Monday, July 3, 2017

திண்ணையும் மாடியும்எங்கள் ஊரில் இன்னும் ஓடுவேய்ந்த திறந்த திண்ணைகள் கொண்ட வீடுகள் இருக்கின்றன. சிறுநகரம் என்றாலும் இன்னும் பழமையை விட்டுவிடவில்லை. வேய்ந்தஓடும் திண்ணையும் கொண்ட வீடுகளை உடையவர்கள் வசதியற்றவர்கள் என்கிற முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. ஏனெனில் உடைந்த திண்ணைகளைப் பார்க்கும் போது அதுதான் மனதில் தோன்றச் செய்கிறது. சற்று வசதியடைந்தது, முதலில் திண்னையில்தான் மாற்றம் செய்வார்கள். திண்ணையை ஒருபக்கம் கொஞ்சம் உடைத்து சமதளத்தோடு சேர்த்து வண்டி வைக்க ஏற்பாடு செய்வார்கள். இன்னும் வசதிவந்துவிட்டால் முழு திண்ணையையும் உடைத்து சமதளமாக்கி வண்டி வைக்க அல்லது வேறு வீட்டின் பொருட்களை வைக்க பயன்படுத்திக் கொள்வார்கள். கூடவே முன்பக்கம் கிரில் கேட் அடித்துவிடுவார்கள். கூரைவரை போகும் கிரில் கேட்வைத்ததும், முன்பக்கம் உள்ள ஓடுகளை எடுத்துவிட்டு ஒட்டு அதாவது சிமெண்டாக மாற்றிவிடுவார்கள்.


திண்ணை ஒரு காலத்தில் அவசியமாக இருந்தது. ஊரிலிருந்து வரும் உறவினர்கள் தூங்க, தூரப் பயணம் செய்பவர்கள் இளைப்பாற, விற்பனை செய்து வருபவர்கள் வீட்டுத் திண்னையில் சற்றுநேரம் அமர என்று பயன்பட்டது. வடவம், மிளகாய், மல்லி போன்ற வீட்டுச் சாமான்கள் காயவைக்கவும் பயன்பட்டது. வீட்டுவேலை, வயல்வேலை செய்பவர்கள், நாவிதர்கள், வண்ணான்கள் என்று பலரும் அவர்கள் தொழில் சார்ந்து திண்ணைகளை பயன்படுத்தினார்கள். முன்பு இருந்த மாடிவீடுகளில் கூட திண்ணை உண்டு. முன்பக்கம் இருக்கும் பால்கனியை தாங்கி நிற்கும் அழகிய தூண்களை உடைய திண்ணைகள் வீட்டிற்கு அழகு செய்தன என்றால் மிகையில்லை. வீட்டில் இருக்கும் நபர்களே, தெருவில் சாமி ஊர்வலம் போன்றவைகள் சென்றால், அமர்ந்து வேடிக்கைப் பார்த்தார்கள். திண்ணை எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ வீடும் அவ்வளவு பெரியதாக இருக்கும் என்கிற அலங்காரம் மக்களுக்கு தேவையாக இருந்தது.

சட்டென வாகனங்கள் அதிகரித்து தூரங்கள் குறைந்ததும், மளிகைகடைகள் பெருக்கம், வயல்/தோப்பு பயன்பாடு குறைதல், தொழில்சார் மக்களின் தொடர்பு குறைதல் போன்ற காரணங்களால் திண்ணைகள் வெறிச்சோடின. தேவையில்லாமல் ஒரு இடம் காலியாக கிடப்பது அடுத்த தலைமுறையினருக்கு புரியாமல் இருந்தது. ஓடுகளை எடுத்துவிட்டு இப்போதைய மாடிகளை கட்டும்போது முதலில் திண்ணையில் உயரத்தை குறைத்து வேறு சிலவற்றிற்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள். வண்டி நிறுத்தம், நீர் தொட்டி, மோட்டார் றை, துணிக் காயப்போடும் இடம் என்று கச்சிதமாக பொருத்த ஆரம்பித்தார்கள்.

முதலில் திண்னையை குறைக்காமல் தட்டி வைத்து மறைத்து வயதானவர்களை அங்கே படுக்க வைத்தார்கள். எனக்கு தெரிந்து பல வயதானவர்கள் திண்ணைவாசம் வந்ததை கவனித்திருக்கிறேன். பிறகு தட்டியை எடுத்துவிட்டு திண்ணையை உயரத்தை குறைத்து சமதளமாக்கி கிரிலை போடுவார்கள். அதுவும் சரியாகதபோது முழு வீட்டையும் இடித்து மாடி இருக்கும்படியாக இப்போது கட்டப்படும் வீடுகளாக மாற்றுவார்கள்

மாடிவீடு என்பது சமூக அடையாளம். புதியரகவர்ணங்களை கொண்ட மாடி வீடு கட்டுவது அதிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. தாத்தா அல்லது தாத்தாவின் அப்பா கட்டிய வீடு என்று பலபேர் பழைய வீட்டை இடிக்காமல் இருக்கிறார்கள். நாங்க சின்னபுள்ளையா வாழ்ந்த வீடுங்க இடிச்சுட்டு கட்ட மனசு வரல என்பார்கள். ஆனால் வீட்டில் உள்ள மற்ற நபர்கள், மனைவி, குழந்தைகளின் வர்புறுத்தலால், சில மாற்றங்களை செய்ய துணிவார்கள். அதில் முதலில் கைவைப்பது திண்ணையைதான்.

கிரில் கேட் போட்டதும் அதில் புதிய அம்சம் வந்துவிட்டதாக நினைப்பார்கள். நான் இருக்கும் கிருஷ்ணன் கோயில் தெருவில் தெரு ஆரம்பத்தில் இருக்கும் வீடுகள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்க, கடைசியில் இருக்கும் பல வீடுகள் மாற்றங்களுடன் ஜொலிக்கும். பழைய வீடு என்பதைவிட தெரு ஆரம்பத்தில் இருக்கிறது என்கிற பெருமையும் சேர்ந்து அவர்களை மாற்றங்கள் செய்யவிடாமல் தடுக்கிறது.

ஒவ்வொருவரும் வீடு கட்டுவது என்பதை வாழ்நாள் சாதனையாகதான் நினைக்கிறார்கள். தன் தாத்தா கட்டும்போது என்ன சிரமங்களை அனுபவித்தார் என்பதை சொல்ல அவர்களுக்கு ஒரு பெருமை வந்து சேருகிறது. அதை சில பல காரணங்களால் இடித்து கட்டும்போது அதனினும் சிறந்த வீட்டை கட்டிவிட வேண்டும் என்கிற நினைப்போதுதான் ஆரம்பிக்கவே செய்கிறார்கள். சாதாரணமான ஒரு வீட்டை கட்டிவிடுவது பெருமை அளிக்காதே!. புதியவகை கார்பார்க்கிங், முகப்பில் வித்தியாசமான புதிய சார்பு, ரசனையுடன் அமைந்த சதுர பால்கனிகள், அதற்கு பலவகை பெயிண்ட்கள், மழை வெய்யில் போன்றவைகளை தாங்கும் பொருட்டு ஒவ்வொரு பகுதிக்கும் வர்ண சேர்க்கைகளுடன் அமைக்கப்படும் வித்தைகள் என்று பலது இருக்கும். திண்ணை ஒன்று இருந்ததை அப்போது மறந்தே இருப்பார்கள்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் திண்ணை இருந்தது. திண்ணையில் அமர்ந்திருக்கும்போது, படுத்திருக்கும்போது, அனைவரும் உட்கார்ந்து பேசும்போது கிடைக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது. நாம் இழந்தனவற்றில் அதுவும் ஒன்று.