியிருப்பது ஆசிரியரின் தீர்க்கமான தொலைநோக்கு பார்வை தான் காரணம்.

பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, ஆரண்யக (வனவாசி), லட்சிய இந்து ஹோட்டல், தொடர்ச்சியாக நாவல்களை எழுதியிருக்கிறார் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய (1894-1950). அவரது இந்த நான்கு நாவல்கள் முக்கிய நாவல்களாக இன்று பேசப்படுகின்றன. அதன்பின் 16 (மொத்தம் 20) நாவல்களை எழுதியிருக்கிறார். முதல் இரண்டு நாவல்களை சத்யஜித் ரே திரைப்படங்களாக எடுக்கப்பட்டு புகழ்பெற்றன. இரண்டும் மூன்று திரைப்படங்களாக எடுத்திருக்கிறார். அபராஜிதோ இரண்டு பாகங்களாக எடுக்க, பதேர் பாஞ்சாலி (1955), அபராஜிதோ (1956), அபுர் சன்சார் (1959) என்று வெளியாயின. வனவாசியை தமிழில் .நா.சேனாதிபதி மொழிப்பெயர்த்திருக்கிறார். அழகான மொழிபெயர்ப்பு. நேரடியாக தமிழ் நாவலை படிப்பது போன்ற உணர்வுடன் இருக்கிறது.

[வனவாசி - விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய (.நா.சேனாதிபதி), விடியல் பதிப்பகம்.]

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பதிவைப் படிக்க ஆரம்பித்தபோது உங்களுடைய அனுபவங்களைப் பகிர்கின்றீர்களோ என்று நினைத்தேன். பின்னர் படிக்கப் படிக்கத்தான் வனவாசி பற்றி அறிந்தேன். உங்களின் எழுத்து உத்தி பதிவின்மீதான ஆர்வத்தை மேம்படுத்தியது. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையானதொரு நாவலை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்
நன்றி

கே.ஜே.அசோக்குமார் said...

இருவருக்கும் நன்றிகள் அய்யா.