Sunday, October 15, 2017

தஞ்சைக் கூடலின் செப்டம்பர்'17 மாதக் கூட்டம்



புதிய நண்பர்கள் ஒவ்வொரு மாதமும் இணைவது நடந்துக் கொண்டேயிருக்கிறது. சிலர் வரமுடியாமல் போவதும் நிகழ்கிறது. இந்த மாதம் கரந்தை ஜெயக்குமார், சுரேஷ் பிரதீப், பேராசிரியர் கல்பனா, தமிழ் பல்கலைக்கழக மாணவர் ராமசந்திரன் போன்றவர்கள் புதியவர்கள். முதலில் சுரேஷ் பிரதீப் தான் மாலை 4.55க்கே வந்துவிட்டிருந்தார். போன் செய்து கூறிய அரை மணி நேரம் கழித்துதான் நான் சென்று சேர்ந்தேன். சுரேஷை இப்போதுதான் முதலில் சந்திக்கிறேன். அன்பும், அமைதியும் கொண்ட இளம்மனிதராக தெரிகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின் ஹரணி, அவரது நண்பர்களுடனும், வியாகுலன், சி.எம்.முத்து நண்பர்களுடனும் வந்து சேர்ந்தார்கள்.

திருவாளர்கள் பெ.இராமலிங்கம், கரந்தை ஜெயக்குமார், கோவிந்தராஜூ போன்றவர்கள் வந்தார்கள். பெ. இராமலிங்கம் ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர், பல அனுபவங்களை கொண்டவர் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. கரந்தை ஜெயக்குமார் இணையத்தில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருபவர். பள்ளியில் கணித ஆசிரியராக இருப்பவர், சீனிவாச ராமானுஜம் பற்றி ஒரு நூலும், கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள் என்கிற நூலும் (வேறு இருவருடன் சேர்ந்து) எழுதியிருக்கிறார். கோவிந்தராஜூ கல்லூரியில் தமிழ் பேராசிரியர்.

முதலில் ஹரணி செப்டம்பர் மாதம் வெளியான இருகதைகளைப் பற்றி பேசினார். வரவனை செந்தில் எழுதிய செல்ல கிறுக்கி (ஆனந்த விகடன்), கலைச்செல்வி எழுதிய புகார் (குறி இதழ்) சிறுகதைகளைப் பற்றி பேசினார். வாழ்வின் நம்பிக்கையை உணர்த்து கதைகளுக்கு எப்போதும் சிறுக்தைகளில் ஒரு இடம் இருக்கிறது. அந்த மாதிரியான கதைகள் எப்போதும் படிக்கப் படுகின்றன என்றார் ஹரணி. அந்த நம்பிக்கை சொல்லும் கதைகளாக இரு கதைகளை அவர் குறிப்பிட்டார்.

அடுத்து வியாகுலன் பேசும் புதியசக்தியில் வெளியான மனசு என்கிற சி.எம்.முத்துவின் கதையைப் பற்றி பேசினார். வெறும் சம்பவங்கள் தான் இந்த கதை ஆனால் அது உணர்ந்தும் ஆழ்ந்த அழகுணர்ச்சி இம்மாதம் வந்த வேறு கதைகளில் இல்லை என்று சொல்லாம். அக்கதை குறித்து அவரின் சிஷ்யரான வியாகுலன் நீண்ட உரையை அளித்தார். சிஎம் முத்து குறித்து அவர் எழுதியிருந்த வெளியிடப்பட்ட விமர்சனம் (சாகித்ய வெளியீடு) ஒன்றை முழுவதும் படித்தார்.

விவேக் ஷான்பாக் எழுதி கே.நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்து காலச்சுவடில் வெளியான நிர்வாணம் என்கிற சிறுகதைப் பற்றி நான் பேசினேன். விவேக் ஷான்பாகின் தீவிர ரசிகராக ஆகிவிடும் நிலைக்கு வந்துவிட்டேன். இந்த கதையை படித்ததும் அவரின் மற்ற கதைகளை தேடி படிக்க தோன்றியது. இதுவரை பத்து கதைகள் வெளியாகியுள்ளன. ஒரு நாவல் மொழிபெயர்ப்பில் உள்ளது என தெரிகிறது. (கதை குறித்து தனியாக எழுதியிருக்கிறேன்.)

இந்த மாதம் குறுக்கு வினாக்கள், விமர்சன கருத்துகள் அதிகம் பகிரப்படவில்லை. அனைவருக்கும் பிடித்ததுபோல் இம்மாத கதைகள் அமைந்துவிட்டனவா என ஐயம் ஏற்ப்பட்டது. பொதுவாக நிகழ்ச்சி முடிவில் மற்ற பார்வையாளர்கள் அனைவருக்கும் தங்கள் சிறுகதைகள் குறித்த புரிதல்களையும் அன்று பேசப்பட்ட சிறுகதைகளில் தங்களுக்கு பிடித்தவைகளைப் பற்றி பேசவும் இடம் கொடுக்கப்படும்.

சுரேஷ் பிரதீப் ஆர்வமாக கலந்துக் கொண்டு பேசினார். சிறுகதை அனுபவங்களைப் பேசும்போது அவரது சிறுகதை மீதான ஆர்வம் புலப்பட்டது. அதிக தரவுகளோடு நிதானமாக பேசிமுடித்தார். பெ. இராமலிங்கம் அவர்கள் எந்த சார்புநிலையை எடுக்காமல் இந்த அமைப்பு செயல்படட்டும் என்றார். நந்தி செல்லதுரை அவர்கள் நீண்ட உரையை வழங்கினார். இனிமையான தேர்ந்த ஒரு பேச்சாளரின் உரை அது. சி.எம். முத்து அவருக்கு பிடித்த கதைகளோடும் பாடல்களையும் பாடி இறுக்கமான சூழலை மாற்றியமைத்தார்.

ஆசிரியர் கல்பணா அவர்களும், கரந்தை ஜெயக்குமாரும் தங்கள் சிறுகதை அனுபவங்களை பேசினார்கள். கி.ராவின் கதைகள் மீது தனக்கு ப்ரியமும், பிடிப்பும் இருப்பதைப் பற்றியும் அவர் எழுதிய நினைவில் இருக்கும் சில கதைகளைப் பற்றி பேசினார் பேரா.கல்பனா.

தொடர்ந்து பேச்சுகள் வளர்ந்துக் கொண்டே சென்றன. கூட்டம் முடிந்து வெளியே வந்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இலக்கியத்தின் மீதான ஆவல் தீராத வரை இந்த கூட்டம் நடக்கும் என நினைக்கிறேன். அடுத்த மாதம் மேலும் புதிய நண்பர்களோடு சந்திப்போம். விவாதிப்போம்.

(30/9/17 அன்று தஞ்சைக் கூடலின் கூட்ட நிகழ்வு.)

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நிகழ்வு ஐயா
முதன்முறையாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டதில்
பெரு மகிழ்ச்சி அடைந்தேன்
நன்றி